அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
இறக்கும் நேரத்தினை விட துன்பப்படும் நேரத்திலேயே நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகிறது - நெப்போலியன்.
******
தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்! படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!
கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று பகுதி இரண்டு பகுதி மூன்று
பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு
பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று
பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு
வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.
******
கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்
அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம். வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம். MASK FIRST SHOE NEXT!
முந்தைய பகுதி ஒன்றில் ஸ்டென்சில் (Stencil) குறித்து பிறகு எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். அந்த அனுபவங்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம் வாருங்கள். இதுவும் சற்றே நீண்டதொரு கிளைக்கதை தான். இந்த ஸ்டென்சில் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர் 1980-களின் மத்திய அரசு அலுவலகங்கள் பற்றி ஒரு சில விஷயங்கள்.
இப்போது மிகப் பிரபலமாகவும், அதிவேகமாகவும் இயங்கும் பிரதிநகல் இயந்திரங்கள் (Photocopy Machine) அந்நாளில் கிடையாது. துவக்கத்தில் MODI XEROX அறிமுகப்படுத்திய இயந்திரங்களில் ஒரு நகல் எடுக்க படாத பாடு படவேண்டும். பெரிய இயந்திரம் அது. மேலே பிரதான நகல் வைத்து ரவை போல ஒரு பொருளை தூவி ஒரு தட்டு மாதிரி பிம்பம் ஒன்றை எடுத்து அதை மீண்டும் வேறு ஒரு இடத்தில் பொருத்தி, இப்படி பல சாகசங்கள் செய்ய வேண்டும்.
அந்நாளில் பாராளுமன்றத்தில் அமைச்சர் அல்லா உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் கேள்விகள் எழுப்பலாம். இரண்டு வகை கேள்விகள் - Starred Question - கேள்வி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வாய்மொழியாக விடையளிக்க வேண்டிய கேள்விகள் மற்றும் Unstarred Question - எழுத்துப் பூர்வ விடையளிக்க வேண்டும். இவற்றை SQ என்றும் USQ என்றும் சுருக்கமாகச் சொல்வார்கள். (தற்போதும் இதே முறை தான் நடைமுறையில் இருக்கிறது! ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடரின் போதும் கேள்வி நேரம் உண்டு!)
ஒரு நாளில் ஐந்து முதல் ஏழு அமைச்சகங்கள் தொடர்பான கேள்விகள் பதிலுரைக்க எடுத்துக் கொள்ளப்படும். மொத்தமாக வாய் மொழி வினாக்கள் 20 மட்டும்! எழுத்துப் பூர்வ வினாக்கள் 200 மட்டுமே ஒரு நாளுக்கான மொத்த வினாக்கள்.
அந்நாட்களில் இந்த கேள்விகளுக்கான விடைகளை, மக்கள் சபை (LOK SABHA) என்றால் 550 பிரதிகளும், மேலவை என்கிற மாநிலங்கள் அவை (RAJYA SABHA) என்றால் 250 பிரதிகளும் எடுக்க வேண்டும். மொத்தம் எத்தனை பிரதிகள் என்பதனை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்! சில விடைகள் அதிக பக்கங்கள் கொண்டவையாகவும் இருக்கும் என்பதால் பல ஆயிரம் பக்கங்கள் ஒவ்வொரு நாளும் நகல் எடுக்கப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
என்று கேள்வி நேரமோ (ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் மக்கள் சபையில் ஒரு நாள், மேலவையில் ஒரு நாள் என்று கேள்வி நாள் அமையும்) அன்று அதிகாலை மூன்று மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்குக் காத்திருப்பது போல காத்திருந்து கேள்வி-பதில் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அன்றைய நாட்களில் பிரதிநகல் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஒரு முறை தான் இந்த Stencil. அதிக அளவில் பிரதி எடுக்க இந்த முறை தான் பயன்படுத்தப்பட்டது.
இப்படி அமைச்சகத்திற்கான SQ/USQ வரும் சமயங்களில் எல்லாம் திருவிழா மாதிரி தான் இருக்கும். கேள்வி நாளுக்கு முந்தைய நாட்களில் கேள்விகள் குறிப்பிட்ட பிரிவில் (Section) உள்ள கடைநிலை/இடைநிலை எழுத்தர்களால் துவக்கப்பட்டு,
Lower Division Clerk (LDC)
Upper Division Clerk (UDC)
Assistant
Section Officer
Under Secretary
Deputy Secretary (or) Director
Joint Secretary
Additional Secretary
Secretary
என பல நிலைகளைக் கடந்து வரும் வேளையில், வரிசையில் உள்ள அனைவரும் தங்களது ஆங்கிலப் புலமையையும் அறிவுக் கூர்மையையும் குத்திக் குதறி விளையாடுவார்கள். தட்டச்சு செய்து மாளாது. அக்கால FACIT, REMINGTON அல்லது GODREJ வகை இயந்திரங்களில் தான் ”தட்டோ தட்டு” என்று தட்டுவோம். FACIT இயந்திரத்தில் தட்டுவது மிகவும் கடினம் என்றால் REMINGTON நேர்மாறாக இருக்கும் - Feather Touch என்று சொல்வது போல! GODREJ இயந்திரத்தில் தட்டினால் பயங்கர சத்தம் தான்!
இப்படியாக மாறி மாறி தட்டித் தட்டி, ஒரு வழியாக செயலரின் ஒப்புதல் பெற்றபின் இரவு எட்டு மணிக்கு மேல் ஸ்டென்சில் நிலைக்கு வரும் கேள்வி பதில்! அதன் பிறகு?
அடுத்த பகுதியில் மேலும் சில பல ஸ்வாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொள்வேன். தொடர்ந்து கடந்து வந்த பாதையில் பயணிப்போம்.
நட்புடன்
சுப்ரமணியன்
புது தில்லி
******
நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து...
பாராளுமன்ற, நாடாளுமன்ற விவரங்கள் சுவாரஸ்யம். ஸ்டென்சில் கட் செய்வது பற்றி தட்டச்சு வகுப்பில் படித்த ஞாபகம். மேலும் என் அப்பா அலுவலகத்தில் பார்த்திருக்கும் ஞாபகமும் லேசாக இருக்கிறது. உங்கள் எழுத்துகளில் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குபதிவின் வழி சொன்ன விவரங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
6-7ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிகளில் மஞ்சள் கலர் உள்ள ஸ்டென்சில் ரெடி செய்து கேள்வித்தாள்கள் பிரதி எடுத்து மாணவர்களுக்குக் கொடுப்பார்கள்...1977. அந்த நினைவு வந்துவிட்டது.
பதிலளிநீக்குநல்ல விளக்கமாக எழுதியிருக்கீங்க.
அது சரி... மத்திய அரசு ஊழியர்களுக்கு உங்க டப்பா சாப்பாடா இல்லை கான்டீன் வசதி, பாராளுமன்ற கான்னீன் வசதிலாம் உண்டா?
தட்டச்சு ஆங்கிலமா ஹிந்தியா? பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலம் தெரியாதே
காண்டீன் வசதி - குறைவான வசதிகள் இருந்தன. Departmental Canteens என்ற பெயரில் இயங்கி வந்தன. தற்போது Departmental Canteens தவிர, சில தனியார் உணவகங்களும் சில அமைச்சகங்களில் உண்டு! பாராளுமன்ற உணவகத்தில் MPs அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை நெல்லைத் தமிழன்.
நீக்குதட்டச்சு ஆங்கிலம் தான் முதலாக! அவை அனைத்தும் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்படும்! ஆங்கிலம், ஹிந்தி இரண்டுமே எல்லா உறுப்பினர்களுக்கும் அளிக்கப்படும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மூன்று வகையான தட்டச்சு இயந்திரங்கள்... அவரின் அனுபவம் உண்மை... (தட்டிப் பார்த்துள்ளேன்)
பதிலளிநீக்குஉங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறது என்று தெரிந்து மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தகவல்கள் ஆச்சர்யமளிக்கிறது நண்பரே...
பதிலளிநீக்குதகவல்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என்னைப்பொறுத்தவரை ரெமிங்டன் சற்று சிரமம். பேசிட் மிக எளிதாக இருந்தது. கோத்ரேஜ் இன்னும் கடினம். அனைத்திலும் தட்டச்சு செய்தபோதும் அலுவலகத்தில் தட்டச்சு செய்யும் காலத்தில் அதிகமாக கோத்ரேஜின் ஆக்ரமிப்புதான். கோவையில் கோத்ரேஜ் தட்டச்சுப்பொறியில் டபுள் சிலிண்டர் எனப்படுகின்ற பெரிய சிலிண்டர் கொண்ட பொறியில், ஏ4 அளவில் இரு பங்கு தாளில், 1+7 (முதல் தாள் மொத்தமாகவும், பிற ஏழும் பைபிள் தாளைப்போல மென்மையாகவும் இருக்கும்) தட்டச்சு செய்தது மறக்கமுடியா அனுபவம். ஆரம்பத்தில் நெஞ்சு வலித்தது. பின்னர் பழகிவிட்டது. அங்குதான் அதிக படிகளில் (number of copies inserted in the typewriter) ஒரே நேரத்தில் தட்டச்சு செய்தேன். பெரும்பாலும் தட்டச்சில் தவறு இருக்காது. அவ்வாறே ஸ்டென்சில் கட்டிங் நிலையிலும் தட்டச்சினை தவறின்றி செய்வேன். அதனால் பெரும்பாலான தட்டச்சுப்பணிகள் என்னிடமே வந்து சேர்ந்து அனுபவித்தது தனிக்கதை.
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. வேலையில் சுத்தம், சுறுசுறுப்பு ஆகியவை இருந்தால் பெரும்பாலான வேலைகளை அவர்களிடமே தள்ளி விடுவது வழக்கம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எத்தனை அரிய தகவல்கள்.
பதிலளிநீக்குஇப்படி தினம் தினம் உழைத்தவர்கள்
மன நிலை எப்படி இருக்கும்?
இயந்திரமாகி விடாதா:(
மிக அருமையாக விவரிக்கிறார் திரு சுப்ரமண்யம்.
நன்றி மா வெங்கட்.
தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. பாராளுமன்ற கூட்டத்தொடர் நாட்களில் பெரும்பாலும் இப்படித்தான் வல்லிம்மா. இப்போதும் கூட சில நாட்களில் இரவு முழுவதும் அலுவலகத்தில் இருக்கும்படி ஆகிவிடுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் நான் அதிகபட்சமாக இரவு 11 மணி வரை இருந்தேன். இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்த அளவு முறியடிக்கப்படலாம்! ஹாஹா. வேதனையாக இருந்தாலும் சாதனை போல சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அந்த நாள் நினைவுகள்
பதிலளிநீக்குநானே ஸ்டென்சில் கட் செய்திருக்கிறேன்
பல வருடங்கள், எம் பள்ளியின் சம்பளப் பட்டியலை, நான்தான் தட்டச்சு செய்வேன்
இன்று கணினியுகம்
தங்களது நினைவுகளையும் இப்பதிவு மீட்டெடுக்க உதவியிருக்கிறது. மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பழைய கால தட்ட்ச்சு இயந்திரம் எங்கள் வீட்டில்(அப்பா) இருந்தது.
பதிலளிநீக்குதட்டச்சு கற்ற காலங்கள் நினைவுகளில் வருகிறது.
அனுபவ பகிர்வு அருமை.
பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.