அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
ரோஷ்ணி கார்னர் - பிள்ளையார் ஓவியம் - 18 மார்ச் 2024:
சற்றே இடைவெளிக்குப் பிறகு மகளின் கைவண்ணமாக ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு!
*******
பால் கதை - 23 மார்ச் 2024:
எல்லாரும் வேலை எளிதானதாக மாறிவிட்டால் சந்தோஷப்படுவாங்க!! ஆனால் நான்!!!...🙂 இதை படித்து முடித்ததும் இப்படியெல்லாம் கூட இருக்கு பாரு!! என்று தான் சொல்லப் போகிறீர்கள்...🙂
டெல்லி வாழ்க்கையில் கறந்த பால் அதுவும் எருமைப்பால் தான் வாங்கிக் கொண்டிருந்தோம். அந்தப் பாலின் தரமே வேறு! மடியில் இருக்கும் முடி, வைக்கோலுடன் தான் வரும்! வடிகட்டி தான் வாங்குவேன்! திக்கான ஏடுடன் அருமையாக இருக்கும்! அங்கு அரைலிட்டர் எல்லாம் கொண்டு வந்து தரமாட்டார்கள் என்பதால் அன்று முதல் இருவராக இருந்தாலும் 1 லி தான் வாங்குவது வழக்கம்! பணம் வாங்கவும் கெடுபிடியே கிடையாது! காசு வாங்கிக் கொள்ளவே வரமாட்டார்கள்! நாம் தான் பார்த்து கொடுக்க வேண்டும்!
நம்ம ஊர் ஆவினைப் போல அங்கு Mother Dairy! அங்கும் பால்தூக்குடன் சென்று டோக்கன் போட்டு வெண்டிங் மிஷினிலும் வாங்கி வந்திருக்கிறேன். அரைலிட்டருக்கு 50பைசா நாணயம் போல் டோக்கன் இருக்கும்! அந்தப் பாலை Toned milk என்பார்கள்! ஏடெல்லாம் வராது! ஆனால் திக்காக இருக்கும்! அதை சோயா பால் என்றும் சொல்வதுண்டு! அதன் சுவை வித்தியாசமாக இருக்கும்!
இங்கு திருவரங்க வாழ்வில் ஆவின் பச்சை பாக்கெட்! சுவையிலும் தரத்திலும் எந்த வேறுபாடும் இருக்காது! எல்லாவற்றுக்கும் அந்தப் பால் தான்! டெல்லியிலும் சரி! இங்கும் சரி! வீட்டில் வாங்கும் பாலில் இருந்து தான் வெண்ணெய், நெய், பனீர், இனிப்புகள் என்று எல்லாவற்றையும் செய்து வருகிறேன்!
இப்போது இந்தப் பதிவு எதற்கு என்றால் எந்தக் காரணத்தினாலோ அந்த பச்சை பாக்கெட்டை நிறுத்தி விட்டு ஆவின் டிலைட் என்ற பெயரில் புதிதாக அறிமுகம் செய்திருக்கிறார்கள்! அது எப்படியிருக்கிறது என்றால் டெல்லியில் வாங்கிய Toned milkஐ போல இருக்கிறது!
இணையத்தில் தேடிப் படித்ததில் இதில் விட்டமின் A, விட்டமின் D இரண்டும் சேர்த்திருப்பதாக தெரிந்து கொண்டேன்! இப்போது 100க்கு 80 பேர் விட்டமின் D குறைப்பாட்டினால் தான் அவதிப்படுகிறார்களாம்! இந்தப் பாலின் சுவையில் பெரிதாக மாற்றம் தெரியவில்லை ஆனால் ஏடெல்லாம் இல்லாமல் வெண்ணெய், நெய், பனீரெல்லாம் எப்படி எடுப்பது??
ஒருவிதத்தில் வெண்ணெய், பனீர் தயாரிக்கிற வேலை மிச்சம் என்று நினைக்கலாம்! ஆனால் இத்தனை வருடங்களில் இப்படியே பழகிவிட்டேன்! வெளியிலிருந்து பெரும்பாலும் இவற்றையெல்லாம் வாங்கினதே இல்லை! எப்போதும் நமக்கு நாமே திட்டம் தான்...🙂 என்னவோ போல இருக்கிறது...🙂
*******
பாரத் அரிசி - 24 மார்ச் 2024:
'பசங்களுக்கு தெம்பு கிடைக்கணும்' என்று எங்களுக்கு சிறுவயது முதலே புழுங்கலரிசி சாப்பிட வைத்து பழக்கினார் அப்பா! இல்லையென்றால் எங்கள் வீடுகளில் பச்சரிசி தான்! கோவையில் பெரிய கடைத்தெருவில் உள்ள மன்னார்சாமி அரிசிக் கடையில் சொல்லி விட்டால் வீட்டிற்கு மூட்டை அனுப்பி விடுவார்கள்! அப்போது கிலோ 25க்கு வாங்கிய நினைவு! உதிரி உதிரியாக மெத்தென்ற பக்குவத்தில் அருமையாக இருக்கும்!
மூட்டையைப் பிரித்ததும் 'வளர்ற கை! அன்னபூரணிக்கு என்னிக்கும் குறைவிருக்கக் கூடாதுன்னு மனசுல பகவான பிரார்த்தனை பண்ணிண்டு உன் கையால மூணு தடவை அள்ளி அரிசி ட்ரம்ல போடுடா செல்லம்!' என்பார் அப்பா! நானும் என் பிஞ்சு கைகளால் அள்ளிப் போடுவேன்!
அப்பா திருச்சியில் வசித்த போது கூட மண்ணச்சநல்லூர் அரிசி பிரபலம் என்று அங்கேயிருந்து புழுங்கலரிசி வாங்கி வந்து சமைக்கச் சொன்னார்!
திருமணமான பின்பு டெல்லி சென்றதும் மீண்டும் பச்சரிசியுடன் பயணம் துவங்கியது! பர்மல், ஆந்திரா பொன்னி என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்! இப்போது கூட என்னவரிடம் புழுங்கலரிசி என்றால் கொட்ட கொட்டையா இருக்கும் என்று தான் சொல்வார்..🙂 திருவரங்க வாழ்விலும் கர்நாடகா பொன்னி பச்சரிசியுடன் பயணிக்கிறது!
சரி! திடீரென எதற்கு அரிசிப் புராணம்??
நேற்றைய பொழுதில் வாசலில் மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்திருக்கும் 'பாரத் அரிசி' விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது! கிலோ 29 தான்! நான் இப்போது வாங்கிக் கொண்டிருக்கும் கர்நாடகா பொன்னி பச்சரிசி கிலோ 60 ஆச்சே!
சரி எப்படியிருக்கும் என்று கொஞ்சமாக வாங்கிப் பார்க்கலாமே என்று மகளிடம் சொல்லி 1 கி அல்லது 5கி பாக்கெட் கிடைத்தால் வாங்கி வரச் சொல்லியிருந்தேன்! 10கி பை மட்டும் தான் இருப்பதாக வந்துவிட்டாள்! 10கி வாங்கி நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் ஒரு பை வாங்கி வந்திருந்தார்கள்!
இதுல இருந்து கொஞ்சம் எடுத்து வடிச்சுப் பாரு புவனா! நல்லா இருந்தா அடுத்த தடவை வரும் போது வாங்கிக்கோயேன்! என்று அவர்கள் சொல்லவும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து வடித்து பார்த்தேன்! நன்றாக தான் இருக்கிறது! 1:2 1/2 என்று தண்ணீர் விட்டேன்! உதிரியாக தான் வருகிறது! உங்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் வாங்கி உபயோகிக்கலாம்!
பின் குறிப்பு: அதன் பிறகு இந்த அரிசியில் அரிசி உப்புமாவும் செய்து பார்த்தேன் நன்றாகவே இருந்தது.
*******
இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
சுவையான கதம்பம் சிறப்பாக உள்ளது
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குபதிவுகள் வருவதில் நேர வித்தியாசம் இருக்கிறது. முன்னெல்லாம் புதுப் பதிவு காலை ஐந்து மணிக்கு வரும்.
பதிலளிநீக்குபதிவுகளை என்னவர் தான் பதிவிடுகிறார். அவரின் நேரமின்மை தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது சார்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
பதிவுகள் வருவதில் நேர வித்தியாசம் இருக்கிறது. முன்னெல்லாம் புதுப் பதிவு காலை ஐந்து மணிக்கு வரும்.
பதிலளிநீக்குஅப்போ கிலோ 25ஆ? இன்னும் குறைவாக இல்லையா?
பதிலளிநீக்குநம் கண் முன்னே, நமக்குத் தெரியாமல் அரிசி விலை ஏறுகிறது. 40-45 இருந்த சோனா மசூரி 60ஐத் தாண்டிவிட்டது. நான் எப்போதும் 60க்கு வாங்கிய கோலம் அரிசி இப்போ 70ஐத் தாண்டிவிட்டது. 32ரூ இருந்த தோசைப் பச்சரிசி 42க்கைம், 35ல் கிடைத்த இட்லி புழுங்கரிசி 48க்கு மேலேயும் இந்த நான்கு வருடத்தில் மாறிவிட்டது.
29ரூ அரிசி உரியவர்களைச் சேரணும். முன்பு ரேஷன் விலையில்ஙா அரிசி கையேந்தி பவன்களுக்குப் கோனதுபோல ஆகிவிடக் கூடாது.
60ரூ அரிசிக்கும் உதுக்கும் சொல்லுமளவு வித்தியாசம் உண்டா?
பிள்ளையார் பட கார்ப்பெட் அருமை
ஆவின் பால்.... சொல்லி உபயோகமில்லை. ஊழலினால் எல்லாவற்றிலும் தரம் குறைகிறது.
கோவையில் விலைவாசி அதிகம் சார். அப்போது 25க்கு தான் வாங்கிக் கொண்டிருந்தோம். நன்றாக நினைவில் இருக்கு.
நீக்குஇங்கேயும் ஜனவரி முதல் அரிசி விலை ஏறி விட்டது. 60 ரூ அரிசிக்கு மூன்று தண்ணீர் விடுகிறேன். இதற்கு 2 1/2...மோசமில்லை!
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதம்ப பதிவு அருமை. தங்கள் மகளின் கைவண்ணத்தில் பிள்ளையார் நன்றாக உள்ளார். முக அமைப்பு அழகாக வந்துள்ளது. தங்கள் மகள் ரோஷிணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பால் பாக்கெட்டுகள் இப்போது விதவிதமாக வருகிறது. இங்கு நந்தினயிலேயே மூன்று விதமான பாககெட்டுக்கள் அது போக காய்ச்சாமலேயே நீண்ட நாட்கள் வைத்து உபயோகபடுத்தும் பாக்கெட் பால் .அதுவும் நந்தினிதான்.. தங்கள் ஊர் பால் நன்றாக இருக்குமென அவ்வூரில் உள்ள உறவுகளும் சொல்லியுள்ளார்எள் .
29 ரூ அரிசி நல்ல விலைதான். இங்கு நாங்களும் கோலம் அரிசிதான் வாங்குகிறோம். வந்த புதிதில், 40க்கு இருந்த அரிசியின் விலை70க்கு மேல் ஆகிவிட்டது. படங்கள் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகளின் ஓவியத்தை பாராட்டியது குறித்து மகிழ்ச்சி ஜி.
நீக்குஅரிசி விலை எல்லா இடத்திலுமே ஏறிவிட்டது. இந்த அரிசி பரவாயில்லை! கலந்து உபயோகிக்கலாம்!
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.
ரோஷ்ணி ஓவியம் அருமை.
பதிலளிநீக்குபால் புராணம் முகநூலில் படித்த நினைவு இருக்கிறது.
பாரத் அரிசி பற்றி அறிய நினைத்திருந்தேன். நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். புழுங்கல் அரிசி, பச்சை அரிசி இரண்டுமே கிடைக்கிறதா?
இரண்டுமே கிடைக்கிறதா என்று தெரியவில்லை சார். நான் உபயோகித்தது பச்சரிசி தான். நன்றாக தான் இருக்கிறது.அடுத்த முறை வந்தால் 10கி வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குமுகநூலில் படித்தேன். ரோஷ்ணி வரைந்த பிள்ளையார் ஓவியம் அருமை.
பால், அரிசி பற்றி சொன்னது அருமை ஆதி.
முகநூலிலும் வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி அம்மா.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
ரோஷிணி ஓவியம் அழகு.
பதிலளிநீக்குஅரிசி பற்றி கூறியுள்ளீர்கள். எமக்கு புழுங்கல்தான். அதுவும் கேரள அரிசிபோல சிவப்பு பிடிக்கும்.
சம்பா, பொன்னி, பசுபதியும் இடையிடை உண்ணும்.
பால் இங்கும் பக்கற்கிடைக்கும்.
.மில்க்போட்பால் வீட்டிற்கு வருகிறது பாத்திரத்தில் வாங்குகிறோம்.