சனி, 30 மார்ச், 2024

காஃபி வித் கிட்டு - 188 - என்ன பயன் - மழை - [kh]குர்பாதால் - ஜரகண்டி - வரிசை - உடல் - எங்கே இறங்குவீர்கள்?


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காசி தமிழ் சங்கமம் - சில தகவல்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Amazing word TRUST. it's just one word but it takes one second to read, one minute to think, one hour to explain, but one whole life to prove.

******


இந்த வாரத்தின் ரசித்த தகவல் பதாகை : என்ன பயன்?


ஹைதையில் சாலையோரத்தில் வைத்திருப்பதாகத் தெரியும் தகவல் பதாகை ஒன்று!




”நச்” என்று பொட்டில் அடித்தாற்போல தகவல் சொல்லும் பதாகை. புரிய வேண்டுபவர்களுக்குப் புரிந்தால் சரி! எத்தனை சொன்னாலும் கேட்காமல் நகரை அசுத்தம் செய்யும் மனிதர்கள் நம் நாட்டில் நிறையவே தான் இருக்கிறார்கள்!


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : மழை


ஒரு சின்னஞ்சிறிய விளம்பரம் - ஆனால் சொல்ல வரும் விஷயம் மிகப் பெரியது! மழையில் நனைவது பெரிய ஆனந்தம் தான். ஆனாலும் மழையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு கூரை எவ்வளவு அவசியம்… மனதைத் தொடும் விளம்பரம் - பாருங்களேன்!


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழேயுள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


Heart touching one........New face of Commercial ad......GEOROOF (youtube.com)


******


பழைய நினைப்புடா பேராண்டி : நைனிதால் – [kh]குர்பாதால்


2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - நைனிதால் – [kh]குர்பாதால் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


சில அடிகள் நடந்தால் சில மரங்களும், மரங்களின் ஊடே பார்த்தால் ஒரு சிறிய ஊரும் தெரிகிறது. அந்த ஊரின் பெயர் குர்பாதால் [khurpa tal]. இந்த தொடரின் முதல் பகுதியில் சொன்னது போல தால் என்ற ஹிந்தி சொல்லிற்கு ஏரி என்ற பெயர். நைனிதால் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிறையவே சின்னச் சின்ன ஏரிகள். அப்படி ஒரு ஏரி தான் குர்பா தால். மேலிருந்து பார்க்கும்போது குதிரைக் குளம்பு போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த ஏரிக்கும் அது இருக்கும் சிறு கிராமத்திற்கும் குர்பாதால் என்று பெயர் எனச் சிலர் சொல்கிறார்கள். 


ஹிந்தி மொழியில் குர்பா என்றால் சிறிய மண்வெட்டி! இந்த குர்பா தால் நைனிதால் நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. முன்பு இங்கே நிறைய இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் நடந்ததாகவும், அவையெல்லாம் இப்போது குறைந்து காய்கறித் தோட்டங்கள் அதிக அளவில் வந்து விட்டதாகவும் ஓட்டுனர் சொல்லிக் கொண்டிருந்தார். மிக அழகிய கிராமம் என்று சொன்னாலும் நாங்கள் மேலேயிருந்து அதன் அழகினைப் பார்த்ததோடு சரி. தனிமை விரும்பிகள் மற்றும் இயற்கை விரும்பிகள் அங்கே சென்று கிராமிய சூழலில் இருக்கலாம்!


மேலே இருந்து பார்த்தபோது அவ்வளவு அழகான சூழலாக இருந்தது. அங்கே ஒரு மரம். ஆரம்பிக்கும்போதே நான்கு கிளைகளோடு இருப்பது போல தோன்றியது. அந்த கிளைகளைப் பிடித்துக்கொண்டு சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். சில மணித்துளிகள் அங்கிருந்தோம். அவ்விடத்தினை விட்டு நகர மனதில்லை. இருந்தாலும் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே என்பதால் வெளியே வந்தோம். 


முழு தகவல்களும் படிக்க, மேலே உள்ள சுட்டி வழி பதிவினைப் படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் பாடல் : ஜரகண்டி…


சமீபத்தில் ஒரு பாடல் கேட்க/பார்க்க நேர்ந்தது. ஷங்கர் அவர்களின் புதிய படமாம்! பெயர் Game Changer. தெலுகு நடிகரான ராம் சரண் நடிக்கிறார்.  நடன இயக்குனர் பிரபு தேவா.  பாடல் கேட்டுப் பாருங்களேன்!  எனக்கென்னமோ ரண்டக்க ரண்டக்க பாடல் பார்ப்பது போலவே ஒரு எண்ணம்! 🙂


மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


Jaragandi - Lyrical | Game Changer (Tamil) | Ram Charan | Kiara Advani | Shankar | Thaman S (youtube.com)


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை:  வரிசை



முகநூலில் விமலன் எனும் நண்பர். முன்பு வலைப்பூவிலும் எழுதிக் கொண்டிருந்தவர் தான்.  அவரது எழுத்து எனக்கும் பிடித்த எழுத்து! அதைவிட அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் என்னை மிகவும் பிரமிக்க வைக்கும் (மாதிரிக்கு ஒன்று மேலே!).  ஒவ்வொரு பதிவுக்கும் அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அப்படி இருக்கும்! இந்த வாரம் அவரது கவிதை ஒன்று இங்கே ரசித்த கவிதையாக!  



வரிசை காட்டி ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றன எறும்புகள் நான்கு.

முதலாய் சென்ற கருப்பெறும்பை சுரண்டிய சிவப்பெறும்பு சொல்கிறது ரகசியமாய்,,,,!

பின் தொடர்கிற ஜோடி நம்மைப்போல் அன்பும் பிரியமும்,நட்பும் தோழமையும் 

காதலும்,உறவும் கொண்டு அந்நியோன்யம் காப்பவர்கள் இல்லை போலும்.

இந்நிலப்பரப்பின் நீட்சியில் இந்நேரத்தில்  நாமிருவர் போல் அந்நியோன்யர் யாருமில்லைதான் என்ற சிவப்பெறும்பிடம் சொல்கிறது கறுப்பெறும்பு.

அமைதி காப்பவர்களும் ஆர்ப்பாட்டம் பண்ணத் தெரியாதவர்களும் 

அந்நியோன்யம் கொள்ளாதவர்களோ அதற்கு லாயக்கற்றவர்களோ இல்லை.

சொல்லப்போனால் நம்மை விட அந்நியோன்யத்தில் அதிகம் தேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களுடைய அந்நியோன்யம் நம்மை விட பரிசுத்தம் கொண்டதும் தூய்மையானதுமாகும்.

வாழ்வின் தேவை கொண்டும் பிழைப்பின் அவசியம் கருதியும் நம்மை பின்தொடர்ந்து சிறிது தூரத்தில் வந்து கொண்டிருக்கிற நம் கூட்டத்துடன் கைகோர்த்து உணவு சேகரிக்கச்சென்று கொண்டிருக்கிற பொழுது சற்றே தள்ளி வைப்போம் அந்நியோன்யத்தை!

அந்நியோன்யம் வாழ்வின் ஓர் அங்கம்தானே தவிர 

வாழ்வே அதுவன்று என்பதாய் நகர்கிறது முன் சென்ற கறுப்பெறும்பு!


******


இந்த வாரத்தின் ரசித்த வாசகம் - உடல்


காயமே இது பொய்யடா… வெறும் காற்றடைத்த பையடா! அன்றைக்கே சொன்னது தான்! ஆனாலும் படித்த உடன் பிடித்த ஒரு வாசகம் உங்கள் பார்வைக்கு!



******



இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை : எங்கே இறங்குவீர்கள்?


இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றையாக சிவகுமார் ராமநாதன் என்பவர் பதிவு ஒன்று! படமும் அங்கேயிருந்தே!



அந்த நாளுக்கு அழைத்துச் செல்லும் ட்ரெயினில் ஏறினால் நீங்கள் எந்த வருடத்தில் இறங்குவீர்கள்?

நான் 1983 ல்.

எனக்குத் திருமணமான வருடம்... ஹி ..ஹி...

பின்குறிப்பு: இணைத்துள்ள படம் AI மூலம் வரையப்பட்டது.


சிவகுமார் ராமநாதன்.


அது சரி உங்களிடம் இதே கேள்வியைக் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? சொல்லுங்களேன்!


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. ஹைதராபாத் வாசகம் மனதில் நிற்கிறது.  கொஞ்ச நாளில் அந்த போர்டின் கீழேயே குப்பை போட்டு விட்டுச் செல்வார்கள்!

    விளம்பரம் கண்களில் நீரைத் தேக்கியது!  அந்த எஞ்சினியர் கொஞ்ச விஜய் ஆண்டனி போல இல்லை?

    பழைய நினைப்பில் என் பெயரையும் பார்த்து வந்தேன்.

    ஜருகண்டி பாடல் ரசிக்கவில்லை.  பாதியிலேயே நிறுத்தி விட்டேன்.  கவிதை ஓகே.  செருப்பும் உடலும்...  உண்மைதான்.  மந்திரிக்கு ஒரு மன்னன் சொல்லும் ஆட்டு, மாட்டு கோழி தலைக்கான மதிப்பும் மனிதத்தலைக்கான மதிப்பும் கதை போல...  புகை வண்டி மனதில் ஒரு ஜில் உணர்வைத் தோற்றுவிக்கிறது!  நான் எங்கும் இறங்கவே மாட்டேன்.  சுற்றி வந்து கொண்டே இருப்பேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட செய்திகள், தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கதம்பம் நன்று. ஆனால் ஏதோ ஒன்று நம் மனதில் சிந்தனையை எழுப்பிவிடும்.

    துபாய் அல்லது பஹ்ரைனில் உழைத்து பெரும் பணக்கார்ராகி, கேரளாவில் சொந்த ஊரில் ஐந்து வாசல்கள் உள்ள மாளிகை கட்டி, ஓய்வு பெறச் செல்லைமுன் ஒவ்வொரு வாசலிலும் புதிய கார்கள் வாங்கி வைத்தார். நிரந்தரமாக ஊர்திரும்பிய அவர், கேரளா ஏர்போர்ட்டில் மாரடைப்பால் காலமானார். சவத்தை புதிய வண்டியில் வைக்கக்கூடாது என்று வாடகை வண்டியில் உடலை எடுத்துச் சென்றார்களாம்.

    சில நேரங்களில் அழகுபடுத்திக்கொள்ளும்போது அழியும் உடல் நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. கஷ்டீர் ஆறு நாட்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆளுக்கு ஒரு லட்சம். இரண்டு வருடங்களுக்குள் குளிர் காலத்தில் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்மீர் சுற்றுலா - உங்களுக்கு விரைவில் வாய்ப்பதற்கு வாழ்த்துகள் நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. கதம்பச் செய்திகள் சிறப்பாக உள்ளது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகமும் அருமை. இன்றைய காஃபி வித் கிட்டுவில் மழை விளம்பரம் நன்றாக உள்ளது. ரசித்த கவிதை, ரசித்த வாசகம் அனைத்தும் அருமை. உடல் பற்றி சொன்ன வரிகள் அதன் உண்மையில் மனதை கலங்க வைக்கின்றன. எதுவுமே நமக்கென நிரந்தரமில்லாத போது உடலுக்கும் அதே மதிப்புதானே..!

    ரசித்த முகநூல் இற்றை நன்றாக உள்ளது. படம் மிக அழகாக இருக்கிறது. ஆனால் ஏறிய பிறகு இறங்கும் இடம் வந்தால், இறங்க வேண்டியதுதானே...! அதன் பின் பயணம் செல்லவும், நமக்கு அதிகாரமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  6. பதிவு அருமை சாலையோர அறிவுப்பு பலகை சொல்வது நன்று.
    ம்ழை விளம்பர காணொளி அருமை.
    உடல் பற்றி சொன்ன கவிதை உண்மை.
    ரயில் பயணம் ஒரு காலத்தில் மிகவும் விருப்பமாக இருந்தது, அதுவும் ஜ்ன்னல் ஓர இருக்கை கிடைத்தால் மனதில் மகிழ்ச்சி. பயணம் நீண்டு கொண்டே இருக்க விரும்பிய பிள்ளை பருவம். இப்போது பயணம் மகிழ்ச்சியை தருவது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. கதம்பம் நன்று. எறும்புகள் படமும் கவிதையும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....