ஒவ்வொரு முறை திருச்சியிலிருந்து
தில்லி வரும்போதும், சென்னை வரை பேருந்து பயணம் தான். கடைசி நேரத்தில் முடிவு
செய்து புறப்படுவேன் - இரயிலில் இடம் இருக்காது என்பதால் பேருந்து பயணம். இம்முறை மலைக்கோட்டை
விரைவு வண்டியில் பார்க்க, தத்காலில் இடம் கிடைத்தது. திருவரங்கம் இரயில்
நிலையத்திலேயே ஏறிக்கொள்ளலாம் என்பது ஒரு வசதி. ஜங்ஷன் வரை செல்ல வேண்டாம். இணையம்
வழி முன்பதிவு செய்யும் போது எப்போதுமே “ஆட்டோ அப்க்ரேட்” என்ற இடத்தில் டிக்
செய்து வைப்பேன். நீங்கள் முன்பதிவு செய்வது எந்த வகுப்பிலிருந்தாலும், அதற்கு
மேலே உள்ள வகுப்பில் இடம் இருந்தால் இப்படி “டிக்” செய்து வைத்திருப்பவர்களுக்கு
அதிக கட்டணம் ஏதும் வாங்காமல் அப்கிரேட் செய்துவிடுவார்கள். இப்படி நிறைய முறை
எனக்குக் கிடைத்திருக்கிறது.
இந்த முறையும் Sleeper வகுப்பில்
தான் முன்பதிவு செய்திருந்தேன். பயணம் செய்ய வேண்டிய நாள் மதியம் ஒரு அலைபேசித்
தகவல் – IRCTC-யிடமிருந்து! உங்கள் பயணச் சீட்டு Sleeper-லிருந்து III AC-க்கு
அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது. B2 Coach Seat No.5 எனத் தகவல்! நல்லதாயிற்று! இரவு
மீண்டும் ஒரு தகவல் – உங்கள் இரயிலின் முக்கிய அதிகாரியின் பெயர் இது, இரயில்
குறித்த உங்கள் பிரச்சனைகளுக்கு இவரை அணுகலாம் என்ற செய்தி! பரவாயில்லையே இப்படி
தகவல் எல்லாம் முன்னர் வந்ததில்லையே என நினைத்தேன். ஆட்டோ அப்க்ரேட் வசதி பற்றி
தெரியாதவர்களுக்காகத் தான் இங்கே பகிர்ந்து கொண்டேன். அடுத்த முறை இணையம் வழி
முன்பதிவு செய்யும்போது இந்த வசதியைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு Luck
இருந்தால் இப்படி அப்க்ரேட் ஆகலாம்! எனக்கு இப்படி குறைந்தது ஐந்து-ஆறு முறை
நடந்திருக்கிறது.
சரி தலைப்பின் இரண்டாவது
விஷயத்திற்கு வருகிறேன். அதாங்க லோகநாயகியின் [பெயர் மாற்றம் செய்யப்பட்டது!] கதை….
இரவு பதினொன்று மணிக்கு தான்
மலைக்கோட்டை திருவரங்கத்திற்கு வரும். பத்தே கால் மணிக்கு ஆட்டோவில் இரயில்
நிலையம் வந்து சேர்ந்தேன். மலைக்கோட்டைக்கு முன் செல்ல வேண்டிய குருவாயூர் விரைவு
வண்டியே இன்னும் செல்லவில்லை. பயணிகள் காத்திருந்தார்கள். நானும் ஒரு இடத்தில்
சென்று நின்று கொண்டேன். ஒரு பெரியவர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த மர பெஞ்சில்
அமர்ந்திருந்தார். பக்கத்திலேயே லோகநாயகி – அவர் இரயில்வே ஊழியர் – வேலையில் இருந்த
கணவர் இறந்துவிட Compassionate Ground-ல் வேலை இவருக்குக் கிடைத்திருக்கிறதாம்.
பெரியவரும் லோகநாயகியும் பேசிக்கொண்டிருந்ததை நானும் கேட்டுக் கொண்டிருந்தேன் –
பொழுது போகவேண்டுமே!
பெரியவருக்கு லோகநாயகியின் கதை
கேட்பதில் ரொம்பவே ஆர்வம். அது எனக்கும் வசதியாகப் போனது! எத்தனை குழந்தைகள், என்ன
செய்கிறார்கள், உங்க வீட்டுக்காரர் என்ன வேலை செய்தார், இராத்திரி வேலையா இருக்கே,
தூங்க முடியுமா? உங்களுக்கு என்ன வேலை இங்கே, என அவ்வப்போது போட்டு வாங்க,
லோகநாயகி தனது முழுக்கதையும் சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கும் நன்றாக பொழுது
போனது [ஒரு பதிவும் கிடைத்தது!]. லோகநாயகி பதில்கள் எல்லாமே டாண் டாண் என, இரயில்
வரும் முன்னர் கட்டி வைத்திருக்கும் தண்டவாளத் துண்டில் இரும்புக் கம்பியால் அவர் அடிக்கும்போது
எழும் ஓசையைப் போலவே இருந்தன.
“உங்க கணவர் என்ன வேலை
செய்தார்?” – என்ன பெரிய வேலை, கொடி ஆட்டறது தான்! நானும் கொடி
ஆட்டறது, மணி அடிக்கிறது, இராத்திரி நேரமா இருந்தா விளக்கு காமிக்கிறது! இது தான்
வேலை!
”இராத்திரி வேலைக்கு
வரீங்களே, தூங்க முடியுமா?” ஹாங்… அது எப்படி முடியும்? ரா
பூரா வண்டி வந்துட்டே இருக்குமே… மணி அடிக்கணும், விளக்கு காமிக்கணும், தூங்காம
இருந்தா தான் முடியும். நடு இராத்திரில கொஞ்ச நேரம் உட்கார்ந்தே கண்ணசரலாம்.
அதுவும் எப்பவுமே தடக் தடக்னு ரயில் சத்தம் கேட்கறமாதிரியே இருக்குமா, சரியா
தூக்கம் வராது! இதுல ஆஃபீசர் பார்த்துட்டா வேற திட்டுவார்!
”என்ன சம்பளம்
கிடைக்குது?” - அது வருது…. அவர் இறந்த்ததால, ஃபேமிலி பெஞ்சன்
ஒரு 5000/- மாச சம்பளம் ஒரு 15000/- வருது. வீடு கொடுத்து இருக்காங்க, எனக்கும்
சின்னதா வீடு கட்டிக்கணும்னு ஆசை. இந்த பத்து வருடம் ஓடிடுச்சுன்னா ரிட்டையர்
ஆகணும்!
”பசங்க
எத்தனை? என்ன பண்ணுறாங்க?” எனக்கு மூணு பசங்க – ரெண்டு பையன் – ஒரு பொண்ணு, பொண்ண
கட்டி கொடுத்துட்டேன். பெரியவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு – தனிக்குடித்தனம் போயிட்டான்.
ரொம்பவே முசுடு. பொசுக் பொசுக்குன்னு கோவம் வருது, பொண்டாட்டிய அடிச்சுடறான் – இப்படி
கோவம் வருதே, கல்யாணம் ஆனா சரியாடுவான்னு, கல்யாணம் பண்ணி கொடுத்தேன், அந்த
பொண்ணுக்கிட்டயும் கோவப்படுறான். நல்லவன் தான் ஆனா கோவம் ஜாஸ்தி…. வேலைக்கு
போறான், அவன் குடும்பத்த பார்த்துக்கறான்! எனக்கு ஒண்ணும் தரதில்ல!
”இரண்டாவது
பையன்?” பெரியவர் விஷயத்திற்கு இன்னும் தூண்டில் போடுகிறார்! அவன
நினைச்சா தான் இராத்திரில தூக்கம் வரமாட்டேங்குது. நட்ட நடு ராத்திரில, இப்படி
தூங்காம, யாருமில்லாத ஸ்டேஷன்ல உட்கார்ந்து இருக்கும்போது மனசு அவனைப் பத்தியும்
நினைக்கும். இப்படி இருக்கானேன்னு – பன்னெண்டாவது படிச்சான், அப்புறம் மூணு
வருஷம், அப்புறம் இரண்டு வருஷம் படிச்சான். இப்ப இரண்டு வருஷமா சும்மா வீட்டுல
தான் இருக்கான். வேலை ஒண்ணும் கிடைக்கல, வேலை எதாவது கிடைச்சுட்டா, கல்யாணம் பண்ணி
வெச்சுட்டு நிம்மதியா இருப்பேன்.
”அதெல்லாம்
சரி, நீ எங்க போற, அது யாரு, புள்ளைகாரி, இரட்டை புள்ளையா?” இத்தனை நேரம்
கேள்வி கேட்ட பெரியவரையே ஒரு எதிர் கேள்வி கேட்டார் லோகநாயகி! அது என் மருமவ மா.
பையன் சென்னைல இருக்கான் – மருமவளையும் கைக்குழந்தைகளையும் அவங்கிட்ட சேர்க்கணும்.
இரட்டை பிள்ளைய பார்த்துக்கறது கஷ்டமாச்சே, நானும் என் பொண்டாட்டியும் கூட மாட
ஒத்தாசையா இருக்கலாம்னு சென்னைக்குப் போறோம்”. அதற்குள் குருவாயூர் வர, மணி
அடிக்கப் போனார் லோகநாயகி. போகும்போது, “மருமவளையும், பேரப்பிள்ளைங்களையும்
பார்த்து கூட்டிட்டுப் போ பெரியவரே!” என்று சொல்லிச் சென்றார்.
பயணிகள் ஏறிக்கொள்ள
கொடி அசைத்து குருவாயூர் விரைவு வண்டியை அனுப்பி வைத்தார் லோகநாயகி. நானும் எனது
வண்டிக்கான காத்திருப்பில் – லோகநாயகியின் கதையை அசை போட்ட படியே!
உங்கள் கருத்துகளை
பின்னூட்டத்தில் சொல்லலாமே!
மீண்டும் ச[சி]ந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
ஆட்டோ அப்கிரேட் அருமை..
பதிலளிநீக்குஇன்னும் எத்தனை எத்தனை லோகநாயகிகளோ!..
வாழ்க நலம்..
தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும் ஒருவிதம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஆம் வெங்கட் ஜி...நானும் ஆட்டோ அப்க்ரேட் செய்வதுண்டு...இதுவரை ஆனதில்லை என்பதால் பச்...இது சும்மா என்று நினைத்தேன்.... ஆனால் சமீபத்தில் தோழிக்கு அப் கிரேட் ஆனது...அப்பத்தான் நம்பினேன்....
பதிலளிநீக்குஆம் வெங்கட்ஜி நான் சென்ற முறை ஒரு 7,8 மாதம் இருக்கும்...அப்போது பதிவு செய்ததும் முக்கிய அதிகாரியின் பெயர் எண் எல்லாம் வந்தது...அட பரவாயில்லையே என்று நினைத்தேன்.....ஆனால் பாருங்கள் நீங்கள் அதை அழகாகச் சொல்லிப் பதிவாக்கி எல்லோருக்கும் தெரிய வைத்துள்ளீர்கள்....எனக்கு அதுதோன்றவே இல்லை பாருங்க...காரணம்..அதுஒருவேளை.. நம் சிஸ்டெம் இப்படி எல்லாம் இல்லாமல் அதுவே பழகிப் பழகி...சிஸ்டெத்தில் நல்லது வரும் போது நம்பிக்கை டக்கென்று வர மாட்டேங்குது...போல...என்று நினைத்துப் கொள்கிறேன். உங்களிடம் இதைக் கற்றுக்கொண் டேன்... இனி பகிர வேண்டும் என்று...
கீதா
எனக்குப் பலமுறை இப்படி ஆட்டோ அப்க்ரேட் ஆனது. III AC- யிலிருந்து II AC கூட ஆனதுண்டு.
நீக்குபதிவுகள் - நமக்கு முன்னே பல விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாவற்றையும் பதிவாக்க முடிவதில்லை! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
சுவையான பதிவு!
பதிலளிநீக்குஎன் கணவருக்கு ஒரு முறை டில்லியிலிருந்து சென்னை வரும் பொழுது தர்ட் ஏ.சி.யிலிருந்து செகண்ட் ஏ.சி.க்கு அப் க்ரேட் ஆனது. இதெல்லாம் ஒற்றை ஆளாக பயணம் செய்தால்தான்.
விமான பயணங்களிலும் இப்படி பட்ட சலுகைகள் கிடைக்கும். நான் ஒரு முறை பம்பாயிலிருந்து மஸ்கட் தனியாக சென்ற பொழுது, பேகேஜும் குறைவாக இருந்ததாலோ என்னவோ எகானமி வகுப்பிலிருந்து எக்ஸிக்யூட்டிவ் வகுப்பிற்கு மாற்றி கொடுத்தார்கள் :))
அதுக்கு விமானம் ஓவர் புக் ஆகியிருக்கணும். அப்போ frequent travellersக்கு பிசினெஸ் கிளாஸ் ஒதுக்கி, அதிகமான பயணிகளை எகனாமிக்கில் சேர்த்துப்பாங்க. அப்படி இல்லைனா, பெண்களுக்கு இப்படிச் செய்வார்கள். நிறைய frequent travellers (Loyalty Card) இருந்தால், அதில் ஸ்பெஷன், Gold, Silver, Ordinary என்ற வரிசைப் பிரகாரம் அப்கிரேட் செய்வார்கள். சில சமயம், book பண்ணி, அதிகமான பயணிகள் இருந்தால், நாம் அதிகாரமாகக் கேட்டால், compensation அல்லது hotel stay ஆர்கனைஸ் செய்வார்கள். (எம்ரேட்ஸில், இன்னொரு இலவச டிக்கெட் தருவார்கள், கல்ஃப் ஏரில் 5000+ ரூபாய் தருவார்கள்)
நீக்கு//ஒற்றை ஆளாகப் பயணம் செய்தால் தான்!// அப்படி இல்லை. நான் குழுவாகப் பயணித்த போது கூட எனக்கு இப்படி கிடைத்ததுண்டு.
நீக்குவிமானத்தில் அப்க்ரேட் செய்ய அவ்வப்போது கேட்பார்கள் - காசு கொடுங்கள் என்று கேட்பதால் வேண்டாம் என்று சொல்வதே வழக்கம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
விமானத்தில் இருக்கும் மேலதிக வசதிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தது நல்லது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
ஆட்டோ அப்கிரேடு நல்ல தகவல். லோகநாயகி கதை சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.
நீக்குஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு கதை இருக்கும். நீங்கள் சொன்ன நிகழ்வுகளையே யோசித்தால் எத்தனையோ கதைகள் கிடைக்கும், இருக்கலாம்.
பதிலளிநீக்குஎத்தனையோ கதைகள் கிடைக்கும். உண்மை தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
விமானப் பயணத்தில் தான் அப்க்ரேட்னு நினைச்சிருந்தேன். ரயிலிலும் உண்டா? லோகநாயகியைப் பார்க்க முயற்சி செய்யணும்! :) உண்மைக் கதை என்பதால் உயிரோட்டத்துடன் இருக்கு! இப்படிப் பல லோகநாயகிகள்!
பதிலளிநீக்குரயிலிலும் உண்டு.
நீக்குலோகநாயகியைப் பார்க்க முயற்சி செய்யணும்! ஹாஹா... பெயர் மாற்றி இருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
ஆட்டோ அப்கிரேட் தகவல் எனக்கு புதுசு. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல விஷயம். பலருக்கும் இந்த வசதி பற்றி தெரியவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதைகள். அதில் இந்த லோகநாயகிக்கும் ஒரு கதை. ஆனால் எல்லோருக்கும் ஏதோ ஒரு கவலை இருந்து கொண்டேதான் உள்ளது. கதை நன்றாய் இருந்தது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சோகமும் கதையும் இருக்கத்தான் செய்கிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஆட்டோ அப்கிரேட் தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குலோகநாயகி கதை படித்தவுடன் அந்த அம்மாவின் ஆசைகள் பூர்த்தியாக வேண்டும் என்று பிரார்த்த்னை செய்ய வைத்தது.
பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ அம்மாவிற்கு எல்லாம் கவலைதான் அவர்கள் வாழ்வில் நல்லபடியாக செட்டில் ஆக வேண்டும் என்று.
அவர் கண்வர் இல்லாமல் குழந்தைகளை வளர்த்து இருக்கிறார் அவர் மனம் போல மூன்று குழந்தைகளும் நலமோடு இருக்க வேண்டும், சொந்த வீடு கனவும் நிறைவேற வேண்டும்.
//அவர் மனம் போல மூன்று குழந்தைகளும் நலமோடு இருக்க வேண்டும். சொந்த வீடு கனவும் நிறைவேற வேண்டும்//
நீக்குஉங்கள் வாக்கு பலிக்கட்டும்மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
முகப்புத்தகத்தில் வந்த கருத்துரை:
பதிலளிநீக்குSreemathi Ravi:
நிஜக்கதைகள் என்றுமே ஸ்வாரஸ்யமானவை.
இந்தக் கதையும் அப்படியே ! 👌💐
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமதி.
நீக்கு