அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்; நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்.
******
”இந்த தடவ நான் சொல்றத நீங்க கவனமா கேளுங்க மாதாஜி… நீங்க எத்தனை தான் சொன்னாலும், இந்த தடவை நீங்க சொல்ற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்! நீங்க சொல்ற மாதிரி நடந்துக்கிட்டதால தான் என்னோட குழந்தைகளை இழந்து நிக்கறேன்!” என்று ஒரு முடிவுடன் சொல்லிக் கொண்டிருந்தாள் பிரபாவதி!
”இது என்னடி அதிசயமா இருக்கு! நீ இப்படி மாமியார எதிர்த்து பேசற! நாங்கெல்லாம் எங்க மாமியார் முன்னாடி நிக்கவே பயப்படுவோம்! அவங்க என்ன சொன்னாலும் நாங்க செய்துட்டு தான் இருந்தோம். எங்க மாமியார் எனக்கு குழந்தைகள் பொறந்தப்ப, எல்லா குழந்தைகளுக்கும் Bபாரா சிங்கா கறி சமைச்சுக் கொடுத்தாங்க! அத்தனை குழந்தைகளும் நல்லாத்தான் வளர்ந்தாங்க! யாருக்கும் எதுவும் ஆகல! நான் என் கொழந்தைங்களுக்கு கொடுத்த மாதிரியே உன் வழி பிறந்த என் பேரக் குழந்தைகளுக்கும் கொடுக்கறேன்! அதை நீ தடுக்கறது சரியில்ல! அந்த கறி சாப்பிட்டதால தான் குழந்தைங்க செத்துப் போச்சுன்னு சொல்ற உன்னோட வாதம் சரியே இல்லை! நீ என்ன சொன்னாலும் நான் Bபாரா சிங்கா கறியை இந்தக் குழந்தைக்கும் கொடுத்தே தீருவேன்!” என்று தன் பக்கத்து நியாத்தையை நீட்டி முழக்கினாள் மாமியார் மூளிதேவி.
நிகழ்ந்தவற்றை யோசித்தபடியே தன் முடிவில் மாற்றமில்லை என்று உட்கார்ந்திருந்தாள் பிரபாவதி! தலைதலைமுறையாக ஊரில் பெரிய தனக்காரராக இருந்த குடும்பத்தில் வாக்கப்பட்ட தனக்கு ஏன் இப்படி ஒரு நிலை என்று எண்ணாத நாள் இல்லை! மாமனார் காலம் வரை துப்பாக்கி எடுத்துக் கொண்டு பக்கத்துக் காடுகளில் வேட்டைக்கு செல்வது வழக்கமாக இருந்தது! அப்படி வேட்டைக்குப் போன போது கிடைத்த Bபாரா சிங்காவை அடித்துக் கொண்டு வர அதன் மாமிசத்தை எடுத்து பதப்படுத்தி வைத்தார் மாமியார். தோலும் பதப்படுத்திய பிறகு பஞ்சு அடைக்கப்பட்டு, முழு உருவத்துடன் வீட்டின் வரவேற்பறையில் மேலே மாட்டி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அதனைப் பார்க்கும்போதும், ”எனக்கு ஏன் இந்த நிலை?” என்று அது தன்னிடம் கேட்பது போலவே இருக்கும் பிரபாவதிக்கு!
ஒவ்வொரு குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப் பிறகும், மாமியார் தான் பக்குவப்படுத்தி வைத்த கறித் துண்டங்களை சமைத்து குழந்தைகளின் உடல் நலனுக்கு நல்லது என்று கொடுக்க, ஒன்றிரண்டு தினங்களிலேயே அந்தக் குழந்தை இறந்து விடும். ஒன்றல்ல இரண்டல்ல, வரிசையாக எட்டு குழந்தைகள்! வரிசையாக கர்ப்பம் தரிப்பதும், சில மாதங்களுக்குள் கறித்துண்டங்கள் கொடுத்து, குழந்தைகள் இறப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்ததே! எத்தனை கொடுமையான நாட்கள் அவை. கொஞ்சம் தைர்யம் வந்து கறித்துண்டங்கள் கொடுக்க வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் கொடுத்துக் கொண்டே இருந்த மாமியார்! ஒன்பதாம் முறையாக கர்ப்பம் தரித்து, தற்போது அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்து இருக்கிறேன்! இனிமேலும் நான் குழந்தைகளை இழக்கத் தயாரில்லை! என்ன ஆனாலும் சரி என்ற முடிவுடன் தைரியமாக தன் மாமியாரிடம் சொல்லி விட்டாள் பிரபாவதி!
குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. குழந்தையை விட்டு விலகாமல் தன் கவனிப்பிலேயே வைத்துக் கொண்டிருந்தாள் பிரபாவதி. இந்த முறை மாமியாரால் அக்குழந்தைக்கு கறித்துண்டங்களை கொடுக்கவே முடியவில்லை. நாட்களும் வேகமான நகர்ந்தன. குழந்தை வளர்ந்து வந்தான். அவன் வளர்வதைப் போலவே சில வருடங்களில் குடும்பமும் வளர்ந்தது. அதன் பிறகு நான்கு குழந்தைகள்! ஐந்து குழந்தைகளுக்கும் மாமியார் கறித்துண்டங்களை கொடுக்க விடவேயில்லை பிரபாவதி! ”என்னமோ போ, குழந்தைகளுக்கு நல்லதுன்னு தான் கறித்துண்டங்களைக் கொடுத்தேன்! இப்போ அப்படிக் கொடுக்காததால தான் இந்தப் பேரன் பேத்திகள் தங்கியிருக்குன்னு நீ சொல்றத கேட்டுக்கறத தவிர எனக்கு என்ன வழி என்று” புலம்பியபடியே தன் வாழ்க்கையைக் கடத்தினாள் மாமியார் மூளிதேவி!
தப்பித்த அந்த முதல் குழந்தைக்கு இன்னிக்கு வயசு 65! அவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டு மகன், மகள், பேரன் பேத்தின்னு குடும்பத்துடன் இருப்பது போலவே, வீட்டின் முகப்பில் இருக்கும் உயிரில்லாத அந்த Bபாரா சிங்கா-வின் உருவமும் அங்கே இருந்து நடப்பதையெல்லாம் பார்த்தபடி இருக்கிறது!
******
சில குறிப்புகள்:
கதையல்ல நிஜம் - மேலே சொன்ன சம்பவம் நிஜமாக நடந்தது - எழுபது வருடங்களுக்கு முன்னதான விஷயம் இது. 13 குழந்தைகளைப் பெற்றெடுத்த ப்ரபாவதி 95 வயது வரை, தனது ஐந்து மகன்/மகளுடன் உயிர்வாழ்ந்தார்.
வடக்கில்/ஹிந்தியில் Bபாரா சிங்கா எனச் சொல்லப்படும் உயிரினம் - தமிழில் சதுப்பு மான் என்றும் ஆங்கிலத்தில் Swamp Deer என்றும் அழைக்கப்படுகிறது. சீங் என்றால் கொம்பு! Bபாரா என்றால் பன்னிரெண்டு! Bபாரா சிங்கா என்றால் பன்னிரெண்டு கொம்புகள் கொண்ட உயிரினம் என்ற அர்த்தம்!
******
நண்பர்களே, இந்தப் பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
ஒரு உண்மை நிகழ்வை கதை போல சொல்லி இருப்பது சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செண்டிமெண்ட். இது காக்கை உட்கார பனம்பழமா இல்லை பூர்வ ஜென்ம வாசனையா (சாபமா) என்று யாருக்கும் புரிவதில்லை.
பதிலளிநீக்குகாக்கை உட்கார பனம்பழமா இல்லை பூர்வ ஜென்ம வாசனையா - புரியாத புதிர் தான். ஆனாலும் அந்த சமயத்தில் சம்பந்தப்பட்டவருக்கு இப்படியெல்லாம் தோன்றுவதில்லை நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//வீட்டின் முகப்பில் இருக்கும் உயிரில்லாத அந்த Bபாரா சிங்கா-வின் உருவமும் அங்கே இருந்து நடப்பதையெல்லாம் பார்த்தபடி இருக்கிறது! //
பதிலளிநீக்குபடிக்கவே மேனி சிலிர்க்கிறது.
எட்டு குழந்தைகளை பறி கொடுத்த பின் மாமியாரிடம் உறுதியாக கொடுக்க வேண்டாம் என்று சொல்ல துணிச்சல் வந்து இருக்கிறது பிரபாவதி அம்மாவுக்கு.
மான் பூங்கா போனோம் இப்படி நிறைய கொம்புகள் உள்ள மான் பார்த்தோம்.
பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உண்மை நிகழ்வா...? வியப்பாக இருக்கிறது,..
பதிலளிநீக்குகொலைகாரி மூளிதேவி...
உண்மை நிகழ்வே தனபாலன். இப்படியும் சிலர் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். வருத்தமான நிகழ்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குஅறியாமைதான். படிக்கவே சோகம்.
பதிலளிநீக்குபிரபாவதியின் எதிர்ப்பால் தப்பியது குழந்தைகள்.
சில விஷயங்கள் சோகமே மாதேவி. நல்லவேளை எட்டுக்குப் பிறகு தப்பியதே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.