திங்கள், 23 ஆகஸ்ட், 2021

அலைக்கழிப்பு - இரயில் பயணங்களில் - பகுதி 2 - நிர்மலா ரங்கராஜன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தடுமாறும்போது தாங்கிப் பிடிப்பவர்களும் தடம் மாறும்போது தட்டிக் கேட்பவர்களுமே வாழ்வின் உண்மையான உறவுகள்.


******


இந்த வலைப்பூவில் சில பதிவுகளை எழுதிய தில்லி வாசி திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்களை நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம். சற்றே இடைவெளிக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு பதிவு - இரண்டு பகுதிகளாக வர இருக்கிறது - முதல் பகுதி இங்கே! அந்த வரிசையில் முதலாவது பகுதியாக இதோ இன்று - வாசிக்கலாம் வாருங்கள் - வெங்கட் நாகராஜ்.


******


நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். எனது இந்த இரயில் பயண அனுபவம் மூலமாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதல் பகுதிக்கான உங்கள் கருத்துரைகள் கண்டேன். மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டேன்.  கருத்துரைத்த, படித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள். 





கணவரிடம் பெட்டி காணவில்லை என்று சொல்ல, அவர் ஒன்றுமே சொல்லாமல் இருக்க, அவரும் என் நிலையில்தான் அதாவது அதிர்ச்சியில் இருந்திருப்பார் என்று புரிந்து கொண்டேன். போலீசில் சொல்லலாம் என்றால் அன்று எங்கள் பெட்டியில் காவலுக்கு போலீசார் யாரும் வரவில்லை. அன்று பயணச்சீட்டு பரிசோதனை செய்ய TTR ம் வரவில்லை. சிறிது நேரத்தில் போபால் ரயில் நிலையம் வந்தது. அங்கு பணி முடிந்து வீட்டிற்கு திரும்புவதற்கு ஒரு போலீஸ் அதிகாரி எங்கள் பெட்டியில் ஏறினார். அவரிடம் நடந்த விபரங்களை கூறி உதவி கேட்டேன். அவரோ தான் ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்லி ஒரு தொலைபேசி எண் கொடுத்து அது போபால் நிலையத்தின் கண்ட்ரோல் ரூம் நம்பர் என்றும் அங்கு தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றும் கூறினார். (அதை தான் கொடுத்ததாக எவரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்). உடனே அந்த நம்பரில் அழைத்து பேசினேன் அவர்கள் நிறைய கேள்விகள் கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறிய பிறகு என்னை ஆக்ரா ஸ்டேஷனுக்கு தொடர்பு கொண்டு பேசுமாறு கூறினார். அவர்களிடமே ஆக்ரா கண்ட்ரோல் ரூம் நம்பர் வாங்கி பேசினேன். அந்த அதிகாரிகள் நீங்கள் சென்னை சென்று கொண்டிருப்பதால் சென்னையில் உள்ள RPF(Railway Protection Force)-ல் புகார் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 


கணவரிடம்  தொடர்புகொண்டு, மேற்கொண்டு நடந்த நிகழ்வுகளை தெரியப்படுத்தினேன். அவர்கள் நண்பர்கள் மூலமாக railway police ல் பேசி இருப்பதாக கூறினார்கள். மேலும் PG portal லில் புகார் பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.  சிறிதுநேரத்திற்கு பிறகு இரண்டு போலீசார் வந்து விசாரித்தனர். விசாரனை முடிவில் நாக்பூர் ஸ்டேஷனில் போலீஸ் அதிகாரி உங்களை சந்திப்பார்கள் என்று கூறி சென்றனர். அவர்கள் சொன்னது போல் நாக்பூர்  ஸ்டேஷனில் வண்டி நின்ற உடன் மூன்று போலீசார் (ஒரு பெண் போலீஸ் உட்பட) வந்தனர்.  அவர்கள் வந்ததும் சரமாரியாக கேள்விகள் . பெட்டியில் இருந்த பொருட்களின் மதிப்பு எழுதினர். மூன்றரை சவரன் நகைக்கு 30,000 மதிப்புள்ள நகை என்றும் 15,000 ரொக்கத்திற்கு 5 ஆயரம் என்றும் எழுதினர். பட்டு புடவைகள் மற்றும் கவரிங் நகைகளுக்கு மதிப்பு எதுவும் குறிப்பிடவில்லை.  முதல் தகவல் அறிக்கை தயாரானது. கையெழுத்து வாங்கி கொண்டு ஒரு பிரதியை எனக்கு கொடுத்து விட்டு புறப்பட்டனர். மின்னல் வேகத்தில் FIR வேலை நடந்து முடிந்தது. 


இரயிலும் நாக்பூரிலிருந்து புறப்பட்டது. இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு நண்பர்களிடம் இருந்து தொடர் தொலைபேசி அழைப்புகள். எனக்கு தொலைந்து போன பொருட்களை நினைத்து கவலை, நண்பர்களுக்கு என்னை நினைத்து கவலை. எல்லோருமே ஒட்டு மொத்தமாக என்னை தேற்றுவதில் கவனம் செலுத்தினர். ஒரு வழியாக சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியாச்சு. அங்கு உறவினர் மகன் என்னை அழைத்து செல்ல காத்திருந்தார். இருவரும் RPF அலுவலகம் சென்றோம் புகார் கொடுக்க. அங்கு போராடி ஒரு அதிகாரியை சந்தித்தோம்( 9 மணிக்கு முன்பு எவரையும் சந்திக்க மாட்டார்களாம்). அவர், ஏற்கனவே நாக்பூரில்  FIR தயாராகி விட்டதால் மற்றொரு புகார் அவசியம் இல்லை என்று சொல்லி விட்டார். வீட்டிற்கு புறப்பட்டோம்.


வீட்டில் இரண்டு பைகள் நிறைய எனக்கு தேவையான அனைத்து உடுப்புகளும் தயாராக இருந்தது. ஒன்று எனது வீட்டிலிருந்து நண்பர்கள் மூலமாக அனுப்பி வைத்திருந்தனர். மற்றொன்று மதிப்பிற்குரிய எங்கள் நண்பரும் அவரது துணைவியாரும் கடைக்கு சென்று தேவையான அனைத்து உடுப்புகளும் வாங்கி வந்து தயாராக வைத்து விட்டனர். இதற்கிடையில் மற்றொரு நண்பர் சென்னை வாசி, அவரிடமிருந்து அழைப்பு. சந்திக்க வேண்டும் எங்கே இருக்கிறீர்கள் என்று. எனக்கோ இங்கிருந்து பறப்பட்டு மாம்பலத்தில் இருக்கும் நண்பர் வீட்டுக்கு சென்று அங்கிருந்து நாங்கள் எல்லோரும் சேர்ந்து திருக்கடையூர் செல்வதாக ஏற்பாடு. எனவே அந்த நண்பரிடம் செல்லும் வழியில் சந்திப்பதாக கூறிவிட்டு அடுத்த பயணத்திற்கு தயாரானேன். 


நண்பரிடம் சொன்னது போல அவர் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தேன் அவரோ என்னை பார்த்தவுடன் பரபரப்பாக அருகில் இருந்த கடைக்குள் நுழைய எத்தனித்தார். ஆமாங்க அவர் காத்திருந்தது போத்தீஸ் துணிக்கடை வாயிலில். கடைக்குள் நுழைந்த நண்பரை மறித்து எங்கே என்றேன். உங்களுக்கு தேவையான துணிகள் வாங்க வேண்டும் என்று கூறினார். இல்லை எனக்கு ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சு என்று சொன்னதும் சற்று ஏமாற்றத்துடன், (உதவ முடியவில்லையே என்று) சரி பரவாயில்லை என்று சொல்லி எனது கைப்பையை வாங்கி அதில் டெல்லிக்கு திரும்பும் வரை செலவுக்கு தேவையான அளவு பணத்தை வைத்து கைசெலவுக்கு கொஞ்சம் பணம் வைத்துள்ளேன் ஏதாவது தேவை என்றால் தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பிறகு மாம்பலத்தில் செல்ல வேண்டிய முகவரிக்கு ஆட்டோ அமர்த்தி அனுப்பி வைத்தார். 


"ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை" என்பார்கள். நண்பர்களின் பாசத்தையும் முக்கியத்துவத்தையும் அனுபவிக்க (தெரிந்து கொள்ள அல்ல அனுபவிக்க) இந்த சம்பவம் மற்றொரு வாய்ப்பாக அமைந்தது.


அதன் பிறகு நண்பரின் வீடு சேர்ந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு அங்கிருந்து திருக்கடையூர் நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது. செல்லும் வழியெல்லாம் ஒரே சிந்தனை, மணமகளின் அலங்கார அணிகலன்கள் எல்லாம் திருட்டு போய் விட்டதே அவர்களை நாம் எப்படி சந்திப்பது? என்று. அங்கு சென்ற பிறகு அந்த தோழி என்னை கட்டியணைத்து வரவேற்றார். ஆறுதல் கூறினார். அங்கு வந்திருந்த அனைவரிடமும் இவள்தான் பெட்டி தொலைத்த பெண் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கு இருந்தவர்கள் என்னை பார்ப்பதற்கு முன்பாகவே என்னை பற்றி தெரிந்து வைத்திருந்தனர். அதன் பிறகு கல்யாண கொண்டாட்டம் தான். எந்த நேரத்திலும் எனது மனம் வாடி விடாமல் பார்த்துக் கொண்டனர் நண்பர்கள். 


சரி... தொலைந்து போன பெட்டி என்ன ஆச்சு? அது அவ்வளவு தாங்க. டெல்லி திரும்பி ஒரு மாதத்திற்கு பிறகு நாக்பூர் போலீஸிடம் இருந்து அழைப்பு வந்தது. பெட்டியில் இருந்த நகைகள் வாங்கிய ரசீது இருந்தால் படம் பிடித்து அனுப்ப சொல்லி சொன்னார்கள். நானும் அனுப்பி வைத்தேன்.  சில நாட்களுக்கு பிறகு அந்த கேஸை தள்ளுபடி செய்து விட்டதாக தகவல் வந்தது. அதற்கான காரணம் மிகவும் அற்ப தனமானதாக இருந்தது. அதாவது பொருள் காணாமல் போன இடத்தில் தான் (ஆக்ராவில் காணாமல் போயிருக்கலாம் என்பது யூகம்) புகார் கொடுக்க வேண்டும் என்றும் அப்படி செய்யாததால் தள்ளுபடி செய்வதாகவும் சொல்லி இருந்தார்கள். போபாலை நெருங்கி கொண்டிருக்கும் போது தான் பொருள் காணாமல் போன விபரமே தெரியும், இந்த நிலையில் நான் திரும்பி சென்று ஆக்ராவில் எப்படி புகார் தர முடியும்? இந்த விசாரணை எல்லாம் ஒரு நாடகம் என்பது புரிந்தது. அவ்வளவுதான் முடிந்தது. 


மகளுக்கு ஆசையாய் வாங்கிய நகையை தொலைத்து விட்டோமே என்று நினைக்கும் போதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கும். என்ன செய்வது, நமக்கென்றானது மட்டுமே நம்மிடம் தங்கும்.(தத்துவம்!)


இதுவாவது இரயிலில் எனக்கு தெரியாமல் தூக்கி சென்றனர். வீட்டிலிருந்த பொருளை என் கையாலேயே திருடனிடம் தூக்கி கொடுத்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளது. 


அது என்ன!? வாய்ப்பு கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன்👍


இரண்டு வருடங்களுக்கு முன்னர் மனதை வாட்டி எடுத்த சம்பவம் தற்போது உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் அனுபவமாக மாறியுள்ளது. காலத்திற்கு எதையும் மாற்றக்கூடிய வல்லமை உண்டு. இந்த கொரோனா சூழலும் சரியாகி ஒரு நாள் எல்லோரும் நிம்மதியாக இருக்கும் நிலையை காலம் நமக்கு தரும் என்று நம்பிக்கை கொள்வோம்👍


நன்றி 🙏


மீண்டும் சந்திப்போம் 👋


நட்புடன்



நிர்மலா ரங்கராஜன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… 


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


24 கருத்துகள்:

  1. நமது நாட்டைப் பொருத்தவரை திருட்டுப்போன பொருள் திரும்ப கிடைப்பது அரிதான விடயமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருட்டுப் போன பொருள் கிடைப்பது அரிது தான். எங்கள் வீட்டில் திருடு போனபோது ஒரே ஒரு பொருள் தவிர அனைத்தும் திரும்பக் கிடைத்தது கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ரயில் பயண அனுபவங்கள் திக், திக், திக் என எங்களுக்கும் இருந்திருக்கு. பெட்டியையே தூக்கிக் கொண்டு போன அனுபவங்களும் உண்டு. ஆனால் இறை அருளால் பெட்டி அப்படியே திரும்பவும் கிடைச்சது. நானும் ரயில் பயணங்களில் என்னும் தலைப்பில் என்னோட அனுபவங்களைப் பதினைந்து வருடங்கள் முன்னர் எழுதினேன். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பயணங்கள் மறக்க முடியாதவை தான் கீதாம்மா. உங்கள் ரயில் பயண அனுபவங்கள் படித்த நினைவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. நீங்கல்லாம் அப்போ இணையத்தில் பிறக்கவே இல்லை. அதான் 15 வருடங்கள் முன்புனு சொன்னேன். :)))))

      நீக்கு
    3. இணையத்தில் பிறக்கவில்லை - பதிவுகள் எழுதவில்லை என்றாலும் இணையத்தில் உலவுவது பல வருடங்களாக பழக்கம் கீதாம்மா! :) அதுவும் வலைப்பூக்களில் சைலண்ட் ரீடர் மட்டும்!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சில சமயங்களில் நம் நாட்டின் சட்ட நடைமுறைகள் நாகமமு உதவுவது போலவே இருக்காது.  ஏமாற்றமாக இருக்கும்.  உங்கள் அந்நபர்களைக் காட்ட கொடுத்ததா விலை அதிகம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்ட நடைமுறைகள் பல ஒத்து வராதவை தான் ஸ்ரீராம். உபயோகமற்றவையும் கூட!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. //"ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை" என்பார்கள். நண்பர்களின் பாசத்தையும் முக்கியத்துவத்தையும் அனுபவிக்க (தெரிந்து கொள்ள அல்ல அனுபவிக்க) இந்த சம்பவம் மற்றொரு வாய்ப்பாக அமைந்தது.//

    நீங்கள் சொல்வது உண்மை.
    பெட்டி கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான்.

    /நமக்கென்றானது மட்டுமே நம்மிடம் தங்கும்.(தத்துவம்!)//
    என் கணவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை "நமக்கானது நமக்கு"

    //இந்த கொரோனா சூழலும் சரியாகி ஒரு நாள் எல்லோரும் நிம்மதியாக இருக்கும் நிலையை காலம் நமக்கு தரும் என்று நம்பிக்கை கொள்வோம்👍//

    நம்பிக்கை கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கானது நமக்கு - சரியான சிந்தனை கோமதிம்மா.

      நலமே விளையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வேதனை தந்த நிகழ்வு தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வருத்தத்தை உண்டாக்கிய பதிவு. இதனை எழுதிய பின்னர் உங்கள் மனச்சுமை குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனச்சுமை குறைந்திருக்க வாய்ப்பு - உண்மை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இந்த மாதிரி நிகழ்ச்சிகளையும் இரயில்வே போலீஸாரின் அலட்சியப் போக்கையும் படிக்கும்போது, எதற்கு அரசாங்கம் இவர்களுக்கெல்லாம் வெட்டியாக சம்பளம் தருகிறார்கள், பேசாமல் அந்தத் துறையையே கலைத்துவிடலாமே என்று தோன்றும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துறையைக் கலைத்து விடுவது சுலபமல்ல நெல்லைத் தமிழன். அவர்களது பணியில் அலட்சியப்போக்கு இருந்தால் அதனை சரி செய்ய முயல வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக துறையைக் கலைப்பது சரியான நடவடிக்கை அல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சம்பவத்தைப் படிக்கையிலேயே சிரமம் ஆக இருக்கிறது.
    இழந்ததை விட ஏமாற்றப் பட்டோமே என்ற் வருத்தமே அதிகம்.

    உங்களுக்கு என் அனுதாபம். இத்தோடு போச்சே
    என்று மனதை ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

    எங்கள் வீட்டுக்குள் வந்த திருடன் எங்களைச் சிறிது
    கூடத் தொந்தரவு செய்யாமல் பட்டுப் புடவைகளை அள்ளிச் சென்றான்.

    வீடு நிறைய மனிதர்கள் இருந்தார்கள்.
    யாரும் விழித்துக் கொள்ளவில்லை:(
    மாமனார் சத்தம் போட்டாலும்," யாரையும்
    கத்தியால் ஹார்ம் செய்யாமல் போனானே"
    என்று ஆறுதலும் சொன்னார்.
    அதுதான் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு நிறைய மனிதர்கள் இருந்தும் திருடு போன சம்பவம் - இப்படியும் நடக்கிறது தான் வல்லிம்மா. ஏமாற்றம் கொஞ்சம் வேதனையான விஷயம் தான். ஒன்றும் செய்ய இயலாது என்பது அதை விட வேதனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நமது திருடப்பட்ட பொருட்கள் கிடைப்பது அரிதே. காவல்துறையில் புகார் செய்வது நமது மனதிருப்திகாகதான் தவிர வேறு எந்த பலனையும் தராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகார் செய்வது நமது மனதிருப்திக்காகத் தான் - வேறு பலன் தராது என்பது உண்மை தான் இராமசாமி ஜி. குறிப்பாக இரயில் நிலையங்களில் திருடு போகும் போது அது கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தங்கம் தவறியது வருத்தத்தைத் தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. திருடப்பட்டது மனதுக்கு கஷ்டம்தான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதுக்கு கஷ்டம் தான். வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....