அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர், சென்னை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இத்தொடரில் இதுவரை ஏழு பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.
இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று
இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு
இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று
கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு
லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து
லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு
லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு
சென்ற பகுதியில் சொன்னது போல, இப்பகுதியில் தொடர்ந்து லான்ஸ்(d)டௌன் பகுதியில் பார்க்க வேண்டிய மேலும் சில இடங்கள் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.
தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில்
லான்ஸ்(d)டௌன் நகர மையத்திலிருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கோயில் தான் தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில். தாட(ர)கேஷ்வர் எனும் பெயர் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா? தாரகன் (அ) தாரகாசுரன் என்று தமிழகத்தில் அறியப்பட்ட அசுரன் தான் இங்கே தாட(ர)கேஷ்வர்… இப்படி ஈஸ்வர பட்டத்தினை அவன் பெறுவதற்கு ஒரு கதை நிச்சயம் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம் அப்படி ஒரு கதை இருக்கிறது. தாரகன் எனும் தாராகாசுரன் ஒரு வரம் வேண்டி ஆதியோகியான சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து கொண்டிருந்தான். ஆதியோகியாகிய சிவபெருமான் தாரகனின் தவத்தினை மெச்சி அவன் முன்னே தோன்றி “என்ன வரம் வேண்டும் பக்தா?” என எப்போதும் போலக் கேட்க, தாரகன் கேட்ட வரம் சிவபெருமானை அதிர்ச்சி அடையச் செய்திருக்க வேண்டும். அவன் கேட்ட வரம் அப்படி! என்ன வரம் கேட்டான் என்றால் “எனக்கு யாராலும், எந்த விதத்திலும் இறப்பு இருக்கக் கூடாது - அதாவது இறவாமையையே வரமாகக் கேட்டான். சிவபெருமான் சற்றே அதிர்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இறப்பு என்பது எல்லோருக்கும் உண்டாகியே தீரும் - அதில் விதிவிலக்கு இருக்காது! கொஞ்சம் மாற்றிக் கேள்!” என்று சொல்லிவிட்டாராம்.
சற்றே யோசித்த தாரகன், இறவாமையையே கொஞ்சம் மாற்றிக் கேட்டானாம் - “உங்களுக்கு பிறக்கும் மகன் தவிர வேறு யாராலும் எனக்கு இறப்பு வரக்கூடாது!” என்பது தான் அவன் கேட்ட வரம்! அவனுக்குள் தோன்றிய எண்ணம், சிவபெருமானோ ஆதி யோகி! அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதாலும், யோகி எங்கே மணம் புரியப்போகிறார் என்றும் எண்ணி விட்டான் போலும் தாரகன்! தன்னை நோக்கி தவம் இருக்கும் பலருக்கும் வரம் அளிக்கும் சிவபெருமானும், தாரகனுக்கும் அவன் கேட்டது போலவே “அப்படியே ஆகட்டும்!” என்று வரம் தந்து விட்டார். இன்னுமொரு பக்கம் தக்ஷன், உமையவளையே மகளாகப் பெற்று பெரும் சக்தியாக தான் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆதிசக்தியை நோக்கி தவமிருந்து வந்தான். தக்ஷனின் தவத்தை மெச்சிய ஆதி சக்தி அவன் முன்னே தோன்றி “உம் தவத்தை மெச்சினோம்! நீ விரும்பியபடியே உமையவளே உனக்கு மகளாக பிறப்பாள்! ஆனால் அந்தப் பெண்ணாலேயே நீ அழியப்போகிறாய்!” என்றும் சொல்லி மறைந்தாளாம்! இது இப்படி இருக்க, வரம் பெற்ற தாரகன் தனது அசுர சிந்தனைகளை கைக்கொண்டு பலருக்கும் தொல்லை கொடுத்து வந்து கொண்டிருந்தான்.
தாரகனின் தொல்லைகளால் கவலை கொண்ட முனிவர்களும் தேவர்களும் சிவபெருமானிடம் முறையிட, தாரகனின் அழிவுக்கு நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். இந்த காலகட்டத்தில் சிவபெருமானுக்கும் உமையவளுக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்க, அவர்களுக்கு கார்த்திகேயன் மகனாக அவதரித்தார். இங்கே ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, சிவசக்தியின் இரண்டாம் மகனாகவே கார்த்திகேயன் எனும் முருகன் கருதப்படுகிறார். முதல் மகனாக, மூத்தவனாக நாம் அனைவரும் கொண்டாடுவது விநாயகப் பெருமானையே! ஆனால் வடக்கில் சிவசக்தியின் மூத்த மகனாக கொண்டாடப்படுவது கார்த்திக் எனும் கார்த்திகேயனைத் தான்! ஆனாலும் வட இந்தியாவில் கார்த்திகேயனுக்கு கோயில்கள் மிகமிகக் குறைவு. உத்திராகண்ட் மாநிலத்தில் சில இடங்களில் அவருக்குக் கோயில் உண்டு! அப்படி முதலாவதாக சிவசக்திக்குப் பிறந்த கார்த்திகேயன் மூலமாக, தாரகாசுரனின் அழிவு உண்டானது. ஆனாலும் அந்த நேரத்திலும், தனது தவறை உணர்ந்துவிட்டதாக தாரகாசுரன் சிவபெருமானை வேண்டி மீண்டும் ஒரு வரம் பெற்றானாம்! அந்த வரம் - தான் இறந்தாலும், தனது பெயரில் சிவபெருமான் இந்த இடத்தில் தாரகேஷ்வர் மஹாதேவ் என்ற பெயரில் குடிகொண்டு, கலியுகத்தில் அங்கே வரும் பக்தர்களுக்கு காட்சி தரவேண்டும் என்பது தான் தாரகாசுரன் கேட்ட வரம். ”அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி இங்கே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது கதை!
இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்திருக்கும் தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் மந்திர் (கோயில்) பார்க்க அழகான கோயில். இந்தப் பக்கம் வரும்போது, லான்ஸ்(d)டௌன் நகர மையத்திலிருந்து சுமார் இரண்டு மணி நேரப் பயணத்தில் கோயிலைச் சென்றடையலாம். நேரமும், விருப்பமும் இருந்தால் நிச்சயம் கோயிலுக்குச் சென்று (dh)தியோ(dh)தார் எனப்படும் தேவதாரு மரங்கள் நிறைந்த இயற்கைச் சூழலில் மூழ்கி, பக்தியில் திளைத்து, பரவசம் அடையலாம்! இங்கே சென்று திரும்ப அரை நாள் தேவைப்படும் என்பதையும் நினைவு கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்! உத்திராகண்ட் மாநிலத்தில் இந்தக் கோயிலும் சிறிது பிரபலமான கோயில் என்பதால் உள்ளூர் வாசிகள் நிறையவே இந்தக் கோயிலுக்கு வந்து போகிறார்கள். சுற்றுலாவாசிகளை விட உள்ளூர் வாசிகள் அதிகம் வருவதாகத் தெரிகிறது. இந்தக் கோயில் அருகே லக்ஷ்மி தேவி அமைத்ததாகச் சொல்லப்படும் சிறு குளமும் உண்டு. அக்குளத்திலிருந்தே சிவபெருமானுக்கான அபிஷேகத் தீர்த்தம் எடுக்கப்படுகிறது என்றும் தகவல். இங்கே தேவதாரு மரங்கள் இருப்பதற்கு வேறு ஒரு காரணமும் கதை வழி சொல்கிறார்கள் உள்ளூர் வாசிகள். அந்தக் கதை…
தாட(ர)காசுரனை கார்த்திகேயன் வதம் செய்த பிறகு இங்கே சிவபெருமான் வந்தபோது சூரியனின் கணைகள் சிவபெருமானின் பாதம் அருகே விழும்படி இருக்க, அவரை சூரியனின் வெப்பத்திலிருந்து காப்பதற்காகவே பார்வதி தேவி அந்த இடத்தில் ஏழு தேவதாரு மரங்களாக உருமாறி சிவபெருமான் மீது சூரியனின் கிரணங்கள் படாமல் நிழல் தரும் விதமாக இருந்தார் என்பது இங்கே இருக்கும் மக்களின் நம்பிக்கை. அதனால் கோயில் அருகே இப்போதும் ஏழு தேவதாரு மரங்களை பார்வதி தேவியின் ரூபமாக உருவகித்து வணங்கி வருகிறார்கள் உள்ளூர்வாசிகள். தினமும் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை இந்தக் கோயில் திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் இங்கே பூஜைகள் நடந்து வந்தாலும் சிவராத்திரி சமயத்தில் இங்கே நடக்கும் பூஜைகள் கோலாகலமாக இருக்கும் என்றும் அந்தச் சமயத்தில் உள்ளூர்வாசிகள்/உத்திராகண்ட் வாசிகள் பெரும்திரளாக வந்து சிவபெருமானின் பூரண அருளைப் பெறுவார்கள் என்பதும் இங்கே கூடுதல் தகவல்.
நகர்ப்பகுதியிலிருந்து இக்கோயிலுக்குச் சென்று வர குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். பார்க்க வேண்டிய கோயில்களில் ஒன்று என்பதால் லான்ஸ்(d)டௌன் சுற்றிப் பார்க்க வரும்போது எல்லா இடங்களுக்கும் சேர்த்து நாட்களை முன்னரே கணக்கிட்டு வருவது நல்லது. இந்தத் தொடரில் குறிப்பிட்ட இடங்கள் தவிரவும் சில இடங்கள் பார்க்க உண்டு என்றாலும் அனைத்து இடங்களையும் ஒரே பயணத்தில் பார்க்கமுடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்வது நல்லது. லான்ஸ்(d)டௌன் நகரில் எங்களால் பார்க்க முடிந்த இடங்களைப் பார்த்துவிட்டு நாங்கள் முன்பதிவு செய்திருந்த தங்குமிடம் நோக்கி பயணித்தோம். நகரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் நாங்கள் தங்குமிடத்தினைச் சென்றடைந்தோம். தங்குமிடத்தில் கிடைத்த அனுபவங்கள் வரும் பகுதிகளில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
சுவாரஸ்யமான புராணம். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் எனக்கு வந்த ஓட்டுநர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். முருகனும் பிள்ளையார் போல சிவனுக்கு மகன்தானே? தமிழ்நாட்டில் கொண்டாடுகிறோம், முருகனை ஏன் வடநாட்டில் கொண்டாடுவதில்லை என! அதற்கு பதிலாகவும் இன்றைய பதிவு விளங்குகிறது. நான் கீதா அக்காவிடம் கேள்வி கேட்டு பதில் பெற்றிருந்தேன்!
பதிலளிநீக்குமுருகன் என்ற பெயரில் அறியப்படாவிட்டாலும், கார்த்திக் என்ற பெயரில் வடக்கே சில இடங்களில் வணங்குகிறார்கள். பெங்காலில் கூட கார்த்திகேயன் வழிபாடு உண்டு ஸ்ரீராம். பெங்காலிகளின் பூஜா கொண்ட்டாட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
நீக்குபதிவு குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
மிக மிக சுவாரசியமான கதை, வெங்கட்ஜி. கோயில் மிக அழகு. கண்டிப்பாகச் செல்ல வேண்டும் இப்பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால். நோட் செய்து கொண்டுவிட்டேன்.
பதிலளிநீக்கு//ஆனாலும் வட இந்தியாவில் கார்த்திகேயனுக்கு கோயில்கள் மிகமிகக் குறைவு. உத்திராகண்ட் மாநிலத்தில் சில இடங்களில் அவருக்குக் கோயில் உண்டு!//
அவர்தான் கோபித்துக் கொண்டு தெக்க வந்துட்டாரே!!! ஹாஹாஹாஹா....
வட இந்தியாவில் முருகன் போர்க்கடவுளாகக் கருதப்படுகிறார் என்றே நான் அறிகிறேன். அங்கிருக்கும் உறவினர்களின் மூலம். வடக்கில் அவர் தனியானவர். bachelor...மனைவி எல்லாம் கிடையாது...சிலர் மட்டும் தேவசேனா மனைவி என்றும் சொல்கிறார்கள் தேவசேனா பெயரிலேயே இருக்கே..சேனா...தேவர்களின் கடவுளர்களின் படை என்று!
பகவத்கீதையில் கிருஷ்ணர் சொல்வதாக வருமே சேனாதிபதிகளில் நான் ஸ்கந்தன் என்று. போர்க்கடவுளாக....ஆஅனால் வடக்கில் ஒரு காலத்தில் கார்த்திகேயன் வழிபடப்பட்டதாகவும் பல கிடைக்கப்பெற்ற சிலைகளும், கல்வெட்டுகளும் இருப்பதாகச் சொன்னார்கள்.
கீதா
பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நீக்குநேற்று மருந்தீஸ்வர்ர். இன்று தாரகேஷ்வரர். ஈசனின் கோயில்கள் பற்றி அறிவது மனதிற்கு மகிழ்ச்சி. தாரகேஷ்வரர் ஸ்தல புராணமும் மற்ற விவரங்களும் அருமை. தேவதாரு மரம் சூழ் ஈசனைக் கண்ட உணர்வு. மிக்க நன்றி.
பதிலளிநீக்குதுளசிதரன்
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குஇயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்திருக்கும் தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் மந்திர் மிக அழகான் கோயில். பார்க்க வேண்டிய இடம் தான்.
பதிலளிநீக்குதாரகாசுரன் வரலாறு பகிர்வு அருமை.
படங்கள் எல்லாம் இயற்கை வனப்பை சொல்கிறது.
பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குஅழகிய இடம். சுவாரஸ்யமான கதைகளும் கூட.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்குவடக்கே சில இடங்களில் கார்த்திக் ப்ரம்மச்சாரி ! பூனாவில் கூட கார்த்திக் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை. எங்க பக்கம் வந்து பாருங்க ரெண்டு பெண்டாட்டின்னு சொல்லிட்டு வந்தேன்.
பதிலளிநீக்குஷிம்லாப் பயணத்தில் 108 அடி ஹனுமனை தரிசிக்கப்போனபோது சின்னதா ஒரு சந்நிதியில் பாபா பாலக் நாத். உள்ளே யாராம் ? ஹாஹா நம்ம முருகன்தான் !
துளசிகோபால்
பிரம்மச்சாரி - அதே தான். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை - எப்படி இருந்தாலும் நம்பிக்கை தான் முக்கியம். பாபா பாலக் நாத் - ஹாஹா. நானும் பார்த்திருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசி டீச்சர்.