அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
தொடர்ந்து பதிவுகள் எழுதி வந்ததில் மீண்டும் ஒரு இடைவெளி! சென்ற முறை போலல்லாது மாதக்கணக்கில் இடைவெளி விட்டுவிடாமல் நாட்கணக்கில் மட்டுமே இடைவெளி! 14-ஆம் தேதி வெளியிட்ட பதிவிற்குப் பிறகு ஐந்து நாட்கள் எந்த பதிவும் வெளியிடவில்லை. இதோ இன்றும் எப்போதும் போல அதிகாலையில் வெளிவராமல் மதிய நேரத்தில் ஒரு பதிவு! என்ன பதிவு? அடுத்த பயணத் தொடர் தான். எங்கே பயணம்? எப்போது சென்ற பயணம்? என வரிசையாக கேள்விகள் வரலாம். கேள்விகள் வருவதற்குள் முடிந்த அளவு நானே பதில்களை இந்தப் பதிவு வழி தந்து விடுகிறேன்.
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
நெய்வேலி நகரிலிருந்து தலைநகர் தில்லி வந்து முப்பத்தி மூன்று ஆண்டுகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது… வட மாநிலங்களில் பல முறை பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன் என்றாலும் ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனதுக்குள் இருந்தது. அப்படி என்ன ஆசை… எனக்கு ஒரு ஆசை என்றாலே அது பயணம் குறித்ததான ஆசையாகத் தான் இருக்கும் என்று என்னைத் தெரிந்த அனைவருமே சொல்லி விடுவார்கள்… ஆமாம் அப்படி ஒரு பயண ஆசைதான்.
தலைநகர் தில்லியில் இத்தனை ஆண்டுகள் இருந்த பின்பும் அந்த ஆசை நிறைவேறாமல் இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற, கடந்த டிசம்பர் மாதம் ஒரு வாய்ப்பு அமைய, உடனடியாக இரண்டு கைகளாலும் அணைத்து அந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தேன். வாய்ப்பு கிடைத்தவுடன் ஆசையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்து கொண்டு புறப்பட்டு விட்டேன். அந்த ஆசை என்ன? எங்கே இந்தப் பயணம்? சொல்கிறேன்.
நிறைவேறிய ஆசை…
ஹரித்வார், காசி போன்ற நகரங்களுக்கு பலமுறை பயணித்து இருந்தாலும் அது போன்ற நகரங்களில் குறைந்தது ஒரு வாரமேனும் தங்கி இருக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசையாக இருந்தது. தொடர்ந்து ஒரு வாரம் அங்கே இருக்கும் விதமான வாய்ப்பு இது வரை அமைந்தாலும் ஏனோ செல்லவில்லை. இப்படி ஒரு வாய்ப்பு அமைந்து அங்கே செல்வதற்கு 32 வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது.
டிசம்பர் 2023-இல் சனி, ஞாயிறு, திங்கள் (23-25 டிசம்பர் 23) என மூன்று நாட்கள் தொடர்ந்து அலுவலகத்திற்கு விடுமுறை. அதன் பிறகு நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டால் இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை. மொத்தமாக ஒன்பது நாட்கள் கிடைக்கும் என்பதால் எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற இது தான் சரியான வாய்ப்பு என்று தோன்றியது. சரியாக இதே நாட்களில் காசி மாநாகரில் இரண்டாம் முறையாக “காசி தமிழ் சங்கமம் 2.0” நடந்து கொண்டிருந்தது. அங்கே எனது நண்பர் ஒருவர் தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு மேல் அலுவலக ரீதியாக தங்கி இருக்கிறார் என்பது தெரிந்ததும், நிச்சயம் இது சிறப்பான வாய்ப்பாக அமையும் என்று தோன்ற உடனடியாக முடிவெடுத்து விட்டேன். காசி எனும் வாரணாசி நகருக்கு பயணித்து சுமார் ஒரு வாரம் தங்கலாம் என புறப்பட்டேன்.
எப்படி பயணம் செய்தேன்? எந்த இரயில், பயணம் எப்படி அமைந்தது போன்ற தகவல்கள் தொடர்ந்து எழுதுகிறேன்.
வாரணாசி பயணத்திட்டம்…
வாரணாசி செல்லலாம், ஒரு வாரத்திற்கு மேல் அங்கே இருக்கலாம் என முடிவு செய்தவுடன் இணையத்தில் முன்பதிவு செய்வதற்காக தேட ஆரம்பித்தேன். தலைநகர் தில்லியில் இருந்து வாரணாசி சுமார் 750 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. விமானப் பயணம் என்றால் கட்டணம் ஆயிரக்கணக்கில் இருக்கும். Redbus மூலம் முன்பதிவு செய்து பேருந்தில் பயணிக்கலாம் என்றாலும் குறைந்தது 14 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கும்.
அதனால் தில்லியிலிருந்து இரயிலில் பயணிப்பது தான் சாலச் சிறந்தது. இந்திய இரயில்வேயின் IRCTC தளத்தில் பார்க்க எனக்கு கொஞ்சம் ஏமாற்றம். வாரணாசி செல்லும் அனைத்து இரயில்களில் பார்த்தாலும் Waitlisted Tickets மட்டுமே இருந்தன. முன்பதிவு செய்தாலும் பதிவு செய்த இருக்கைகள் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. கடைசி வரை பார்க்கலாம் இல்லையெனில் TATKAL மூலம் முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படி அதுவும் கிடைக்கவில்லை எனில் 14 மணி நேர பேருந்து பயணம் தான் செய்ய வேண்டும் - காசி விஸ்வநாதர் தரிசனம் கொடுக்க முடிவு செய்து விட்டால் ஏதேனும் வழி காட்டுவார் என்று நினைத்துக் கொண்டேன்.
தொடர்ந்து அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலைகள். பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது என்பதால் தினம் தினம் அலுவலகத்தில், பன்னிரெண்டு மணி நேரம், பதினைந்து மணி நேரம் என தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். காசி பயணம் குறித்து எதுவுமே திட்டமிட முடியவில்லை. பயணம் செய்ய நினைத்தது சனிக்கிழமை என்பதால் வெள்ளி (22 டிசம்பர் 2023) அன்று TATKAL மூலம் முன்பதிவு செய்யலாம்… எல்லாம் வல்லவன் விரும்பினால் நிச்சயம் பயணிக்க வழி காட்டுவான் என்று வேலைகளில் மூழ்கினேன்…
பிறகு என்ன ஆயிற்று? தொடர்ந்து சொல்கிறேன்… உங்களையும் இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருக்க வேண்டுகிறேன்.
பயணம் நல்லது… ஆதலினால் பயணம் செய்வோம். தொடர்ந்து பயணிப்போம் நண்பர்களே…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
/// காசி விஸ்வநாதர் தரிசனம் கொடுக்க முடிவு செய்து விட்டால் ஏதேனும் வழி காட்டுவார்.. ///
பதிலளிநீக்குஇதுதான் உண்மை..
வாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குவாரணாசியில் ஐந்து நாட்கள் தங்கியிருந்த நினைவு வந்தது. காசிராஜா அரண்மனை போன்ற, நான் செல்லாத இடங்களுக்கு நீங்கள் சென்றுவந்தீர்களா என அறிய ஆவல்.
பதிலளிநீக்குகாசிராஜா அரண்மனைக்கு நானும் செல்லவில்லை. பெரும்பாலான நேரம் நான் கங்கைக்கரையில் தான் இருந்தேன் நெல்லைத்தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
எனக்கும் இப்படியான ஆசைகள் நிறைய உண்டு வெங்கட்ஜி. பல நிறைவேறியதில்லை. நிறைய பல க்கள் சேர்த்துக் கொள்ளலம
பதிலளிநீக்குஉங்கள் காசி அனுபவங்களைத் தெரிந்து கொள்ள ஆவல். வாசிக்கிறேன் ஆனால் கருத்திட முடியுமா தெரியலை. நாளை முதல் கொஞ்ச நாள் வலைப்பக்கத்திலிருந்து அப்பீட்.
கீதா
நிறைவேறா ஆசைகள் - இப்படி நிறைய ஒவ்வொருக்கும் இருக்கலாம் கீதா ஜி. கிடைத்ததை வைத்து சந்தோஷப்பட வேண்டியது தான்.
நீக்குசில நாட்கள் வலைப்பக்கத்திலிருந்து அப்பீட் - ஓகே! வேலைகள் சிறப்பாக நடக்கட்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
காசி பயணம் நினைக்கவே சிலிர்க்கிறது. " எல்லாம் அவன்செயல்" நிச்சயமாக. எமக்கு எல்லாம் காசி மண் உங்கள் பயணத்தில்தான் .தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு