நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும்
தமக்குள் ஏதோ ஒரு கதையை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். வெகு சிலரே அந்த
கதை பற்றிப் பேசுகிறார்கள். பெரும்பாலானவர்கள் தனது கதையைப் பற்றி யாரிடமும் பேசுவதில்லை,
பிரஸ்தாபிப்பது இல்லை. சிறுகதை எழுதுபவர்கள் கதைக்கான கருவை தேடிக்கொண்டே
இருக்கிறார்கள். எனக்கும் கதைக்கும் ரொம்பவே தூரம். சமீபத்தில் எழுதிய ஒரு
பதிவிற்குக் கூட தில்லையகத்து கீதா அவர்கள் “இது ஒரு கதைக்கான கரு” என்று சொல்லி
இருந்தார். அவரையே நேரம் கிடைத்தால்
எழுதச் சொல்லி இருப்பது இப்போது நினைவுக்கு வருகிறது! சரி அது ஒரு புறம்
இருக்கட்டும், இப்போது இன்றைய பதிவுக்கு வருகிறேன்!
சமீபத்தில் ஒரு பயணம் [எங்கே
சென்றேன் என்பதை பிறகு சொல்கிறேன் – இரண்டு நாள் பயணம்!] முடித்து தலைநகரின் ISBT –
Inter State Bus Stand – காஷ்மீரி கேட் வந்து சேர்ந்த போது காலை மணி 05.30.
பெரும்பாலும் தலைநகரின் பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருக்கும்
ஆட்டோ/டாக்ஸி ஓட்டுனர்கள் பிரபல கொள்ளைக்காரர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல!
பேருந்திலிருந்து இறங்கும் பயணிகளை மொய்த்துக் கொண்டு வாய்க்கு வந்த படி காசு
கேட்பார்கள் – மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடத்திற்குப் போகக் கூசாமல்
100 ரூபாய் கேட்டு நம்மை ஓட வைப்பார்கள். அதனாலேயே நான் அவ்விடங்களுக்குச்
செல்லும்போது பெரும்பாலும் தில்லி மெட்ரோவையே நாடுவேன்.
இம்முறை நாங்கள் நான்கு பேர் –
வைத்திருந்த உடைமைகளும் கொஞ்சம் அதிகம்.
நடைபாதையில் பொருட்களை வைத்துவிட்டு கொஞ்சம் கவனிக்க, ஒரு முதியவர் –
குளிருக்கு அடக்கமாய் உடைகளை அணிந்திருந்தவர் – என்னிடம் வந்து ”எங்கே செல்ல
வேண்டும்?” என்று கேட்க, நண்பர்கள் மூவரை அவர்கள் தங்குமிடத்தில் இறக்கி விட்டு,
அதன் பிறகு அருகில் இருக்கும் என் வீட்டில் இறக்கி விடவேண்டும் எனச் சொன்னேன்.
அவர் கேட்ட தொகை சற்றே அதிகம் என்றாலும், அனுமதிக்கப்பட்ட மூன்று பேரை விட ஒருவர்
அதிகம் என்பதால் சரி என்று அவரது ஆட்டோவில் தான் பயணம். எங்கள் உடைமைகளை ஆட்டோவில்
வைத்து நாங்களும் அமர்ந்த பிறகு அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
இப்படி காலையிலேயே அதிகம் கேட்டு
ஏமாற்றுகிறார்களே எனக் கேட்க, முன்பெல்லாம் ஆட்டோக்கள் பஞ்சாபிகள் வசம் இருந்தது,
இப்போது எல்லாம் பீஹாரிகள் வசம், நிறையவே ஏமாற்றுகிறார்கள். நான் கூட இப்போது
உங்களிடம் கேட்டது ஐம்பது ரூபாய் அதிகமாகத்தான் என்று சொல்லி, நான்கு பேராக
இருப்பதால் கேட்டேன் என்று சொல்ல, நானும் அதற்காகத் தான் ஒத்துக் கொண்டேன் என்று
சொன்னேன். தில்லியில் பல வருடங்களாக இருக்கிறேன். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை.
காலையில் ஆறு மணி முதல் பதினோறு மணி வரை ஆட்டோ ஓட்டுகிறேன், அதன் பிறகு வீடு
சென்று ஓய்வு தான். இரண்டு மகன்கள் – ஒருவர் Animation படித்து விட்டு மாதம் 28000
ரூபாய் சம்பாதிக்கிறார், இரண்டாமவர் CA படித்து வேலைக்குச் செல்கிறார் என்று
சொல்லி, தன் கதையையும் சொல்ல ஆரம்பித்தார்!
என்னுடைய திருமணம் காதல் திருமணம்
தெரியுமா? அதுவும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம்!
நான் கத்ரி [Khatri] இனத்தினைச் சேர்ந்தவன். நான் காதலித்த பெண்ணோ அகர்வால்
[Agarwal] எனும் Bபனியா [வியாபாரி]! நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்க, அவளோ, நிறைய
பணம் படைத்த வீட்டிலிருந்து வருபவர். எனக்கும் தில்லியில் மூதாதையர் சொத்து
இருந்தாலும், குடும்பச் சொத்து. சில வருடங்களாகவே எங்கள் காதல் துளிர்த்து,
வளர்ந்து பெரு மரமாகி இருந்தது. காதலியின் வீட்டிற்கோ, எங்கள் வீட்டிற்கோ இந்த
காதல் விஷயம் தெரியாது. இப்படி இருக்கையில் காதலியின் வீட்டில் மாப்பிள்ளை தேட
ஆரம்பித்தார்கள்.
இந்த விஷயம் தெரிந்தவுடன், நானும்
எனது காதலியும் ஆர்ய சமாஜ் முறைப்படியும், நீதிமன்றத்திலும் திருமணம் புரிந்து
கொண்டோம். பிறகு வீட்டிற்குத் தெரிய நிறைய பிரச்சனைகள். பெண்ணின் வீட்டார் எங்கள்
வீட்டிற்கு வந்து தகராறு செய்ய, பஞ்சாயத்து நடந்தது. ”நாங்கள் ஏற்கனவே திருமணம்
புரிந்து கொண்டோம். இந்த ஜன்மத்தில் இவரைத் தவிர வேறு யாரையும் நான் மணம் முடிக்க
மாட்டேன்” என்று என் மனைவி கண்டிப்பாகச் சொல்ல, வேறு வழியின்றி ஒத்துக்
கொண்டார்கள். எந்த விதத்திலும் உனக்கு உதவி செய்ய மாட்டோம் என்று சொல்லி விலகி
விட்டார்கள். நானும் மனைவியும் மட்டுமே கடுமையாக உழைத்தோம் – நான் ஆட்டோ ஓட்ட,
மனைவி ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்து குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார்.
இரண்டு பேருமே டிகிரி படித்திருந்தோம் என்றாலும் அவர் மேலும் படித்து ஆசிரியராக,
நான் ஆட்டோ ஓட்டினேன்.
காலம் ஓடியது. இப்போது மனைவியும்
குழந்தைகளும் மட்டும் அவர்கள் வீட்டிற்குச் சென்று வருகிறார்கள். என்னை இப்போது
வரை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதில் எனக்கு வருத்தமும் இல்லை.
உழைத்து, எங்கள் இரு பிள்ளைகளையும் நல்லபடியாக படிக்க வைத்திருக்கிறேன். வேலையும்
கிடைத்து இருக்கிறது. சொந்த வீடு இருக்கிறது. பெரிதாக ஆசை ஒன்றுமில்லை. கொஞ்சம்
காலம் உழைத்து, மகன்களின் திருமணம் முடிந்த பிறகு தில்லியை விட்டு விலக எண்ணம்
இருக்கிறது – ரிஷிகேஷில் ஒரு இடம் பார்த்திருக்கிறேன். அங்கே ஒரு கடை வைத்துக்
கொண்டு நானும் என் காதல் மனைவியும் மிச்சமிருக்கும் நாட்களையும், காதலில்
திளைத்துக் கழிக்க வேண்டும்! இன்னமும் என் மனைவி மீதான காதல் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது.
வாழ்க்கை நிலையற்றது! நேற்று
இருப்பவர் இன்றைக்கு இல்லை – இருந்தாலும் இருக்கும் வரைக்கும் உழைத்து, என்
மனைவியைக் காதலிப்பேன் என்று சொல்லிக் கொண்டு வந்தார்! வழியில் நண்பர்களை இறக்கி
விட்டு, என் வீட்டருகே இறக்கி விட்ட அவருக்கு நன்றி சொல்லி அவருக்குக் கொடுக்க
வேண்டிய தொகையைக் கொடுக்க, அவரது Purse-ல் இருந்த அவரது மனைவியின் புகைப்படத்தினைக்
காண்பித்து “எங்க ஜோடி எப்படி இருக்கு?” என்று கேட்டுச் சிரித்தார்! நல்லாவே இருக்கு ஜோடிப் பொருத்தம் எனச் சொல்லி
நகர்ந்தேன். அவர் சொன்ன கதையைக் கேட்டு வீட்டிற்கு வந்து நுழைந்தால், கிடக்கும்
வேலைகள் என்னை மலைக்க வைத்தன!
முதல் பாராவில் சொன்னபடி ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் ஒரு கதை! நான் கேட்ட கதையை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். உங்கள்
எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
பாட்ஷா கதையாய் இருக்கிறது! எல்லோருக்கும் ஒரு கதை இருக்கிறதுதான். உழைப்பும் தன்னம்பிக்கையும் மிக்க மனிதர் போலும் அந்த ஆட்டோக்காரர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குmmmmm.....
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆட்டோ டிரைவரின் காதல் கதையில் சோகம் இருந்தாலும் மனதுக்கு சந்தோசமாக இருந்தது.
பதிலளிநீக்குஅவரது எண்ணம் ஈடேர இறைவனை வேண்டுகிறேன் ஜி
வாழ்க வளமுடன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஆட்டோ ஓட்டுநரின் காதல் போற்றுதலுக்கு உரிய உண்மை காதல்தான்
பதிலளிநீக்குநன்றி ஐயா
தம+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஆட்டோ ஓட்டுனர் எண்ணம்நிறைவேற இறைவன் அருள்புரிய வேண்டும். வாழ்த்துக்ள்! வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குநன்றாக இருக்கிறது ஆட்டோ டிரைவரின் கதை! நீங்கள் சொல்வது சரிதான், கதைக்கான கருக்கள் நம் வாழ்விலிருந்தும் 'ராஜா காது கழுதைக் காது' மூலமாகவும் கிடைக்கும் தான்! :))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
நீக்குஆட்டோ ஓட்டுநரின் கதை ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வயதிலும் தன் மனைவியின் மீது காதலும் அன்பும் கொண்டு உழைத்துச் சாப்பிட்டுக் கொண்டு...தன் மனைவி மேலும் படித்து ஆசிரியை ஆனாலும் எந்தவிதத் தாழ்வுமனப்பான்மையும் கொள்ளாமல் அருமையான மனிதர். அவரது எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குகீதா: அக்கருத்துடன்...அவர் ரிஷிகேஷ் தேர்ந்தெடுத்து அங்கு வாழ நினைப்பது ஆஹா என்று போட வைத்தது. இயற்கைச் சூழல் நிறைந்த இடமாயிற்றே!!! மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொண்டு ம்ம் அவர் நினைப்பது போல் அன்புடன் வாழ்ந்திடலாம் தான்...சூப்பர் கதை.
ஆமாம் ஜி நீங்கள் அன்று சொல்லியிருந்த அந்த முக்கோணக்காதல் கதைக் கருவாய்த்தோன்றியது. அதன் பின் அதை அசை போடவில்லை. அதற்கு முன் இன்னும் சில முடிக்கப்படாமலேயே இருப்பதால்...அதுவும் ஓர் ஓரத்தில் இருக்கிறது...மனதில்...பார்ப்போம் ஜி.
மிக்க நன்றி ஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஇதமான காதல் கதை...
பதிலளிநீக்குஎன்றும் அவர்கள் அன்பு வளரட்டும்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குமிக அருமையான கதை.. இப்படியாரோரின் கதைகளைக் கேட்கும்போது நாமும் அப்படியே வாழோணும் எனும் நல்லெண்ணம்தான் பலருக்கும் வரும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.
நீக்கு>>> ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை!.. <<<
பதிலளிநீக்குஉண்மைதான்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..
வாழ்க நலம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஉண்மை எல்லோரிடமும் கதைகள் பல இருக்கும் சொல்ல கூடியது சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி சொல்ல முடியாதது போன்று
பதிலளிநீக்குபோற போக்குல யதார்த்தமாய் உண்மையை சொல்லும் ஆட்டோ டிரைவர் அவர்கதையை படித்ததும் புன்னைகையும் நம்பிக்கையும் வருகிறது உங்களுக்கு மட்டும் இப்படி எப்படி கதையெல்லாம் பகிர்கிறார்கள் உங்களை பார்த்தவுடன் தெரிகிறது போல் இவர் நம் கதையை அழகாக விளக்குவார் என்று
உங்களுக்கு மட்டும் இப்படி எப்படி கதையெல்லாம் பகிர்கிறார்கள்? :)) முகராசி அப்படி போல!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.
காதல் கதை படிக்க அருமையாக இருந்தது அதற்கு காரணம் அவர் சொல்லியதை மிக அழகாக நீங்கள் எடுத்து சொல்லியவிதம்தான் காரணம் என நான் நினைக்கிறேன். ஒருவர் சொல்லும் விஷயத்தை உள்வாங்கி கொண்டு அதை மிக தெளிவாக சொல்லும் வித்தையை நீங்கள் கைகொண்டு இருக்கிறீர்கள். அதுதான் உங்கள் எழுத்தின் பலம். குட் வெங்கட்ஜி
பதிலளிநீக்குஎன் கதையும் இதுமாதிரிதான் ஆனால் எங்கள் இன்லா வீட்டில் எனக்கு மிகவும் வர வேற்புதான் ஒரு ஆண்டு வரை மாமியார் என் மனைவியின் மீது கோபமாக இருப்பது போல நடித்து கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அதன் பின் எல்லாம் சரியாகிவிட்டது...
இங்கே வந்தவர்களை என் சமையலால் அடிமைபடித்திவிட்டேன். நல்ல சமையல் அதுவும் உட்கார்ந்த இடத்தில் வருகிறது என்றால் அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கதானே செய்யும்... நிறைய சொல்லாம் நீளமாகிவிடும் என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்
உங்கள் கதையும் இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
wநம் பதிவுலகில் பலரும் தம்மைப் பற்றி ஏதும் கூறுவதில்லை ஆனால் பலரும் கதையை ரசிக்கிறார்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குமிக பாசிடிவான மனிதரை நீங்கள் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குகாதலிலே தோல்வி கண்ட கதைகளை நான் படித்ததுண்டு
பாடல் நினைவில் வருகிறது. இவர் மனம் விசாலம். நன்றாக இருக்கட்டும்.
நன்றி மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குகாதல் என்பது ஒரு அனுபவம் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குவெங்கட்ஜி சுக் செய்துவிட்டேன். உங்கள் சுக் பதிவில் கொடுத்திருந்த பாட்டிலில் உள்ள கலர் போலத்தான் இருக்கு. ஆனால் டேஸ்ட் நான் எப்பவோ சுவைத்தது என்பதால் நான் செய்திருப்பது அதே சுவைதானா என்று தெரியவில்லை ஜி. இருந்தாலும் நல்ல காரமாக சுவையாக இருப்பது போல் உள்ளது. ஜி..மிக்க நன்றி
பதிலளிநீக்குகீதா
ஆஹா செய்து பார்த்தாச்சா? நல்லது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
இப்போத் தான் படிச்சேன் இந்தப் பதிவை. அந்த ஆட்டோ ஓட்டுநர் மிக அருமையான மனிதர். இருவருமே அதிர்ஷ்டகாரர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்கு