செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

கோயில் உலா - பாடல் பெற்ற ஸ்தலம் - மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர், சென்னை

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட  இயற்கை அன்னையின் மடியில் - சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் - தொடர்ச்சி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



இந்த முறை தமிழகம் வந்தபோது பயணத்தின் கடைசி இரு நாட்கள் சென்னையில் இருக்க வேண்டியிருந்தது. உங்களுக்கும் அறிமுகமான தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் மகள் திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்வுகள் சென்னையில் நடந்ததால் திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து அங்கே இரண்டு நாட்கள் தங்கி மகிழ்வான நிகழ்வுகளில் கலந்து கொண்டு பிறகு அங்கிருந்தே தலைநகர் தில்லி திரும்பினேன்.  சென்னையில் திருமண நிகழ்வுகள் நடந்த இடம் திருவான்மியூர் - அதுவும் பாடல் பெற்ற ஸ்தலமான மருந்தீஸ்வரர் திருக்கோயில் அருகே இருக்கும் கோயில் நிர்வாகத்தினரின் திருமண மண்டபம் என்பதால் பாடல் பெற்ற ஸ்தலத்திற்கும் சென்று ஸ்ரீ திருபுரசுந்தரி சமேத ஸ்ரீ மருதீஸ்வரரையும் தரிசிக்கும் பாக்கியம் அமைந்தது.  பாடல் பெற்ற ஸ்தலங்கள் அனைத்தையும் பார்க்க எண்ணமிருந்தாலும், அத்தனையும் பார்க்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதற்காகவே காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படியான வாய்ப்பு இப்போது கிடைத்ததும் இருகரம் நீட்டி வரவேற்று விட்டேன். 



திருமண வரவேற்பு மாலை ஆறரை மணிக்கு மேல் தான் என்பதால் மாலை ஐந்து மணிக்கு, கொல்கத்தாவிலிருந்து வந்திருந்த நண்பர் Majumdar தம்பதிகளையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று விட்டேன். அழகான கோயில். ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம் அமைந்திருக்கும் பிரதான வாயிலுக்குள் உள்ளே நுழைந்து நேரடியாக சுயம்பு லிங்கமாக இருக்கும் ஸ்ரீ மருந்தீஸ்வரரை மனமுருகி வேண்டிக்கொள்ள முடிந்தது. கோயில் திறந்த நேரம் என்பதால் சற்று மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது என்றாலும் நின்று நிதானமாக இறைவனை தரிசிக்க முடிந்தது. இறைவனை தரிசித்த பிறகு பிரதக்ஷிணமாக உலா வந்து ஸ்தலவிருக்ஷமான வன்னி மரத்தினையும், அதன் அடியில் இருக்கும் நாக தேவதைகளையும் தரிசித்து அம்பாள் சன்னிதிக்குச் சென்று அன்னை ஸ்ரீ திரிபுரசுந்தரியையும் வணங்கினோம். கோயில் குறித்த சில கதைகளையும், தல வரலாறு குறித்தும் பார்க்கலாம் வாருங்கள்.


வால்மீகி முனிவரும் மருந்தீஸ்வரர் கோயிலும்:


கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, மனம் திருந்திட எண்ணம் கொண்டு, நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து முக்திப் பேறு வேண்டி சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் இறைவன் காட்சி கொடுத்தார். இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன. அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார். இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த ஊர் ‘திருவான்மீகியூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘திருவான்மியூர்’ ஆனது. 


மேற்கு நோக்கி அருள்புரியும் மருந்தீஸ்வரர்:



ஒரு முறை அபயதீட்சிதர் என்ற பக்தர், இறைவனை தரிசிக்க வந்தாராம். அப்போது பெரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவிலுக்குள் அவரால் செல்ல முடியவில்லை. சுவாமிக்கு பின்புறம் இருந்ததால், இறைவனின் முதுகுப்பகுதியைத்தான் தரிசிக்க முடிந்தது. “இறைவா.. உன் முகம் காட்டு’ என்று அவர் மனவருத்ததுடன் வேண்டிக்கொண்டதன் பேரில், இறைவன் மேற்கு முகமாக திரும்பி தன் முக தரிசனத்தை பக்தர் அபயதீக்ஷிதருக்கு வழங்கினார் என்றும் இன்றும் அதனால் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் என்றும் இத்தலம் குறித்த ஒரு கதை இருக்கிறது.


அகத்தியருக்கு அருளிய மருந்தீஸ்வரர்:


கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு இத்தலத்தின் ஸ்தல விருக்ஷமான வன்னி மரத்தடியில் திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார்.


பால்வண்ணநாதர் - பெயர்க்காரணம்: 


சுயம்புலிங்கமாகிய மருந்தீஸ்வரருக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் போன்ற பெயர்களும் உண்டு.  பால்வண்ணநாதர் என்ற பெயருக்குக் காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது.  வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார்.  கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.



மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம், பாவங்களும் தீரும். வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால் முக்தி கிடைக்கும் போன்ற இக்கோயில் சார்ந்த நம்பிக்கைகளும் உண்டு.  சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.  தவிர இக்கோயிலில் ஐந்து இலைகள் கொண்ட, “மஹா வில்வம்” மரம் ஒன்றும் இருக்கிறது.  பஞ்ச பூதங்களுக்கான லிங்கங்கள் மற்றும் 108 லிங்கங்கள் ஒரே இடத்தில் அமைந்து இருந்ததும் சிறப்பாக இருந்தது. கோயில் வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்து இறைவனை மனமார தரிசித்து மன மகிழ்ச்சியுடன் வெளியே வந்தோம். 


பாடல் பெற்ற ஸ்தலங்களில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கும் இந்த மருந்தீஸ்வரர் தலம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மன நிறைவு.  தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே அருளட்டும். வேறு ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் குறித்த தகவல்களுடன் அடுத்த கோயில் உலா பதிவில் சந்திக்கிறேன். கோயில் வளாகத்தில் எங்களால் எந்த நிழற்படமும் எடுக்க முடியவில்லை. இணையத்திலிருந்து எடுத்த சில படங்களைச் சேர்த்திருக்கிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


16 கருத்துகள்:

  1. கோயில் படம் ஒன்று கூட இல்லாதது குறை.  நான் இந்தக் கோயில் சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயிலில் படம் எடுக்கவில்லை. இணையத்தில் தேடி இணைக்கிறேன். முடிந்தால் கோயிலுக்குச் சென்று வாருங்கள் - அமைதியான கோயில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பாண்டிச்சேரி செல்ல, பலமுறை இந்தக் கோவில் வாசல் வழியாக நடந்திருக்கிறேன். அவரசரகதியில், தரிசனம் செய்ய நுழையவேண்டும் எனத் தோன்றியதே இல்லை. நெரிசலுக்கு நடுவே தெரியும் கோவில் இது.

    பத்மநாபன் அண்ணாச்சி மகளுக்கு வாழ்த்தும், நல் வாழ்க்கை அமையப் ப்ரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் இருக்கும் சாலை பிரதான சாலை என்பதால் எப்போதும் வாகன நெரிசல். மற்றபடி கோயிலின் உள்ளே அமைதியாகவே இருந்தது நெல்லைத்தமிழன்.

      அண்ணாச்சியின் மகளை வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. என்னைப் பற்றி எண்ணும்போது, எப்படி கடவுள் செஸ் காயினைப்போல வாழ்விடங்களை, நிகழ்வுகளை வெவ்வேறு இடங்களில் நடக்குமாறு இடத்திலிருந்து பெயர்த்தெடுத்துவிடுகிறார் என நினைத்துக்கொள்வேன். நாரோயில் கார்ருக்கும், ஏன் மற்றவர்களுக்கும் அப்படித்தான் நிகழ்ந்துவிடுகிறது போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் செஸ் காயினைப் போல வாழ்விடங்களை, நிகழ்வுகளை வெவ்வேறு இடங்களில் நடக்குமாறு செய்துவிடுகிறார் என்ற சிந்தனை எனக்கும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. வாசகம் அருமை.

    உங்கள் நண்பர் மகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஸ்ரீ மருந்தீஸ்வரரை அடிக்கடி வணங்கி இருக்கிறோம்.
    தல வரலாறுகள் சிறப்பு. கோவில் படங்கள் எடுக்கவில்லையா இரண்டு படங்கள் சேர்த்து இருக்கலாம். கோபுர தரிசனம் செய்து இருப்போம்.
    மருந்திஸ்வரர் அனைவருக்கும் நோயற்ற வாழ்வை தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இணையத்திலிருந்து சில படங்கள் எடுத்து தற்போது பதிவில் சேர்த்திருக்கிறேன் கோமதிம்மா. மருந்தீஸ்வரர் அனைவருக்கும் நல்ல உடல் நலத்தினையும் ஆரோக்கியத்தையும் அருள எனது பிரார்த்தனைகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. ஆஹா! பப்பு அண்ணாச்சி மகளுக்குத் திருமணம்!! என்னால் இன்னும் அவரை இத்தனை வயது என்று நினைத்துப் பார்க்க முடியவே இல்லை! பப்பு அண்ணாச்சிகிட்ட சொல்லுங்க ஜி!!!ஹாஹாஹா.

    நான் சென்னையில் இருந்தவரை கோயிலின் அருகில் நெருங்கிய உறவினர் வீடும் ஏன் நானுமே கோயில் பகுதியில் இருந்ததால் அடிக்கடி சென்றுவிடுவதுண்டு. எனக்கு மிகவும் பிடித்த கோயில் நான் செல்வது சாலையில் இருக்கும் வாயில் இல்லாமல் மறுபுறம் இருக்கும் வாயில் வழியாகத்தான். அதாவது திருமணமண்டபம் இருக்கும் பகுதி.
    இக்கோயிலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து எழுதவே இல்லை. நீங்கள் எழுதியது மகிழ்ச்சி. வெங்கட்ஜி!

    கோயிலில் மிக அழகான தரிசனம் கிடைக்கும். கோசாலை , பிரதட்சிணத்தில் அழகான தோட்டம், எல்லாம். திரிபுரசுந்தரியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவு நம்மைக் கட்டிப் போட்டு இருப்பார். இதெல்லம்தான் நான் சென்னையில் I miss a lot! இப்போ.

    திருவான்மியூர் பகுதியில் தினம்தோறும் என்றே சொல்லலாம், சுற்றி வந்த பகுதி/ சென்னையில் பெரும்பாலான பகுதிகள் சுற்றியிருக்கிறேன். தனியாக எல்லாம் நான் செய்து கொண்டிருந்ததால் எல்லாவற்றிற்கும் நான் தான் செல்ல வேண்டி வரும் என்பதால். திருவான்மியூர் சந்தையில்தான் காய்கள் வாங்குவேன் ரொம்பப் பிடித்த சந்தை. அப்ப கோயிலுக்குச் செல்லாமல் செல்வதில்லை. அது போன்று திருவான்மியூர் கடற்கரைக்கும். படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன், காணொளிகளும்.

    நான் ஒவ்வொரு முறை செல்லும் போதும் கோயிலின் கோபுரம் எடுத்ததுண்டு. பகிர்ந்த நினைவு இருக்கு.

    வால்மீகி நகர் என்பதுதான் அங்கிருக்கும் குடியிருப்பு பெயர் வேறு குடியிருப்புகளும் உண்டு என்றாலும்...ஒவ்வொரு சாலையும் கடற்கரைக்குச் செல்லும் தெருக்கள் உட்பகுதி எல்லாமே அழகாக இருக்கும். உறவினர் வீட்டிலிருந்து இரு நிமிட நடையில் கடல். ரொம்பப் பிடித்த இடம். பெரும்பாலும் காலை நடைப்பயிற்சி கடற்கரை ஒரம்.

    துளசி சென்னைக்கு வந்த போதெல்லாம் மயிலை கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோயில் செல்லாமல் போக மாட்டார். அழைத்துச் செல்வேன்.

    உங்கள் பதிவு பல நினைவுகளைக் கொண்டு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோயில் உங்களுக்கு தெரிந்த கோயில் மற்றும் அடிக்கடி சென்று வந்த கோயில் என்பது அறிந்து மகிழ்ச்சி. எனக்கும் கோயில் மிகவும் பிடித்திருந்தது. உங்கள் அனுபவங்களையும் இங்கே விரிவாக பதிவு செய்தமைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தல வரலாறுகள், படங்கள் அனைத்தும் அருமை. கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன். காலையில் பதிவை பார்க்கும் போது பதிவில் படங்கள் ஏதுமில்லை. உடன் கருத்திட வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    இப்போது எங்களுக்காக இணையத்திலிருந்து சில படங்கள் திரட்டி தந்திருப்பதற்கு மிக்க நன்றி. அதனால் கோவில் தரிசனங்களை பெற வசதியாக இருந்தது. இந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்னையிலிருந்த போது ஒரிரு முறை சென்றுள்ளோம். ஆனால் அது அவ்வளவாக நினைவில் இல்லை. இப்போது கோவில் வரலாறுகள் பற்றி விரிவாக தெரிந்து கொண்டேன். ஸ்ரீ மருந்தீஸ்வரர் அனைவரின் நோய்களையும் குணப்படுத்தி அருள் புரிந்திட வேண்டிக் கொள்கிறேன்.

    நம் சகோதரரும், தங்கள் நண்பருமான பத்மநாபன் அவர்களின் மகளுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. அருமையான கோயில் பற்றிய தகவல்கள். இறைவனை வணங்கும் போதே மனதிற்கு மருந்தாகிவிடுவார். மருந்தீஸ்வரர். மிக்க நன்றி வெங்கட்ஜி. சென்னைக்குச் சென்ற போதெல்லாம் இக்கோயிலுக்கும், கபாலீஸ்வரர் கோயிலுக்கும் செல்லாமல் ஊர் திரும்பியதில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இக்கோயிலுக்குச் சென்றிருப்பது அறிந்து மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. மருந்தீஸ்வரர் கோவில் தரிசனம் பெற்றோம்.கோவில் வரலாறுகள் அறிந்தோம்.

    அனைவரும் நலமாக இருக்க மருந்தீஸ்வரர் அருளை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....