வியாழன், 31 மார்ச், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பத்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உதிக்கும்போதும் மறையும்போதும் ரசிக்கும் உலகம் உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல! மனிதனின் வளர்ச்சியையும் கூட!

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

யாரிவள்! பகுதி பத்து


 

குழந்தைகள் தான் நினைக்கும் விஷயங்களையெல்லாம் சாதித்துக் கொள்ள முடிகிறதா! நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி சமாதானம் செய்து பெற்றோரும், உற்றாரும் அவர்களின் மனதை மாற்றி விடலாம்! ஆனால் நாம்  குழந்தைகள் அடம் பிடிப்பதாகத் தான் சொல்வோம்! உண்மையில் பெற்றோர் தானே தன் வழிக்கு  அடம் பிடித்து குழந்தைகளை மாற்றுகிறார்கள்..🙂

 

தலையில் அடை அடையாக வந்த புண்களின் காரணமாக இவளுக்கு தலைமுடியை எடுப்பதில் சம்மதமே  இல்லை! அம்மாவிடமும் அப்பாவிடமும் எவ்வளவோ முறை சொல்லி அழுது பார்த்தாள். அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியலை! அப்பா இவளை சமாதானம் செய்து ஒருநாள் கே.ஜி தியேட்டரின் அருகே ஒரு ப்யூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றார். முழுசா எடுக்க வேண்டாண்டா செல்லம்! பாப் கட் வேணா பண்ணிக்கலாம் என்று சொன்னார்!

 

சுட்டிப்பெண்ணும் ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு விட்டாள்! ஆனால் இவளின் அதிர்ஷ்டமோ, துரதிஷ்டமோ அன்று ப்யூட்டி பார்லர் திறக்கவே இல்லை!!  வீட்டுக்கும் திரும்பியாச்சு! அப்பாடா! தப்பித்தோம் என்று தான் நினைத்தாள். ஆனால் இதை இப்படியே நாள் கடத்தக் கூடாதென்று அப்பாவும், அம்மாவும் நினைத்து விட்டார்கள்...🙂

 

அடுத்த நாளே அந்தக் குடியிருப்பின் உள்ளேயே அப்பா வழக்கமாக செல்லும்  சலூனுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்! இந்தப் பொண்ணுக்கு 'பாப் கட்' செய்து விட்டுடுப்பா! என்று கடை உரிமையாளரிடம் அப்பா சொல்ல...முதல் காரியமாக கத்திரியால் இவளின் நீளமான தலைமுடி வெட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்டது!  அதைப் பார்த்து மிகவும் கலங்கி விட்டாள்! 

 

அந்த சலூனில் இருந்தவர் தனக்குத் தெரிந்த விதத்தில் ஆண்களுக்கான ஸ்டெப் கட்டிங்கை இவளுக்கு செய்து விட்டு விட்டார்..🙂 என்ன சொல்வதென்று தெரியலை! கண்ணாடியில் பார்க்க வேறு யாரோவாகத் தோன்றினாள்..🙂 வீட்டிற்கு வந்து குளித்து விட்டு பள்ளிக்கும் சென்று விட்டாள்!

 

அங்கு எல்லோரும் இவளைப் பார்த்து என்னவென்று விசாரித்து விட்டு பிறகு  சிரிக்கவும் துவங்கி விட்டார்கள்! நேற்று வரை இறுக்கமாக பின்னி மடித்துக் கட்டிய ரெட்டை ஜடையுடன் இருந்தவள்!மிகவும் அவமானமாக போய்விட்டது!  

 

மாலை வீட்டிற்கு வந்தவள் அம்மாவிடம் மொத்தமாக எடுத்து விடுகிறேன் என்று சொல்லி மீண்டும் சலூனுக்கு அழைத்துப் போகச் சொன்னாள்! காலையில் ஸ்டெப் கட்டிங்! மாலை மொத்தமாக சுத்தம்! எட்டு வயதில் இப்படியொரு சூழலை சந்திக்க நேர்ந்தது!

 

அதன் பின்பு மருத்துவர் எழுதிக் கொடுத்த ஆயிண்மெண்ட்டை தலை முழுவதும் தடவிக் கொண்டு ஸ்கார்ஃபுடன் பள்ளிக்குச் சென்று வரத் துவங்கினாள்! புண்களும் குணமானதால் மீண்டும் தலைமுடியை தரையில் புரளும் அளவு வளர்க்கும் ஆசையில் இறங்கினாள்..🙂

 

இப்படியாக இருந்த பெண் பின்பு என்னவெல்லாம் செய்தாள்!! அடுத்த பகுதியில் சொல்கிறேன். 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. வாசகம் ஏற்கெனவே இப்போதுதான் வந்ததோ...?!

    கடந்து வந்த பாதையில், சிறு வயதில், சிறு அனுபவங்களும் பெரிய அனுபவமாய்த் தோன்றும் வயது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் இரண்டு நாளும் தொடர்ந்து வந்திருக்கிறது. :) கவனக் குறைவு! :(

      சின்னச் சின்ன விஷயங்களும் அப்போதைய வயதில் பெரும் விஷயமாகவே தோன்றும் என்பது உண்மைதான் ஶ்ரீராம்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. இறுதியில் மொட்டை அடித்தாகி விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி. மொட்டை அடிக்க வேண்டிய கட்டாயம். தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி.

      நீக்கு
  4. வாசகம் போன பதிவில் கண்டது போல இருக்கே. அதனால் என்ன மீண்டும் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்தானே.

    //குழந்தைகள் தான் நினைக்கும் விஷயங்களையெல்லாம் சாதித்துக் கொள்ள முடிகிறதா! நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி சமாதானம் செய்து பெற்றோரும், உற்றாரும் அவர்களின் மனதை மாற்றி விடலாம்! ஆனால் நாம் குழந்தைகள் அடம் பிடிப்பதாகத் தான் சொல்வோம்! உண்மையில் பெற்றோர் தானே தன் வழிக்கு அடம் பிடித்து குழந்தைகளை மாற்றுகிறார்கள்..🙂//

    ஹைஃபைவ்! அதே அதே ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் ரிப்பீட்டு! :)

      பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. அப்போது அது மிகப் பெரிய விஷயமாய்த்தான் தெரிந்திருக்கும். அதுவும் முடிவளர்ப்பது பிடித்த சுட்டிப் பெண்ணிற்கு. ஆனால் அப்புறம் வளர்ந்திருக்குமே! அப்போது சந்தோஷப்பட்டிருப்பாள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வயதில் அது பெரிய விஷயம். வலி தந்த விஷயமும் கூட! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வாசகம் இதற்கு முந்திய பதிவில் வந்து விட்டது.
    //மீண்டும் தலைமுடியை தரையில் புரளும் அளவு வளர்க்கும் ஆசையில் இறங்கினாள்..🙂//

    மீண்டும் வளர்ந்த நீண்ட பின்னலை பார்த்து இருக்கிறேன் ஆதி.

    இளமை நினைவுகளை வாசிக்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் தொடர்ந்து இரண்டாம் நாளாக! :)

      பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. மொட்டை அடிக்க சம்மதித்தது பாராட்டப்பட வேண்டிய விசயம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்மதிக்க வேண்டிய அவசியம் தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  8. இளமையில் பல விஷயங்கள் பெரிதாகத் தோன்றுபவற்றைப் பின்னாளில் நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொள்வோமே. பின்னாளில் அவை ஒன்றுமே இல்லை என்று தோன்றும். இதற்குப் போயா நாம் அத்தனை வருந்தினோம் என்றும்.

    மொட்டை அடித்தாலும் தலைமுடி அந்தச் சிறு வயதில் நன்றாக வளர்ந்திருக்குமே.

    உங்களின் இனிய நினைவுகளைத் தொடர்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நேரத்தில் அது பெரிய விஷயம் தான். பின்னாளில் அது பெரிய விஷயம் இல்லை என்றாலும் மனதில் முடிச்சு போட்டு உட்கார்ந்து கொண்ட விஷயமாகவும் இருக்கிறது துளசிதரன் ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  9. வந்த சோதனையையும் வென்றுவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....