அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
உதிக்கும்போதும் மறையும்போதும் ரசிக்கும் உலகம்… உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல! மனிதனின் வளர்ச்சியையும் கூட!
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே!
யாரிவள்! பகுதி ஒன்பது
குழந்தைகளுக்கும் தன்னைப் பற்றிய சிந்தனைகள் நிறைய இருக்கும். இப்படியெல்லாம் இருக்கணும்! இது போல் எல்லாம் நடக்கணும்! என்று மனதுக்குள் ஓடிக் கொண்டே தான் இருக்கும்! அதை கால ஓட்டத்தில் மாற்றிக் கொள்ளவும் செய்யலாம்! விடாப்பிடியாக மனதில் வைத்துக் கொள்ளவும் செய்யலாம்.
சுட்டிப்பெண்ணின் அம்மா ஒரு இல்லத்தரசி என்று மட்டும் சொல்லியிருந்தேன். பள்ளிப்படிப்பை முடிக்காவிட்டாலும் அவள் தன்னால் முடிந்த உழைப்பைத் தந்து குடும்பத்தை முன்னேற்றணும் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பாள்! இரும்பு மனுஷி! அதற்கேற்றாற் போல் நிறைய வேலைகளும் செய்திருக்கிறாள். அதை பற்றியெல்லாம் அப்புறம் சொல்கிறேன்!
அப்படித்தான் அவளின் சிந்தனையில் ஒன்றாக சில மாதங்கள் பஞ்சாலையில் வேலைக்குச் சென்றாள். கிடைக்கும் வருமானம் குழந்தைகளின் படிப்புக்கு உதவிகரமாக இருக்கும் என நினைத்து சென்று கொண்டிருந்தாள். அங்கு ஷிஃப்ட் முறையில் தான் பணிக்குச் சென்று கொண்டிருந்தாள். உடலின் உஷ்ணத்தை குறைக்க அங்கு வாராவாரம் எல்லோருக்கும் கருப்பட்டி கொடுத்து விடுவார்கள்!
அம்மா வேலைக்குச் சென்ற போது குழந்தைகளை அப்பா கூடுதல் கவனிப்புடன் பார்த்துக் கொண்டார். இவள் மூன்றாம் வகுப்பிலும், தம்பி ஒன்றாம் வகுப்பிலும் படித்து வந்தனர். அப்பாவுக்கு சமையல் அறவே தெரியாது! அம்மா ஷிஃப்ட்டுக்கு செல்வதற்கு முன் எல்லாம் செய்து வைத்து விட்டுத்தான் செல்வாள்!
அப்பா தான் குழந்தைகளை குளிப்பாட்டி விட்டு பள்ளிக்கு தயார் செய்து கொண்டு விடுவார். அப்போது இவளுக்கு நல்ல அடர்த்தியாகவும், இடுப்பு வரையிலும் நீளமான தலைமுடி இருந்தது. அதை அப்பா தான் அலசி விட்டு பராமரிக்க வேண்டிய சூழல். அப்பா வாரம் ஒருமுறை தனக்கு தெரிந்த விதத்தில் ஆண்கள் தலையைப் போல் இப்படியும் அப்படியுமாக தேய்த்து அலசி விடுவார்!
அதை ஒழுங்காக தேய்த்து அலசி விடாது போனதாலோ, சரியாக உலர வைக்காததாலோ சுட்டிப்பெண்ணின் தலை முழுவதும் அடை அடையாக புண்கள் வந்துவிட்டது! என்ன செய்வது என்று தெரியவில்லை! தோல் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் சென்ற போது தலைமுடி முழுவதும் எடுத்தால் தான் மருந்தைப் போட முடியும்! அப்போது தான் குணமாகும் என்று சொல்லி விட்டார்!
சுட்டிப்பெண்ணுக்கு தன் தலைமுடியின் மேல் அத்தனை ஆசை! நீண்ட பின்னல் கொண்டவர்களை மிகவும் ரசிப்பாள்! தனக்கும் அப்படி வளரணும் என்று ஆசையோடு காத்திருப்பாள்! இந்த சூழ்நிலையில் என்ன செய்தாள்! என்று அப்புறம் பார்க்கலாம்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
தலை முடியை எடுக்காமல் செய்த மாற்று யோசனை என்ன ?
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்...
பதிவுகளை தொடர்ந்து வாசிப்பதோடு தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து உற்சாகம் தரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குநீளமான தலைமுடி - தலையில் புண்.... வேதனை. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதலையில் வரும் புண் வலி அதிகமாகவே தரும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி ஶ்ரீராம்.
முன்னாடியே படிச்சாலும் இப்போ மறுபடியும் படிச்சேன். தொடர்ந்து உங்கள் சுய சரிதம் வெளிவரட்டும். சுவையான சம்பவங்கள் இனித்தான் வரும்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குசுவையான சம்பவங்களோ என்று போகப்போக தெரியும் கீதாம்மா. இதுவரை பகிர்ந்த விஷயங்களை முகநூலிலும் இங்கேயும் படித்தமைக்கு நன்றி.
நீக்குசூரியன் உச்சிக்கு வந்தால் திட்டத்தான் வேண்டி இருக்கு! ஆனால் மனிதனை அவ்வாறு திட்டலாமா எனில் அதுவும் நியாயப்படுத்திச் சொல்பவர்கள் உண்டு. :(
பதிலளிநீக்குவாசகம் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதொடக்க வாசகம் 100% உண்மை
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குஅன்புள்ள ஆதி, கூட்டிப் பெண் வளர்வதை பார்த்துக்கொண்டே, நினைவலைகள் பின்னொலி என் சிறு வயதையும் அசை போடுகின்றேன். குட்டிப்பெண்ணிற்கு முடி எடுக்காமலே, புண் சரியாகிவிட்டே வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்!
பதிலளிநீக்குபதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி காயத்ரி சந்திரசேகர் ஜி.
நீக்குவசனம் உண்மை.
பதிலளிநீக்குஓ நீளமான முடி, தலையில் புண் வேறா...கஷ்டமாச்சே. சரி எப்படிச் சமாளித்தாள் (ர்கள்) குட்டி ஆதியும் அவள் அம்மாவும்?
தொடர்கிறேன்
கீதா
வாசகம் மற்றும் பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குஅம்மாக்கள் வீட்டு நிலைமையை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. இது பெரும்பான்மையான குடும்பங்களின் நிலையாகத்தான் இருக்கிறது
பதிலளிநீக்குகீதா
அம்மாக்கள் செய்த பல தியாகங்கள் கணக்கில் வருவதே இல்லை கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
சிரமமான சூழ்நிலை... அடுத்து என்ன நடந்தது...? தொடர்கிறேன்...
பதிலளிநீக்குசிரமம் தான் தனபாலன். தொடர்ந்து வாசித்து வருவது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குதலைமுடி விபரம் அறிய தொடர்கிறோம்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாகேந்திர பாரதி ஜி.
நீக்குதலைமுடி பற்றி படித்ததும் வேதனை. நீண்ட கூந்தலை அலசி விடுவது எவ்வளவு கஷ்டம்! அதுவும் அப்பாவிற்கு.
பதிலளிநீக்குஅம்மாவின் கைவேலைகள் எல்லாம் முன்பு படித்த நினைவு இருக்கிறது. குடுமபத்திற்கு தன்னால் ஆன உதவியை செய்ய நினைக்கும் தாய் உள்ளம்.
(என் அம்மாவை நினைத்து பார்க்கிறேன்) எங்கள் வீட்டில் நிறைய பெண் குழந்தைகள் எண்ணெய் தேய்த்து குளிபாட்டி, தலையை சிக்கு எடுத்து காயவைத்து தலைபின்னிவிடுவது அனைவருக்கும் நினைத்து பார்த்தாலே அம்மாவிற்கு எவ்வளவு கஷ்டம் என்று இப்போதும் நினைக்கிறேன்.
பதிவு உங்கள் நினைவலைகளை மீட்டு எடுக்க உதவும்படி அமைந்தது அறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி.
நீக்குசிறிய வயதில் அப்பாவின் கவனிப்பில் அம்மா வீட்டிற்காக வேலைக்குச் செல்லல். கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்
பதிலளிநீக்குசிறு பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக இருந்தால் பராமரிப்பது கஷ்டம்தான். பெரியவர்கள் ஆனது தாங்களே கவனித்துக் கொண்டுவிடுவார்கள்தான்.
என் பெண்ணிற்கு முடி நீளம் என்றால் முழங்காலுக்கும் கீழே, நல்ல அடர்த்தியான முடியும் கூட.. மருத்துவப்படிப்பு சேர்ந்த பிறகு ஹாஸ்டலில் இருப்பதால் தினமும் பராமரிப்பது கஷ்டமாக இருக்கிறது என்று சமீபத்தில் கட் செய்துகொண்டுவிட்டாள். குட்டை முடியாக்கிக் கொண்டுவிட்டாள்.
துளசிதரன்
மருத்துவப் படிப்பு படிக்கும் உங்கள் மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் துளசிதரன் ஜி. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு உளங்கனிந்த நன்றி.
நீக்குஅடடா...முடிக்கு வந்த சோதனை. கவலையாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.
நீக்கு