ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******

 

இத்தொடரில் இதுவரை இரண்டு பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.  

 

இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று

 

இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு

 

தொடர்ந்து இந்தப் பயணம் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 



தேநீர் அருந்திய உணவகத்தின் வெளியே…



நானும் நண்பர் சுப்பிரமணியனும்…


நண்பர்கள் குழாம்…


தேநீர் அருந்திய உணவகம் வெளியே… 
பனிமூட்டத்தில் சூரியன்…



அடர்ந்த பனிமூட்டத்தில் எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. NH 58 நெடுஞ்சாலை வழி பயணித்து, ஓட்டுனர் காலை உணவு சாப்பிடுவதற்காக நிறுத்திய இடம் மீரட் புறவழிச் சாலையில் அமைந்திருக்கும் SHIVA TOURIST DHABA (முகவரி: Meerut Bypass Road, NH 58, Partapur, Meerut, Uttar Pradesh 250103). அப்போது நேரம் காலை 07.05!  அந்த காலை நேரத்திலேயே காலை உணவைச் சாப்பிடுவது சரியாக இருக்காது என்பதால் நாங்கள் தேனீர் மட்டுமே அங்கே சாப்பிட்டோம்.  ஓட்டுனர் மட்டும் அங்கே காலை உணவு சாப்பிட்டு வந்தார்.  அந்த இடத்தில் நிறையவே பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி இளைப்பாறிக் கொண்டும், தேநீர் அருந்திக்கொண்டும் இருந்ததோடு, சில பல நிழற்படங்களையும் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.  நாங்களும் அங்கே சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டோம்.  சூரியன் உதித்து சில நிமிடங்கள் ஆனதால் செம்பிழம்பாக காட்சி அளித்த சூரியன் மனதைக் கவர்ந்தான்.  சுமார் 30 நிமிடங்கள் அந்த இடத்தில் செலவழித்த பிறகு நாங்கள் எங்கள் பயணத்தினை தொடர்ந்தோம்.

 

காலை உணவு:



காலை உணவு சாப்பிட்ட உணவகம்…


தயாராகும் பராட்டா…


சப்ஜிகள் வைக்கும் பாத்திரங்கள்…



காலிஃபிளவர் தோட்டம்…


முள்ளங்கித் தோட்டம் ஒன்றில் நான்…
 

மீரட் பகுதியில் முதல் நிறுத்தத்தினைத் தொடர்ந்து சுமார் 105 கிலோமீட்டர் தொலைவினை மோசமான சாலை வழி கதோலி (Khatauli), மீராபூர் (Mirapur), பிஜ்னோர் (Bijnor) ஆகிய இடங்களைக் கடந்து பயணித்த பிறகு கீரத்பூர் (Kiratpur) எனும் இடத்தில் இருந்த Shakti Fuel Point எனும் Bharat Petroleum Outlet அருகே இருந்த வைஷ்ணவ் போஜனாலய் எனும் சிறு உணவகத்தில் காலை உணவிற்காக வண்டியை நிறுத்தினோம்.  உணவகத்தில் யாருமே இல்லை! அப்போது தான் தந்தூர் என்று சொல்லக்கூடிய அடுப்பினை பெரிய பெரிய விறகுகள் போட்டு தயார் செய்து கொண்டிருந்தார்கள்.  அந்த நேரத்தில் சில வகை பராட்டாக்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் சில நிமிடங்களில் தயார் செய்து தந்து விடுவேன் என்றும் அங்கே இருந்த உரிமையாளர்/சிப்பந்தி சொல்ல, சரி என அங்கே காத்திருந்தோம்.  காத்திருந்த வேளையில் அருகே இருந்த வயல்வெளிகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என நானும் குழுவினரில் சிலரும் நடந்தோம்.  சுற்றிலும் காலிஃப்ளவர், முள்ளங்கி, கத்தரிக்காய் என நிறைய பயிரிட்டு இருந்தார்கள்.  அந்தத் தோட்டத்திற்கு அருகே சென்று சில பல நிழற்படங்களை எடுத்துக் கொண்டோம். 



ஒரு வகை பராட்டா…


பராட்டா தயாராகிறது…

 

புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு உணவகத்திற்கு வந்தபோது காலை உணவாக ஆலு பராட்டா (உருளைக்கிழங்கு பராட்டா), ப்யாஜ் பராட்டா (வெங்காய பராட்டா), பனீர் பராட்டா என ஒவ்வொன்றாக தயாராகிக் கொண்டிருந்தது.  அப்பப்பா என்னவொரு வேகம் அந்த உழைப்பாளியின் கைகளில்! பெரிய பெரிய மாவு உருண்டைகளை (அந்த அளவு கோதுமை மாவு உருண்டை என்றால் நான் ஐந்து அல்லது ஆறு ரொட்டிகள் தயார் செய்து விடுவேன்!) எடுத்து, அதிலே பராட்டாவிற்கான ஸ்டஃப்ஃபிங் சேர்த்து பெரிய பெரிய பராட்டாக்களை உருவாக்கி, முதலில் ஒரு தோசைக்கல்லில் (தவா) கொஞ்சம் சூடாக்கி, அடுத்து வேறு ஒரு தவாவில் நெய் சேர்த்து அதனைச் சூடு படுத்தி, வேக வைத்து ஒவ்வொன்றாக தட்டில் ஊறுகாய் போட்டு, எங்களுக்குத் தந்து கொண்டிருந்தார்.  ஒரு பராட்டா சாப்பிட்டாலே போதும் எனத் தோன்றும்படி அந்த பராட்டாவின் அளவு ஹிமாலயன் சைசில் இருந்தது! நான்கு துண்டுகளாகச் செய்து ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தோம்.  அங்கே தொட்டுக் கொள்வதற்காகக் கொடுத்த ஊறுகாயும் நன்றாகவே இருந்தது. பொதுவாக பராட்டா என்றால் தொட்டுக்கொள்ள ஊறுகாயும், தயிரும் தான் தருவார்கள்.  இங்கே தயிர் கேட்டபோது இல்லை என்று சொல்லி விடவே, வெறும் ஊறுகாய் தொட்டுக்கொண்டே சாப்பிட வேண்டியிருந்தது.  வேக வேகமாக அவர் செய்து தந்த பராட்டாவை சாப்பிட்டதோடு, அவர் செய்த வேகத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சில நிழற்படங்களோடு காணொளியாகவும் எடுத்துக் கொண்டேன். 



சாலையில் செல்லும் எருமை மாட்டு வண்டி ஒன்று…

 

அங்கே உணவு உட்கொண்ட பிறகு அங்கேயிருந்து எங்கள் பயணம் தொடர்ந்தது. முதலில் சொல்லியிருந்தது போல இந்தப் பகுதிகளில் சாலைகள் அவ்வளவு சரியில்லை என்பதால் வாகனம் மெதுவாகவே சென்று கொண்டிருந்தது. ஆங்காங்கே பார்த்த காட்சிகள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியில்லை. தொடர்ந்த எங்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் என்ன, வழியில் எங்கே சாப்பிட்டோம், அந்த இடத்தில் கிடைத்த அனுபவங்கள் என்ன போன்ற விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

சென்னையிலிருந்து…

14 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை இன்றைய வாசகமும் நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பனி மூட்டத்தில் சூரியன் படமும், நீங்களும், உங்கள் நண்பர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், நன்றாக உள்ளது. பசுமை மிகுந்த காலிஃப்ளவர், முள்ளங்கி காய்கறி தோட்டங்கள் கண்களுக்கு குளிர்வாக உள்ளது.

    பரோட்டா செய்முறை காணொளியையும் பார்த்து ரசித்தேன். அந்த உணவு தயாரிக்கும் இடங்களும், பாத்திரங்களும் சுத்தமாக உள்ளது.

    நீங்கள் சொல்வது உண்மைதான். ஒரு பரோட்டாவே வயிறு நிரம்பி விடும் அளவுக்கு பெரியதாக உள்ளது. ஊக்கத்துடன் விரைவாகவும், தனியொருவராகவும் வேலை பார்க்கும் அந்த உணவு கடையின் இளைஞருக்கு பாராட்டுக்கள்.

    சாலையில் பொதி சுமக்கும் மாட்டு வண்டி.. பாவம் மாடுகள்... மேலும் பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன். ஜி.

      பதிவும் பதிவு வழி பகிர்ந்த படங்கள் மற்றும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  2. பயண விவரங்கள் நன்று. பரோட்டா விவரணை பசியைத் தூண்டுது. யாத்திரையில் தமிழக சாப்பாடு கலந்த சாதங்கள் சாப்பிட்டு போரடித்துவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண விவரங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. யாத்திரையில் தமிழக சாப்பாடு, கலந்த சாதங்கள் சாப்பிட்டு போரடிக்கும் தான். எனக்கும் பொதுவாக தமிழக உணவு வகைகள் தொடர்ந்து சாப்பிடப் பிடிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. பராட்டா - ஓ இது இங்கு சொல்லப்படும ப்ரோட்டா இல்லை. சப்பாத்தி போன்று உள்ளே வைத்துச் செய்வது இல்லையா. மிக வேகமாக அவர் செய்யும் காணொளியில் ஏதொ தீயில் சுடுவது போல் கம்பியில் அடுக்கி வைத்து சுடுவது தெரிகிறது? அவையும் சப்பாத்திகளா?

    பயண விவரங்கள் மிக அருமை. தேநீர் அருந்திய இடம், முள்ளங்கித் தோட்டம், காலிஃப்ளவர் தோட்டம் எல்லாம் நன்றாக இருக்கின்றன உங்களுடன்.

    தொடர்கிறோம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராட்டா - பரோட்டா வேறு வேறு. இங்கே இருப்பவை ஸ்டஃப்ட் வகை தான். ஆமால் சப்பாத்தி வகைகளில் ஒன்றான ஃபுல்கா தீயில் சுடுவார்கள். காணொளியில் காணும் தீ - தந்தூர் அடுப்பினை தயார் செய்ய தீ மூட்டி வைத்திருக்கிறார். நன்கு சூடானபிறகு தான் அவற்றில் உள்ளே சப்பாத்திகளை ஒட்டி, மண் சூட்டில் தயார் செய்வார்கள். அப்படியான ரொட்டிகளையே தந்தூரி ரொட்டி என்று சொல்வதுண்டு. பராட்டாக்களும் இப்படி தந்தூர் அடுப்பில் செய்வதுண்டு. கொஞ்சம் தடிமனாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  4. தேநீர் அருந்திய உணவகம் பிரபலம் என்பதைச் சொல்லி போட்டிருக்காங்க போல! ஷிவா பயணிகளுக்கான dhaba என்று பெரிய உணவகம் போல. அதன் அருகில் வயல்கள் என்றால் நகரத்திலிருந்து சற்று வெளியே என்று தோன்றுகிறது. அழகா வயல்கள் முள்ளங்கி மற்றும் காலிஃப்ளவர்.

    பராட்டா ஈர்க்கிறது. பஞ்சாபிலும் மிகப் பெரிய பராட்டா அதுவும் சர்வ சகஜமாக மூன்று அடுக்கித் தருகிறார்கள். ஊறுகாய் தயிர். பொதுவாக வடக்கே எல்லா இடங்களிலும் பராட்டா நல்ல பெரிதாகத்தான் இருக்கிறது குறிப்பாக இப்படியான சாலை வழி உணவகங்களில். நாம் வீட்டில் 4, 5 செய்யும் அளவு மாவு. ஒன்றே அதிகமாக இருக்கும் தான்.

    காணொளியில் அந்தப் பையன் மிக துரிதமாகச் செயல்படுகிறார். மற்றொரு புறம் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறதே.

    பயண விவரங்கள் ஊர்களின் பெயர்களையும் பார்த்துக் கொண்டேன் ஜி,

    வடக்கே பெரும்பாலும் எருமை மாடுகள்தான். தில்லி எருமை பிரபலமாச்சே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபலமான உணவகம் தான். அதனால் தான் மஷூர் எனும் வார்த்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். தில்லியை அடுத்த மூர்த்தல் எனும் இடம் இப்படியான உணவகங்களுக்கு மிகவும் பிரபலம். தில்லியிலிருந்து சாப்பிடுவதற்காகவே இந்த இடங்களுக்கு பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சென்று வரும் சில நண்பர்கள் எனக்கு உண்டு.

      சப்பாத்தி செய்வதற்காக அந்த தந்தூரி அடுப்பை தயார் செய்வதற்காக தான் விறகுகளை போட்டு எரிய விட்டு இருக்கிறார்கள் - அது தான் காணொளியில் இருக்கும் நெருப்பின் காரணம்.

      வடக்கில் வண்டி மாடுகளாகவும் எருமைகளே பயன்படுத்தப்படுகின்றன. நம் ஊர் போல காளை மாடுகள் இங்கே வண்டி மாடுகளாக பயன்படுத்தப்படுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. காலிஃப்ளவர் முள்ளங்கி வயல்கள் சூப்பர். இப்படிப் பார்ப்பதே சந்தோஷமாக இருக்கிறது. குருகிராமம் உறவினர் வீட்டில் மாடித்தோட்டத்தில் காலிஃப்ளவர், காரட், முள்ளங்கி எல்லாம் போட்டிருந்தாங்க. மிக அழகாகக் காய்த்திருந்தன. பச்சை மிளகாய், கத்தரி, பெரிய கத்தரி எல்லாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற வயல்வெளிகளில் சுற்றி வருவதே மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். இந்த மாதிரி பயணங்களில் பார்க்கக் கிடைத்தால் அங்கே சிறிது நேரமேனும் இருப்பது எனக்கு வழக்கமாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. படங்கள், காணொளி எல்லாம் அருமை. பயணம் இனிமையாக இருந்து இருக்கும் நண்பர்களுடன் நீங்கள் இனிமையான புன்னகை படம் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த படங்களும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நண்பர்களுடன் சென்ற இந்தப் பயணம் சிறப்பான பயணமாக இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. காலங்கார்த்தாலே பராத்தா எல்லாம் சாப்பிடுவது கஷ்டம்தான். ஆனால் பயணத்தில் எது எப்போ கிடைக்குமோ அது அப்போ ன்னு இருக்கணும்தான்!
    நம்மூர்லே பாருங்க எதுக்கும் உதவாத எருமைன்னு திட்டுவாங்க. வடக்கே காளை செய்யும் வேலையெல்லாம் எருமையும் செய்யுதுல்லே !!!!

    துளசி கோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கும் உதவாத எருமை - ஹாஹா... இங்கே பல விஷயங்களுக்கு எருமை தான்.

      காலையில் பராட்டா - கடினம் தான் என்றாலும் இங்கேயே இத்தனை வருடங்கள் இருந்ததில் எனக்கு பழகி விட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....