திங்கள், 11 மார்ச், 2024

கதம்பம் - அரங்கனின் தரிசனம் - சமயபுரத்தாள் தரிசனம் - மஹா சிவராத்திரி - மகளிர் தினம் - தலையெழுத்து மாறிய நாள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட பிரதான் மந்த்ரி சங்க்ரஹாலய் - நிழற்பட உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


அரங்கனின் தரிசனம் - 05 மார்ச் 2024:




ஐந்து நிமிடம் முன்னே பின்னே என்றாலும் என்னுடைய இடத்தை யாருக்காகவும் விடவே மாட்டேன் என்று வரிசையில் உள்ளோரிடம்  சண்டையிடும் சகமனிதர்கள்!


தன்னுடைய வயதான அம்மாவுக்கு கோவிலின் முக்கிய சன்னிதிகளை மட்டுமாவது காண்பிக்கும் பொருட்டு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு? பாதை நன்றாக இருக்குமா? என்று மிகுந்த அக்கறையுடன் விசாரித்த பெண்மணி!


அக்கா! இந்த விளக்கு பார்க்கறீங்களா? செவ்வா வெள்ளில வீட்டுல ஏத்தி வைங்க! உங்க கஷ்டமெல்லாம் கரைஞ்சு போயிடும்!என்று கோவில் கடைகளில் இரும்பால் ஆன அகல் விளக்கை வாங்கிக் கொள்ளச் சொல்லும் கடைக்காரர்!


தன் தோழி ஆண்டாளைக் காணாமல் ஏக்கத்துடன் காத்திருக்கும் லஷ்மி! வருகின்ற பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய் என்ற பாகனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு செய்து கொண்டிருந்தது!


தாயாருக்கு எல்லா உற்சவங்களுமே இங்கேயே தான்! அவள் 'படி தாண்டா பத்தினி!' பெருமாள் தான் இங்கே வருவார்! என்று தோழியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது…


இந்தாங்க! தாயார் பிரசாதம்! என்று எதிர்பார்க்காத நேரத்தில் கைநிறைய பன்னீர் ரோஜாக்களை கொடுத்துச் சென்ற பெண்மணி!


இன்றைய நாளை இனிதாக்கிய தருணங்கள்!


******


சமயபுரத்தாள் தரிசனம் - 06 மார்ச் 2024:







நேற்றைய பொழுது அரங்கனின் காலடியில் என்றால் இன்றைய பொழுது சமயபுரத்தாளின் அருளைப் பெறுவதற்காக! 


திருவரங்கத்தைப் போலவே அவரின் தங்கையைக் காணவும் எப்போதும் பெருந்திரளாய் மக்கள் நேர்த்திக் கடன் செலுத்தவும், கண்ணீர் மல்கி பிரார்த்திக்கவும்  பாதயாத்திரையாகவே செல்வர்!


வரும் ஞாயிறன்று சமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழப் போகிறது! இது முதல் வாரம் தான்! இன்னும் இரண்டு வாரங்களும் பூச்சொரிதல் நடைபெறும்! வண்டி வண்டியாக பூக்களை எடுத்து வந்து அவளை குளிர்விப்பார்கள்! வழியெங்கும் இப்போதே பால் குடங்களும் முளைப்பாரியும் எடுத்துச் சென்று கொண்டிருக்கும் மக்களால் நிறைந்திருந்தது ஸ்தலம்!


வரிசையில் நின்று நகர்ந்து நகர்ந்து அவளின் திருமுகத்தை பார்த்துக் கொண்டே எல்லோருக்காகவும் மனமுருக பிரார்த்தித்துக் கொண்டேன்! நோய்நொடி இல்லாத வாழ்வும், அன்பும், புரிதலும் எல்லோரிடையேயும் மேம்படணும்! அழகான நிம்மதியான தரிசனம் கிடைத்த திருப்தியில் வெளியே வந்தோம்!


நம்முடனேயே வழியெங்கும் துரத்திக் கொண்டு யாசகம் கேட்போர்! நீ தீர்க்க சுமங்கலியா இருப்ப! புள்ள குட்டியெல்லாம் நல்லாருக்கும்! ஏம்மா!  கொஞ்சம் காசு குடுத்துட்டு போனாத் தான் என்ன! பெரிய பேகெல்லாம் மாட்டிட்டு போற! ஓடு! ஓடு! நீ எங்களுக்கு குடுக்காம எப்படி போறன்னு பார்க்கலாம்! அவளுக்கு மட்டும் குடுத்தா ஆச்சா! இப்படியும் சிலர்! ஒருத்தர் ரெண்டு பேர் அல்ல! குறைந்தபட்சம் ஐம்பது பேராவது இருக்கிறார்கள்!


அங்கிருந்து வெளியே வந்து இரண்டு கிமீ தொலைவில் 'இனாம்' என்ற இடத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்கும் சென்று வந்தோம்! சமயபுரம் மாரியம்மன் பிறந்த தலம் இது என்று சொல்லப்படுகிறது! சமயபுரம் மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வருபவர்கள் இங்கே தான் வருகின்றனர்!


இந்தக் கோவிலுக்கு போகும் பாதையில் ஒழுங்கான சாலைகளும் இல்லை! கருங்கல் பாதை தான்! அதில் சற்று தொலைவு செருப்பில்லாமல் நடக்கவே சிரமமாக இருந்தது! ஆனால் மக்கள் இங்கே அலகு குத்துதல், அங்க பிரதட்சணம் செலுத்திய நேர்த்திக்கடனை பார்த்த போது நாம் ஒன்றுமே இல்லை  என்று தோன்றச் செய்தது!


இது ஆன்மீக பூமி! இங்கு பக்தியால் பிணைக்கப்பட்ட மனிதர்களால் உருவான தேசம் இது! நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!


******


மஹாசிவராத்திரி - 08 மார்ச் 2024:



பெண் எனும் சக்திக்கு தன் உடம்பில் சரிபாதியைத் தந்திட்ட ஈசனை போற்றும் நாள் இன்று! அடிமுடி காண இயலாத அந்த பரம்பொருளினை வணங்கி நாடும் வீடும் நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்வோம். இன்றைய நாளில் அபிஷேகப் பிரியனான ஈசனுக்கு நம்மால் இயன்ற திரவியங்களை கோவிலில் தந்தும், வீட்டில் பூஜை செய்தும் வழிபடலாம்! தேவார திருவாசகப் பதிகங்களைச் சொல்லியும் கேட்டும் அந்த இறைவனைத் துதிப்போம்.


ஓம் நமசிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி! ஹர ஹர மஹாதேவ்! 🙏 🙏


மஹாசிவராத்திரி நிவேதனமாக சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நெய் விட்டு அல்வாவாக கிளறி செய்திருந்தேன்! வீட்டு பூஜையை முடித்து விட்டு அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று முதல் கால பூஜையின் தீபாராதனையை பார்க்க முடிந்தது!


இரண்டாம் கால பூஜைக்காக பால் மற்றும் பூஜை பொருட்களை கொடுத்து விட்டு பிரசாதத்துக்கான வரிசையில் நின்று சுடச்சுட வெண் பொங்கலையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்!


இன்றைய நாள் இனிய நாள்!


******


மகளிர் தினம் - 08 மார்ச் 2024:



இவள்!


ஒவ்வொரு நாளும் நிமிடமும் தனக்கு தரப்பட்ட சவால்களை திறம்பட செயல்பட்டு சாதித்துக் கொண்டிருப்பவள்! அன்பு, பாசம், தாய்மை, காதல், வீரம், துணிச்சல், தைரியம், உழைப்பு என்று பல உணர்வுகளின் கலவை இவள்! தன் குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும் எத்தனையோ துயரங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு செல்பவள்! தியாகங்களைச் செய்கிறாள் என்பதற்காக இவளை உரசிப் பார்த்தால் அவர்களை பொசுக்கும் வல்லமையும் பெற்றவள்! 


பெண்ணைக் கொண்டாடும் இந்த சமூகத்தில் தான் பிஞ்சுக் குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாமல் இருக்கிறது! பெண்ணைப் போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் மிருகங்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பது மிகவும்  வேதனையான விஷயம்! நிச்சயம் இந்த நிலை மாறி பெண்ணை பாதுகாக்கணும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கணும்! நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் சக்தி பெண்!


மங்கையர் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!


******


தலையெழுத்து மாறிய நாள் - 08 மார்ச் 2024:


இந்த தினத்தில் தான் 'அவளும் அவனும்' முதன்முதலாக சந்தித்துக் கொண்ட நாள்! பிடித்திருக்கிறது! ஓகே! என்று சொன்னதால் அன்றிலிருந்து தன்னுடைய தலையெழுத்தே மாறிப் போய்விட்டதாக 'அவன் அவளிடம்' எப்போதும் சொல்வதுண்டு...🙂 


இன்று தான் 'பஜ்ஜி சொஜ்ஜி' சாப்பிட்டு ஓகே என்று சொன்ன நாள்! அட! பஜ்ஜியை இல்லங்க...🙂 பெண் பார்த்த நாள்..🙂



*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

  1. அரங்கன்,சமயபுரத்தாள்,சிவராத்திரி என தல தரிசனங்கள் மனதுக்கு இனிதாக இருந்திருக்கும்.

    வெள்ளிக்கிழ‌மை அல்வா நன்றாக உள்ளது.

    மகளிரை போற்றுவோம் . அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  2. 'வெள்ளிக்கிழ‌மை" தட்டச்சுப் பிழை. சக்கரை வள்ளிக் கிழங்கு என வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  3. ""தலை எழுத்து மாறிய நாள்"" ஹா...ஹா...
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. தன் தோழி ஆண்டாளைக் காணாமல் ஏக்கத்துடன் காத்திருக்கும் லஷ்மி! வருகின்ற பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய் என்ற பாகனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு செய்து கொண்டிருந்தது!//

    செல்லக்குட்டி ஆண்டுவுக்கு என்னச்சு? ரொம்ப சமத்துக் குட்டி. ஸ்ரீரங்கம் போயிருந்த போது (அப்போ மின்னல் போல வந்து உங்களையும் ரோஷ்ணியும் பார்த்துவிட்டுப் போனேனே அப்பதான்..அதுக்கப்புறம் அந்தப் பக்கம் வரவில்லை.) பார்த்து பேசி காணொளி எடுத்திருந்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் ஆண்டாள், சில சமயங்களில் லக்ஷ்மி. விசேஷ நாட்களில் இருவரும் என மாற்றி மாற்றி இருப்பார்கள் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. தாயாருக்கு எல்லா உற்சவங்களுமே இங்கேயே தான்! அவள் 'படி தாண்டா பத்தினி!' பெருமாள் தான் இங்கே வருவார்! என்று தோழியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது…

    இந்தாங்க! தாயார் பிரசாதம்! என்று எதிர்பார்க்காத நேரத்தில் கைநிறைய பன்னீர் ரோஜாக்களை கொடுத்துச் சென்ற பெண்மணி!//

    Blessings!

    சமயபுரத்தாள் கோயில் படங்கள் மிக அழகு.

    யாசிப்போர் பற்றிச் சொல்லியது - இப்படியான Sentiment attack/blackmail ஒரு சிலர் உடனே பயந்து போடுவாங்க. என் தங்கையுடன் சென்றால் உடனே உணர்ச்சிவசப்பட்டு அவள் போடுவாள், நான் கண்டு கொள்ளவே மாட்டேன் எனக்கு இப்படியான வார்த்தைகள் கிடைக்கும். என் தங்கையை மகராசி, மாங்கல்யம் அது இது என்பார்கள்!!! இப்படியும் சிலர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்த விஷயங்கள் குறித்தான தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. ஆதிமாரியம்மன் பற்றித் தெரிந்தது.

    //மஹாசிவராத்திரி நிவேதனமாக சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நெய் விட்டு அல்வாவாக கிளறி செய்திருந்தேன்!//

    சூப்பர்! இப்படி எல்லாம் படங்கள் போட்டு ஆர்வத்தைக் கிளறிவிடறீங்களே ஆதி!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா....

    சகி யில் அல்வா, கேசரி, போளி, காரப் போளி, பாயாசம் என்று நிறைய...இப்ப இனிப்பில் செய்வதில்லை காரத்தில் செய்வதுண்டு. எங்களுக்கு நல்லதாமே! அதனால்.

    பாருங்க நீங்க என்னதான் இறைவன் பத்தி எழுதினாலும் முதல்ல என் கண்ணு மேய்வது பிரசாதம் சாப்பாடு இதில் தான்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் வெளியிட்ட விஷயங்கள் குறித்தான தங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி கீதா ஜி.

      பிரசாதம், சாப்பாடு - கண்கள் அதில் படுவது தானே பெரும்பாலும் வாடிக்கை - எல்லோருக்குமே! :)

      நீக்கு
  7. பஜ்ஜி சொஜ்ஜி, அவன் அவள் கதை நீங்க எழுதியிருந்தீங்களே அதனால் நினைவிருக்கிறது!!!! தலையெழுத்தே - ஹாஹாஹாஹா...வாழ்க்கையே மாறித்தான் போகிறது!

    இந்த முறை சிவராத்திரியும் பெண்கள் தினமும் ஒரே நாளில் சிறப்புதான். நான் நினைத்துக் கொண்டேன் நீங்க சொல்லியிருக்கீங்க அர்த்தநாரீஸ்வரர் என்று.

    ஆனால் ஏனோ பெண்கள் தினம் என்று சொல்வதில் மனம் வேதனையாக இருக்கு. பச்சிளம் பெண் குழந்தை பற்றிய நிகழ்வு....மனதை ரொம்ப வேதனைப்படுத்தியது. எப்போது பெண் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடிகிறதோ அன்றுதான் பெண்கள் விடுதலை பெண்கள் நாள் எனலாம். என்று என் மனம் நினைக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் தினம் - தனியாக ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. எல்லாக் கோயில்களின் தரிசனமும், படங்களும், சிவராத்திரி பிரசாதம் எல்லாமே நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  9. கோயில் தரிசனம் அருமை.
    நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!//

    ஆமாம். நல்லதே நடக்கட்டும்.

    சர்க்கரை வள்ளி கிழங்கு ஹல்வா அருமை.
    பெண் பார்த்த நாளை அருமையாக சொன்னீர்கள் ஆதி.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் வெளியிட்ட தகவல்கள் குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. சுவாரஸ்யமான எழுத்துகள்.  பக்தி சுவை அதிகம் இருக்கும் பதிவு.  எங்கள் சமீபத்தைய அங்கு விஜயம் கடந்த பிப்ரவரி!  அரங்கனையும், சமயபுரம் பார்த்து வந்தோம் நாங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் சமீபத்தில் இங்கே வந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. கதம்பம் சிறப்பாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....