அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட இயற்கை அன்னையின் மடியில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
மனிதன் மீது கொள்ளும் பந்தம் வேதனையைத் தரக்கூடியது;
ஆண்டவன் மீது கொள்ளும் பந்தம் இன்பத்தை மட்டுமே வாரிவழங்கக் கூடியது.
*******
சென்ற கோயில் உலா பதிவில் முத்தரசநல்லூரில் இருக்கும் ஸ்ரீ ஆராளகேஸ்வரி சமேத
ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர்
கோயில் குறித்தும், ஒரே நாளில் மூன்று சிவன் கோயில்களில் தரிசனம் செய்த பலன்
கிடைக்கும் என்றும் பார்த்தோம்.
அது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்தப் பதிவினை நீங்கள் படித்திருக்கவில்லை
என்றால் மேலே உள்ள சுட்டி வழி படித்து விடலாமே. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து
சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அந்தக் கோயில் அமைந்திருக்கும் அதே
முத்தரசநல்லூர் எனும் சிற்றூரில் புதியதாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒரு கோயில்
குறித்த தகவல்கள் தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். இங்கே ஒரு விஷயம் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. எண்ணம்-1:
ஏற்கனவே பல புராதனமான, பழமையான,
சிறப்பான கோயில்கள் சிதிலமடைந்து கிடக்க, அவற்றை புனரமைக்காமல் புதியதாக கோயில்கள்
அமைக்க வேண்டுமா என்ற எண்ணம் எனக்கு எப்போதும் தோன்றும். சரி புதிய கோயில்கள் நிர்மாணிக்கும் போதே, பழைய
சிதிலமடைந்த கோயில்களையும் புனரமைக்காவது செய்யலாமே என்கிற ஏக்கம் எனக்கு உண்டு.
சரி இந்த எண்ணம் குறித்து விரிவாக பிறகு பார்க்கலாம். இன்றைக்கு கோயில் உலாவில்
நாம் பார்க்க இருக்கும் குருவாயூரப்பன் கோயில் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் இருக்கும்
முத்தரசநல்லூரில் புதியதாக, சில வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில் ஸ்ரீ
குருவாயூரப்பன் திருக்கோயில். தீநுண்மி காலத்திற்குப் பிறகு தான் (2022-இல்)
இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. படிப்படியாக ஆரம்பித்து ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதி,
ஸ்ரீ ஐயப்பன் சன்னதி, அழகான திருக்குளம், ஒரு சிறு குடிலில் காஞ்சி பரமாச்சாரியார்
சிலையும், ஷீரடி சாயிபாபா சிலையும் கூட வைத்திருக்கிறார்கள். கோயில் வளாகம் முழுவதும் அமைதி ததும்புகிறது
என்றாலும் அங்கே மெல்லியதாக ஒலிக்கும் மந்திர உச்சாடனமும் நம்மை மகிழ்ச்சியை
நோக்கி அழைத்துச் செல்கிறது. கேரளத்தில் இருப்பது போலவே இந்த குருவாயூரப்பன்
சன்னதியில் ஆண்கள் பனியன், மேல்சட்டை அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை. அது தவிர கோயிலின் வாயிலிலேயே, கோயிலுக்கு வரும்போது
தவிர்க்க வேண்டிய உடைகள் குறித்த பதாகையும் வைத்திருக்கிறார்கள்.
கோயில் வளாகத்தில் பல விதமான வழிபாடுகள் செய்ய
வசதிகள் செய்திருக்கிறார்கள்.
துலாபாரம், நெய் வழிபாடு, சோறுண்ணு என வரிசையாக பல வழிபாடுகள், கேரளத்தின்
குருவாயூரப்பன் கோயிலில் இருக்கும் வழிபாடுகள் போலவே இங்கேயும் செய்து கொள்ள
வசதிகள் இருக்கின்றன.
நாள் முழுவதும் சிறு குழந்தைகளோடு நிறைய பேர் சோறுண்ணு-க்காக வந்த வண்ணம்
இருக்கிறார்கள் என்பதை நான் அங்கே சென்றிருந்தபோது பார்க்க முடிந்தது. கோயில் தினமும் காலை 05.30 மணி முதல் நண்பகல் 12.00
மணி வரையும், மாலை 05.30 மணியிலிருந்து இரவு 08.00 மணி வரையும் இந்தக் கோயில் நடை
திறந்திருக்கும்.
நடுநடுவே பூஜைகளும் உண்டு என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். இந்தக் கோயில் உருவானதற்கு என்ன காரணம் என்று
கேட்டால் காஞ்சி பரமாச்சாரியார் என்று தகவல் சொல்கிறது இங்கே உள்ள தல வரலாறு
குறித்த பதாகை.
சற்றே பெரிய பதாகை என்பதால், முழு பதாகையும் எடுத்திருந்தாலும், அதையும்,
மூன்றாகப் பிரித்து, படத்தைச் சுட்டி, பெரிதுபடுத்தி, படிக்க கொஞ்சம் வசதியாக
இங்கே பகிர்ந்து இருக்கிறேன்.
கேரளத்து பாணியிலேயே கட்டப்பட்ட கோயில். வளாகத்தில்
இருக்கும் பசுமை, குறிப்பாக அங்கே இருக்கும் அழகான குளம், அதன் நடுவே இருக்கும்
பன்னிரண்டு கால் மண்டபம், மண்டபத்தின் தூண்களில் செதுக்கப்பட்ட சிலைகள்,
வளாகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பசுக்களுடன் இருக்கும் Gகோசாலை, என அனைத்தும்
பிடித்திருந்தது - குறிப்பாக குளமும் Gகோசாலையும். பொதுவாகவே Gகோசாலை எனக்குப் பிடித்த ஒன்று -
தில்லியில் இருக்கும் Gகோசாலை குறித்து முன்னரும் எனது பக்கத்தில் எழுதி இருக்கிறேன். குளத்தின் அருகே கோயிலைப் பார்த்து இருந்த ஒரு
பிள்ளையார் சிலை மிகவும் பிடித்திருந்தது. காலை நீட்டிக் கொண்டு ஒரு புத்தகத்தை
வைத்துக்கொண்டு இருக்கும் அந்த பிள்ளையார் சிலை ரொம்பவும் அழகு. நான் இந்தப்
பயணத்தில் தனியாகவே இங்கே சென்று வந்தேன். ஒரு முறை மகளையும், மனைவியையும்
அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும், அதுவும் அந்தக் குளத்தையும், பிள்ளையார்
சிலையையும், கேரளா பாணி கோயிலையும் காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே அழைத்துச்
செல்ல வேண்டும் என நினைத்தேன்.
கோயிலுக்குச் சென்ற போது தோன்றிய ஒரு எண்ணத்தினை முதல் பத்தியில் சொல்லி
இருந்தேன்.
அங்கே தோன்றிய இரண்டாம் எண்ணம் குறித்து கீழே சொல்கிறேன்.
எண்ணம்-2: இந்தக்
கோயில் போல புதியதாக தோன்றும் பல கோயில்களில் பக்தி என்கிற விஷயத்தினை விட பணம்
சம்பாதிக்கும் விஷயம் தான் அதிகமாக இருக்கிறதோ, அதாவது Commercial நிறுவனம் போலவே
இக்கோயில்கள் நடத்தப்படுகிறது என்கிற எண்ணம் தான் அதிகம் தோன்றியது.
எல்லாவற்றிற்கும் காசு - அந்தப் பூஜை செய்தால் இந்தப் பலன், இந்தப் பூஜை செய்தால்
இந்தப் பலன் என்று சொல்லிச் சொல்லி பூஜைகளைச் செய்யுங்கள் என்று கேட்பது என்னமோ போல்
இருந்தது. பூஜைகளுக்கான கட்டணம் இவ்வளவு என பட்டியல் வேறு. கோயில் அலுவலகத்தில்
இருப்பவர்கள்
சொன்னால் போதுமே என்கிற எண்ணமும் மனதுக்குள் வந்து போனது. பூஜைகளை விடுங்கள், கோயில் வளாகத்தில் இரண்டு பெரிய
மண்டபங்கள் - சுப காரியங்களுக்காக வாடகைக்கு விடுகிறார்களாம். மிகப் பெரிய மண்டபம் - கோயில்களில் திருமணம் போன்ற
சுபகாரியங்களைச் செய்வது வழக்கம் தான் என்றாலும் அதற்காக பெரிய செலவு இருக்காது -
ஆனால் இங்கோ பெரிய மண்டபம், அதற்கான வாடகை என இருப்பதை பார்க்கும்போது
Commercialisation எனும் ஆங்கில வார்த்தையே நினைவுக்கு வந்தது.
சரி எனது எண்ணங்களை விடுங்கள் - கோயிலில் இருக்கும் அமைதியான சூழலும், அழகான குளம் மற்றும் Gகோசாலை ஆகியவற்றுடன் கேரள பாணி குருவாயூரப்பன் மற்றும் ஐயப்பன் சன்னதிகளும் பார்த்து வர ஒரு முறையேனும் இக்கோயிலுக்குச் செல்லலாம். திருச்சி வரும் வாய்ப்பு இருந்தால் ஒரு முறை சென்று வாருங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
உங்கள் எண்ணம் 2 ஐ மிக வலுவாக ஆதரிக்கிறேன். மக்களின் பலவீனத்தை காசாக்குகிறார்கள்.
பதிலளிநீக்கு//மக்களின் பலவீனத்தைக் காசாக்குகிறார்கள்.// - அதே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
டிட்டோ ஸ்ரீராம்,
நீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
நீக்குபாடம் படிக்கும் பிள்ளையார் சிலை அழகாக இருக்கிறது ஜி.
பதிலளிநீக்குபிள்ளையார் சிலை உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குஎண்ணம்-1: ஏற்கனவே பல புராதனமான, பழமையான, சிறப்பான கோயில்கள் சிதிலமடைந்து கிடக்க, அவற்றை புனரமைக்காமல் புதியதாக கோயில்கள் அமைக்க வேண்டுமா என்ற எண்ணம் எனக்கு எப்போதும் தோன்றும். சரி புதிய கோயில்கள் நிர்மாணிக்கும் போதே, பழைய சிதிலமடைந்த கோயில்களையும் புனரமைக்காவது செய்யலாமே என்கிற ஏக்கம் எனக்கு உண்டு.//
பதிலளிநீக்குஇதை அப்படியே வழிமொழிகிறேன் வெங்கட்ஜி, இதே போன்று நான் கருத்துகளில் சொல்லியிருந்த நினைவு எங்கே எந்தத் தளத்தில் என்ற நினைவில்லை. சுவாமிநாராயணன் கோயில் பற்றி வாசிக்க நேரிடும் போதெல்லாம் எனக்கு இந்த எண்ணம் வந்து கொண்டே இருக்கும்.
கீதா
புதிய கோயில்கள் உருவாக்கும்போதெல்லாம் இப்படியான எண்ணம் வருகிறது. என் எண்ணம் உங்களுக்கும் இருக்கிறது - மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
பிள்ளையார் கவர்கிறார் ஜி. உங்கள் பதிவில் கருத்துகளை அப்படியே டிட்டோ செய்கிறேன். 2 வது எண்ணத்தைக் கன்னாபின்னான்னு ஆதரிக்கிறேன். எனக்கு இந்த எண்ணம் நிறைய உண்டு. கோயில்கள் வியாபாரத்தலங்களாகி வருகின்றன என்பது.
பதிலளிநீக்குநம் வீட்டில் பொதுவாகக் கோயிலுக்குச் செல்லும் போது அமைதியாக வணங்கிவிட்டு அமர முடிந்தால் அமர்ந்து கண்ணை மூடி அமைதியாகத் தியானித்துவிட்டு, புகைபப்டங்கள் எடுக்க முடிந்தால் எடுத்து ரசித்துவிட்டு வந்துவிடுவது வழக்கம். வேறு வகை பக்தி, பரிகாரங்கள் வழக்கம் இல்லை.
பானுக்காவும் இக்கோயில் பற்றி எழுதியிருந்தார். சமீபத்தில் போய் வந்தாங்க என்று நினைவு.
கீதா
பதிவில் வெளியிட்ட தகவல்கள் மற்றும் படங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குவாசகம் அருமை, உண்மை.
பதிலளிநீக்குஉங்கள் எண்ணங்கள் தான் என் எண்ணமும் வெங்கட்.
கோவில் அழகாய் இருக்கிறது. படிக்கும் பிள்ளையார் மனதை கவர்ந்தார்.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குஉங்களுக்கும் அதே எண்ணங்கள் - இப்படி இன்னும் சிலருக்கும் இருக்கிறது என்பது நல்ல விஷயம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
கேரளப் பாணி கோயில் என்பது தெரிகிறது. படங்களும் தகவல்களும் பகிர்வும் நன்று. எண்ணங்கள் 2 ... உண்மை. வாசிப்பில் பிள்ளையார் ... அழகு.
பதிலளிநீக்குகேரள பாணி கோயில் தான் ராமலக்ஷ்மி. பதிவு வழி பகிர்ந்த தகவல்களும் எண்ணங்களும் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேரளா பாணி கோயில் புதியதொரு கோயிலைப் பற்றிய விவரங்களும், படங்களும் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் எண்ணங்கள் உண்மையே.
பிள்ளையார்ப்படம் மிக அழகாக இருக்கிறது
துளசிதரன்
பதிவு குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி.
நீக்குகுருவாயூரப்பன் கோவில் கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு