திங்கள், 25 மார்ச், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள் - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ஹிம் மஹோத்ஸவ், தில்லி ஹாட் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கி இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வந்தே பாரத் இரயில் வசதிகள் மற்றும் எனது அனுபவங்கள்:


சென்ற பகுதியில் வந்தே பாரத் இரயில் மூலம் வாரணாசி நோக்கி பயணிப்பதற்குச் செய்த ஏற்பாடுகள் குறித்தும் தாமதமாக வந்த இரயில் குறித்தும் பயணம் துவங்கியது குறித்தும் எழுதி இருந்தேன்.  முந்தைய பகுதியில் பதிவு செய்தது போல தலைநகர் தில்லியிலிருந்து வாரணாசி நோக்கி மாலை 03.00 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் இரயில், சுமார் ஒரு மணி 35 நிமிடம் தாமதமாக 4.35 மணிக்கு தான் புறப்பட்டது. வட மாநிலங்களில் குளிர் நாட்களில் இப்படி தாமதம் ஆவது வழக்கமான விஷயம். அதிகாலை, இரவு நேரங்களில் இருக்கும் அதீதமான பனிமூட்டம் காரணமாக இரயில், விமானம், பேருந்து என அனைத்தும் தாமதம் ஆகும் இல்லை எனில் ரத்தாகும். காலை 06.00 மணிக்கு வாரணாசியில் இருந்து தில்லி புறப்பட்ட இரயில் பனி மூட்டத்தில் சிக்கி தாமதம் ஆனது. அதனால் திரும்பிச் செல்லும் போதும் புறப்படத் தாமதம்.


இரயில் ஊழியர்களுக்கு தயார் ஆக கொஞ்சம் கூட நேரம் இல்லாமல் போக அவர்கள் தர வேண்டிய சேவைகள் தாமதம் ஆனது. Shatabdi, Rajdhani வண்டிகள் போலவே இந்த வந்தே பாரத் இரயிலிலும் வசதிகள் உண்டு. பயணிகள் வந்தவுடன் அவர்களுக்கு தண்ணீர் (இரயில் நீர்) பாட்டில், ஆங்கில நாளிதழ் போன்றவற்றை தருவார்கள். மற்றும் சிற்றுண்டியும் உண்டு. வண்டி பயணிக்கும் நேரம் பொருத்து உணவும் வழங்குவார்கள். உணவுக்கான கட்டணம் நம் பயணக் கட்டணத்தில் சேர்த்து வாங்கி விடுவார்கள். நமக்குத் தேவை இல்லை என்றால் முன்பதிவு செய்யும்போதே அதைக் குறிப்பிட்டால் உணவுக்கான கட்டணம் வாங்குவதில்லை. எனது பயணத்தில் எனக்குக் கிடைத்த உணவு வகைகள் குறித்து பார்ப்பதற்கு முன்னர் இந்த இரயில் குறித்த சில எண்ணங்களையும் தகவல்களையும் பார்க்கலாம். 


வந்தே பாரத் இரயில்… சமீப காலமாக அதிகம் பேசப்படும் ஒரு இரயில்… ஆதரவாகவும் எதிராகவும் நிறையவே குரல்கள்… அரசாங்கத்திற்கு/ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் இந்த இரயில் தேவையற்றது என்றும் மற்றவர்கள் இப்படி ஒரு இரயில் நம் நாட்டிற்கு தேவை தான் என்றும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவரவர்க்கு அவரவர் சொல்வது தான் சரி. இதிலும் நிறைய அரசியல்… எப்போதுமே நான் அரசியல் குறித்த எனது எண்ணங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை என்பது என்னை அறிந்தவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். 


என்னைப் பொறுத்தவரை பயணத்திற்கான எல்லா வசதிகளும் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சின்னச் சின்ன ஊர்களுக்கும் நிச்சயம் தேவை. எவ்வளவுக்கு எவ்வளவு போக்குவரத்து வசதிகள் இருக்கின்றதோ அவ்வளவு முன்னேற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தில்லி நகரிலிருந்து வாரணாசி வரையான சுமார் 760 கிலோ மீட்டர் தொலைவினை வந்தே பாரத் வருவதற்கு முன்னர் குறைந்த பட்சம் 10.15 மணி நேரத்திலிருந்து அதிக பட்சமாக 18.45 மணி நேரம் இரயில்கள் எடுத்துக் கொண்டன. 


வந்தே பாரத் இரயில் வசதி வந்த பிறகு இதே தொலைவு பயணிக்க எடுத்துக் கொள்ளப்படும் நேரம் எட்டு மணி நேரம் மட்டுமே. ஒரு மணிக்கு அதிகபட்ச வேகமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை இந்த வந்தே பாரத் இரயில் தொடுகிறது என்பதால் சராசரியாக மணிக்கு 90-95 கிலோமீட்டர் பயணித்து விடுகிறோம் என்பது சிறப்புதானே. இவ்வளவு வேகமாக பயணித்தாலும் இரயில் உள்ளே அமர்ந்து பயணிக்கும்போது அதிர்வுகள் தெரிவதில்லை என்பதும் கூடுதல் சிறப்பு. 


ஒவ்வொரு பெட்டியிலும் உள்ளே இருக்கும் LCD திரையிலும் பயணம் குறித்த தகவல்களும் இந்திய இரயில் குறித்த தகவல்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. பெட்டிக்குள் CCTV வசதிகள், ஓட்டுனருடன் அவசரகால கட்டங்களில் பேசக்கூடிய வசதி, ஒவ்வொரு இருக்கையின் கீழும் charging வசதிகள், அடுத்த இரயில் நிலையங்கள் குறித்த தகவல்களைச் சொல்ல ஒலிபெருக்கி வசதிகள்  என நிறையவே வசதிகள் உள்ளன. பெட்டிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கின்றன என்றாலும் அதனை சரியாக பராமரிக்கவும் செய்கிறார்கள் என்பது சிறப்பு. ஆனால் பயணிக்கும் மக்கள் இன்னமும் அதனை சரிவர பராமரிக்க உதவி செய்வதில்லை என்பதையும் கண்கூடாக பார்க்க முடிந்தது. 


கட்டணம்:


ராஜதானி எக்ஸ்பிரஸ் - 11.25 மணி நேரம் - 3A கட்டணம் 2295/-


ஷிவ் கங்கா எக்ஸ்பிரஸ் - 10.05 மணி நேரம் - 3A கட்டணம் 1140/- 


வந்தே பாரத் இரயில் - 08.05 மணி நேரம் - CC கட்டணம் 1740/-




சிறிது நேரத்தில் சிற்றுண்டி வந்து சேர்ந்தது (படம்). கொடுத்த சிற்றுண்டியில் இருந்தவை - ஒரு கச்சோடி, Gadbad Mixture என ஒரு மிக்சர் பாக்கெட், எள்ளு மற்றும் caramel கலந்த பாப் கார்ன் (இப்படி ஒன்று நான் கேள்விப்பட்டதில்லை!) இஞ்சி தேநீர் மற்றும் கச்சோடிக்கு தொட்டுக்கொள்ள tomato sauce. மிக்சர் தயாரித்த கம்பனி இதுவரை கேள்விப்பட்டதில்லை! பெயர் நேனி நீமி என்று வித்தியாசமாக! எல்லாம் அடித்து விளையாடினார்கள். பலர் பிரிக்காமல் வீட்டுக்கு எடுத்துச் செல்ல பைகளில் வைத்துக் கொண்டார்கள். 



நசீப் (NASEEB) என உருது வார்த்தை ஒன்று உண்டு. பொதுவாக ஒரு விஷயம் உனக்கு நடக்காது என்பதைச் சொல்ல இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. இது இன் நசீப் இல் இல்லை என்பது போல….. தனியாக பயணிக்கும் எனக்கு ஜன்னல் ஓர இருக்கை பதிவு செய்து கொண்டாலும் அதில் உட்கார்ந்து பயணிக்கும் நசீப் எனக்கு இருப்பதில்லை. இந்த முறையும் அப்படியே. என் பக்கத்தில் இருந்த பெண்மணி அவரது கணவர், மாமியார், மகன் மற்றும் மகள் என ஐந்து பேர் வந்திருந்தார்கள். மகள் மூன்று வயதிற்கும் குறைவானவர் என்பதால் சீட்டு இல்லை. நாலு பேருக்கும் தனித்தனி இருக்கை என்பதால் என்னை எழுப்பி விட்டார்கள்! 


அக்குழந்தைகள் படுத்தியபாடு குறித்து எழுத ஆரம்பித்தால் ஏகப்பட்டது எழுதலாம். வண்டியில் ஒரே களேபரம். குழந்தைகளின் அம்மாவும் எனக்குப் பக்கத்தில் அமர்ந்து படுத்தல். இருக்கையில் சம்மணம் போட்டு அமர்கிறேன் என்று என்னை இடித்துத் தள்ளிக் கொண்டே இருந்தார். நானும் எவ்வளவோ ஓரமாகச் சென்றாலும் இடிப்பது நிற்கவில்லை. குடும்பமே மொத்தமாக சக பயணிகளை படுத்திக் கொண்டு இருந்தார்கள். தற்பெருமை அடித்துக் கொண்டும், சத்தமாக திட்டிக் கொண்டும், செல்லமான சண்டைகள் போட்டுக் கொண்டும் ஒரே தொல்லை. தொல்லைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.


இரவு உணவு: (படம் எடுக்கவில்லை) :(


ஆலு மட்டர், தால் (நன்றாக இருந்தது), பனீர் சப்ஜி, சாதம், மஞ்சள் நிறத்தில் இரண்டு ரொட்டி (பெட்டியில் பயணித்த மூதாட்டி ஒருவர் சொன்னது - வாழ்க்கையில் இப்படி மஞ்சள் ரொட்டி சாப்பிட்டதில்லை. மஞ்சள் பொடி டப்பா மாவில் விழுந்து விட்டது போலும்!), தயிர், ராகி லட்டு….. மிஸ்ஸி ரொட்டி என்பது மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றாலும் இரயிலில் கொடுத்தது மிஸ்ஸி ரொட்டி அல்ல!


அலைபேசி தொல்லைகள்: 


இரவு ஒரு மணிக்கு கூட அலைபேசியில் அழைப்புகள், சத்தமான உரையாடல், அரட்டை என தொடர்ந்தது. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாக இருந்து, விளக்குகளை அணைக்கும் வசதியும் இருந்தால் இரவில் பேச்சு தொல்லை இருந்திருக்காது. தொடர்ந்து ஒளிவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தது என்பதால் சரியாக தூங்க முடியாது.


வாரணாசி வந்து சேர்ந்தது நள்ளிரவு 01.35 மணிக்கு. வெளியே நண்பர் அனுப்பி வைத்த ஓட்டுநர் ராகுல் வர்மா (9336) வண்டியுடன் காத்திருந்தார். வெளியே வந்து அவரை அலைபேசியில் அழைக்க உடனே அவர் இருக்கும் இடம் சொன்னார். வண்டியில் புறப்பட்டோம். புறப்பட்ட சில நிமிடங்களில், வழியில் தேநீர் அருந்த வேண்டும், உறக்கம் வருகிறது என்று சொல்ல ஒரு இடத்தில் நிறுத்தி அவர்  தேநீர் அருந்திய பிறகே புறப்பட்டோம். என்னை விட்ட பிறகு அவர் எட்டு கிலோமீட்டர் பயணித்து வீட்டை அடைய வேண்டும். பார்த்து பத்திரமாக செல்ல அவருக்கு அறிவுரை சொன்னேன். பாவமாக இருந்தது. என்னால் ஒருவருக்கு கஷ்டம்…. அடுத்து என்ன? உறக்கம் தான்….


பதிவினை முடிக்கும் முன்னர் ஒரு விஷயம் - வந்தே பாரத் போன்ற எத்தனை வசதிகள் அரசு கொண்டு வந்தாலும் அதனை பராமரிப்பது அவர்களது கடமை மட்டும் அல்ல பயணிக்கும் பொது மக்களின் கடமையும் கூட என்பதை நம் மக்கள் உணர்ந்து கொள்வதில்லை என்பது வேதனையான உண்மை. இந்தப் பயணத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம். 


தொடர்ந்து பயணிப்போம்…..


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


15 கருத்துகள்:

  1. ஏதோ நினைவில், மனைவி கேட்டபோது, உணவைத் தவிர்க்கலாம் என்று சோல்லி, இரண்டு நாள் முன்பு ஷதாப்தியில் பெங்களூர்-சென்னை-பெங்களூர் பயணம் செய்தது நினைவில் வந்தது. மனைவியிடம் சொல்லிவிட்டேன்... இனி உணவுடன் புக் பண்ணிடி என்று. ஓரளவு தரமாகவே பார்க்கத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவின் தரம் ஓகே தான். இன்னும் நன்றாக இருக்கலாம் என்பது பெரும்பாலான பயணிகளின் எண்ணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. இரயில் மற்றும் போக்குவரத்து வசதிகள் பெருகப் பெருக முன்னேற்றம் வரும். பலர் புதிய வேகமான இரயில்களில் பயணக் கட்டணம் அதிகம் என்று புலம்புகிறார்கள். தனியார் பேருந்தில் பயணம் செய்தால் எவ்வளவு அணௌகரியம் எவ்வளவு தாளிக்கிறார்கள் என்பது தெரியும்.

    இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது சிறு வயதிலிருந்தே வரும் பழக்கம். இதற்கும், பணத்திற்கோ, வேலையாட்களை வைத்துக்கொள்வதற்கோ சம்பந்தமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட தூரப் பயணங்களுக்கு தனியார் பேருந்துகள் சரி வராது! கட்டணமும் அதிகம் - சௌகரியங்களும் குறைவு. பலருக்கு இது புரிவதில்லை.

      சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே வர வேண்டும் - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. முதல் கருத்து ஏன் காணாமல் கோனது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்பேம் ஃபோல்டரில் இருந்தது. வெளியிட்டு விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. ரயில் பயணங்களில் சக பயணிகளால் ஏற்படும் சிரமங்கள் சொல்லிமுடிவதில்லை. ஏனைய பயணிகளுக்கு சிரமம் என்பதை எப்பதான் உணர்வார்கள்?

    நான் ரயிலில் பயணிபதில்லை சொகுசு பஸ்சில் பயணிப்பதால் அங்கு .ம் ஏறி இறங்கும் வரை சிலரால் போன் தொல்லைதான் அப்படி என்னதான் பேசுவார்களோ' 'ராஜா காது கழுதைக்காதுக்கு' நிறைய விசயங்கள் வரும்; )நாமும் கேட்டுக் கொண்டு பயணிக்க வேணாடியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜா காது கழுதைக்காதுக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கலாம்! ஹாஹா... உண்மை தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. எனக்கும் இப்படி நீண்ட தூர ரயில் பயணம் செய்ய ஆசைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் நீண்ட தூர ரயில் பயணம் வாய்க்கட்டும் கில்லர்ஜி.

      நீக்கு
  6. ரயில் பயணத்தில் நிறைய தொல்லைகள் உள்ளது சக பயணிகளால்.
    மற்றவர்களுக்கு கஷ்டமாக இருக்குமே என்பதை உணரவே மாட்டார்களா !

    //அதனை பராமரிப்பது அவர்களது கடமை மட்டும் அல்ல பயணிக்கும் பொது மக்களின் கடமையும் கூட என்பதை நம் மக்கள் உணர்ந்து கொள்வதில்லை என்பது வேதனையான உண்மை. //

    ஆமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவர் கஷ்டத்தினை உணர்வதில்லை என்பது உண்மை தான் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வந்தே பாரத்தில் பயணம் செய்யும் ஆசை எனக்கும் உண்டு. சமய சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும். விவரங்கள் அறிந்து கொண்டேன். மக்கள் பொதுச்சொத்து என்பது நம் பணம்தான் என்பதை எப்போது உணர்வார்களோ.. அதேபோல சகா பயணிகளுக்கு தொல்லை தரும் சில ஜென்மங்கள் எப்போது திருந்துவார்களோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தே பாரத் பயணம் - உங்களுக்கும் அமையட்டும் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகமும் அருமை. வந்தே பாரத் ரயில் பற்றிய தகவல்களும், கட்டண விபரங்களும் அனைவருக்கும் பயன்படும் விதமாக சொல்லியுள்ளீர்கள்.

    அதில் தரப்பட்ட உணவுகளும் பார்க்க நன்றாக உள்ளது. இரவு உணவு மெனுவும் நன்றாக உள்ளது.

    பயணிக்கும் போது சக பயணிகளின் தொந்தரவுகள் கொஞ்சம் இம்சைதான். பிறருக்கு தொந்தரவு தராமல் பயணிக்க வேண்டுமென்ற ஒழுக்கத்தை பயணிகள் எப்போது கற்றுக் கொள்ள போகிறார்களோ?

    காரில் இரவு நேரம் செல்லும் போது ஓட்டுனருக்கு களைப்பாக கண்கள் அயர்ச்சியாக இருந்தால் நமக்குத்தான் பிரச்சனை..! அவர்களின் நிலைபாடு அப்படி..! தொடரும் தங்கள் பயணத்துடன் நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....