அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பாரா சிங்கா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கிக் கொள்வதற்கு அவர்கள் தான் உளி கொடுக்கின்றனர்.
******
கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை ஐந்து பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன். அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!
கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி
கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி
கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி
கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி
சென்ற பகுதியில் எங்கள் புகைப்பட சந்தோஷத் தருணங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன் அல்லவா! அப்போது அடுத்த நாள் நடக்கப் போகும் பெரும் சம்பவம் பற்றி நினைக்காமல் விட்டுவிட்டோம்.. சம்பவமா!! கம்யூட்டர் கோர்ஸ் பற்றிய விளம்பர நிகழ்வு தானே! யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்!! என்று முட்டாள்தனமாக நினைத்து விட்டோம்!! ஆனால்!!
மறுநாள் கல்லூரிக்குச் சென்றதும் எங்களுக்கு காத்திருந்தது இடி! முதல் வகுப்பின் போதே எங்கள் துறைத்தலைவர் (HOD) வகுப்புக்கு வந்து விட்டார்! எதுக்கு இப்போது திடீரென வந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தோம்!! அது எங்களுக்கு அர்ச்சனை செய்யத் தான் என்று தெரியவில்லை!! Attendance எடுக்க மாட்டார்கள் என்று மடத்தனமாக யோசித்து விட்டோம்..:) அது போக எங்கள் டிபார்ட்மெண்ட்டில் மூன்றே பெண்கள் தானே!! மூவரையும் காணோம் என்றால்??
துறைத்தலைவருக்கு கோபம் தலைக்கேறி விட்டது! எங்கள் மூவரையும் எங்கள் வகுப்பில் உள்ள எல்லோர் முன்னிலையிலும் மிகவும் மோசமாக திட்டி விட்டார். அந்த வார்த்தைகளுக்கெல்லாம் அப்போது எனக்கு அர்த்தமே தெரியலை! அவமானமாக இருந்தது:( எங்கள் மூவரையும் வகுப்பை விட்டு வெளியேறும்படியும் சொல்லி விட்டார். மறுநாள் பெற்றோரை அழைத்து வந்தால் தான் கல்லூரியில் தொடரலாம் என்றும் சொல்லிவிட்டார். என்ன செய்வது என்றே தெரியலை??
நான் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் நுழையும் சமயம் என் அப்பாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. தலையில் காயம் ஏற்பட்டதால் மூளையில் இரத்தம் உறைந்து சுயநினைவின்றி ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அவரை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்குள் பெரும் போராட்டமாகிப் போனது. அடுத்தடுத்து அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இப்படி ஆனதால் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு முழுவதும் என் கையில்! மருத்துவமனைக்கும், வீட்டிற்கும், கல்லூரிக்கும் என அலைந்த நாட்கள் அப்போது!
குடும்பச் சூழ்நிலை இப்படியிருக்க கல்லூரியை discontinue செய்யும் சூழல் வந்தால்?? நேரே மூவரும் பெண்கள் அறைக்குச் சென்றோம். எவ்வளவு நேரம் அழ முடியுமோ! அவ்வளவு நேரம் அழுது தீர்த்தோம். அந்த 18 வயதில் இந்தத் தருணம் மிகவும் அவமானமாக இருந்தது. சிறிது நேரம் குடும்பச் சூழலை நினைத்து பார்த்தோம். பெற்றோரிடம் சொல்லி அவர்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று நாங்களே ஒரு முடிவு எடுத்தோம்!
நேராக துறைத்தலைவர் அறைக்குச் சென்றோம். மன்னிப்பு கேட்டு விட்டு வகுப்புக்குத் திரும்பினோம்!! வேறு என்ன செய்வது!! அப்போது எங்கள் வகுப்புத் தோழர்களை பார்க்கத் தான் சங்கடமாக இருந்தது. ஆனால் அவர்கள் தான் எங்களை சமாதானப்படுத்தினார்கள்.
இந்த இடத்தில் எங்கள் வகுப்புத் தோழர்களை பற்றி சொல்லியே ஆகணும். மூன்றே பெண்கள் தான் என்பதால் எங்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள். பேராசிரியர்களிடம் திட்டு வாங்கும் போதெல்லாம் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்து எங்களை அந்த சூழ்நிலையை மறக்க வைத்து ஏதேனும் கலாட்டா செய்து சிரிக்க வைப்பார்கள்.
இப்படி எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையெல்லாம் நாங்களும் தைரியத்துடன் கடந்து வந்தோம். இதுவே பின்னாளில் சின்னச் சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் அதை ஏற்றுக் கொண்டு கடந்து வர உதவிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
இன்னும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விஷயங்கள் இருப்பதால் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
துறைத்தலைவர் மன்னித்து விட்டாரா? இந்த நிகழ்வையும் தைரியமாக, நேர்மையாக பகிர்ந்து விட்டீர்கள். இதுவே இன்னும் அந்த கனத்தைக் குறைக்கும். நடக்கும்போது இருக்கும் கனம் பின்னால் நினைத்துப் பார்க்கும்போது புன்னகைக்கதான் வைக்கும் இல்லையா?!
பதிலளிநீக்குதுறைத்தலைவர் மன்னித்தும் விட்டார்..பின்பு மறந்தும் விட்டார்..:) ஆமாம் சார்.அன்று கனமாக இருந்த விஷயம் இப்போது புன்னகைக்க வைக்கிறது.
நீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
தாய்-தந்தையிடம் சொல்லாமல் ஆசியர்களிடம் மன்னிப்பு கேட்டு விசயத்தை பெரிதாக்காமல் செய்தது பாராட்டுக்குறியது.
பதிலளிநீக்குஅவர்களையும் கவலைப்பட வைப்பானேன் என்று நினைத்தோம்.
நீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
இப்போதுதான் கல்லூரி நிகழ்வில் கலந்துகொள்ளாமல் நீங்கள் மூவரும் இப்படிச் செய்தீர்கள் என்பது நினைவுக்கு வருகிறது... ஒரு விடுமுறை நாளன்று கீடி மகிழ்ந்திருக்கலாம். பெண்கள் புறக்கணித்துவிட்டது போன்ற தோற்றம் வந்திருக்கும்.
பதிலளிநீக்குதுறைத் தலைவரிடம் மன்னிப்பைக் கோரியது புத்திசாலித்தனமான முடிவு.
விடுமுறை நாளன்று மகிழ்ந்திருக்கலாம் தான்! என்னவோ அன்று அப்படி தோன்றி விட்டது...:)
நீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.
நண்பர்கள் இருக்க பயமேன்...
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.
நீக்குதாய்தந்தையரிடம் கூறாமல் நீங்களே துறைத்தலைவர் சந்தித்துக்கொண்டது சிறப்பு.
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.
நீக்குநேராக துறைத்தலைவர் அறைக்குச் சென்றோம். மன்னிப்பு கேட்டு விட்டு வகுப்புக்குத் திரும்பினோம்!!//
பதிலளிநீக்குதுறைத்தலைவர் மன்னித்து விட்டது நல்லது. அவர் மன்னிக்காமல் பெற்றோர்களை கூப்பிட சொல்லி இருந்தால் மிகவும் சங்கடமாக போய் இருந்து இருக்கும்.
அனுபவங்கள் நிறைய கற்று கொடுக்கும்தான்.
நண்பர்கள் உறுதுணையாக இருந்தது மகிழ்ச்சி.
ஆமாம் அம்மா. பெற்றோரை வரச் சொல்லியிருந்தால் அவர்களுக்கு இன்னும் வேதனையாக இருந்திருக்கும்.
நீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
கல்லூரி நாட்களில் அம்மா அப்பாவைக் கவனிக்க வேண்டி வந்தால் எவ்வளவு சிரமம்!!!
பதிலளிநீக்குமிக வருத்தமாக இருக்கிறது மா.
அதையும் மீறி,
தீர்மானமாக முதல்வரிடம் சென்று மன்னிப்புக் கேட்டது தீரச் செயல் தான்.
அருமையான பதிவு மா.
உண்மை தான் அம்மா. கவலைகளும், பொறுப்புகளும் இல்லா மகிழ்வான நாட்கள் என்றால் அது என் பள்ளிநாட்கள் தான்.
நீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
அன்புள்ள ஆதி , தங்கள் கல்லூரி நாட்கள் பதிவுகளை படித்தேன். நினைவுகள் என் கல்லூரி நாட்களுக்கு சென்று திரும்பியது, சீட்டுக்களாய் சிறகடித்து, நட்புகளோடு மகிழ்ந்து, பாடம் பயின்ற, காணக்கிடைக்காத அற்புதமான காலங்கள். அருமையான பதிவுகளுக்கு நன்றி!
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க வானம்பாடி.
நீக்கு