வியாழன், 29 பிப்ரவரி, 2024

அகல்யா - பாலகுமாரன் - ஒரு நூல் - இரு வாசிப்பனுபவம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட நயார் ஆற்றங்கரையில் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******





அகல்யா - பாலகுமாரன்: பாலகுமாரன் எழுத்து எனக்கு அறிமுகமானது 1990-களின் ஆரம்பத்தில் - அதாவது தலைநகர் தில்லி வந்த பிறகு! முதல் முதலில் படித்தது அவரது இரும்புக் குதிரைகள் கதை தான். இந்தியன் வங்கியில் பணிபுரிந்த திரு பாலாஜி அவர்களுடன் தான் நான் தங்கி இருந்தேன். அவர் தான் எனக்கு பல கதாசிரியர்களையும் அவர்களது நூல்களையும் அறிமுகம் செய்து வைத்தார் - அதில் இன்றைக்கும் எனக்கு பிடித்த கதாசிரியர்கள் என்று கேட்டால் பாலகுமாரன் மற்றும் Ayn Rand எனச் சொல்வேன். நண்பரிடம் பல நூல்கள் இருந்தன. அதைத்தவிர Lending Library வழியாகவும் நூல்கள் எடுத்து படித்ததுண்டு. எனக்கு திருமணம் ஆனபிறகு பாலகுமாரனை எனது இல்லத்தரசிக்கும் அறிமுகம் செய்து வைத்தேன்! பாலகுமாரன் கதைகள் முன்னரே படித்திருந்தாலும் சில கதைகள் மீண்டும் படிக்க உகந்தவை. அப்படி ஒரு கதை - அகல்யா! அந்தக் கதை குறித்த வாசிப்பனுபவம் - எனது இல்லத்தரசியின் பார்வையிலும் எனது பார்வையிலும் இன்றைய பதிவாக! முதலில் எனது இல்லத்தரசியின் பார்வையில்!


அகல்யா - ஆதி வெங்கட் பார்வையில்! 


உங்கம்மா நல்லா நெருக்கிப் பின்னி விட்டுட்டாங்க சிவசு!


நீ கொஞ்சம் தளரப் பின்னிக்குவியோ அகல்யா? இப்பக் கூட பஸ்ஸு வர்றதுக்குள்ள இந்த மரத்தடியில வேணா சரி பண்ணிப் பின்னிக்கோயேன்!!


இல்ல சிவசு! நமக்கு நெருக்கமானவங்க குடுக்கிற சந்தோஷம் இது! இப்படியே இருக்கட்டும்!


நான் குடுத்த மூணு புஸ்தகத்துக்கா சிவசு இந்த மூணு கிலோ காய்கறிகளும் ரெண்டு படி உளுந்தும் குடுக்கறீங்க??


நான் செங்கல்பட்டுக்காரன்! இங்க என்ன கிடைக்குமோ அதத் தான் குடுக்கிறேன்! நம்ம நிலம் அகல்யா! எடுத்துட்டு போ! 


பஸ்ஸு கிளம்பப் போகுது சிவசு! எனக்கு என்னவோ போல இருக்கு! போகவேத் தோணல! நீங்க லெட்டர் போடுவீங்களா சிவசு? அடுத்த வாரம் ஊருக்கு வர்றீங்களா??


நான் தினமும் லெட்டர் எழுதிப் போடுவேன்! சிவசு சிவசுன்னு ஒரு பக்கம் முழுசும் எழுதுவேன்! அந்த மாதிரி நீங்களும் பதில் எழுதுவீங்களா?


எது சொன்னாலும் சரி சரிங்கறீங்க! எதுக்காவது அடம் பிடிங்களேன் சிவசு!


தாம்பரத்துக்கும் செங்கல்பட்டுக்கும் இடையே தான் எவ்வளவு தூரம் இருந்து விடப் போகிறது! ஆனால் அகல்யாவுக்கும் சிவசுவுக்கும் இடையே தான் எத்தனை  நெடுந்தூரம் பயணிக்கிறது அந்தக்  காதல்!


1982ல் பாலகுமாரன் அவர்கள் எழுதிய அகல்யா! பலமுறை வாசித்திருந்தும் நேற்று இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது புதிதாய் வாசிப்பது போலவே தான் இருந்தது! ஆழ்ந்து வாசிக்கும் போது அந்த கதாப்பாத்திரங்கள் நம் கண்முன்னே பேசுவது போலவே இருக்கும்!


சிவசுப்ரமணியன் என்கிற சிவசுவுக்கும் அகல்யாவுக்கும் இடையில் தான் கதை நகர்கிறது! அகல்யா ஒரு இளம் விதவை! சிவசு ஒரு முற்போக்குச் சிந்தனையுள்ள இளைஞன்! இவர்கள் இருவருக்குமே ஒருமித்த சிந்தனை! பொதுநலத்தில் இன்பம் காணுவார்கள்!


அவர்களிடையேயான காதலும், புரிதலும், ஊடலும், கருத்துப் பரிமாற்றங்களும், தன்னலம் பாராத எண்ணங்களும் என வரிக்கு வரி நம்மைக் கவர்கிறது!  இப்படி ஒரு கணவன் மனைவி இருக்க முடியுமா??? அல்லது கதைமாந்தர்களுக்கு மட்டுமே இது வசப்படுமா?? என்ற ஆச்சரியம் நம்மை பற்றிக் கொள்ளும்!


சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கென பள்ளி ஆரம்பிப்பதும், போரில் இறந்ததாய்க் கருதப்பட்ட அகல்யாவின் முன்னாள் கணவன் உயிருடன் வருவதும் என காட்சிகள் துண்டு துண்டாய் விரிகின்றன! அத்தனை சந்தர்ப்பத்திலும் பக்குவப்பட்ட மனிதனாக சிவசு உடனிருக்கிறான்! 


அதன் பின்பு அகல்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன??? வாசித்து முடித்த போது கண்ணீர்த் திவலைகள் உருண்டு திரண்டன! ஏனென்று புத்தகத்தை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்! - ஆதி வெங்கட்


@@@@@@@


அகல்யா - வெங்கட் பார்வையில்!


பாலகுமாரன் கதை என்றாலே எனக்கு கதைகளின் இடையே எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் அவரது நூல்களில் இருக்கும் கவிதைகளையும், பிடித்த வரிகளையும் தனியாக ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பேன். அது ஒரு கனாக்காலம்!  அகல்யா கதையிலிருந்தும் அப்படியான சில வரிகள் எனது சேமிப்பில் இருந்தன.  ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களது குணாதிசயங்களும் மனதுக்குள் பதிந்து இருந்தன - அப்படியான கதாபாத்திரங்களில் ஒன்று தான் சிவசு கதாபாத்திரம்! ஒரு ஆண் இப்படியும் இருக்க முடியுமா என்று சிந்தித்திருக்கிறேன் - அந்த காலங்களில்.  இப்போதும் கூட அப்படியான சிந்தனைகள் உண்டு! பெண்களை பல ஆண்கள் போகப்பொருளாக மட்டுமே நினைப்பது இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் விஷயம் - அதிலும் வட இந்தியாவில் இப்படியான சிந்தனை தான் ஒவ்வொரு ஆண் மனதிலும் பதிந்து இருக்கிறது. அகல்யா கதையில் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான பந்தம் எப்படி இருக்க வேண்டும் என்று வாசிக்கும்போது இப்படியான விஷயங்களும் நடக்க முடியுமா என்று தோன்றுவது இயல்பு. 


சிவசு கதாபாத்திரம், அகல்யா கதாபாத்திரம், சிவசுவின் தாயார், அகல்யாவின் தந்தை என ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு பல விஷயங்களை உணர்த்தும் விதமாக அமைத்திருப்பார் பாலகுமாரன். அதிலும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் உடல் உபாதைகள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் பக்கங்கள் பிடித்தவை.  சிவசு மற்றும் அகல்யா ஆகிய இருவரும் பேசும் விதத்தில் அமைக்கப்பட்ட பாகங்கள் மிகவும் பிடித்தவையாக இருந்தது. சமீபத்தில் மீண்டும் கிண்டில் வழி படித்தேன். சில வருடங்கள் கழித்து அகல்யாவை படித்தபோது, இப்போதும் அதே ஈடுபாடும், பிடித்தமும் அந்த நூல் மீதும் பாலகுமாரனின் எழுத்து மீதும் எனக்கு இருந்தது.  அதிலிருந்தே அந்த எழுத்தின் வசீகரம் உங்களுக்கும் புரியலாம். குழந்தைகளுக்காக Montessori வழி கல்வியை புகட்ட வேண்டும் எனும் அகல்யாவின் உயர்ந்த எண்ணம், சிவசு செய்யும் பொதுத் தொண்டு என பல விஷயங்கள் எனக்குப் பிடித்தவையாக இருந்தன என்றாலும் கதையின் முடிவு இப்படி இருந்திருக்க வேண்டாமே என்று தோன்றியதும் உண்மை. அப்படி என்ன முடிவு - படித்துத் தான் பாருங்களேன்! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.


அகல்யா அச்சுப் புத்தகமாகவும் (ரூபாய் 95/-) மின்நூலாகவும் கிடைக்கிறது.  திருமகள் நிலையம்/விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட அச்சுப் புத்தகம் இணையத்தின் வழி வாங்கலாம்.  மின்னூலாகவும் அச்சுப்புத்தகமாகவும் அமேசான் தளத்திலும் வாங்க முடியும். அமேசான் கிண்டில் தளத்தில் உங்களுக்கு கணக்கு இருந்து, மாதச் சந்தாவும் கட்டுகிறீர்கள் என்றால் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம். 


Agalya (Tamil Edition) eBook : .., Balakumaran: Amazon.in: Kindle Store


*******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. நானும் வாங்கி இருக்கிறேன்.  படித்திருக்கிறேன்.  முடிவு சரியாய் நினைவில்லை.  மறுபடி ஒரு மீள்வாசிப்பு பாலகுமாரனின் பழைய புத்தகங்களில் மேயவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும் ஒரு மீள்வாசிப்பு - படித்துப் பாருங்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. இந்த தளத்திலிருந்து அகல்யாவை டவுன்லோட் செய்தும் வாசிக்கலாம்!

    https://tamilbookspdf.com/books/ahalyaa-by-balakumaran/

    பதிலளிநீக்கு
  3. இந்தப் புத்தகம் வாசித்திருக்கிறேன்.

    புத்தகம் பற்றி உங்கள் இருவரது கண்ணோட்டமும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. வாசகம் அருமை.

    கதை விமர்சனம் அருமை.


    //பெண்களை பல ஆண்கள் போகப்பொருளாக மட்டுமே நினைப்பது இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் விஷயம் - அதிலும் வட இந்தியாவில் இப்படியான சிந்தனை தான் ஒவ்வொரு ஆண் மனதிலும் பதிந்து இருக்கிறது.//

    ஆமாம், பெண்களை மதிப்புடன் நடத்துவது இல்லை, சகமனிஷியாக கூட சிலர் நடத்துவது இல்லை.
    இந்தி நாடகங்கள் அதை தான் சொல்கிறது. சில ஆண்மகன்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர் அம்மாக்கள் விடுவது இல்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகம் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் மிக அருமை. அகல்யா கதைப் புத்தகத்தைப்பற்றிய தங்கள் இருவரது விமர்சனமும் அருமையாக உள்ளது. இந்தக் கதையை நானும் படித்திருப்பேன் என நினைக்கிறேன். அப்போது (சென்னை, மதுரையில் இருந்த போது) நூலகத்திலிருந்து வாங்கி வந்து படிக்கும் பழக்கம் இருந்தது. அதில் இதையும் படித்திருக்கிறேனோ என்னவோ....! இப்போது கொஞ்சம் படிக்க ஆரம்பித்தால் கூட கதை நினைவுக்குள் வந்து விடும்.

    தங்கள் இருவரின் விமர்சனங்களும் கதையை படிக்கும் ஆவலை நிறைய உண்டாக்குகிறது. சந்தர்ப்பம் அமைந்தால் கண்டிப்பாக படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட நூல் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. முடிந்தால் நீங்களும் படித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இருவரின் பார்வையும் அருமை.

    //அதிலும் வட இந்தியாவில் இப்படியான சிந்தனை தான் ஒவ்வொரு ஆண் மனதிலும் பதிந்து இருக்கிறது. //

    ரொம்பவே. வெங்கட்ஜி. இதை உறவுகள் சொல்லிக் கேட்கிறேன். அதனால் ஒரு பெண்ணிற்குத் திருமணமே ஆகவில்லை என்பதோடு இப்போது தனக்குத் திருமணம் வேண்டாம் என்றும் இருக்கிறார்.

    //அகல்யா கதையில் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான பந்தம் எப்படி இருக்க வேண்டும் என்று வாசிக்கும்போது இப்படியான விஷயங்களும் நடக்க முடியுமா என்று தோன்றுவது இயல்பு. //

    வாசிக்கத் தூண்டும் வரி.

    ஆதி கோட் பண்ணியிருக்கும் வரிகளும் வாசிக்கத் தூண்டுகிறது

    நீங்கள் சொல்லியிருப்பதை வாசிக்கும் போது நா பா அவர்கள் நினைவுக்கு வருகிறார்.அ வர் கதைகளில் பெரும்பாலும் பொது நோக்குடன் இருக்கும் இரு மனங்கள் மற்றும் திருமண பந்தம் அவர்கள் பேசுவது எல்லாமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் இந்த நூலை வாசித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. சகோதரி ஆதி உரையாடல்களை மேற்கோள் காட்டி விமர்சித்ததும், வெங்கட்ஜி நீங்கள் கதாபாத்திரங்கலை ஆசிரியர் கையாண்டிருப்பதைச் சொல்லிச் சென்ற விதமும் அருமை.

    அழகான தேர்ந்த விமர்சனம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....