இரு மாநில பயணம் –
பகுதி – 12
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
வெண்பாலையிலிருந்து புறப்பட்ட
எங்கள் வாகனம் அடுத்ததாக நின்ற இடம் எங்கள் தங்குமிடம் தான். காலையிலிருந்து
வாகனம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. ஓட்டுனர் முகேஷுக்கும் ஓய்வு தேவை.
எங்களுக்கும் தான். தங்குமிடம் வந்து ஒரு குளியல் போட்டு இளைப்பாறினோம். குளியல் என்றதும் இங்கே ஒரு விஷயம் நினைவுக்கு
வருகிறது – அது சாலைகள் போலவே குஜராத் மாநிலத்தில் இருக்கும் தண்ணீர் வசதி
பற்றியது. கட்ச் பகுதி பாலைவனம் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
பாலைவனத்தில் தண்ணீர் கஷ்டம் இருக்கத்தானே செய்யும். ஆனால் நர்மதா ஆற்றின் தண்ணீரை கட்ச் பகுதி வரை
குழாய் வழியே கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் கிராம வாசிகளுக்கு தண்ணீர்
கஷ்டமில்லை. நல்ல விஷயம் இது.
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது
தங்குமிட உரிமையாளர் வந்து இரவு உணவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை எப்போது
வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம் என்று தகவல் சொல்லிச் சென்றார். இந்த மாதிரி
தங்குமிடங்களில் தங்குவதற்கான வாடகையோடு, மூன்று வேளை உணவுக்கும் சேர்த்தே காசு வாங்கிக்
கொள்கிறார்கள். பெரிதாக உணவகங்கள் ஏதும் கிராமங்களில் இருக்காது என்பதால் இந்த
ஏற்பாடு. இதுவும் ஒரு விதத்தில் நல்லதே.
பாரம்பரியமாக கட்ச் பகுதி கிராமங்களில் கிடைக்கும் உணவு வகைகளை அவர்கள்
புதிதாகவும் சுவையுள்ளதாகவும் சமைத்துக் கொடுக்க, நாம் ருசித்து ரசித்து சாப்பிட
முடிகிறது.
கட்ச் பகுதி என்றவுடன் பலரும்
கேட்பது டபேலி சாப்பிட்டீர்களா என்பது தான். நாங்கள் சாப்பிடவில்லை. இரவு
நேரத்தில் இரண்டு ரொட்டியும், கொஞ்சம் சப்ஜியும், தாலும் இருந்தால் போதுமானது.
கூடவே மோர் – மசாலா போட்டது! ஆனால் உரிமையாளர் குடும்பத்திலிருந்து
வந்திருந்தவர்கள் சுவையாகச் சமைத்து, பாசத்துடன் தர, இன்னும் இரண்டு ரொட்டிகள்
உள்ளே சென்றன. நன்றாகவே இருந்தது – Simple
and Delicious! நல்ல உணவு உள்ளே சென்றபிறகு உறக்கம் தானே என நினைத்திருந்தால், அது
தான் இல்லை. கிராமத்திலிருந்து
இசைக்கலைஞர்கள் வர இருக்கிறார்கள் என்று சொல்லி எங்களை அசத்தினார் உரிமையாளர்.
ஏற்கனவே வெண்பாலையில் கொஞ்சம் கேட்டிருந்தோம். அது அங்கே இருப்பவர்கள்
அனைவருக்குமானது. இங்கே எங்களுக்காகவே! வெண்பாலையில் கேட்ட இசை சினிமாவிலிருந்து!
காணொளி கீழே….
கிராமத்திலிருந்து இசைக்கலைஞர்கள்
வந்தார்கள். ஒரு குழுவாகவே வந்து வெட்டவெளியில் இருந்த ஒரு சிறு மண் மேடையில்
அமர்ந்து கொள்ள, நாங்கள் அமர கயிற்றுக் கட்டில், நாற்காலிகள் ஆகியவை இருந்தன.
உட்கார்ந்தபடியோ, படுத்துக் கொண்டோ இசையை ரசிக்கலாம். திறந்தவெளி அரங்கம் என்பதால்
வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே இசையையும் ரசிக்கலாம்! ஆஹா என்ன ஒரு சுகம்!
பாடுபவர்களுக்கும், இசைப்பவர்களுக்கும் மைக் செட் எல்லாம் கிடையாது! பாடுபவர்கள்
அப்படி ஒரு உச்சஸ்தாயியில் பாடுகிறார்கள். இசைக்கருவிகளும் பாரம்பர்ய
இசைக்கருவிகள் தான். பல பாடல்களை – பெரும்பாலான பாடல்கள் புராணக்கதைகளைச் சொல்பவை.
மீராவின் பஜன்களும் உண்டு.
நாங்கள் தங்கியிருந்த போது
எங்களைத் தவிர வேறு ஒரு வெளிநாட்டுப் பெண்ணும், அவருடன் வந்திருந்த இந்தியரும்
இருக்க, அந்த இந்தியர் இசைக்கலைஞர்களிடம் ஒவ்வொரு பாடலாகச் சொல்ல
பாடிக்கொண்டிருந்தார்கள். ஒற்றைக் கம்பி
கொண்டு இசைக்கும் கருவிக்கு “ஏக் தாரா” என்று பெயர்! ஏக் என்பதற்கு அர்த்தம்
ஒன்று. தார் என்றால் கம்பி! ஏக் தாரா –
ஒற்றைக்கம்பி கொண்ட கருவி! கூடவே தாளம்
தட்டுவதற்கு ஒரு கருவி! அது என்ன தெரியுமா – நம்ம ஊரில் இரும்பில் மண் சுமக்க
வைத்திருப்பார்களே – “பாண்டு” என்ற ஒன்று – அதே தான்! அதைத் தலைகீழாக வைத்துக்
கொண்டு அதில் தாளம் தட்டுகிறார்! அதற்குப் பெயர் ”தகாரா” கூடவே சில ஜால்ராக்கள் மற்றும் கிர்தால் போன்ற சில கருவிகள்.
அவர்களது இசையையும் காணொளியாகவும்
எடுத்துக் கொண்டேன். அந்த காணொளியும் இங்கே இணைத்திருக்கிறேன் – நீங்களும் கேட்டு
ரசிக்கலாமே…. அந்த இடத்திற்கு இந்த இசை
உங்களை அழைத்துச் செல்லலாம்!
இந்த கலைஞர்களுக்கு, பிரம்மாண்ட
மேடையோ, கண்ணைப் பறிக்கும் உடையலங்காரமோ, பளபள விளக்குகளோ தேவையில்லை. சாதாரண
உடையில், அவர்களது பாரம்பரிய இசைக்கருவிகளோடு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். இனிய இசையைக் கேட்டு ரசித்த பிறகு எங்கள்
அறைகளுக்குத் திரும்பினோம். கிராமிய சூழலில் இனிய இரவு! பாலையில் ஒரு இரவு!
நன்றாகவே உறக்கம் வந்தது – மண் மேடையில்! ஒரு உறக்கம் போடுவோம்! அடுத்த நாள்
நிகழ்வுகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்!
தொடர்ந்து பயணிப்போம்….
நட்புடன்
வெங்கட்
புதுதில்லி.
இருளிலே ஒரு கீதம்.. நம்மூர் அதிகாலை மார்கழி பஜனை போல!
பதிலளிநீக்குவிவரங்கள் சுவாரஸ்யம். தண்ணீர் ஏற்பாடு பாராட்டப்படவேண்டிய அம்சம்.
நம்ம ஊர் மார்கழி பஜன் போல! ஆமாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நன்றி ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு//உட்கார்ந்தபடியோ, படுத்துக் கொண்டோ இசையை ரசிக்கலாம். திறந்தவெளி அரங்கம் என்பதால் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே இசையையும் ரசிக்கலாம்! ஆஹா என்ன ஒரு சுகம்!//
பதிலளிநீக்குஆஹா! அப்படியே சக்ரவர்த்தி ராணா வீர பிரதாப சிங்கம் மாதிரி மனசு மூலையில் கொஞ்சம் மிதப்பு வந்து இருக்குமே!
சக்ரவர்த்தி மிதப்பு - ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குஇசைப்பவர்களுக்கு அதை ரசிக்கும் ரசிகர்களிருக்கிறார்கள் என்று தெரிந்தால் மகிழ்ச்சிதானே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குகுஜராத்தில் நிறைய வளர்ச்சி இருக்கிறது என்பது தெரிகிறது. காணொளி கொஞ்சம் என் மொபைலில் சரியாக வேலை செய்யவில்லை. கொஞ்சம் தான் பார்க்க முடிந்தது. கேட்ட வரை நன்றாக இருக்கிறது வெங்கட்ஜி. உங்கள் அனுபவமும் வித்தியாசமான அனுபவங்கள் ஜி! ரொம்ப ஸ்வாரஸ்யமாக உள்ளது. தொடர்கிறோம் ஜி..
பதிலளிநீக்குகீதா: பாலையிலும் தண்ணீர்!!!!! வாவ் போட வைக்கிறது ஜி! இரவில் திறந்தவெளியில் இசை.அதுவும் உட்கார்ந்தபடியோ படுத்தபடியோ ஆஹா!!!!...செம அனுபவம் இல்லையா ஜி. பாடல்கள் அவர்கள் வாசிக்கும் கருவிகள் என்று எல்லாமே நன்றாக இருக்கிறது. நல்ல அனுபவம்...நீங்கள் சொல்லியிருப்பது போல் காணொளி காணும் போது அங்கே இருப்பது போன்ற உணர்வு...நல்லதொரு ட்ரிப்...தொடர்கிறோம் ஜி இன்னும் அறிந்து கொள்ள..
நல்லதொரு அனுபவம் தான் இந்தப் பயணம் முழுவதுமே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
வித்தியாசமான இடங்களில் தங்கியிருக்கிறீர்கள். ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்கு//கிராமத்திலிருந்து இசைக்கலைஞர்கள் வந்தார்கள். ஒரு குழுவாகவே வந்து வெட்டவெளியில் இருந்த ஒரு சிறு மண் மேடையில் அமர்ந்து கொள்ள, நாங்கள் அமர கயிற்றுக் கட்டில், நாற்காலிகள் ஆகியவை இருந்தன. உட்கார்ந்தபடியோ, படுத்துக் கொண்டோ இசையை ரசிக்கலாம். திறந்தவெளி அரங்கம் என்பதால் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே இசையையும் ரசிக்கலாம்! ஆஹா என்ன ஒரு சுகம்! பாடுபவர்களுக்கும், இசைப்பவர்களுக்கும் மைக் செட் எல்லாம் கிடையாது! //
பதிலளிநீக்குஆஹா! இசையை இப்படிதான் ரசிக்க வேண்டும். ஒரு முறை திருச்சி மலை கோட்டை தெப்போற்சவத்தின் பொழுது உறவினர் ஒருவர் வீட்டில் மொட்டை மாடியில் நாங்கள் படுத்துக் கொண்டிருக்க, தூரத்திலிருந்து வந்து எங்கள் செவியைத் தீண்டிய நாதஸ்வர இசையை ரசித்த நினைவு வருகிறது.
கிராமிய இசை ஒரு முறை கேட்ட நினைவு - இதே போன்று மைக் இல்லாமல் தமிழ் பாடல் கேட்டிருக்கிறேன். உங்கள் அனுபவங்களையும் சொன்னதில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
ஆனால் நர்மதா ஆற்றின் தண்ணீரை கட்ச் பகுதி வரை குழாய் வழியே கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் கிராம வாசிகளுக்கு தண்ணீர் கஷ்டமில்லை. நல்ல விஷயம் இது.//
பதிலளிநீக்குநல்ல காரியம்.
இசை காணொளி அருமையாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்கு