சனி, 2 மார்ச், 2024

காஃபி வித் கிட்டு - 185 - 2 AM காஃபி - நவகிரக உலா - கான்வ்லா (மினி கோவா) - குல்லட் பீட்ஸா - சிற்பங்கள் - அன்பின் வழியது உயர்நிலை - மது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட எங்கே செல்வது - குழப்பமும் காலை உணவும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் காணொளி : 2 AM காஃபி


இந்த வாரத்தின் ரசித்த காணொளி - ஒரு குறும்படம்! இரவு 2 மணிக்கு ஒரு இளைஞர் சைக்கிளில் வந்து ஒரு அங்காடியில் காஃபி வாங்கிக் கொண்டு அதை அருந்திய படி வெளியே வருகிறார். அந்த நேரத்தில் அவருக்குக் கிடைத்த அதிர்ச்சி என்ன - இந்தக் குறும்படத்தினை பாருங்களேன்.


மேலே உள்ள காணொளியைப் பார்க்க இயலவில்லை எனில் பார்க்க சுட்டி கீழே!


2 AM COFFEE - A short film | Sony FX3 | 4K - YouTube


******


இந்த வாரத்தின் தகவல் : புதிய பேருந்து - நவகிரக உலா


சமீபத்தில் படித்த ஒரு செய்தி உங்களுக்கு பலனுள்ளதாக இருக்கலாம்.  தமிழகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் கும்பகோணம் நகரிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு ஒன்பது நவகிரஹங்களுக்கும் சென்று மாலை எட்டு மணிக்கு திரும்பும் விதத்தில் புதியதொரு பேருந்து வசதியைத் தொடங்கி இருக்கிறார்கள்.  கட்டணம் 750/- ரூபாய் மட்டுமே என்று தெரிகிறது.  TNSTC இணைய தளத்தின் மூலம் இந்த சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் சமீபத்தில் படித்தேன்.  கும்பகோணத்திற்குச் சென்று அங்கேயிருந்து இப்படியான ஒரு சுற்றுலா சென்று வருவது சுலபமாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலதிகத் தகவல்கள் வேண்டுமெனில் இந்தத் தளத்தில் பார்க்கலாம். 


******


இந்த வாரத்தின் சுற்றுலாதலம்:  கான்வ்லா - மினி கோவா


மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சோர் மாவட்டத்தில் சம்பல் பகுதியில் இருக்கும் ஒரு அழகிய கிராமம் கான்வ்லா எனும் இடம். சம்பல் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த இடம் ஒரு கடற்கரை போலவே காட்சியளிக்கிறது. இணையத்தில் இந்த இடம் குறித்து நிறைய தகவல்களும் காணொளிகளும் இருக்கின்றன.  மத்தியப் பிரதேசத்தில் பல பிரபலமான சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், இது போன்ற Offbeat இடங்களும் நிறையவே இருக்கின்றன.  இந்த இடம் குறித்த ஒரு வலைப்பூ (ஆங்கிலத்தில்) படிக்க நேர்ந்தது - அதற்கான சுட்டி கீழே!


Mini Goa Beach Village Kanwla Bhanpura Mandsaur Madhya Pradesh | Ajay Gautam Advocate Jabalpur Lawyer High Court DRT News (wordpress.com)


ஜூன் - ஜூலை மாதங்களில் இங்கே வருவது சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு காணொளியும் கீழே இணைத்திருக்கிறேன். பார்க்க முடியாவிட்டால் இந்தச் சுட்டி வழியாகவும் பார்க்கலாம்.


******


இந்த வாரத்தின் உணவு - குல்லட் பீட்ஸா



விதம் விதமாக பீட்ஸா உண்பது சிலருக்கு பிடித்தது. நான் இது வரை ஒன்றிரண்டு முறை மட்டுமே பீட்ஸா சாப்பிட்டு இருக்கிறேன் - அதுவும் வேறு வழியில்லாமல்.  சமீபத்தில் குல்லட் பீட்ஸா எனும் பெயர் அடிக்கடி அடிபட்டது - வேறு காரணங்களால்.  அது என்னதான் குல்லட் பீட்ஸா என்று இணையத்தில் பார்த்தபோது அதன் செய்முறை கிடைத்தது!  நீங்களும் பாருங்களேன் - முடிந்தால், உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் இதைச் செய்து பார்க்கலாம்!


******


பழைய நினைப்புடா பேராண்டி : திருப்பராய்த்துறை – சில சிற்பங்கள்


2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - திருப்பராய்த்துறை – சில சிற்பங்கள் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது, வழக்கம்போல் திருப்பராய்த்துறை சென்றேன். தமிழகம் வரும்போதெல்லாம் திருப்பராய்த்துறை செல்லாது வருவதில்லை – அங்கே எனது பெரியம்மா இருப்பதாலும், அந்த ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும்! அப்படிச் செல்லும்போது அங்கே குடிகொண்டிருக்கும் பராய்த்துறை நாதரின் ஆலயத்திற்குச் செல்வதும் தவறாது நடக்கும் ஒரு விஷயம்.


பராய்த்துறை நாதரின் ஆலயத்தினுள் பல சிற்பங்கள் உண்டு. வெளிப்புறத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்திருந்தாலும், கோவிலுக்குள் இருக்கும் சிற்பங்களையோ, அல்லது கடவுள் சிலைகளையோ இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. இம்முறை பிரகாரத்தில் சுற்றி வரும்போது ஒரு தக்ஷிணாமூர்த்தி சிலையைக் காண்பித்து பெரியம்மா, ”இந்த சிலையை புகைப்படம் எடுத்துக்கொள்” என்று சொன்னார்.  புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டதற்கு, ”கர்ப்பக்கிரகத்தினுள் இருக்கும் மூலவர் தவிர மற்ற எல்லா சிலைகளையும் இங்கே புகைப்படம் எடுக்கிறார்கள்” என்று சொன்ன பிறகு கோவிலில் இருந்த பல சிற்பங்களைப் புகைப்படம் எடுத்தேன்.


முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை : அன்பின் வழியது உயர்நிலை


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதையாக எழுத்து தளத்திலிருந்து ஒரு சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. சில வரிகள் உங்கள் பார்வைக்கு…


பாழாய்ப் போவதற்கா, காலத்தை விரயமாக்கி பட்டப் படிப்பை பூர்த்தி செய்தோம்? இக்கட்டான சூழலில் இரண்டு தோள்கள் ஆதரவாய் சேர்ந்தால், குடும்ப பாரம் சுமக்கும்  நிரஞ்சனுக்கு எத்தனை ஆதரவாய் இருக்கும்?!


இதையெல்லாம் சொன்னால், ஏனோ அவருக்குப் புரிவதில்லை.


“வேண்டாம், அனு. வேண்டுமானால் இங்கேயே ஒரு நல்ல வேலை பார்த்துக்கொள். நீ சொன்னது போல வருவாயும் அதிகரிக்கும்…. நிறைவான அன்பும் குழந்தைக்குக் கிடைத்தேறும். நினைத்துப்பார்….குழந்தையால் உன் பிரிவை எதிர்கொள்ள இயலுமா?" என்று என்னிடம் எதிர்கேள்வி கேட்கிறார்.


இங்கேயே வேலை பார்க்கலாம் தான்; கிடைக்கும் தான்; ஆனால், இங்கே பெறும் ஊதியம், வெளிநாட்டவர் தரும் ஊதியத்தின் முன்பு சொற்பமாய்த்தான் இருக்கும். வெளிநாடு செல்வதானால் இரண்டு மூன்று வருடங்கள்.....குழந்தையை அவள் பாட்டி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகென்ன பிரச்சனை?


முழு கதையும் படிக்க விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி கதையை படிக்கலாம்!


அன்பின் வழியது உயர்நிலை - சிறுகதை (eluthu.com)


******


இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை : மது


மதகுரு  ஒருவர் விமானமொன்றில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த போது  பணிப்பெண் எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார். அவ்வாறே பணிப்பெண் மதகுருவிடமும் மதுக் கோப்பயை நீட்டினார்.அவர் வாங்க மறுத்து விட்டார். அதற்கு பணிப் பெண்,”ஐயா ,எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது.ஏற்றுக் கொள்ளுங்கள் ” என்றார். அதற்கு மதகுரு,”அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம் ” என்றார்.


பணிப்பெண் விடுவதாய் இல்லை, ”உலகிலேயே விலை உயர்ந்த மது வகை இது.கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள் ” என்றார்.அப்போதும் மதகுரு ஏற்றுக்கொள்ளவில்லை. பணிப் பெண் கடைசியாகச் சொன்னார்”இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காகவேனும்  ஒரு துளியேனும் பருகுங்களேன்.” அதற்கு குரு சொன்னார், ” அம்மா , நான் ஒரு சிந்தனையாளன் மதுவெல்லாம் பருக மாட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள்”என்றார் .


அவர் அப்படிச்சொன்னதும்தான் தாமதம்  பணிப்பெண் அதிர்ந்துபோய் விட்டார். “ஐயோ, பணியில் இருக்கிற விமானி எப்படி

மது அருந்த முடியும்…? இதை, அவர் குடித்தால் அவர் புத்தி தடுமாறி விமானம் விபத்துக்கு உள்ளாகுமே. உயிர்கள் பறிபோகுமே ” என்று பதறினார்.

மதகுரு சொன்னார், ”சகோதரி, வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான். தகாத காரியங்களை செய்தால் புத்தி தடுமாறி விபத்து நேரிடும். வாழ்க்கைத்தரம் என்பது மிகவும் உயர்ந்த விஷயம். நல்ல குணங்களுடன்   இறைபக்தியுடன் வாழ்கிற வாழ்வே தரமான வாழ்வு” என்றார்.



******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


22 கருத்துகள்:

  1. முதற்கண் அது இளைஞனா, இளைஞியா?!!  நான் என்ன எதிர்பார்த்தேனோ அது நடந்தது, ஆனால் சட்டென வேறு எந்த முடிவும் இல்லாமல் பொசுக்கென அங்கேயே முடிந்து விட்டதே...
    கதம்பதின் மற்ற பகுதிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளைஞன் என்றே தோன்றுகிறது! எதிர்பார்த்தது நடந்தது - :)

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இன்றைய பதிவின் அனைத்துப் பகுதிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. எல்லாம் சிறப்பு இன்றைய புகைப்பட வாசகம் அருமை
    என் வழியும் இதுவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் அருமை....பிடித்த ஒன்று நான் அடிக்கடிச் சொல்லும் ஒன்று.

    குறும்படம் காணொளி பார்த்தேன். நினைத்தேன் சைக்கிள் காணாமல் போகும் என்று. ஆனால் அதுதான் முடிவா....இல்லை ஏதேனும் உள் விஷயம் இருக்கா? புரியவில்லை.

    குல்லட் பீட்சா என்றதும் (குல்லட் என்றாலே மண் குடுவை இங்கு குல்லட் டீ பிரபலம்) மண் சட்டி/குடுவை கொஞ்சம் அகலமாக ஒன்றில் தருவாங்களோ என்று நினைத்தேன் இது சாய் குடிக்கும் குல்லட் மேல் எப்படி இருக்கும் பார்க்க ஏண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், குரும்படம், குல்லட் பீட்சா - ஆகிய மூன்றும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  5. நவக்கிரஹ உலாவிற்கு பேருந்து நல்ல திட்டம். கோயில் சுற்றுலாவிற்கு பயனளிக்கும்.

    கான்வ்லா மினி கோவா காணொளி பார்த்தேன் இடம் குறித்துக் கொண்டுவிட்டே ன். அழகாக இருக்கிறது. ஆறு கடல் போன்று ஹையோ எப்பவும் இப்படி இருக்குமோ....பார்க்க வேண்டும்.

    மது - செம பதில். அழகான பதில். மிகவும் ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவகிரஹ உலா - வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து தினமும் பேருந்து உண்டு என்று தெரிகிறது. முதலில் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே என்றார்கள்.

      மினி கோவா - சில காணொளிகள் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது அந்த இடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. கதையை மிகவும் ரசித்தேன். குழந்தையின் பதில் தனக்கு வருத்தம் என்பதை விட தன் அம்மா தன்னை விட்டு எப்படி இருப்பாங்க என்று கவலைப்படுகிறாளே அருமை....

    திருபராய்த்துறை சிற்பங்கள் எல்லாமே அழகு வாயில் பெண் சிற்பம், மேற்கூரை ராசி சக்கரம் எல்லாம் மிக அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையின் பார்வையில் பார்க்கும்போது நமக்கும் அக்குழந்தையின் அன்பு புரிகிறது!

      திருப்பராய்த்துறை சிற்பங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. அனைத்தும் நன்று.
    குல்லட் பிசா பார்க்கிறேன்.

    கதை பணமா பாசமா ?வெல்கிறது . .....பாசம். குழந்தை அம்மா வருந்துவாளே என்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. வாசகம் அருமை. மற்றும் பதிவில் இடம்பெற்ற அனைத்தும் அருமை. காணொளிகள் நன்றாக இருந்தது.குல்லட் பீட்ஸா செய்முறை நன்றாக இருக்கிறது.

    முகநூல் இற்றை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  9. நவக்கிரக உலா பேருந்து நிச்சயம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மது கதை மிகவும் ரசித்தேன். காணொளிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  10. காணொளிகள், தகவல்கள் எல்லாமே மிக அருமை.

    90 களில் நான்கு ஐந்து முறை சென்றுதான் 9 நவக்கிரஹ கோயில்களை தரிசிக்க முடிந்தது. அப்போதெல்லாம் என் மனதில் இந்த எண்ணம் இருந்தது. ஒரு பேருந்து ஒரு நாள் முழுக்க அல்லது இரண்டு நாட்கள் எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. எப்படியோ இப்போது போக விரும்புபவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏப்ரல் மாதம் முதல் பேருந்து எல்லா நாட்களிலும் இயங்கும் என்று தகவல் வந்திருக்கிறது. நல்ல விஷயம் தான். அதிலும் சில அரசியல் ஆதாயங்கள் எதிர்பார்த்து செய்கிறது அரசு என்றாலும் சிலருக்கேனும் பயன்படுகிறது என்ற வரையில் மகிழ்ச்சியே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  11. தொகுப்பு நன்று. திருப்பராய்த்துறை சிற்பங்களை மீண்டும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொகுப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....