சனி, 23 மார்ச், 2024

காஃபி வித் கிட்டு - 187 - Spot the Mistake - சிறு வியாபாரிகள் - மனைவிக்கு கடிதம் - கேள்விகள் - பதிவர் சந்திப்பு - நேரம் - பயணத் திட்டங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட வந்தே பாரத் பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : Spot the Mistake


சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு விளம்பரம். நம் தென்னகத்தின் பிரபல நிறுவனமான TVS அவர்களின் விளம்பரம் அது - Spot the Mistake - என்ற பெயரில் வெளிவந்திருக்கும் விளம்பரம்.  நல்லதொரு கருத்தினை நமக்குச் சொல்லும் விளம்பரம் - பாருங்களேன்!

மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழேயுள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


#SpotTheMistake (youtube.com)


******


பழைய நினைப்புடா பேராண்டி : சிறு வியாபாரிகள்.......


2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சிறு வியாபாரிகள்....... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


தமிழில் புகைப்படக் கலை அதாவது Photography in Tamil வலைப்பூவில் ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பில் போட்டி வைப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ள அனைவரும் மாதாமாதம் நடக்கும் போட்டியினை ஆர்வத்துடன் எதிர்பார்த்து, அறிவிப்பு வந்த பின் அந்த மாத தலைப்பிற்கேற்ப தாங்கள் எடுத்த புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.  ஒரு சில முறை மட்டுமே நான் அனுப்பி இருக்கிறேன்.


ஒவ்வொரு மாதமும் அனுப்ப நினைத்தாலும், ஏனோ அனுப்புவதில்லை! இந்த மாதமும் அதே! கடைசி தேதியான 20-03-2014 முடிந்து விட்டது. இந்த மாத தலைப்பு ”சிறு வியாபாரிகள்”.  ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும் எனது காமிராவுக்குள் சில வியாபாரிகளை சிறைபிடிப்பதுண்டு! அப்படி சிறை பிடித்த வியாபாரிகளின் படங்கள் இந்த ஞாயிறில் பார்க்கலாம்!


சமீபத்தில் ஹோலி (இந்த வருடம், அதாவது 2024-இல் வரும் திங்கள் அன்று ஹோலி!) விழா வட இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இப்போதெல்லாம் தென்னிந்தியாவில் கூட கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.....  இந்த ஹோலி கொண்டாட்டத்தின் முக்கிய தேவையான வண்ண வண்ணப் பொடிகள் விற்கும் ஒரு பெரியவர் – படம் எடுக்கப்பட்ட இடம் – [G]கோவர்த்தன், உத்திரப் பிரதேசம். மற்ற நாட்களில் இவர் சிறுவர்களுக்கான பொம்மைகள் விற்கும் வியாபாரி. 


முழு தகவல்களும் படிக்க, மேலே உள்ள சுட்டி வழி பதிவினைப் படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ஜோக் : மனைவிக்கு கடிதம்


சமீபத்தில் பார்த்த ஒரு விகடன் ஜோக்! 1945 ஆம் ஆண்டு - அதாவது நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் வெளிவந்த ஒரு ஜோக்! உங்கள் பார்வைக்கு! 



எந்தக் காலத்திலும் இது போன்ற நகைச்சுவை வந்து கொண்டே தான் இருக்கும் போல! இத்தனை வருடங்கள் கழித்தும் இப்படியான ஜோக் வந்து கொண்டுதானே இருக்கிறது!



******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை:  இன்னும்…


இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக பிரபல எழுத்தாளரும் வலைப்பூ நண்பருமான திரு கே.பி.ஜனார்த்தனன் அவர்களின் கவிதை ஒன்று - ஒரு கவிதை தினத்தில் அவர் வெளியிட்ட கவிதை - 2009-இல் விகடன் பத்திரிக்கையில் பிரசுரமான கவிதை. படித்துப் பாருங்களேன்! நம்மிடமும் இப்படியான கேள்விகள் இருக்கலாம்! உங்களுக்கு அப்படித் தோன்றிய கேள்விகள் என்ன - பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!



******


இந்த வாரத்தின் தகவல் - பதிவர் சந்திப்பு


நீண்ட நாட்களுக்குப் பிறகு தலைநகர் தில்லியில் ஒரு பதிவருடன் சந்திப்பு.  தக்குடு என்ற பெயரில் சிரிசிரிக்க பதிவு எழுதும் திருநெல்வேலிக் காரர் தில்லி வந்திருந்தார் - ஒரு மினி பயணமாக அவரது குடும்பத்தினருடன்.  சென்ற வாரத்தில் ஒரு மாலையில் அவரையும் குடும்பத்தினரையும் தில்லியின் கரோல் பாக் பகுதியில் அவர் தங்கியிருந்த இடத்தில் சந்தித்து பின்னர் அவருடன் சேர்ந்து ஒரு நெல்லை விலாஸ் உணவகத்தில் இரவு உணவும் சாப்பிட முடிந்தது (பில்லுக்கான பணம் அவர் தான் கொடுத்தார் என்பதை இங்கே நன்றியுடன் சொல்லிவிடுகிறேன்!)  பல வருடங்களாக பதிவுலகின் வழி தொடர்பில் இருந்தாலும் அவரைச் சந்திப்பது இதுவே முதல் தடவை.  அவரது மூத்த சகோதரரும் ஒரு பதிவர் - அவர் பதிவுகளை நான் அவ்வளவாக படித்ததில்லை என்றாலும் அவரையும் அவரது தில்லி பயணத்தில் முன்பு சந்தித்து இருக்கிறேன்! தக்குடுவின் எழுத்துக்கு பலர் ரசிகர்கள் - தொடர்ந்து எழுத வேண்டும் இப்படியான நண்பர்கள் என்பதையும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்! அவர் எழுத்துக்கு மாதிரியாக, 2022-இல் அவர் எழுதிய ஒரு மினி பயணத் தொடரின் சுட்டிகள் கீழே!


தக்குடு: பயணமும் ஊர் வம்பும்


தக்குடு: பயணமும் ஊர் வம்பும் (Part 2)


தக்குடு: பயணமும் ஊர் வம்பும் (Part 3)


பின் குறிப்பு: வரலாறு முக்கியம் அமைச்சரே என்று சொல்லிக்கொண்டு அவர் எடுத்த நிழற்படம் எனக்கு இன்னமும் வந்து சேரவில்லை! 🙂


******



இந்த வாரத்தின் ரசித்த பொன்மொழி : நேரம்


யார் ஒருவர் நேரத்தை மதிக்கவில்லையோ, நேரத்தின் மதிப்பை உணரவில்லையோ அவரால் எதையும் சாதிக்க இயலாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


- விக்ரம் சாராபாய்.


******


இந்த வாரத்தின் இணையதள அறிமுகம் : பயணத் திட்டங்கள்



நான் பயணம் செய்து கொண்டேயிருப்பதும், பயணத்தின் மீதான எனது ஈர்ப்பு குறித்தும் நீங்கள் அறிவீர்கள். அதனால் எப்போதும் என் தொடர்பில் இருக்கும் சிலர் பயணங்கள் குறித்து என்னுடன் பேசுவது வழக்கம். சிலர் எங்கே பயணிக்கலாம், எப்படி பயணிக்கலாம் என்றெல்லாமும் கேட்பார்கள்.  சிலர் பயணங்களை ஏற்பாடு செய்துதரச் சொல்லியும் கேட்பார்கள். சிலரோ எங்களுடன் பயணம் செய்ய வாருங்கள் என்றும் அழைப்பதுண்டு - (வரும் 29-31 மார்ச் 2024 நாட்களில் வாரணாசிக்கு எனக்கும் சேர்த்து முன்பதிவு செய்து விட்டார் ஒரு அலுவலக நட்பு! பல காரணங்களைச் சொல்லி எனக்கான முன்பதிவை ரத்து செய்து அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன் - தங்குவது, போக்குவரத்து என அனைத்து ஏற்பாடுகளும்!) - சமீபத்தில் அப்படிக் கேட்ட ஒரு நண்பருக்கும் அவரது மகனுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்த ஒரு பயணத் திட்டம் - தில்லி - குல்லூ - மணாலி - ஜிபி - கசோல் - மணிக்கரண் - தில்லி. 24 ஆம் தேதி மாலை தில்லியிலிருந்து புறப்பட்டு 29 ஆம் தேதி காலை தில்லி திரும்புகிறார்கள். ஒருவருக்கு 15000/- ரூபாய் மட்டும் - போக்குவரத்து, தங்குமிடம், ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை உணவு என இவை அனைத்தும் இதில் அடக்கம்.  அவர்கள் இருவராகச் செல்வதால் ஒரு இணையதளம் வழியாக ஏற்பாடு செய்து கொடுத்தேன்.  அந்த இணையதளத்திற்கான முகவரி கீழே! 


Tours, Activities, Adventures & Things to do | Thrillophilia


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


8 கருத்துகள்:

  1. அறிவுரை சொல்லும் விளம்பரம் ஓகே.  தப்பு தெரிகிறதா என்று கேட்டும் சுட்டிக்காட்டும் வரை தப்பை உணராத நாம்!

     சிறுவியாபார்கள் படங்களை மீண்டும் ரசித்தேன்.

    ஜோக் புன்னகைக்க வைத்தது.  "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" குதூகலம் எத்தனை காலமாக ஜீவிக்கிறது பாருங்கள்!

    KPJ  கவிதை ரசிக்க வைத்தது.  தக்குடுவுடனான சந்திப்பு மகிழ்ச்சி தந்திருக்கும்.

    பயணத்துக்கான திட்டங்களுக்கான தளம் பற்றிய தகவல்கள் பயணம் செய்வோருக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கதம்பம் சிறப்பாக இருக்கிறது ஜி நகைச்சுவை ஆச்சரியமாக இருந்தது அப்பொழுதே இதுபோல் வந்து இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. வார ஜோக் மனைவிக்கு கடிதம்.....ஹா..ஹ

    கவிதை நன்று.

    தக்குடு ரசனையான பகிர்வுகள். பதிவர்கள் சந்திப்பு மகிழ்ச்சி.

    பயணங்கள் தளங்கள் பலருக்கும் உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  4. அனைத்தும் அருமை. காணொளி அருமை. குழந்தைகளுக்கு கண்டிப்பாய் வேண்டும் தலைக்கவசம். காலை நேரம் பரபரப்பு அதிகம்.

    தக்குடு நல்ல எழுத்தாளர். திரும்ப எழுத வேண்டும்.
    அந்தக்கால நகைச்சுவை இன்றும் தொடர்கிறது.

    பயண இணைய தள பகிர்வு பலருக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அவசியம் - பெரும்பாலான பெற்றோர்கள் உணர்வதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....