அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
பிறந்த நாள் - 25 மார்ச் 2024:
நான் இன்னும் சின்னப் பெண் அல்ல! வாழ்வின் அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டேன்! என்று அன்றாடம் மனது சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது! அதற்குண்டான பக்குவம் என்னிடம் வந்துவிட்டதா?? நான் அதை எப்படி ஏற்றுக் கொள்கிறேன்??
அப்பா அம்மாவுக்கு செல்லமாக வலம் வந்தது ஒரு நிலை! கணவனையே உலகமாக எண்ணி அவரிடம் நல்ல பெயர் பெற்றிட ஏங்கியது ஒரு நிலை! குழந்தையை வளர்ப்பதை பற்றிய சிந்தனையை மட்டுமே கொண்டது ஒரு நிலை! இப்போது இந்த 42ல் பற்றுகளை சற்று தள்ளி வைத்து என்னை நானே உற்று நோக்கி கவனிப்பது ஒரு நிலை!
பிறந்தது முதலாக இத்தனை வருடங்களில் என்ன செய்துவிட்டேன் என்று சுய அலசல் செய்து பார்க்கிறேன்! இந்த சமுதாயத்திற்கு என்னால் ஏதும் பயன் இருந்ததா? யாரையெல்லாம் நோகடித்தேன்? அல்லது காயப்படுத்தினேன்? இத்தனை வருடங்களில் கனவுகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், அன்புக்கும், சொல்லுக்கும் கட்டுப்படுதல் என்று பல உணர்வுகளுக்குள் பின்னிப் பிணைந்து தான் காலத்தை கடந்திருக்கிறேன்!
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்று எப்போதும் இருந்ததில்லை! அதை ஒரு சிறப்பான நாளாய் நினைத்துக் கொண்டிருக்கவும் தோன்றுவது இல்லை! எல்லா நாளையும் போல இன்றும் ஒருநாள் அவ்வளவு தான்! அம்மா வைத்து தந்த குலோப்ஜாமூனும், பாயசமும் இன்னும் அடிநாக்கில் தித்திப்பதால் எனக்காக நான் எதுவும் செய்து கொள்வதில்லை…:)
தன்னுடைய வாழ்த்தே முதல் வாழ்த்தாக இருக்கணும் என்று நினைத்து போட்டிப் போட்டு வாழ்த்துகளால் என்னை மகிழ்வித்த என்னவரும், மகளும் இன்றைய நாளை இனிதே புலர வைத்தார்கள். ❤️❤️
இந்த மாதிரிப் புடவை உங்கிட்ட இல்ல தானே! டிசைன் ரொம்ப அழகா இருக்கு! உயரமும் இருக்கு! எனக்கு வெச்சுப் பார்த்தேன்! சரியா இருக்கு! என்று என்னவரின் இந்த வருட அன்புப் பரிசாக இரண்டு புடவைகள்! நண்பர் ஒருவரிடம் பிறந்தநாளுக்கு முன் கொடுக்கச் சொல்லி கொடுத்தனுப்பி இருந்தார்!
இணைய உலகில் முகநூலிலும் வாட்ஸப்பிலும் பிறந்தநாள் வாழ்த்துகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! இன்றைய நாள் இனிய நாள்!
*******
அன்பு சூழ் உலகு! - 26 மார்ச் 2024:
நேற்றைய என் பிறந்தநாளில் தங்களின் பொன்னான நேரத்தை எனக்காக செலவிட்டு வாழ்த்துகளை அள்ளி வழங்கிய அன்புள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அன்பான வாழ்த்துகளால் நேற்றைய பொழுது இனிமையானது!
*******
வாசிப்பு! - 26 மார்ச் 2024:
சமீபகாலமாக கிண்டிலில் மாத சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் தொடர்ந்து நிறைய மின்னூல்களை வாசிக்க முடிகிறது! அச்சுப் புத்தகங்களை வாசிக்கும் உணர்வுக்கு நிச்சயம் ஈடாகாது தான் என்றாலும் ஒரு சில வசதிகள் இந்த மின்னூல்களுக்கு உள்ளன என்று தான் சொல்லணும்! முக்கியமாக இடவசதியும் பராமரிப்பும் இதற்கு தேவையில்லை!
என்னைப் போல எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைத்தல், அவ்வப்போது அலமாரிகளை சுத்தம் செய்து கொண்டே இருத்தல் என்று இருப்பவர்களுக்கு இந்த மின்னூல் வாசிப்பு அவர்களின் வேலையை குறைக்கும் அல்லது எளிதாக மாற்றும்!
இந்தக் கிண்டிலில் நிறைய எழுத்தாளர்களின் எழுத்துகளை தேடித்தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன்! ஒரு சில கதைகள் மனதில் பதிந்து போய்விடுகின்றது! ஒரு சிலவற்றை உடனுக்குடன் பதிவாக எழுதி பகிர்ந்து கொள்கிறேன்! இன்னும் சிலவற்றை தலைப்பால் கவரப்பட்டு வாசிக்கத் துவங்கி தொடர்ந்து வாசிக்கவும் முடியாமல் அப்படியே விட்டுவிட்டு வெளியில் வந்திடவும் முடியாமலும் போய்விடுகிறது!!
அன்றாடம் சிறிது நேரமாவது புத்தக வாசிப்பு என்பது எல்லோருமே கடைபிடிக்க வேண்டியது தான்! வாசிப்பு நம் மனதை ஒருமுகப்படுத்தும்! பக்குவப்படுத்தும்!
*******
இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பேஸ்புக்கிலும் தாமதமாகத்தான் சொன்னேன் என்று நினைக்கிறேன்!! இங்கும் சொல்லி விடுகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் சிந்தனைகள் அபாரம்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார். தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குகிண்டிலில் வாசிக்கும் வழக்கம் இல்லை. PDF ல் அவ்வப்போது வாசிப்பேன். அதுவே சிரமமாகத்தான் இருக்கிறது! அதாவது திருப்தி இல்லாததால். அதே சமயம் புத்தகங்களாக வைத்திருப்பதை காப்பாற்றி வைப்பதும் சிரமம் என்பதும் அனுபவபூர்வமாக தெரிகிறது!
பதிலளிநீக்குPdf எனக்கு ஒத்து வருவதில்லை! ஏனென்றால் நான் எழுதுவது வாசிப்பது எல்லாமே மொபைலில் தான். Pdfஆக வாசிக்கும் போது எழுத்துகள் சின்னதாகவும், இப்படியும் அப்படியுமாக நகர்த்தி வாசிக்கணும். அதை பார்க்கும் போது கிண்டிலில் பக்கங்களை புரட்டுவதும் வாசிப்பதும் எளிது. என்ன இருந்தாலும் புத்தகத்தை கையில் வைத்து வாசிக்கும் இன்பம் வராது...:)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
புத்தக வாசிப்புக்கு இணையாக மின்னூல்கள் வராது. மனதிலும் தங்காது என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குஉண்மை தான். ஆனால் சில செளகரியங்களையும், அசெளகரியங்களையும் பற்றி யோசிக்கும் போது மின்னூல்கள் சிறப்பானது தான். நானும் உங்களைப் போல மின்னூல் வாசிப்பதில் ஆர்வம் இல்லாமல் தான் இருந்தேன்..:)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவெங்கட் புடவையை வைத்துப் பார்த்து வாங்கியதை சொன்னது மகிழ்ச்சி.
என்றும் அன்புடன் இருங்கள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா. டிசைனை விட உயரம் தான் எங்கள் வீட்டில் முக்கியமானது ஆயிற்றே..:)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதி. வாசிப்பு தொடரட்டும்.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாசிப்பு அனுபவம் நன்று.