திங்கள், 5 பிப்ரவரி, 2024

டேராடூன் பயணம் - தில்லி திரும்புவதில் சிக்கல் - பயணத்தின் முடிவு - பகுதி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட வாசிப்பனுபவம் - உப்புக்கணக்கு - வித்யா சுப்ரமணியம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உங்களை நீங்கள் மனதார நேசித்தால் தான், பிறரை உங்களால் மனதார நேசிக்கமுடியும்.

 

*******

 



டேராடூன் பயணம் குறித்த தகவல்களையும் அனுபவங்களையும் இது வரை ஏழு பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இத்தொடரின் இதற்கு முந்தைய பகுதிகளை நீங்கள் இதுவரை படித்திருக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன். இணைப்பில் சொடுக்கி ஒவ்வொரு பகுதியாக படித்துவிடலாம்! 

 

டேராடூன் பயணம் - பகுதி ஒன்று - அடாது மழைபெய்தாலும்

 

டேராடூன் பயணம் - பகுதி இரண்டு - இயற்கையும் நாமும்

 

டேராடூன் பயணம் - பகுதி மூன்று - நீச்சல் குளம்

 

டேராடூன் பயணம் - பகுதி நான்கு - டப்கேஷ்வர் மந்திர் 

 

டேராடூன் பயணம் - பகுதி ஐந்து - ஸ்ரீ ப்ரகாஷேஷ்வர் மஹாதேவ் மந்திர்

 

டேராடூன் பயணம் - பகுதி ஆறு - Mindrolling Monastery, Dehradun

 

டேராடூன் பயணம் - பகுதி ஏழு - பார்க்க வேண்டிய இடங்கள்

 

அலுவலகப் பயணமாக இருந்தாலும் இந்தப் பயணத்தில் கிடைத்த ஒரே ஒரு நாளில் டேராடூன் நகரில் இருக்கும் சில இடங்களையேனும் பார்க்க முடிந்ததே என்ற எண்ணத்துடன் நானும் நண்பர்களும் டேராடூன் நகரின் விமான நிலையமான Jolly Grant விமான நிலையம் செல்லும் பாதையில் பயணித்தோம்.  வழியில் ஒரு சிறிய உணவகத்தில் மதியம் தாண்டி மூன்றரை மணிக்கு தான் மதிய உணவைச் சாப்பிட முடிந்தது. எங்கள் ஓட்டுநர் நிறுத்திய அந்த உணவகம் அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை - எங்களைத் தவிர வேறு யாருமே உணவகத்தில் இல்லை! ஆனால் அனைவருக்கும் பசி என்பதால் அடுத்த  உணவகம் தேடி செல்லும் மனநிலையில் யாருமே இல்லை. கிடைத்த உணவு வகைகளைச் சொல்லி காத்திருந்தோம்.  ஒவ்வொரு விஷயத்திற்கும் மீண்டும் மீண்டும் அழைத்துச் சொல்ல வேண்டியிருந்தது. ஒரு வழியாக மதிய உணவை முடித்துக் கொண்டு விமான நிலையம் சென்றடைந்தோம். மாலை 07.30 மணிக்கு புறப்படும் Indigo விமானத்தில் தான் எனக்காக முன்புதிவு செய்திருந்தார்கள் அலுவலகத்தில். மற்ற நண்பர்களுக்கு வேறு விமானம். ஆனால் என்னுடைய விமானத்தில்  எங்களது அலுவலகத்தினைச் சேர்ந்த வேறு சிலரும் இருந்தார்கள். 

 

சரியான நேரத்தில் பாதுகாப்பு சோதனைகள் முடித்து நுழைவாயில் வழி விமானத்திற்குள் சென்று அமர்ந்தாயிற்று.  ஆனால் சொன்ன நேரத்தில் விமானம் புறப்படும் வழியாக இல்லை.  விமானப் பணியாளர்கள் அங்கேயும் இங்கேயுமாகச் சென்று கொண்டே இருக்கிறார்கள்.  சில சிப்பந்திகள் வெளியிலிருந்து உள்ளே வருவதும் மீண்டும் போவதும் என தொடர்ந்து கொண்டே இருந்ததே தவிர எல்லாவித நடைமுறைகள் முடிந்து விமானத்தின் கதவுகள் சாற்றப்பட்டு புறப்படும் எனப் பார்த்தால் அதற்கான அறிகுறிகளே இல்லை.  புறப்பட வேண்டிய நேரம் கடந்து 15 நிமிடங்கள் ஆனபிறகு ஒரு அறிவிப்பு.  அதே Indigo குழுமத்தின் வேறு ஒரு விமானம் - ஜெய்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் சில சிக்கல்கள், பழுதுகள் என்பதால் அந்த விமானத்தில் இருக்கும் பயணிகளில் சிலரை எங்கள் விமானத்தில் தில்லி வரை அழைத்துச் சென்று பிறகு தில்லியிலிருந்து ஜெய்பூர் அனுப்பி வைக்கப்போவதாகவும் அதனால் எங்கள் விமானம் சிறிது தாமதம் ஆகிறது என்றும் அதற்காக வருந்துவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக இந்த மாதிரி விஷயங்கள் - அந்த விமானத்தின் பயணிகள் எங்கள் விமானத்தில் ஏறுவதும், இங்கே வந்த பிறகு கொடுக்கப்பட்ட இருக்கை சரியில்லை, நேரம் அதிகமாகிவிட்டது, கட்டணத்தினை திருப்பிக் கொடுங்கள் என்றெல்லாம் சண்டைகள்.  இவர்கள் சண்டையில் எங்களுக்கும் தாமதம் ஆகிக் கொண்டே போனதால், ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தில் அமர்ந்து கொண்டிருந்த சக பயணிகளில் சிலர் சண்டையை ஆரம்பித்தார்கள்.  அங்கும் இங்குமாக வார்த்தைகள் சில்லரையாகச் சிதறின. அதுவும் அதீத வேகத்திலும், வார்த்தைகள் தடித்தும் பார்க்கவே/கேட்கவே சகிக்கவில்லை.  ஒரு சிலர் நடந்து கொண்ட விதம் கேவலமாகவே இருந்தது. விமானத்தில் இருந்த பணியாளர்கள் தாங்களாகவே முடிவெடுக்க முடியாதவர்கள் - மேலே உள்ள அதிகாரிகள் சொல்லும் வழியில் நடப்பது அவர்களுக்கு வேலை என்பதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  அவர்களை சக பயணிகளில் சிலர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதும் நடந்தது.  

 

நிறைய நேரம் ஆகிவிட்டது என்பதால் எல்லா பயணிகளுக்கும் Indigo நிறுவனத்தின் சார்பாக ஒரு பையில் சிற்றுண்டி தரப்பட்டது.  அதை வைத்தும் சிலர் சண்டையிட ஆரம்பித்தார்கள் - “உங்களுடைய குறைகளை, அதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை, இப்படி ஒன்றுக்கும் பெறாத சிற்றுண்டி கொடுத்து தணிக்கலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறீர்களா? இந்த விஷயத்தினை நாங்கள் சும்மா விடப்போவதில்லை” என்று சந்தைக்கடை சண்டை போல தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்.  அங்கேயும் இங்கேயும் அழைப்புகள் பறந்து கொண்டே இருந்தது. அதில் சில பயணிகள் தங்களுக்குத் தெரிந்த பத்திரிக்கை நிருபர்களை அழைத்து உடனடியாக இந்தச் செய்தியை, Indigo நிறுவனத்தின் குறைபாடுகளை பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு வழியாக ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் புறப்பட்டது.  ஒன்று மட்டும் நிச்சயம் - இந்த காலகட்டத்தில் பலரும் பொறுமை இல்லாமல் இருப்பதை நன்கு உணர முடிந்தது. மொத்த பயண நேரமே இருபத்தி ஐந்து நிமிடங்களுக்கு குறைவு தான். ஆனால் இப்படியான சிக்கல்கள் ஏற்படும் நேரத்தில் அதிக நேரம் ஆகிவிடுகிறது. ஒரு வழியாக தில்லியின் விமான நிலையத்தில் இறங்கியது விமானம்.  அதிக அளவில் பிரச்சனைகள் இருந்த பயணமாக இந்த விமானப் பயணம் அமைந்ததில் அனைவருக்குமே வருத்தம் தான். 

 

விமானத்தில் அதிக அளவு சண்டைகளும் சச்சரவுகளும் இருந்த சமயம், பலரும் அவற்றை காணொளிகளாக தங்கள் அலைபேசி மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். இறங்கும் சமயத்தில் விமான பணிப்பெண்கள் ஒவ்வொருவரிடமும் “தயவு கூர்ந்து காணொளிகள் எடுத்திருந்தால் அவற்றை அழித்து விடுங்கள், Social Media-வில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.  அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை.  பலரும் எடுத்து இருந்தார்கள் என்றாலும் அவை வெளியானதா என்பது தெரியவில்லை. அடுத்த நாள் நாளிதழிலோ, இணையத்திலோ இது குறித்த செய்திகள் என் கண்ணுக்கு புலப்படவில்லை. இப்போது இந்த நிறுவனத்தின் பயணங்களில் இப்படியான விஷயங்கள் அடிக்கடி நடக்கிறது.  சமீபத்தில் கூட ஒரு நிகழ்வு மிகவும் பேசப்பட்டது நீங்கள் அறிந்திருக்கலாம். எப்படியோ, நன்கு ஆரம்பித்த ஒரு பயணம் முடியும் சமயத்தில் சில பிரச்சனைகளை, அதன் மூலம் சில அனுபவங்களை எனக்கும் சக பயணிகளுக்கும் தந்தது.  தற்போதைய விமானப் பயணங்கள் குறித்த மேலும் சில தகவல்களை தனிப்பதிவாக எழுத நினைத்திருக்கிறேன்.  முடிந்தால் விரைவில் எழுதுகிறேன். 

 

எனது டேராடூன் பயணம் குறித்த சில தகவல்களையும் அனுபவங்களையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.  நடுவில் நீண்ட இடைவெளி விட்டு விட நேர்ந்ததற்கு வருந்துகிறேன். விரைவில் வேறு ஒரு பயணத்தொடர் வழி உங்களைச் சந்திக்கிறேன். இந்தப் பயணத்தொடர் குறித்த உங்கள் எண்ணங்களை முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

திருவரங்கத்திலிருந்து…

20 கருத்துகள்:

  1. அன்பின் வெங்கட், என்றும் நலமுடன் இருக்கப்
    பிரார்த்தனைகள்.
    உங்களின் பயணங்கள் பற்றிய பதிவுகள் இன்னும் படிக்கவில்லை.
    இண்டிகோ விமானத்தில் இவ்வளவு பிரச்சினையா:(

    நீங்களும், ஆதியும், ரோஷ்ணியும் நலமுடன் இருக்கப்
    பிரார்த்தனைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி. நல்லதே நடக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  2. ஆமாம்.  சமீபத்தில் கூட விமான ஓடுபாதையில் வைத்து பயணிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது தொடர்பாக சில கண்டனங்கள் இருந்தது படித்த நினைவு இருக்கிறது. 
     
    அந்நேரத்தில் பொறுமையாக இருந்த நீங்கள் பொறுமைசாலிதான்.  ஏதோ. ஒன்றரை மணி நேரத்திலாவது புறப்பட்டதே என்று தோன்றி இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடுகளத்தில் உணவு வழங்கியது, விமானியைத் தாக்கிய நிகழ்வு என தொடர்ந்து பல சர்ச்சைகள் வந்த வண்ணமே இருக்கின்றன. இப்போது இருக்கும் விமான நிறுவனங்களில் பெரியதாக இருக்கிறது என்றாலும் இப்படி நிறைய பிரச்சனைகளில் மாட்டுகிறார்கள்.

      பல இடங்களில் பொறுமை தேவையான விஷயமாக இருக்கிறது. நாட்டு நடப்பு அப்படி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. விமானச் சண்டைகள்.... சகிக்க முடியாதவைதான். ஏதோ எல்லா இடங்களிலும் எல்லாம் பர்ஃபக்டாக இருப்பதுபோல தேவையில்லாத இடங்களில் ஏதிலிகளிடம் சண்டை போட்டு கெத்து காண்பிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடங்களிலும் இப்படி சண்டை - அடுத்தவர்களை புண்படுத்தும், மனம் நோகடிக்கச்செய்யும் வார்த்தைகள் இப்படித்தான் நிறையவே இருக்கிறது இங்கே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. அங்கிருந்து தில்லி புறப்பட்ட விமான பயணம் சற்று சிக்கலாக முடிந்தது வருத்தந்தான். ஆனால் சுலபமான அரைமணி நேரப்பயணத்திற்கு மேலும் ஒன்றரைமணி நேரம் கூடுதலாக கால அவகாசம் எடுத்து கொள்ள நேர்ந்தது பயணிகள் அனைவருக்கும் பெரிய விஷயம்தான். இதில் வேறு என்ன செய்வதென பொறுமை காத்து நீங்களும், (உங்களைப்போல சிலரும் இருந்திருப்பார்கள்.) அமைதியாக இருந்திருக்கிறீர்கள். உங்களின் பொறுமைக்கு பாராட்டுக்கள்.

    விரைவில் தங்களின் வேறு பயண கட்டுரைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். எழுதுங்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      கடைசியில் விமானத்தில் சிக்கல்கள் இருந்தாலும், அலுவலகப் பணிகளின் சிரமங்கள்/தொல்லைகள் இருந்தாலும், கிடைத்த ஒரு நாளில் சில இடங்களையேனும் பார்க்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நிர்மலா ரெங்கராஜன்5 பிப்ரவரி, 2024 அன்று 11:13 AM

    டேராடூன் பயணம் அலுவலக பயணமாக இருந்தாலும் வித்தியாசமான சில இடங்களை பார்த்தது பற்றியும் எழுதி இருந்தது பயனுள்ள தகவல்களாக இருந்தன.
    எதிர்பாராத அனுபவங்களும் கூட....
    பயணம் குறித்த பதிவு மொத்தத்தில் அருமை👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பார்த்த இடங்களைக் குறித்து உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிர்மலா ரெங்கராஜன் ஜி.

      நீக்கு
  6. ஒன்றாய் இருக்க கத்துக்கனும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. "வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம், அந்த நாலும் தெரிந்து நடந்து கிட்டால் நல்லா இருக்கலாம்.''
    ரயில் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு இடத்தில் நிற்கும் . ஒரே கூச்சலும் குழப்பமாக இருக்கும் அப்போது ஸ்டேஷன் மாஸ்டர் பாடல் அது.

    உங்கள் விமான பயணமும் அதுபோல தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதம் ஆகி இருக்கிறது. பொறுமையும், நம்பிக்கையும் இப்போது குறைந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்// பாடல் எடுத்துக்காட்டு சிறப்பு.

      //பொறுமையும் நம்பிக்கையும் இப்போது குறைந்து வருகிறது// நிதர்சனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. பயணிகள் விமான நிலைய அனுபவத்தை ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது விமான கம்பெனிகளுக்கு சங்கடமான விடயமே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான காணொளிகள் வெளிவந்தால் அவர்கள் நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து விடும் என்பது மட்டுமல்லாமல் விமான நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கும் பிரச்சனை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. Jolly grant வித்தியாசமான பெயர். தாமதித்தல், பயணிகளை மாற்றுதல் இல்லை என்றால் ரத்து செய்தல் என்பது பயணிகள் குறைவதால் கூட இருக்கலாம் . இப்போது இப்படி நடப்பது இயல்பாகி விட்டது என்றே தோன்றுகிறது. ஆனால் இது பொதுவாக நடப்பது என்பதால் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை. நீங்கள் செய்தது போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் நல்லது. எதிர்பாராமல் நிறைய நடக்க நேரிடலாம்

    பொதுவாகவே மக்களிடம் பொறுமையும் சகிக்கும் குணமும் மறைந்து வருகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jolly Grant - வித்தியாசமான பெயர் தான். ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் கூர்க்காக்களை வென்று இப்பகுதியை ஆள ஆரம்பித்த சமயம் பல இடங்களை, உள்ளூர் மக்களிடமிருந்து பெற்றார்கள் - அப்படி பெற்றவை Grant என்ற பெயர் உடன் இருக்கின்றன - Jeoli (Jolly) Grant, Arcadia Grant, Markham Grant, karbari grant என இப்போதும் சில இடங்கள் உண்டு. அந்த இடங்களில் பெரும்பாலும் தேநீர் தோட்டங்களாக, farm house போன்றவை அமைக்கப்பட்டன. அப்படி இருந்த Jolly Grant பகுதியில் அமைக்கப்பட்ட விமான நிலையத்திற்கு அதே பெயரை வைத்து விட்டார்கள். Dehradun Airport என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர் இந்த விமான நிலையத்திற்கு அடல் பீஹாரி வாஜ்பாயீ அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானமும் மாநில அரசால் நிறைவேற்றப்பட்டது.

      பதிவு குறித்த உங்கள் கருத்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி. பதிவில் சேர்க்க வேண்டிய சில தகவல்கள் உங்களுக்கு பதிலாக தந்திருக்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  9. Indigo விமானங்கள்தான் இப்போது அதிகமாகப் பறக்கின்றன என்று நினைக்கிறேன். தாமதமாவதும் சற்றுக் கூடுதலாகி இருப்பதாகத் தெரிகிறது. சில குறைபாடுகள் வெளியில் பேசப்படுகின்றன. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ நமக்குத் தெரியாதே.

    சில பொது நிகழ்வுகளை குறிப்பாகச் சர்ச்சைகள் போன்றவற்றைக் காணொளி எடுத்துப் போடாமல் இருப்பது நல்லது நீங்கள் சொல்லியிருப்பது போல். இப்படியான தருணங்களில் அமைதி காப்பதுதான் நல்லது நீங்கள் செய்திருப்பது போல்.

    எப்படியோ விமானப்பயணம் கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் கடைசி தினம் சில இடங்களைப் பார்க்க முடிந்ததே! நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - இப்போது இருக்கும் பயணியர் விமான நிறுவனங்களில் இவர்கள் தான் அதிக அளவில் விமானங்களை இயக்குகிறார்கள்.

      பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதில் சண்டையிடுவதில் பயன் இல்லை. பொறுமை இப்போது பலருக்கும் இல்லை. கிலோ என்ன விலை என்ற அளவில் தான் இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. 'இந்த காலகட்டத்தில் பலரும் பொறுமை இல்லாமல் இருப்பது ""...... சரியாக சொன்னீர்கள் இத்துடன் ஒருவரையும் மதிக்காத தன்மையும் இருப்பதை காணலாம் .காலத்தின் மாற்றத்தில் இதுவும் சேர்ந்து கொண்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....