வியாழன், 21 மார்ச், 2024

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இளமைக்காலங்களில் பெரிதாக சினிமா படங்கள் பார்க்க எங்களை எங்களது பெற்றோர்கள் அனுமதித்ததில்லை. அதிலும் தனியாக சினிமா பார்க்கச் செல்ல வாய்ப்புகளே அமைந்ததில்லை என்று சொல்லலாம். கல்லூரி நாட்களில் ஒன்றிரண்டு படங்கள் நண்பர்களுடன் பார்த்திருக்கலாம். மற்றபடி சினிமா பார்ப்பது என்றால் பெற்றோர்கள் மற்றும் சகோதரிகளுடன் ஒன்றாக முன்பதிவு செய்து பார்த்த படங்கள் மட்டுமே! அப்படிச் செல்லும் படங்கள் என்ன என்பதை அப்பா/அம்மா தான் முடிவு செய்ய வேண்டும்.  நாங்கள் முடிவு செய்து இந்தப் படம் பார்க்கலாம் என்று சொல்வதற்குக் கூட எங்களுக்கு வாய்ப்பு இருந்ததில்லை - கேட்பதற்கு பயமாகவும் இருந்தது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.  பலவிதமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் பாடுபட வேண்டியிருக்கும் நாட்கள் அவை - அன்றைக்கு ஐந்து பைசா மதிப்பிருந்த குச்சி ஐஸ் சாப்பிட வேண்டுமென்றால் கூட பெற்றோர்கள் வாங்கித் தந்தால் தான்! ஒரு ஐஸ் வாங்கித் தரச் சொல்லி அழுது புரண்டு போராட வேண்டியிருக்கும்! 


என்ன படம் வெளியாகியிருக்கிறது? யார் நடிக/நடிகையர்?, பாடல்கள் என்ன என இது குறித்த தகவல்கள் பெரிதும் எங்களிடம் இருந்ததில்லை.  எங்கள் ஊரில் இருந்த ஒரே திரையரங்கமான அமராவதியில் என்ன படம் வெளியாகிறது என்பதை ஒரு ஆட்டோவில் ஒலிபரப்பிக் கொண்டு செல்வார்கள். சில சமயங்களில் துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்ததுண்டு. அந்தத் துண்டு பிரசுரங்களை வாங்க ஆட்டோ பின்னாலேயே ஓடியிருக்கிறோம். அவர்கள் வண்டியை நிறுத்தியெல்லாம் தரமாட்டார்கள். ஓடி வரும் நபர்களைப் பார்த்தபிறகு அப்படியே சிதறடித்துப்போவார்கள். அதனை பொறுக்கி எடுத்துக் கொண்டு, படித்தபடியே வீட்டுக்குத் திரும்புவோம்! அப்படி கேட்கும் போது தான் திரையரங்கில் இந்தப் படம் வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். நகரின் வெளியே மந்தாரக்குப்பம் எனும் இடமும் இருக்கிறது. நெய்வேலி நகரம் நிர்மாணத்திற்கு முன்பிலிருந்தே இந்த மந்தாரக்குப்பம் இருந்தது. அங்கேயும் சில திரையரங்குகள் உண்டு என்றாலும் அங்கே என்ன படம் திரையிடுகிறார்கள் என்பதை, எப்போதாவது அந்தப் பக்கம் பேருந்தில் சென்றால், அங்கே ஒட்டியிருக்கும் பதாகைகளை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்தத் திரையரங்குகளில் ஒரு திரைப்படம் கூட நாங்கள் பார்த்ததில்லை!



ஆனால் எங்களுக்கு இருந்த ஒரு வசதி - வீட்டில் இருந்த வால்வு ரேடியோ! அதில் சிலோன் வானொலி ஒலிபரப்பும் சினிமா பாடல்களை கேட்க வாய்ப்பிருந்தது. அதையும் அப்பா வைத்தால் தான் கேட்க முடியும்.  குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தான் அதைத் தொடக் கூட எங்களுக்கு அனுமதி கிடைத்தது - இல்லை நாங்களாகவே எடுத்துக் கொண்டோமோ - என்பது நினைவில்லை.  இப்போது இருப்பது போல 24 மணி நேரம் பாடல்கள், செய்திகள் ஒலிபரப்பு எல்லாம் அப்போது இல்லை. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செய்திகள், பாடல்கள் ஒலிபரப்பு, ஒலிச்சித்தரம் போன்றவற்றை ஒலிபரப்புவார்கள். பெரும்பாலும் செய்திகள், பாடல்கள் போன்றவை மட்டுமே கேட்க அனுமதி கிடைத்தது. அதிலும் பழய பாடல்கள் தான் அனேக நேரம் ஒலிபரப்புவார்கள் - அப்பா, அம்மா கேட்பார்கள்.  இப்போது போல படம் வெளிவருவதற்கு முன்னரே பாடல்கள் வெளிவந்தது கிடையாது.  அதனால் பெரும்பாலும் புதிய பாடல்களை படம் வெளியான சில நாட்கள் கழித்தே கேட்கும் வாய்ப்பு அமையும். 


இப்படியெல்லாம் தகவல்கள் தெரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருந்தாலும் அந்த நாட்களும் இனிமையாகவே இருந்தன.  பெரிதாக எதிர்பார்ப்புகள் ஏதும் இருந்ததில்லை. கிடைத்ததை வைத்து சந்தோஷமாகவே இருந்த நாட்கள் அவை.  போட்டுக்கொள்ள படோடாபமான உடைகள் கூட இருந்ததில்லை.  தீபாவளிக்கு மட்டும் தான் புதிய துணி எடுப்பார்கள் - அதுவும் அம்மா நெய்வேலியிலிருந்து கடலூருக்கோ அல்லது பாண்டிச்சேரிக்கோ சென்று எடுத்து வருவார்கள்.  இந்த வண்ணம், இந்த மாடல் என்றெல்லாம் நாங்கள் எதுவுமே சொல்லி விட முடியாது. பெரியவர்கள் என்ன முடிவு எடுத்து வாங்குகிறார்களோ அதைப் போட்டுக் கொள்ள வேண்டியது தான். பெரிதாக எந்த வித எதிர்பார்ப்புகளும் வைத்துக் கொள்ள முடியாது - எதிர்பார்ப்புகள் வைக்கத் தெரிந்திருக்கவுமில்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும் அவை நிறைவேறியதாக எனக்கு நினைவில்லை.  ஆனாலும் வாழ்க்கை சுலபமாகவே, இனிமையாகவே போய்க்கொண்டிருந்தது. 




அப்படி ரேடியோவில் கேட்ட பல பாடல்கள் எனக்கு இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.  இப்போது கேட்கும் பாடல்கள் எதுவும், பல முறை கேட்ட பின்னரும், மனதில் நிலைப்பதில்லை - வரிகளும் நினைவில் இருப்பதில்லை.  சிறு வயதில் கேட்ட பல பாடல்களை இப்போதும் என்னால் அப்படியே ஒப்பிக்க (பாடுவது வம்பில் முடியலாம் - கழுதை கத்துவது போலிருக்கிறது என்று சொல்லிவிடக்கூடும்!) முடியும்! இது அனேகமாக என் வயதொத்த, என்னைவிட மூத்த அனைவருக்கும் சாத்தியமாக இருக்குமென்றே தோன்றுகிறது. 1978-ஆம் ஆண்டு வெளிவந்ததாக தற்போது இணையத்தில் பார்த்து தெரிந்து கொண்ட முள்ளும் மலரும் திரைப்படமும் அதில் வந்த பாடல்களும் இப்போதும் நினைவில் இருக்கிறது. எனது ஏழு வயதில் கேட்ட அந்த பாடல்கள் இன்றைக்கு வரை நினைவில் இருக்கிறது. குறிப்பாக ஜேசுதாஸ் குரலில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலும், வாணி ஜெயராம் குரலில் நித்தம் நித்தம் நெல்லு சோறு பாடலும், எஸ்பிபி குரலில் “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” பாடலும் இன்றைக்கும் நினைவில் நிற்கின்றன.   இளையராஜாவின் இசையும் இப்படியான பாடல்கள் நினைவில் நிற்க ஒரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. 


படத்தில் நடித்த ரஜினிகாந்த் இன்றைக்கு வரை கதாநாயகராக நடித்துக் கொண்டிருக்கிறார்! ஆனால் அப்படத்தில் நடித்த நாயகியான ஷோபா இன்று இல்லை! இருந்திருந்தாலும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை! ஷோபா என்னவொரு அழகு இல்லையா! (ஹாஹா… ஏழு வயதில் அழகெல்லாம் எனக்குத் தெரியவில்லை! இப்போது தான் சொல்கிறேன்!) சரி ஷோபாவின் அழகை விடுவோம், பதிவின் தலைப்பான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்பதற்கு வருவோம். இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இது வரை இருக்கிறது.  யார் ஆண்டால் என்ன, என் வேலையைச் செய்து கொண்டே இருப்பேன் என்பது தான் எனது நிலைப்பாடாக இருக்கிறது! தற்போது இந்தியாவின் மிகப் பெரிய திருவிழாவான தேர்தல் திருவிழாவிற்கான முஸ்தீபுகள் ஆரம்பித்து விட்டன! எந்தப் பக்கம் திரும்பினாலும் தேர்தல் குறித்த நிகழ்வுகள், சண்டை சச்சரவுகள், குற்றம் சாட்டுவது, காலை வாருவது எல்லாம் வரிசையாக நடக்கின்றன.   நேற்று வரை எதிரியாக இருந்தவர் இன்றைக்கு நட்பின் நாயகமாகத் தெரிகிறார். நேற்றைய நண்பர் இன்றைய எதிரியாகிறார்.  கேட்டால் சூரியன் படத்தில் வரும் கவுண்டமணியின் பிரபல வசனமான “அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா” என்று உங்களிடம் சொல்வார்கள். இணையத்திலும் இப்படியான சண்டைகள் - அதிலும் சம்பந்தமே இல்லாமல் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல திருவாளர் பொதுஜனம் அடித்துக் கொள்கிறார்!


அதனால் இப்போதெல்லாம் எந்தவித செய்தி இணையதளங்களிலும், முகநூல் பக்கத்திலும் உலா வருவதேயில்லை. எங்கே பார்த்தாலும் சண்டை, குற்றம் சாட்டுதல் என்றே இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு இதே தான் இருக்கப் போகிறது! ஜூன் மாதம் வரை எதையும் பார்க்காமல் இருப்பது நம் தேகத்திற்கும் மனதிற்கும் நல்லது! “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே” என்று இருப்பதே நல்லது!  இதைச் சொல்லவா இத்தனை நீண்ட ஒரு பதிவு என்று கேட்டால், எனது பதில் - நான் அரசியல் பேசுவதில்லை! என்பது தான்! 🙂ஏனெனில் இப்படியான அரசியல் குறித்து பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் இப்படி ஒரு பதில்! விரைவில் வேறு சில விஷயங்களை, எனக்குப் பிடித்த, ஆர்வம் இருக்கும் விஷயங்களைக் குறித்து எழுதுகிறேன்! படிக்க நீங்கள் தயார் தானே?


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


16 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பழைய காலத்தை நன்றாக அலசியுள்ளீர்கள். நானும் இப்படித்தான் என் கடந்து வந்த வாழ்வை பற்றி யோசிப்பேன்.

    /இந்த வண்ணம், இந்த மாடல் என்றெல்லாம் நாங்கள் எதுவுமே சொல்லி விட முடியாது. பெரியவர்கள் என்ன முடிவு எடுத்து வாங்குகிறார்களோ அதைப் போட்டுக் கொள்ள வேண்டியது தான். பெரிதாக எந்த வித எதிர்பார்ப்புகளும் வைத்துக் கொள்ள முடியாது - எதிர்பார்ப்புகள் வைக்கத் தெரிந்திருக்கவுமில்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும் அவை நிறைவேறியதாக எனக்கு நினைவில்லை. /

    தாங்கள் எழுதியவற்றில், இது போன்ற நிறைய வரிகள் அப்படியே என் மனதில் உள்ளவற்றை டிட்டோ செய்கிறது. பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்.

    யதேச்சையாக நானும் முள்ளும் மலரும் படத்தை பத்து நாட்களுக்கு முன் பார்த்தேன். முன்பு ஏற்கனவே தொ. காட்சியில் பார்த்துள்ளேன். ஏதோ யதேச்சையாக தோன்றவே மீண்டும் பார்த்தேன். அதற்கேற்ற மாதிரி இன்று உங்கள் பதிவு. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் பலமுறை வானொலியில் கேட்டு ரசித்தவைதான்.

    இன்றைய நிலைப்பாட்டிற்கு பொருத்தமான பாடல், மற்றும் பதிவுதான். பதிவு படிக்க மிக நன்றாக உள்ளது. தாங்கள் எழுதிய விதமும் கவர்கிறது.

    உங்களின் நேற்றைய பதிவுக்கு நான் இன்னமும் வரவில்லை. மன்னிக்கவும். இங்குள்ள தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏதேதோ வேலைகள். பிறகு கண்டிப்பாக வருகிறேன். பயணத்தொடர் பதிவு எனக்கு மிகவும் பிடித்தமானது. கண்டிப்பாக வருவேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. முள்ளும் மலரும் நல்லதொரு படம் தான்.

      உங்கள் ஊர் தண்ணீர் பிரச்சனை - கடினமான நாட்கள் தான். திருச்சியில் கூட ஒரு சில இடங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். தண்ணீர் சிக்கனம் குறித்த புரிந்துணர்வு இன்னமும் நம் மக்களுக்கு வரவில்லை என்பது தான் வேதனையான உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. டிட்டோ உங்கள் சிறு வயது போலவேதான் எனக்கும். அதன் பின்னும், என்றும் கூடச் சொல்ல முடியும்.

    முள்ளும் மலரும் படம் பார்த்ததில்லை.

    நானும் அதிகம் இப்படியான செய்திகள் பார்ப்பதில்லை ஜி. நல்ல ஆரோக்கியமான செய்திகளாக இல்லை. எனக்கும் அதே கருத்துதான். எனக்கும் என் ஆர்வம் மிகுந்ததை எழுத இருக்குதான். ஆனால் கொஞ்ச நாள் சென்ற பிறகுதான் தொடங்க வேண்டும். வேறு பணிகள் இருக்கு மனம் அதற்கு ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் எனவே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பணிகள் சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள்.

      சிறு வயதில் நாம் இழந்தவை - நமக்குக் கிடைக்காதவை அனேகம் தான். ஆனாலும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறோம்.

      ஆரோக்யமான செய்திகளை மட்டுமே பார்ப்பது எப்போதுமே நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. /// அரசியல் குறித்து பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன்.///

    இந்த நிலைப்பாடு தான் நல்லது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது சிந்தனையுடன் நீங்களும் உடன்படுவதில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இப்பதிவு எனக்கும் பல நினைவுகளை மீட்டி விட்டது ஜி.

    அன்று தீபாவளிக்கு மட்டுமே புதிய உடை, இன்று நினைத்தவுடன் எடுக்கலாம்.

    ஆனால் அன்றைய வாழ்க்கை மகிழ்ச்சிதான் இது பலருக்கும் பொருந்தும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைய வாழ்வில் இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை என்பது நம்மைப் போல பலரும் உணர்ந்து கொண்டிருப்பது தான் கில்லர்ஜி. என்னுடன் உங்கள் எண்ணங்களும் ஒத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரம் திரைப் பாடல்களோ இல்லை ஒலிச்சித்திரமோ கேட்ட காலம் எவ்வளவு மகிழ்வாக இருந்தது..... எல்லாம் எப்போதுமே கிடைக்கும் என்றால் அதற்குரிய மதிப்பை அது இழந்துவிடுகிறது. எப்போப் பாத்தாலும் தொலைக்காட்சியில் சினிமாக்கள், பாடல்கள், நகைச்சுவை என்று நம் ஆர்வத்தைச் சிதறடித்முவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிசயமா நெல்லைத் தமிழனுக்குப் பதில் அநாமதேயர் என்று வந்திருக்கு.

      நீக்கு
    2. எந்த விஷயமும் அளவுக்கு அதிகமானால் நஞ்சு தான்.

      பதிவு குறித்த உங்கள் எண்ணங்களையும் இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    3. நல்ல வேளை இங்கே சொன்னீர்கள் - இல்லையெனில் யாரிந்த அநாமதேயர் என்று விழித்திருப்பேன்! :) தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  6. அன்றைய காலத்தை பற்றி நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

    எங்கள் வீட்டிலும் ரேடியோ அப்பா,அண்ணன்மார் போட்டால் தான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  7. சிறு வயது நினைவுகள் பகிர்வு அருமை.
    அப்போது உள்ளது போல இப்போது இல்லை குழந்தைகளுக்கு நினைத்த போது நினைத்தது கிடைக்கிறது, அவர்களே தேர்வு செய்கிறார்கள் தங்களுக்கு வேண்டியதை.
    எனக்கும் அரசியல் பேசுவது பிடிப்பது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....