வியாழன், 15 பிப்ரவரி, 2018

சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் அரங்கனின் சீர் – புகைப்பட உலா



தை மாத சமயத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு திருவரங்கத்தில் இருக்கும் அரங்கன், அண்ணன் சீர் தரும் வைபவம் தை மாதத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த முறை திருவரங்கம் சென்றபோது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது [ஜனவரி 31]. சமயபுரத்திலிருந்து மாரியம்மனின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக சமயபுரத்திலிருந்து புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் வழியாக திருவரங்கம் கொண்டு வருவார்கள். கொள்ளிடம் ஆற்றின் உள்ளே ட்ராக்டர் கொண்டு வாகனம் இழுத்து வரப்படும். வழியெங்கும் உற்சாகம் தான். 





சமயபுரம் மாரியம்மனின் உற்சவ மூர்த்தி வரும் சமயத்தில் இம்முறை கொள்ளிடம் ஆற்றின் இக்கரையிலிருந்து கணுக்கால் அளவு மட்டுமே இருந்த தண்ணீரைக் கடந்து மண்டப வாசலுக்குச் சென்று விட்டோம். மண்டபத்திற்குப் போவதற்கு முன்னர் ஆற்றில் தீர்த்தவாரி. அவை முடிந்த பிறகு ட்ராக்டர் ஓட்டிக்கொண்டு வந்தவருக்கும் மற்றவர்களுக்கும் மாலை மரியாதை, மாரியம்மனின் பிரசாதங்கள் கொடுக்கப்பட்டு, மாரியம்மன் மண்டபத்தில் எழுந்தருளினார். பெரும்பாலும் அரங்கனின் சீர் மாலை நேரத்தில் கொடுத்து விடுவார்கள்.  ஆனால் இம்முறை, அன்றைய தினம் சந்திர கிரகணம் என்பதால், இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் அரங்கனின் சீர் மேளதாளத்தோடு கொண்டு வரப்படும் என்பதால் மாரியம்மனை தரிசித்து வீட்டுக்குப் புறப்பட்டோம்.
  
திருவரங்கத்தில் இந்த நிகழ்வு சமயத்தில் கொள்ளிடம் ஆற்றுக்குள்ளேயே பந்தல்கள் போடப்பட்டு மண்டபங்கள் அமைத்து சமயபுரம் மாரியம்மனின் உற்சவ மூர்த்தி வைக்கப்பட்டிருக்க, திருவரங்கம் அரங்கன் கோவிலிலிருந்து அரங்கனின் உற்சவ மூர்த்தி மேளதாளத்துடன், தங்கைக்குச் சீரோடு வர அண்ணன் அரங்கனையும் தங்கை மாரியம்மனையும் பக்தர்கள் ஒரு சேர தரிசித்து மகிழ்வார்கள். அண்ணன் கொண்டு வந்த சீரை தங்கை மாரியம்மனுக்குக் கொடுத்த பிறகு பல்வேறு நிகழ்வுகள் நடக்கும். பின்னர் அவரவர் கோவிலுக்குத் திரும்புவார்கள். இம்முறை நிகழ்வுகள் இரவு முழுவதும் இருந்தன!

கொள்ளிடக் கரைக்கு மாரியம்மன் வந்த போது எடுத்த சில படங்கள் இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சமயபுரம் மாரியம்மனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

















சமயபுரம் மாரியம்மன்....


கொள்ளிடக் கரையில் முருகப்பெருமானும் வள்ளி, தெய்வானையுடன்.. 

அன்றைய தினம் தைப்பூசமும் இருந்ததால், கொள்ளிடக் கரையில் முருகப்பெருமானும் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்தார். காவடி, தீமீதி, என பல நிகழ்வுகள் இருந்தன. காவடி ஊர்வல காட்சிகளும் புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்து வைத்திருக்கிறேன் – அவற்றையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பதிவில் கொள்ளிடக் கரையில் தரிசனம் கொடுத்த முருகப்பெருமானின் ஒரு படம் மட்டும் சேர்த்திருக்கிறேன்.

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.


32 கருத்துகள்:

  1. காலையில் அற்புத தரிசனம்..

    அரங்கனின் சீர்வரிசையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன்..
    அழகிய படங்கள் கண்கொள்ளாக் காட்சி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. அருமையான தரிசனம். அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    காவடி ஊர்வலம் பார்க்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவடி ஊர்வலம் விரைவில்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  3. ஆஹா...அழகிய தரிசனம்...

    படங்கள் வெகு அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  4. காலையின் அதி அற்புத தரிசனம். படங்கள் மிக அழகாக இருக்கு. மாரியம்மன் கையில் கிளி வைப்பதற்காக உள்ள arrangement வித்தியாசமா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசம் தான். கொள்ளிடம் ஆற்றினுள்ளே வாகனத்தினை நிறுத்தி வைத்திருந்தபோது பொறுமையாக எடுத்த படங்கள். கண்ணாடியில் பிரதிபலித்த பிம்பத்தினை எடுக்கலாம் என்றால் விடவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. படங்கள் அத்தனையும் அழகு! நல்ல காட்சிகள். வெங்கட்ஜி...ரொம்பவே ரசித்தோம். கன்னதில் திருஷ்டிப்பொட்டுடன் கூடிய படம் மனதை ஈர்க்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்னத்தில் திருஷ்டிப்பொட்டுடன் இருக்கும் படம் - எனக்கும் பிடித்த படம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. கன்னத்தில் திருஷ்டிப்பொட்டுடன் கையில் கிளியுடன் உள்ள படம் ...கையில் கிளி என்பது விடுபட்டுவிட்டது கருத்தில்..ரொம்பவே ரசித்தோம் படங்களை வெங்கட்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. படங்கள் அற்புதம். சமயபுரம் அம்மன் கோவில் சிறுவயதில் சென்று வந்தது. இப்போது சமீபத்தில் பார்த்தபோது (ஆம், தாண்டிச் சென்றபடி பார்த்தபோது) நிறைய மாறி விட்டது அரங்கனுக்கு அம்மனும் அண்ணன் தங்கச்சியா? அட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சமயபுரம் சென்று வருடங்களாகிவிட்டது. செல்ல வேண்டும். எப்போது அழைப்பு வருமோ?

      அண்ணன் - தங்கச்சியா? - பதில் பானுமதிம்மா சொல்லிட்டாங்க....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. அரங்கன் தங்கைக்கு சீர் கொடுக்கும் பொழுது, அதை உடனே வாங்கி கொண்டு விட மாட்டாள், சீர் குறைச்சலாக இருக்கிறது என்று கொஞ்சம் பிகு பண்ணி விட்டுத்தான் பெற்றுக் கொள்வாள். எல்லாவற்றையும் கடந்த இறையை, நம்மைப் போல நினைத்து நாம் செய்யும் உற்சவங்கள் அழகுதான். பழைய நினைவுகளை கிளறி விட்டது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் இல்லை நிறையவே பிகு பண்ணுவாள் - பார்க்க நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

      நீக்கு
  10. இதில் இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். சமயபுரம் மாரியம்மனுக்கு
    பொங்கல் சீர் கொடுப்பது போலவே, அகிலாண்டேஸ்வரிக்கும் கொடுக்கும் பழக்கம் உண்டாம். நடுவில் சில காரணங்களால் நின்று விட்ட அந்த பழக்கத்தை இந்த வருடம் முதல் மீண்டும் தொடங்க போகிறார்களாம். செய்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகிலாண்டேஸ்வரிக்கும் சீர் உண்டு.

      திருவரங்கத்திலிருந்து மட்டுமல்லாமல் அன்பில் பெருமாள், திருவெள்ளரை பெருமாள் என இரு இடத்திலிருந்து உற்சவர் கொள்ளிடக்கரைக்கு வந்து சீர் தருவார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா....

      நீக்கு
  11. // அரங்கனுக்கு அம்மனும் அண்ணன் தங்கச்சியா? அட!//

    என்ன ஸ்ரீராம், தெரியாதது போபட கேட்கிறீர்கள்? மகா விஷ்ணுவும், பார்வதியும் அண்ணன் ,தங்கைதானே? பார்வதி தேவியின் அம்சமான மகமாயி ,ரெங்கநாதருக்கு தங்கை ஆகிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்ன ஸ்ரீராம், தெரியாதது போபட கேட்கிறீர்கள்? மகா விஷ்ணுவும், பார்வதியும் அண்ணன் ,தங்கைதானே//

      ஆமாம் இல்லே? எங்கோ கவனம்!

      நீக்கு
    2. மஹாவிஷ்ணுவும் பார்வதியின் அம்சமான மகமாயியும் அண்ணன் - தங்கை - அதே தான்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா....

      நீக்கு
    3. உங்களுக்குத் தெரியாமல் இருக்காது என நினைத்தேன். சரி தான்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. மிக மிக அருமை வெங்கட். அம்மாவைப்பார்த்தது போல ஆறுதல். அவள் பெருமையைத் தான் சொல்லி முடியுமா.
    படங்கள் அற்புதம். எனக்குக் கிடைத்த ஆசியாகவே நினைக்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவைப் பார்த்தது போல ஆறுதல் - உண்மை! அவள் லோக மாதாவாயிற்றே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  14. சமயபுரம் உற்சவ மாரியம்மனைப் பார்த்தது இல்லை. இன்று தான் பார்க்கிறேன். மிக அழகு! சிரிப்புத் தான் என்ன ஓர் நளினம், இனிமை! இந்தச் சீர் கொடுக்கும் வைபவம் பார்க்க ஆசைதான். ஆனால் கொள்ளிடக்கரைக்கு வரணும்! நேரமும், உடம்பும் இடம் கொடுப்பதில்லை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொள்ளிடக்கரைக்கு வர உடம்பு இடம் கொடுப்பதில்லை.// அம்மாமண்டபத்திலிருந்து [காவேரிக் கரையிலிருந்து] கொள்ளிடக் கரை, அதுவும் ஆற்றினுள் இறங்கிச் செல்ல வேண்டும் என்பதால் உங்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் தான். மாரியம்மன் வழி செய்யட்டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  15. நேர்த்தியான படங்கள். கை தேர்ந்த ஃபோட்டோகிராஃபர் என்பது புரிய வருது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கை தேர்ந்த ஃபோட்டோகிராஃபர் - ஆஹா.... கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. என் திறமை மிகக் குறைவு. கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....