அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இத்தொடரில் இதுவரை பதிமூன்று பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டிகள் வழி படித்துவிடலாம். படித்துப் பாருங்களேன்.
இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று
இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு
இயற்கை அன்னையின் மடியில் - காலை உணவு - பகுதி மூன்று
கரும்புத் தோட்டங்களும் வெல்லமும் - பகுதி நான்கு
லான்ஸ்(d)டௌன் - தங்குமிடங்கள் - பகுதி ஐந்து
லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஆறு
லான்ஸ்(d)டௌன் - பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி ஏழு
லான்ஸ்(d)டௌன் - தாட(ர)கேஷ்வர் மஹாதேவ் கோயில் - பகுதி எட்டு
லான்ஸ்(d)டௌன் - இயற்கையுடன் ஒன்றிய தங்குமிடம் - பகுதி ஒன்பது
லான்ஸ்(d)டௌன் - புலிகள் நடமாட்டம் - பகுதி பத்து
லான்ஸ்(d)டௌன் - நயார் ஆற்றங்கரையில்
லான்ஸ்(d)டௌன் - குழப்பமும் காலை உணவும்
லான்ஸ்(d)டௌன் - ஒரு விபத்தும் ஓட்டுநரின் கோபமும்
இத்தொடரின் பன்னிரெண்டாம் பகுதியில் அடுத்து எங்கே செல்வது என்ற குழப்பம் இருந்தது என்று சொல்லியிருந்தேன். நாங்கள் எடுத்த முடிவு, உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் தேவ் பிரயாக் செல்லாமல், தில்லி செல்லும் வழியிலிருந்து சற்றே விலகி, உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் ஹஸ்தினாபுரம் செல்வது என்பது தான். உத்திரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் இருக்கும் ஹஸ்தினாபுரம் இந்துக்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் இருவருக்குமே புனிதமான இடம். இரண்டு மதத்தினரும் இந்த ஊரில் இருக்கும் புனிதத் தலங்களை தரிசிக்க வருகிறார்கள். அதிலும் உத்திரப் பிரதேசத்திலுள்ள இந்துக்கள் ஹஸ்தினாபுரத்திற்கு வருடா வருடம் ஒரு சில பண்டிகைகள் நடக்கும்போது வண்டி கட்டிக்கொண்டு (முன்பு! இப்போது இயந்திர மயமான வாகனங்கள்) வந்து தங்கி இங்கே கங்கையில் நீராடி இங்கே இருக்கும் கோயில்களில் இறைவனை தரிசித்து வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அப்படி ஒரு பண்டிகை நாங்கள் ஹஸ்தினாபுரத்திற்கு பயணம் செய்த அன்றும் இருந்தது - அந்தப் பண்டிகை - கார்த்திக் பூர்ணிமா! எண்ணிலடங்கா மக்கள் பல ஊர்களிலிருந்தும் தங்களது வாகனங்களில் - எருதுகள் பூட்டிய வண்டியிலிருந்து இயந்திரங்கள் பூட்டிய வண்டி வரை - குடும்பத்துடன், கிராமத்தினருடன் இங்கே வந்து தங்கி கங்கையில் நீராடி, ஹஸ்தினாபுரத்திலிருக்கும் புண்ணிய க்ஷேத்திரங்கள் அனைத்திலும் தரிசனம் செய்து கொண்டு வீடு திரும்புகிறார்கள். அது போன்ற சமயங்களில் சாலை ஓரங்கள் எங்கும் இப்படி வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதோடு, அதன் அருகிலேயே சிறு கூரைகள் போல அமைத்து அங்கேயே இரவு தங்கவும் செய்கிறார்கள். நாங்கள் சென்ற சமயம் நவம்பர் மாத கடைசி - நல்ல குளிர் ஆரம்பித்து இருந்தது - என்றாலும் அந்தக் குளிரிலும் குழந்தைகள், பெரியவர்கள் என பலரையும் அழைத்துக் கொண்டு திருவிழாவில் பங்கேற்க வந்திருந்தார்கள் என்பதைப் பார்க்கும்போதே வியப்பாக இருந்தது. தட்பவெப்பம் சரியாக இருந்தால் பரவாயில்லை - அதீத குளிரில் எந்தவித தங்கும் வசதியும் இல்லாமல் குடும்பத்தினருடன் வெட்ட வெளியில் மேலே ஒரு துணியைக் கட்டி, கீழே ஒரு துணியை விரித்து அங்கே படுத்துக் கொள்வது என்பது நம்மில் பலராலும் நினைத்துப் பார்க்கவே முடியாது. நம்மை இப்படித் தங்கச் சொன்னால் தங்குவோமா என்று கேட்டால் நம்மில் பலருடைய பதிலும் முடியாது என்பதாகவே இருக்கும்!
இப்படியான மக்கள் அலையலையாக திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் - மக்கள் அலையைத் தவிர சாலையோரக் கடைகளும் அவற்றிலிருந்து ஒலிக்கும் பலவித பாடல்களின் ஓசையும் நம்மை பிரமிக்க வைக்கும் விதமாக இருந்தது. ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே அந்த கூட்டம் மிகுந்த சாலையில் எங்கள் வாகனத்தில் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். அதற்கு மேல் வாகனத்தில் செல்வது என்பது முடியாத இடத்தில், எங்கள் வாகனத்தினை ஓரமாக நிறுத்தி வைத்தார் ஓட்டுநர் அனில் திவாரி. அந்த இடத்திலிருந்து நாங்கள் பார்க்க விரும்பிய சில கோயில்களுக்கு பேட்டரி ரிக்ஷா கிடைக்கும் என்றும் சொல்லி இருந்தார் ஓட்டுநர் திவாரி. எங்கள் குழுவில் இருந்த சிலருக்கு மட்டுமே பேட்டரி ரிக்ஷா கிடைக்க அவர்களை எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம் எனச் சொல்லி முன்னே அனுப்பினோம். எங்களில் சிலருக்கு பேட்டரி ரிக்ஷா கிடைக்கவில்லை என்பதால் சற்றே நடந்தோம். பக்கத்தில் இருந்த ஒரு ஜெயின் வழிபாட்டுத்தலத்திற்குச் சென்ற போது மணி ஆறு! அந்த இடத்திற்கு உள்ளே செல்ல அனுமதி ஆறு மணி வரை தானாம்! அந்த இடம் என்ன, இன்னும் என்னென்ன வழிபாட்டுத் தலங்கள் இங்கே இருக்கின்றன என்பதை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
ஹஸ்தினாபுரம் என்றதுமே பாண்டவர்களும், கௌரவர்களும், மஹாபாரத கதாபாத்திரங்களும் நம் நினைவுக்கு வருவது நிச்சயம். கௌரவர்களும், போரில் வெற்றி பெற்ற பிறகு பாண்டவர்களும் இந்த ஹஸ்தினாபுரத்திலிருந்து தான் ஆட்சி புரிந்தார்கள் என்றெல்லாம் நாம் பல கதைகளில் கேட்டும், படித்தும் இருக்கிறோம். ஹஸ்தினாபுரம் அன்றைக்கு எப்படி செல்வ செழிப்போடு இருந்ததோ, இன்றைக்கு கௌரவர்கள்/பாண்டவர்கள் ஆண்ட சுவடுகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். சின்னச் சின்னதாய் ஒன்றிரண்டு கோயில்கள் மட்டும் இங்கே இருக்கின்றன என்றாலும், பழமையை இங்கே பாதுகாக்கத் தவறிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். கங்கையின் சீற்றத்தால் பேரழிவு கண்டு ஹஸ்தினாபுரம் நகரமே காணாமல் போனது என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ, இன்றைக்கு அங்கே பாண்டவர்கள்/கௌரவர்கள் ஆண்டதற்கு சாட்சியாக இருப்பது மிகவும் குறைவான சாட்சியங்களே. Archeological Society of India (ASI) இங்கே சில அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு மஹாபாரதக் காலத்துச் சின்னங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். மஹாபாரதக் காலத்துச் சின்னங்கள் இன்றைக்கு வரை நிலைத்திருக்க வாய்ப்பும் குறைவு என்றாலும் இருந்த இடங்களையேனும் பாதுக்காத்து இருக்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை. இங்கே இருக்கும் கோயில்களில் சிலவற்றை குறித்து இங்கே பார்க்கலாம்.
கர்ணன் கோயில், ஹஸ்தினாபுரம்:
தானத்தில் சிறந்த கர்ணன் அமைத்த கோயில் ஒன்று இந்தப் பகுதியில் இருக்கிறது - கோயிலுக்குள் இருப்பது சிவலிங்கம் என்றாலும், கோயில் கர்ணன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கோயிலில் இருக்கும் சிவலிங்கம் கர்ணன் வைத்த, வழிபட்ட சிவலிங்கம் என்றும் இந்த இடத்திலிருந்து தான் பல தான தர்மங்களை தானப் பிரபுவான கர்ணன் செய்தான் என்றும் இங்கே நம்பிக்கை. பிரம்மனுக்கு தனது கவச குண்டலத்தினையும் இதே இடத்தில் தான் கொடுத்ததாகவும் நம்பிக்கை. இந்தக் கோயிலுக்கு அருகிலேயே லோகமாதாவின் கோயில் இருந்ததாகவும் அந்தக் கோயிலில் குடிகொண்டிருந்த லோகமாதா கர்ணனுக்கு தங்கத்தினை வழங்கியதாகவும் அந்தத் தங்கத்தினை ஒவ்வொரு நாளும் கர்ணன் கோயிலிருந்து தானம் செய்ததாகவும் சொல்கிறார்கள். அதுவும் ஒவ்வொரு நாளும் சவா மன் (सवा मन) எனும் அளவில் தங்கத்தினை தானம் செய்தானாம். ஒரு மன் என்பது நாற்பது கிலோ. சவா என்றால் ஒன்றே கால்! அதாவது ஒவ்வொரு நாளும் சவா மன் - அதாவது ஐம்பது கிலோ தங்கத்தினை கர்ணன் தானம் செய்ததாகச் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் கங்கை நதி இந்தக் கோயில் அருகே ஓடியதாகவும் பின்னர் திசை மாறி இங்கே ஒரு சிற்றோடை மட்டுமே இருப்பதாகவும், இந்தச் சிற்றோடையை Bபூதி கங்கா என்றும் அழைக்கிறார்கள்.
பாண்டேஷ்வர் மஹாதேவ் மந்திர், ஹஸ்தினாபுரம்:
பாண்டவர்கள் தங்கள் கைகளால் பூஜித்த ஒரு சிவலிங்கம், ஷம்பு என்று பிரியமாக அழைக்கப்படும் சிவலிங்கம் தற்போதும் இங்கே இருக்கிறது. அந்த லிங்கம் இருக்கும் கோயில் பாண்டேஷ்வர் மஹாதேவ் மந்திர் என்ற பெயரில் தற்போது இருக்கிறது. பாண்டவர்கள் காலத்தில் இருந்த மாளிகைகள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மண்ணுக்குள் மண்ணாக புதைந்து போய்விட்டது. இப்போதும் இந்தக் கோயில் தவிர மற்ற அனைத்தும் பூமிக்குள் புதைந்து இருக்கின்றது என்றும், அங்கே ஒரு சிறிய குன்று போல இருக்கும் இடம் அவ்வப்போது அகழ்வாராய்ச்சி செய்யப்படுகிறது என்றும் தெரிகிறது. பாண்டவர்கள் காலத்திற்குப் பிறகு எத்தனை தான் முயற்சி செய்தாலும் ஏதோ ஒரு சாபத்தின் காரணமாக இந்த ஊரில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படுவது இல்லை என்றும் சில கதைகள் உலவுகின்றன. தற்போது இருக்கும் கோயில் கூட ஜுணா அகாடா என்கிற பிரிவினரால் பராமரிக்கப்படுகிறது என்றாலும் பெரிதான அளவில் புனரமைக்கவோ, கும்பாபிஷேகம் செய்யவோ ASI அனுமதிப்பதில்லை என்பதும் அகாடாவைச் சேர்ந்தவர்களுடைய வருத்தம்.
பாண்டவர்கள் தாங்கள் விரும்பியதெல்லாம் கிடைக்க, இந்த இடத்தில் இருக்கும் பாண்டேஷ்வர் மஹாதேவை பிரார்த்தனை செய்தார்கள் என்றும், இன்றைக்கும் சிரத்தையுடன் பூஜைகள் செய்து தமக்குத் தேவையானவற்றை சிவபெருமானிடம் கேட்டால் கேட்டது கிடைக்கும் என்பது இங்கே உள்ளவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. தவிர, த்ரௌபதி பூஜித்த சிவலிங்கம் என்றும் சிலர் சொல்லும் ஒரு லிங்கம் - மிகவும் பழமையான லிங்கம் ஒன்றும் இங்கே உண்டு. பாண்டவர்கள் காலத்திய கோயில், மாளிகைகள் என பல விஷயங்கள் இங்கே இருந்திருக்கும் சுவடு கூட இப்போது இல்லை என்பது வருத்தமான விஷயம். மண்ணுக்குள் மண்ணாகப் போன பல கட்டிடங்கள், அதற்கான சுவடுகள் ஆராய்ச்சி செய்யப்பட்டால் பல விஷயங்கள் நமக்குத் தெரியவரும் என்றாலும் சற்றேறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த எல்லா விஷயங்களும் இன்றைக்கும் இருக்குமா என்பது சந்தேகமே! ஆனாலும் அரசுத் துறை அவ்வப்போது சில முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இந்தப் பகுதி முழுவதுமே ASI கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதும் மேலதிகத் தகவல். சரி பாண்டவர்கள் காலத்து விஷயம் தான் இப்படி என்றால், வேறு என்ன தான் இங்கே இருக்கிறது? அது குறித்த தகவல்களை வரும் பகுதிகளில் சொல்கிறேன்.
அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
திரௌபதி பூஜித்த சிவலிங்கம் கரைந்து ஓடி விட்ட மாதிரி தோற்றத்தில் இருக்கிறது! முக்கியமான இடம் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை.
பதிலளிநீக்குமிகவும் பழமையான லிங்கம் என்பதால் தேய்மானம் நிறையவே இருக்கிறது என்று தோன்றுகிறது ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மிக முக்கியமான இடத்திற்குச் சென்றிருக்கிறீர்கள். இந்திரப் பிரஸ்தா என்பது தற்போதைய தில்லிப் பகுதி என்று படித்திருக்கிறேன். ஹஸ்தினாபுரம், தேவப்பிரயாகையை ஏற்கனவே பார்த்திருப்பதால், மிக முக்கியமான பயணம் என்று தோன்றிற்று
பதிலளிநீக்குஇன்றைய தில்லி தான் அன்றைய இந்திரப்பிரஸ்தா! இன்றைக்கும் தில்லியின் யமுனைக் கரை அருகே இருக்கும் சில இடங்கள் இந்திரப்பிரஸ்தா என்றே அழைக்கப்படுகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.
முகலாயர் வரலாற்றைப் படிக்கும்போது, தில்லியின் பல பகுதிகளில் நடந்த போர்கள் கொடுமைகள், வணிகம் , பிரமுகர்கள் இருந்த பகுதி எனப் பலதும் வரும். நானூறு ஐந்நூறு வருடங்களுக்குள் பழைய வரலாற்று இடங்களைத் தேடுவதே கடினம். குதுப்மினாரிலேயே இருபத்து நான்கு கோவில்கள் இருந்த இடத்தை அழித்துக் கட்டப்பட்டது என்று குறிப்பு இருக்கிறதாம்.
பதிலளிநீக்குஐந்நூறு வருடப் பழமையே மறைந்துவிட்டபோது ஐயாயிரம் வருடப் பழமையை எப்படிக் கண்டுபிடிப்பது?
Bபூதி கங்கா படம் எடுக்கலையா?
ஐயாயிரம் வருடப் பழமையைக் கண்டுபிடிப்பது கடினம் தான். அறிவியல் முன்னேற்றங்கள் இருக்கும் இந்தக் காலத்தில் முயற்சியெடுக்கலாம் என்றே தோன்றுகிறது.
நீக்கு//Bபூதி கங்கா படம் எடுக்கலையா?// இல்லை. நாங்கள் அங்கே சென்ற சமயம் மாலை - இருட்டி விட்டது - அதனால் அவ்விடங்களுக்குச் சென்று பார்க்க முடியவில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பயணப் பதிவு அருமை. வாசகமும் அருமை.
பாண்டவர்கள் வாழ்ந்து அரசாட்சி செய்த ஹஸ்தினாபுரத்தின் வரலாறும், அங்கிருக்கும் இடங்களைப் பற்றிய தகவல்களையும் பற்றி படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.
காணொளிகளில் மக்கள் எவ்வளவு பரபரப்பாக செல்கிறார்கள் என்பதையும், தெருவோர கடைகளின் ஆக்கிரமிப்பையையும் கண்டேன்.
கர்ணன் கோவில், பாண்டவர்களின் மகாதேவ் மந்திர் அனைத்தையும் பற்றிய செய்திகள் அருமை. படித்து தெரிந்து கொண்டேன். திரௌபதி பூஜித்த பழமையான சிவலிங்கத்தையும் மற்றும், கர்ணன், பாண்டவர்கள் பூஜித்து வழிபட்ட சிவலிங்கத்தையும் தரிசனம் செய்ய வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. பயணத்தில் தொடர்கிறேன். பகிர்வனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஇன்றைய பதிவும் வாசகமும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.
காணொளிகள், தகவல்கள் என இங்கே பகிர்ந்த விஷயங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி.
கோயில் படங்களும் விளக்கங்களும் அருமை.
பதிலளிநீக்குகாணொளி கண்டேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குஹஸ்தினாபுரம் பயணம் அருமையாக இருக்கிறது. விவரங்கள், கடைத்தெரு, காணொளிகள் அருமை.
பதிலளிநீக்குபாண்டவர்கள் பூஜித்த லிங்கம் அனைத்தையும் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.
சிவபெருமானிடம் கேட்டால் கேட்டது கிடைக்கும் என்பது இங்கே உள்ளவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. //
மகா சிவன் ராத்திரி வரும் சமயம் சிவன் தரிசனம் அருமை, நன்றி.
பதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குஅகழ்வாராய்ச்சி செய்து ஏதேனும் கண்டுபிடிக்க முயல வேண்டும். அந்த சுயம்பு லிங்கம் தான் பழமையான ஓரிடம் என்பதற்கு சான்று போல் தோன்றுகிறது, ஹஸ்தினாபுரம் பற்றிய நல்ல தகவல்கள். பயணத்தில் ஓட்டுனரால் கொஞ்சம் மனம் சங்கடப்பட்டாலும் பயணத்தின் இப்பகுதி நன்றாகிவிட்டது,
பதிலளிநீக்குதுளசிதரன்
அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சில தகவல்கள் கிடைத்தாலும் பல தகவல்கள் வேண்டுமெனில் இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
அஸ்தினாபுரம் என்றதுமே தில்லி இந்திரப்பிரஸ்தம் என்று சொல்லப்படுவது நினைவுக்கு வருகிறது. அதே போன்று காபூல் அஃப்கானிஸ்தான் பகுதிகள் காந்தாரம் சகுனியின் பகுதி என்பதும்.
பதிலளிநீக்குபயண விவரங்கள் எல்லாம் மிக அருமை. நல்ல தகவல்கள் படங்களுடன். காணொளிகளும் ரசித்தேன் அதுவும் அங்கும் மிங்கும் அலைபாயும் அலைபேசி!!!! ஹாஹாஹா ....காட்சிகளை, கடைகளை ரசித்தேன்.
வாசகம் அருமை
கீதா
பயண விவரங்கள், வாசகம் என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஹஸ்தினாபுரத்தின் வரலாறும், அங்கிருக்கும் இடங்களின் தகவல்களும் அருமை.
பதிலளிநீக்குகர்ணன் கோவில், பாண்டவர் கோவில் வணங்கிய லிங்கங்கள் என அனைத்தையும் எமக்குக் காணத் தந்ததற்கு நன்றி. படங்கள் நன்றாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்கு