அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அகல்யா - பாலகுமாரன் - ஒரு நூல் - இரு வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இத்தொடரில் இதுவரை பதினோரு பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.
இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று
இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு
இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று
கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு
லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து
லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு
லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு
லான்ஸ்(d)டௌன் - தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில் - பகுதி எட்டு
லான்ஸ்(d)டௌன் - இயற்கையுடன் ஒன்றிய தங்குமிடம் - பகுதி ஒன்பது
லான்ஸ்(d)டௌன் - புலிகள் நடமாட்டம் - பகுதி பத்து
லான்ஸ்(d)டௌன் - நயார் ஆற்றங்கரையில்
சென்ற பகுதியில் சொன்னது போல, தங்குமிடத்திலிருந்து புறப்படும்போது, தங்குமிட உரிமையாளர் சொன்ன ஒரு தகவல் எங்கள் பயணத்தில் சிறு குழப்பத்தை உண்டுபண்ணியது. எங்கள் தங்குமிடத்திலிருந்து (சத்புலி) அலக்நந்தா நதியும், பாகீரதி நதியும் சங்கமித்து, கங்கை என்ற பெயருடன் பயணிக்க ஆரம்பிக்கும் இடமான தேவ் ப்ரயாக் நகரம் சுமார் 45 கிலோமீட்டர் தான் என்ற தகவல் தான் அந்த குழப்பத்திற்குக் காரணம். ஒன்றரை மணி நேர பயணத்தில் தேவ் ப்ரயாக் சென்று அங்கே இறை தரிசனம் முடிக்கலாம். ஒரு நாள் தேவ் ப்ரயாக்/ரிஷிகேஷ்/ஹரித்வார் ஆகிய மூன்றில் ஒரு இடத்தில் தங்க வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால் எங்கள் பயணத்திற்கான நாட்கள் இரண்டிலிருந்து மூன்றாகும். பயணத்தின் மூன்றாம் நாள் ரிஷிகேஷ், ஹரித்வார் வழி தில்லி திரும்பலாம். எங்கள் குழுவில் நானும் இன்னுமொரு நண்பரும் ஏற்கனவே தேவ் ப்ரயாக் சென்று இருக்கிறோம். மற்றவர்கள் சென்றதில்லை என்பதால் அங்கே செல்லலாம் என சிலர் விரும்பினார்கள். இல்லை முன்னர் திட்டமிட்டபடியே தில்லி திரும்பிவிடலாம். இல்லை எனில் சற்றே பயணத்திட்டத்தினை மாற்றி கொஞ்சம் வழியை மாற்றி அஸ்தினாபுரம் சென்று அங்கே உள்ள இடங்களை பார்த்து திரும்பலாம் என்றெல்லாம் யோசனைகளும் திட்டங்களும் எங்களுக்குள் இருந்தன.
சரி ஒரு நாள் பயணத்தில் அதிகம் ஆனால் பிரச்சனையில்லை, தேவ் ப்ரயாக்/ரிஷிகேஷ்/ஹரித்வார் நகரில் தங்குவதற்கும் சுலபமாக இடம் கிடைத்துவிடும் என்றாலும், எங்கள் மாறுபட்ட பயணத்திட்டத்திற்கு ஓட்டுநர் அனில் திவாரியும் எங்கள் பயணத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்தவரும் ஒப்புக்கொள்ள வேண்டுமே என்பதால் அவரிடம் பேசினோம். அவர் வாகன உரிமையாளரிடம் பேசி விட்டு மீண்டும் அழைப்பதாகச் சொல்ல, காத்திருந்தோம். அவரிடமிருந்து அழைப்பு வந்தது - பயணத்தினை நீட்டிக்க முடியாது - அடுத்த நாள் ஏற்கனவே வண்டி வேறு ஒரு பயணத்திற்கு முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்ற தகவலுடன்! அன்றே திரும்ப வேண்டும் என்பதால் ஓட்டுநருடன் பேசியதில் அஸ்தினாபுரம் சென்று இடங்களைப் பார்த்து விட்டு புறப்பட்டாலும் இரவுக்குள் தில்லி திரும்பிவிடலாம் என்று தெரிய அப்படியே செய்யலாம் என முடிவு செய்தோம். திட்டமிட்டபடி பயணம் செய்யாமல் அப்போதைக்கப்போது பயணத்தில் மாற்றம் செய்வது குழுவாக பயணிக்கும் போது சாத்தியமில்லை என்பதும் மனதில் வந்து போனது.
தங்குமிடத்திலிருந்து தங்குமிட உரிமையாளருக்கு நன்றி சொல்லி புறப்பட்டோம். காலை உணவு எங்கே சாப்பிடலாம் என்ற எண்ணத்துடன் பயணம் தொடங்கியது. பயணிக்கும் சமயம் மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் சில தனித்துவமான பொருட்கள் குறித்தும் பார்க்கலாம். பொதுவாகவே உத்திராகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதிகளில் விளையும் சில பருப்பு வகைகள் விற்பனை செய்வதை பார்க்க முடியும். எங்கள் பயணத்திலும் மலைப்பகுதிகளில் பயணிக்கும்போது சாலையோரங்களில் தற்காலிகமாக கடைகள் போட்டு அங்கே கிடைக்கும் பருப்புவகைகள், உலர் பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்வார்கள். இந்த இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால் சாலையில் பயணிப்பவர்கள் தங்கள் வாகனங்களை இப்படியான கடைகள் அருகே நிறுத்தி, பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். இப்படியான நிறைய கடைகள் நாங்கள் பயணிக்கும் வழியிலும் இருந்தன.
அப்படியான ஒரு கடையில் எங்கள் வாகனமும் நின்றது. (Pahari)பஹாடி (dh)தால் என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படும் கருப்பு உளுந்து, கொள்ளு, தட்டைப் பயிறு, மிகச் சிறிய கடுகு, உலர் பழங்கள் என பல பொருட்கள் அங்கே விற்பனைக்கு இருந்தன. பல பருப்புவகைகளை கலந்து, மிக்ஸ் (dh)தால் என்றும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். பொதுவாக இப்படியான மிக்ஸ் (dh)தால் வாங்கி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சப்ஜியாகச் செய்வது இங்கே உள்ளவர்களுக்கு வழக்கம். விலையும் குறைவாகவே இருந்தது என்று அங்கே பார்த்த சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவினரும் அந்தக் கடையில் அவரவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்கள். பொதுவாக தனியனான எனக்கு இப்படி மொத்தத்தில் (dh)தால் வாங்கி வைத்துக் கொண்டால் அதிகம் செலவாகாது என்பதால் வாங்கிக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அங்கே பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, நான் அங்கே இயற்கை எழிலை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். தேவையானவர்கள், தேவையானவற்றை வாங்கிக் கொண்ட பிறகு எங்கள் வாகனம் புறப்பட்டது.
புறப்பட்ட எங்கள் வாகனம் அடுத்ததாக நின்றது காலை உணவு உண்பதற்காகத்தான். சாலையோர உணவகம் ஒன்று, தேவதாரு மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் பார்க்கவே அழகாக இருக்க, அங்கே எங்கள் வாகனம் நின்றது. சிறிய உணவகம் தான் என்றாலும், தேவதாரு மரங்களைப் பார்த்தவுடன் அங்கேயே உணவு உட்கொள்ளலாம் என முடிவு செய்தோம். பொதுவாகவே வடக்கிந்தியாவில் காலை உணவு எனில் ஏதோ ஒரு பராட்டா, பிரெட் டோஸ்ட், ஆம்லேட் போன்றவை தான். நம் ஊர் போல, இட்லி, வடை, தோசை, பொங்கல், உப்புமா என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அது போல பராட்டா செய்வதும் கோதுமை மாவு தான். அல்லது கம்பு, கேழ்வரகு, கோதுமை என சில பொருட்களைச் சேர்த்து அரைக்கும் மாவு கொண்டு பராட்டா தயாரிப்பார்கள். இந்த உணவகத்திலும் அப்படியே நிறைய விதமான பராட்டாக்கள் இருந்தன. அவரவர்களுக்குத் தேவையானவற்றைச் சொல்லி விட்டு, அவை தயாராவதற்குள் தேவதாரு மரங்கள் அடர்ந்த அப்பகுதியில் சில பல நிழற்படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம்.
பொதுவாக இது போன்ற சிறு உணவகங்களில், வருகின்ற வாடிக்கையாளர்களைப் பார்த்தபிறகே உணவு தயாரிப்பார்கள். பயிறு வகைகள் மட்டும் வேகவைத்து இருப்பார்கள். மற்றவை தயாரிப்பது வாடிக்கையாளர்களை பார்த்த பிறகு தான். இங்கே தயாரிக்கும் எல்லா உணவுப் பொருட்களுமே நல்ல சுவையோடு இருக்கும். இரண்டு பேராக துரிதமாக எங்களுக்கான உணவை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே அவர்கள் தயாரிக்கும் இடத்திற்கே சென்று அவர்கள் பராட்டா தயாரிக்கும் லாவகத்தினை பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கே பார்த்த தக்காளிகள் மிகவும் சிறிய வகை தக்காளிகள். போலவே பப்பாளி போன்றவையும் பார்த்தோம். சிறிய வகை தக்காளிகளில் ஒன்றிரண்டு எடுத்து சுவைத்தும் பார்த்தோம். இயற்கைச் சூழலில் விளைந்த அந்த தக்காளிகளின் சுவையும் நன்றாகவே இருந்தது. அங்கே தனியா, புதினா, தக்காளி போன்ற 16 பொருட்கள் கலந்து தயாரித்த பச்சை சட்னி மிகமிகச் சுவையாக இருந்தது. தேவையான பாராட்டாக்கள் தயாராக ஆக, குழுவினர்கள் ஒவ்வொருவருமாக சாப்பிட ஆரம்பித்தார்கள். ஓட்டுநரும் அங்கேயே சாப்பிட்டு விட்டார். பராட்டா சாப்பிட்டு தேநீர் அருந்துவதும் இங்கே உள்ளவர்களுக்கு வாடிக்கை. நாங்கள் அனைவரும் சாப்பிட்டு, சிலர் தேநீர் அருந்திய பிறகு இன்னும் கொஞ்சம் நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம். பதினோரு பேர் காலை உணவு சாப்பிட எங்களுக்கு ஆன தொகை ரூபாய் ஆயிரம் மட்டுமே!
காலை உணவிற்குப் பிறகு புறப்பட்ட எங்கள் வாகனம் கொஞ்சம் கொஞ்சமாக மலைப்பிரதேசனைத்தினை விட்டு இறங்க ஆரம்பித்தது. மலைப்பிரதேசங்களில் இருக்கும் ஒரு பிரச்சனை - மலைச்சரிவுகள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் எங்கள் பயணத்திற்கு சில நாட்கள் முன்னர் அப்படி ஒரு மலைச்சரிவு ஏற்பட்டு இருந்தது என்பதால் வழியில் அதிக அளவு வாகன நெரிசல் இருந்தது. அப்படியான வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டு வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. எங்கள் வாகனமும் அப்படியே வந்து கொண்டிருந்தது. அப்படியான பயணத்தில், உத்திராகண்ட் மாநில எல்லையைத் தாண்டுவதற்கு முன்னர் ஒரு சிறு பிரச்சனை உருவானது. அது என்ன பிரச்சனை, அந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி வெளிவந்தோம், அதன் தாக்கம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் வரும் பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
மீண்டும் தேவப்பிரயாகை, ரிஷிகேஷ், ஹரித்வார் செல்ல முடியாத்து ஏமாற்றமே.
பதிலளிநீக்குஆங்காங்கே சுடச் சுட உணவு கிடைத்துவிடுவது மகிழ்ச்சி. வட இந்தியாவில் பணிபுரிபவர்கள் எளிதாக அவர்கள் டைப் உணவுக்கு மாறிவிடுகிறார்கள். ஓய்வு பெற்றபிறகும் அந்த உணவையே கடைபிடிப்பார்களா?
தேவப்பிரயாகை செல்ல முடியாததில் வருத்தம் உண்டு. இந்த வருடம் மீண்டும் ஒரு முறை அங்கே பயணித்து ஐந்து பிரயாகைகளையும் பார்க்க நினைத்திருக்கிறேன் - அவன் மனசு வைக்க வேண்டும்!
நீக்குவட இந்திய உணவுக்கு மாறிவிடுவது - ஆமாம். எங்கே இருக்கிறோமோ அந்த இடத்தில் கிடைக்கும் உணவுக்கு மாறுவது நல்லது. தமிழகம் திரும்பியபின்னர் இப்படி வட இந்திய உணவு சாப்பிட முடியுமா - முடியாது - நம் ஊர் திரும்பியதும் நம் ஊர் உணவு தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
முஸாஃபிர்களுக்கு சஃபர் மீத்தா அனுபவம்தான்! உங்கள் கபர் மூலமும் தஸ்வீரேன் மூலமும் ஹம் பீ எல்லாவற்றையும் மஜா கர் தியா...! அவுர் குஷ் ஹோகயா... ஹிஹிஹி... சரியா வந்திருக்கா வெங்கட்!
பதிலளிநீக்குஆஹா... ஹிந்தியில் மறுமொழி - நல்ல முயற்சி! மஜா கர் தியா - மஜா லே லியா! நடுநடுவே வரும் தமிழை தவிர்த்திருக்கலாம். ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
சிறப்பான குறிப்புகளுடன் இனிய பதிவு..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குவாசகம் அருமை. இயற்கை அழகை அள்ளி தந்த படங்கள் அருமை.
பதிலளிநீக்குமலைச்சரிவு பயம் தான். வைஷ்ணவி செல்லும் போதும், கைலை செல்லும் போதும் மலைசரிவுகளை சந்தித்தோம். அருவி போல ஓடி வரும்.
மலைசரிவு இங்கு இருக்கும் கவனம் என்று எல்லாம் எச்சரிக்கை பலகைகள் இருக்கும்.
இறைவன் அருளால் கடந்து போக வேண்டும்.
உணவு விவரங்கள், படங்கள் எல்லாம் அருமை.
வாசகம், படங்கள், பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்கள் எண்ணங்களையும், உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குஇயற்கை காட்சிகள், சாலை ஓர கடைகள் , தேவதாஸ் மரங்கள் என படங்கள் கண்டோம். சிறிய தக்காளியும் அழகாக உள்ளது.
பதிலளிநீக்குஅடுத்து வந்த பிரச்சனை வாகனத்திலா? அத்தினாபுரம் சென்றீர்களா?, என அறிய வருகிறோம்.
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.
நீக்குபெரும்பாலும் நாம் தீர்மானம் எடுத்து ஓரிடத்திற்குப் போய் அதன் பின் அங்கிருந்து அப்போதைய தீர்மானத்திற்காக மாற்றிப் போவது என்பது பெரும்பாலும் நடப்பதும் சிரமம். நடத்தினாலும் அதில் இடையூறுகள் வர வாய்ப்பு கூடுதல் அதுவும் இப்படிக் குழுவாகச் செல்லும் போது. நாம் தனித்து என்றால் பிரச்சனைகள் அவ்வளவு இருக்காதுதான்.
பதிலளிநீக்குஅங்கு கிடைக்கும் லோக்கல் பருப்பு வகைகள், காய்கள் சுவை, சிறிய தக்காளி, உணவகம், சாப்பிட்ட உணவு எல்லாம் பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பு பயன் தரும்.
பயணக் குறிப்புகள் மிகவும் அருமை
துளசிதரன்
பதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி துளசிதரன் ஜி.
நீக்குவெங்கட்ஜி நீங்கள் தேவதாரு மரப் பகுதியில் கையில் வைத்திருப்பது பைன் மர பூக்கொண்டை போல இருக்கிறது. எங்கள் வீட்டில் நான் வைத்திருந்தேன் பூ ஜாடியில். இப்ப எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டேன்.
பதிலளிநீக்குஅப்போ பைன் தேவதாரு இரண்டும் ஒன்றேவா?
கீதா
பைன், தேவதாரு - எல்லாம் ஒரே வகை தான்.
நீக்குபூக்கொண்டை - அழகான வார்த்தை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
படங்கள் சூப்பர். மலையும் சாலையும்...மலைச்சரிவு என்று போட்டிருக்கும் படமும்.
பதிலளிநீக்குநாட்டுத்தக்காளி மலைத்தக்காளி சுவையா இருக்கும். மலையில் விளைபவை ரொம்பச் சுவையாக இருக்கும். நீங்க சொல்லியிருக்கும் பராத்தாவும், சட்னியும் ஆஹா....நான் drooling!
பயணத்திட்டம் மாறும் போது குழுவாகச் செல்லும் போது சில சமயம் பிரச்சனை ஆகலாம். ஆனால் அது நம் நேரம் ஓட்டுநரின் ஒத்துழைப்பு கூட வருபவர்களின் ஆர்வம் பொருத்து.
பருப்பு களும் அப்பகுதிகளில் விளைபவை சூப்பரா இருக்கும். என்ன பிரச்சனை எழுந்தது...அது எப்படிச் சரியாச்சு அத்தினாபுரம் போக முடிந்ததா...எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
கீதா
பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குசுவாரஸ்யமான தகவல்கள் ஜி.
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
உத்தரகாண்ட் எல்லைப் பிரச்சனை அறிய ஆவல்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
இயற்கை வனப்புகள் மிகுந்த படங்கள் மிக நன்றாக உள்ளது. மலைப் பகுதிகளும் அதிலேயே ஓடும் சாலைகளான படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது அதில் தைரியமாக வீடுகள் அமைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அங்கிருந்து திரும்பும் போது சாலைகளில் வியாபாரத்துக்கு வைத்திருந்த பொருட்களுடன் தரம் பார்வைக்கு நன்றாக உள்ளது. குட்டி தக்காளி, பப்பாளிக்காய் எல்லாமே பசுமையாகவும் நன்றாகவும் உள்ளது. சுவைகளும் நன்றாக இருந்திருக்கும்.
பத்து பேருக்கு மேல் சாப்பாட்டு செலவு ஆயிரம் ரூபாய்தான் என்பது வியப்புக்குரிய விஷயம். மலைப்பகுதி என்பதால் இது சாத்தியமாகி உள்ளது போலவும்..! சாதாரணமாக நம் ஊர்களில் எல்லாம் ஒரு உணவகத்தில், நான்கு, ஐந்து பேர் என்றாலே ஆயிரத்திற்கும் மேலாகி விடுகிறது.
அந்த மலைச்சரிவு ஆபத்துகளை கடந்து அதன் பின் அத்தினாபுரம் சென்றீர்களா? வேறு என்ன பிரச்சனைகள் வந்தது என்பதை அறிய பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரையை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.