சனி, 17 பிப்ரவரி, 2024

காஃபி வித் கிட்டு - 183 - குளிர்காலமும் நகர்வலமும் - மகிழ்ச்சி - பேய் மழை - "ரிஜப்சன்" - பிறந்த நாள் கொண்டாட்டங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட இயற்கை அன்னையின் மடியில் - சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


இந்த வாரத்தின் எண்ணங்கள் : குளிர்காலமும் நகர்வலமும்




தலைநகர் தில்லியில் குளிர் காலத்தில் தான் நகர்வலம் வரமுடியும் - அதுவும் மிதமான குளிர் இருக்கும் மாதங்களான ஃபிப்ரவரி முதல் மார்ச் மாதம் பாதி வரை இங்கே உலா வருவது இதமானது. அப்படியான சமயங்களில் தில்லியில் நிறைய நிகழ்வுகள் நடப்பது வழக்கம்.  தில்லியின் பல இடங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள், பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் என மேளா, கலைநிகழ்வுகள், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வரும் கடைகள், உணவுப் பொருட்கள் என அனைத்தும் பார்க்கவும், அனுபவிக்கவும் முடியும்.  விலைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும் என்றாலும் பல மாநிலங்களில் கிடைக்கும் பொருட்களும், உணவுகளும் தலைநகர் தில்லியில் ஒரே இடத்தில் கிடைப்பதென்பது நல்ல விஷயம் தானே.  இத்தனை வருடங்கள் இப்படியான நிகழ்வுகள் நடக்கும்பொதெல்லாம் நானும் நண்பர் பத்மநாபனும் சனி ஞாயிறுகளில் இந்த மாதங்களில் நகர்வலம் புறப்பட்டு விடுவோம்.  நண்பர் பணி ஓய்வு பெற்று தமிழகம் சென்றபிறகு, தனியாகவே செல்ல வேண்டியிருக்கிறது.  தனியாகச் செல்வது சில சமயங்களில் நல்லது என்றாலும், சில சமயங்களில் பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கூட இருந்தால் நல்லது தானே என்று தோன்றிவிடும். அதனாலேயே அப்படியான நிகழ்வுகளுக்குச் செல்ல முடியாமலும் போய்விடும்.  தற்போதும் இங்கே சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அப்படி ஒரு நிகழ்வுக்கு சென்ற செவ்வாய் அன்று சென்று வந்தேன். அது குறித்த தகவல்கள், எடுத்த படங்கள் போன்றவை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.  இப்படியான நிகழ்வுகளுக்குச் செல்வது குறித்த தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன். 


******


இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:  மகிழ்ச்சி 


இந்த வாரம் நண்பர் ஒருவர் கீழே உள்ள வாசகத்துடன் ஒரு காணொளியினை பகிர்ந்து கொண்டிருந்தார்.  எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம், நாம் எந்த சூழலில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பது நல்ல விஷயம்.  பெரியவர்கள் ஆனபிறகு அப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்றாலும், குழந்தைகளாக இருக்கும்போது நிச்சயம் சாத்தியம் தான் - காணொளியில் இருக்கும் சிறுவன் போல! 



NO MATTER WHAT SORROWS YOU HAVE, DO NOT WASTE THE OPPORTUNITY TO BE HAPPY.


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - பேய் மழை


முகநூல் நண்பர் S Mohan S Mohan எழுதிய கவிதை ஒன்று - தமிழ்ப்பல்லவி என்கிற காலாண்டு இலக்கிய இதழில் வெளியான கவிதை ஒன்று உங்கள் பார்வைக்கு!



******


பழைய நினைப்புடா பேராண்டி : "ரிஜப்சன்"-ன்னா என்னாபா?


2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - "ரிஜப்சன்"-ன்னா என்னாபா? - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


பக்கத்து வீட்டிலிருக்கும் உத்திராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தனது மகனின் திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று மாலை 07.30 மணியிலிருந்து 10.30 மணி வரை “ரிஜப்சன்” (தட்டச்சுப் பிழை அல்ல!) வைத்திருப்பதாகச் சொல்லி எங்கள் குடும்பத்தினரையும் அழைத்தார்.


அவர் உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனைச் சேர்ந்த கட்வாலி [Garhwali]. அவர்கள் பேசும் மொழியும் கட்வாலிதான். ஹிந்தி தெரிந்திருந்தாலும், வட இந்தியாவில் உள்ள மற்றவர்கள் அவர்களது மொழிகளான ஹர்யான்வி, பஞ்சாபி, கட்வாலி போன்றவற்றில் பேசும்போது நமக்குப் புரியாது. இந்த பிண்ணணியில் அவர்களது மகனின் திருமண ரிசப்ஷன் சென்றபோது அங்கு வந்திருந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கட்வாலி. மற்ற 10 சதவிகிதத்தினரில் மற்ற ஹிந்திக்காரர்கள், ஒரு ஒரியாக்காரர், ஒரு மலையாளி, ஒரு வங்காளி ஆகியோருடன் தமிழ்நாட்டுக்காரனான நானும்.


சாதாரணமாக அவர்கள் கட்வாலியில் பேசினாலே ஒரு விதமாக இருக்கும் நமக்கு அங்கே ஏற்பாடு செய்திருந்த டி.ஜே யில் போட்ட பாட்டுகள் கூட கட்வாலி பாடல்கள் தான்! எங்கோ திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல உணர்ந்தேன். குண்டாக வேடம் போட்டுக் கொண்டு ஒரு ஜோடி முகமூடியுடன் தன்னுடைய பொய்யான தொப்பையை ஆட்டி ஆடியது. அதில் பெண் வேடம் போட்ட நபருடன் (அது நிஜத்தில் ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல்) ஆட கட்வாலி ஆண்களுக்குள் போட்டி வேறு! அப்படி ஆடும் போது புகைப்பட செஷன்கள் தனி!


முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் தகவல் : பிறந்த நாள் கொண்டாட்டங்கள்




எங்களது போன்ற பெரிய அலுவலகங்களில் பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் பல நபர்கள் பணிபுரிகிறார்கள். எல்லோருடைய பிறந்த நாள், திருமண நாள் போன்றவை வரும்போதெல்லாம் கொண்டாட்டங்கள், சிற்றுண்டிகள் என கேட்டுக் கேட்டு வாங்கிவிடுவார்கள். ஒவ்வொரு அலுவகத்திலும் இதற்கென்றே சிலர் இருப்பார்கள்.  அந்த இடத்தில் இருக்கும் அனைவருடைய பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றின் Data Base அவர்களிடம் இருக்கும். சரியாக அந்த நாளில், சிறப்பு நாளைக் கொண்டாடும் நபரைத் தவிர்த்து மற்றவர்களிடம் காசு வசூலித்து கேக், சிற்றுண்டி, காஃபி/தேநீர் அல்லது குளிர்பானங்கள் வாங்குவது என அனைத்தும் பார்த்துக் கொள்வார்கள்.  நான் இப்போது இருக்கும் பிரிவிலும் எனக்குக் கீழ் பணிபுரியும் அனைவருடைய தகவல்களும் சேகரித்து வைத்திருக்கிறார் ஒருவர்.  சரியாக அந்த நாளில், அல்லது அடுத்த சில நாட்களில் (பிறந்த நாள் விடுமுறையாக இருந்தால்) கொண்டாட்டங்கள் நிச்சயம் உண்டு.  ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சுவைகளில் கேக் இணையதளங்கள் மூலம் தேடித்தேடி வாங்கிவிடுவார்.  சமீபத்தில் வாங்கிய இரண்டு கேக் படங்கள் இத்துடன் இணைத்திருக்கிறேன்.  


இப்படி சிலர் இருப்பதும் நல்லது தான்.  ஆனாலும் இதிலும் ஒரு சில கஷ்டங்கள் உண்டு - ஒரு சிலர் பிறந்த நாள் கொண்டாடுபவரிடம் மதிய உணவு ஏற்பாடு செய்து தரச் சொல்லிவிடுவார்கள். பத்து பதினைந்து பேருக்கு மதிய உணவு, அதுவும் வெளியிலிருந்து எனும்போது பாக்கெட் பழுத்துவிடும் - அனைவராலும் இது போல செலவு செய்யமுடியாது எனும்போது சில சிக்கல்களும் உண்டாகிவிடுவதைத் தவிர்க்கமுடிவதில்லை. அதிலும் கடைநிலை ஊழியர் ஒருவரிடம் (தற்காலிக பணியில் இருப்பவர் - அவர் மாத சம்பளமே பதினெட்டாயிரம் தான்) உணவு வாங்கித்தா என்று கேட்ட ஒரு நபரை மற்றவர்கள் சேர்ந்து கொஞ்சம் கடிந்து கொள்ள வேண்டியிருந்தது. பிறகு மதிய உணவு வாங்கித்தருவதும் தராததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்று கண்டிப்புடன் சொல்ல வேண்டியிருந்தது. அப்படி உணவு வாங்கும்போது அவரது மாத செலவுகள் அதிகரித்துவிடும் இல்லையா? அதையும் கவனிக்க வேண்டுமே! இந்த விஷயத்தில் கண்டிப்பினைக் காட்டியதால் சிலருக்கு என்னிடம் மனஸ்தாபமும் உண்டாகியது. என்ன செய்ய? 


******


இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் : 


இந்த வாரத்தின் ரசித்த படம் உங்கள் பார்வைக்கு…





******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


34 கருத்துகள்:

  1. வலைதளத்தின் பின்னணி மாறி புதுசாக இருக்கிறது.  ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைத்தளத்தின் பின்னணி - வியாழன் அன்று மாலை மாற்றினேன். தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. டெல்லியின் இது மாதிரி இடங்களுக்கு சென்று வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வது சிறப்புதான். ஆனால் உங்கள் படம் தவிர வேறு படம் காணோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் எழுதி இருக்கிறேனே - தனிப்பதிவுகளாக வெளிவரும் என! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அந்த நவரச சிறுவனை நாலு சாத்து சாத்தி வழிக்கு கொண்டு வராமல்...  அவன் பெற்ரோரைதான் சொல்லவேண்டும்.  கெட்ட பழக்கத்தை பழக்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவரச சிறுவனை நாலு சாத்து சாத்தி - ஹாஹா... அப்படியும் செய்யலாம். ஆனால் இந்தக் காணொளி சிறுவனின் இயல்பை மட்டுமே பார்க்கத் தோன்றியது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. கவிதை...ம்ம்ம்...ஓகே....    கட்வாலி போல நானும் ஒருமுறை ஒரு சௌராஷ்ட்ரா சமூக திருமணத்தில் சிக்கி இருக்கிறேன்.  எனக்கு அதில் எனக்கு அழைப்பு தந்த அவர் ஒருவரைத்தான் தெரியும் வேறு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சௌராஷ்ட்ரா திருமணத்தில் நீங்கள் சிக்கினீர்களா... ஹாஹா... கஷ்டம் தான் - யாருமே தெரியாமல் இப்படியான நிகழ்வுகளுக்குச் சென்று வருவது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கேக் படம் இணைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இணைக்கவில்லை!  நிலவைக் கவ்விக் செல்லும் நாரை(தானே?) படம் சூப்பரோ சூப்பர்.  போட்டோஷாப்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...  கேக் படம் முன்னரே இருந்ததா?  பின்னர் சேர்க்கப்பட்டதா?!!

      நீக்கு
    2. கேக் படம் - இணைத்து விட்டேன்.

      நிலவைக் கவ்விச் செல்லும் பறவை - ஃபோட்டோஷாப் - இருக்கலாம். ரசிக்க முடிந்தது - அப்படியாக இருந்தாலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. உங்கள் கருத்துரை பார்த்தபின்னரே ஒரு படம் இணைத்தேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  6. குளிர்கால நகர் வலம் மகிழ்வாக இருக்கும்.கவிதை நன்று.

    அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் வேறு நிகழ்வுகள் கொண்டாடப்படுவது நல்லதுதான் எல்லோருக்கும் இயலுமா ? என்பது .நீங்கள் சொன்னது மிகச் சரி முடியாதவர்களுக்கு பணம் பெரும் சுமையே .இதை மற்றவர்கள் உணரவேண்டும்.

    போட்டோ ஷாப் படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்தவை குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  7. மேலே முகப்புப் படம் செமையா இருக்கு ஜி. இதை நீங்கள் மாற்றி இங்கு நான் பார்த்ததும் சொல்ல நினைத்து விட்டுப் போனது,

    பப்பு அண்ணாச்சி பணி ஓய்வு பெற்றுவிட்டாரா!! அம்புட்டு வயசா அவருக்கு!!! நான் என்னமோ சின்னப்புள்ளைன்னு நினைச்சேன்! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகப்புப் படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      பப்பு அண்ணாச்சி - சென்ற வருடத்தில் ஓய்வு பெற்றுவிட்டார். மனதளவில் என்றும் இளமையானவரே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. நீங்கள் சொல்லியிருக்கும் இப்படியான நிகழ்வுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நகர்வலம் வருவது. ஆனால் இங்கு வந்த பிறகு செல்வது அபூர்வமாகிவிட்டது,

    எனக்குத் தில்லியின் குளிர் பிடிக்கும். எளிதாகக் கடந்துவிடுவேன். ஆனால் வெயில் மற்றும் அதன் பின்னான மாதங்கள் கொஞ்சம் கடினம் எனக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடைக்காலம் எனக்கும் பிடிக்காத காலம் தான் - அதுவும் தலைநகர் தில்லியின் கோடை வேதனையான நாட்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. பெரும்பாலும் தனியாகச் செல்வது என்பதால் பழகிவிட்டது. தனியாகச் செல்வதில் சில சௌகரியங்கள் உண்டு. படங்கள் எடுப்பது, பார்ப்பது தெரிந்து கொள்வது என்பன. கூட வருபவருக்கும் ஆர்வம் இருந்தால் நலல்து இல்லை என்றால் தனியாகச் செல்வதுதான் பிடிக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாகச் செல்வதில் நிறையவே சௌகரியங்கள் உண்டு என்றாலும் சில அசௌகரியங்களும் உண்டு. உதாரணத்திற்கு, படம் எடுக்கும்போது கொண்டு செல்லும் பொருட்களையும் நாமே சுமந்து கொண்டு படம் எடுக்க சிரமப்பட வேண்டியிருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. கவிதை ஓகே.

    ரிஜப்சன் - ஹாஹாஹா இந்த உச்சரிப்பு இப்படித்தான் பல இந்திக்காரர்கள் உச்சரிக்கிறார்கள் இங்கிருக்கும் வட இந்தியா மக்களின் கடைகளில் இப்படித்தான் பல வார்த்தைகளின் உச்சரிப்பு இப்படித்தான். உங்க அனுபவத்தை வாசித்தேன். இதுவரை எனக்கு இப்படியான கல்யாணங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

    பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நல்லதுதான் என்றாலும் நீங்கள் சொல்லியிருப்பதை அதாவது சிலரால் எல்லோருக்கும் பெரிய அளவு உணவு எல்லாம் வாங்கித் தர முடியாது. என்பதோடு அலுவலகங்களில் மட்டுமில்லை வீடுகளில் குடியிருப்புகளில் இப்படிச் சில சமயம் நாம் கட்டாயத்திற்கு உள்ளாக நேரிடுவதுண்டு. நிறைய தர்மசங்கடமான தருணங்களை சந்தித்திருக்கிறோம்.

    கேக் படம் அழகு மற்றொன்று எங்கே ஜி? அதுதான் இது என்று கவுண்டமணி செந்தில் நகைச்சுவையை சொல்லிடக் கூடாதாக்கும் ஹாஹாஹா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேக் படம் - ஒன்று தான் இங்கே. மற்றொன்று நாரை தூக்கிகொண்டு போனதோ? :)

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. நிழற்படம் அருமை. இது தற்செயலாக க்ளிக் ஆனதோ இல்லை ஃபோட்டோ ஷாப்போ!!

    நாம் தாஜ்மஹாலை, இந்தியா கேட், நிலவு போன்றவற்றை நம் தலையில் கைகளில் ஏந்துவது போல கோணம் வைத்து எடுப்பதுண்டே (நாரையிடம் கோணம் பார்த்து பறக்கவா சொல்ல முடியும்?!!) அப்படித் தற்செயலாக க்ளிக் ஆகியிருக்குமோ...ரொம்ப ரசித்தேன் அட்டகாசமான படம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்செயலாக க்ளிக் ஆனதோ, இல்லை ஃபோட்டோஷாப்போ - எப்படி இருந்தாலும் ரசிக்க முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. நிழல்படம் அருமை ஜி.
    காணொளி ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்து கொண்ட நிழற்படம் மற்றும் காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  13. குழந்தையின் காணொளியை மிகவ்ம் ரசித்தேன். என் மகனும் இப்படித்தான் தலை பெரிதாக உடம்பு சின்னதாக இருப்பான். முடி குறைவாக. அந்த நினைவும் வந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையின் காணொளி உங்களாலும் ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  14. வாசகம், முகப்பு படம், மற்றும் பதிவில் பகிர்ந்த நைத்தும் அருமை.
    குழந்தையின் அழுகை , உடனே மகிழ்ச்சி , நடனம் பார்க்க அருமை. இந்த வயதில்தான் அழுது சாதிக்க முடியும்.நிழல் படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையின் அழுகை - இந்த வயதில் தான் அழுது சாதிக்க முடியும் - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு. பதிவு அருமை. வாசகமும் நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் அருமை..

    உங்களின் எண்ணங்கள் பகுதி ரசித்த வாசகம் பகுதி அனைத்தும் நன்றாக உள்ளது. சிறுவனின் அழுகை, ஆட்டம் என ஒரு முடிவுக்கு வர இயலாமல் அவன் தவிக்கும் தவிப்பு பாவமாக உள்ளது.

    கவிதை நன்று.
    பழைய நினைப்பை சுட்டி வழியும் சென்று ரசித்து வந்தேன். தங்களின் எழுத்து ரசிக்க வைப்பதாக உள்ளது.

    அலுவலக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நீங்கள் சொல்வது சரிதான். ஒரு நாளைக்காக குறைந்த சம்பளம் வாங்குபவர்களை பிறந்தநாள் பரிசு என்கிற பெயரில் தண்டிப்பது போல் அல்லவா உள்ளது...! பாவம் அவர்களின் நிலைமை..!

    இறுதியில் நிலவை நாரைப்பறவை கவ்விச் சென்றபடி உள்ள படம் மிக அருமையாக உள்ளது. ரசித்தேன். எல்லா பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  16. முதல் வாசகத்திலிருந்து கடைசி வரை அருமை. குழந்தையின் காணொளியை ரசித்தேன். அதே போன்று நிழற்படம் மிக அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....