புதன், 13 மார்ச், 2024

The Concept of Work From Home - பொறாமை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட இயற்கை அன்னையின் மடியில் - பயணத்தின் முடிவு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



The Concept of Work From Home (WFH) - என்னடா ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருக்கிறேனே என்று யோசிக்க வேண்டாம்.  தீநுண்மி வந்தாலும் வந்தது, இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இந்த மாதிரி ஒரு வசதியை - அதாவது நிறுவனத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவர்களது அலுவலகத்திற்கு வந்து செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், வீட்டிலிருந்தபடியே செய்யலாம் எனும் வசதியைக் கொண்டு வந்த பிறகு பலருக்கும் இந்த வசதி மிகவும் பிடித்திருக்கிறது.  குறிப்பாக இளைஞர்களுக்கு - திருமணம் ஆனவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களுக்கு இந்த வசதி மிகமிகப் பிடித்திருக்கிறது! வேலை நேரம் அதிகமாகிவிடுகிறது போன்ற சில சிக்கல்களும் தொல்லைகளும் இருந்தாலும், பலரும் இந்த மாதிரி வசதியை விரும்புகிறார்கள்.  எனது நட்பு வட்டத்திலும், தெரிந்தவர்கள் வீடுகளிலும் இப்படி வீட்டிலிருந்தே அவர்களது வேலைகளை முடித்துவிடும் சிலருடன் பேசியபோது அவர்கள் அனைவருமே நல்ல வசதி தான் என்றே சொல்கிறார்கள். 



வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, அலுவலகத்திற்கும் சென்று வேலைகளை பார்க்க வேண்டிய பெண்களுக்கு இந்த WFH வசதி மிகவும் பிடித்திருக்கிறது.  என்னதான் இந்த வசதியில் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்வதை விட அதிக நேரம் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் அவசர அவசரமாக வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகம் வரையிலான தூரத்தினை கிடைத்த வாகனத்தில் (பேருந்து, CAB, வாடகை வண்டிகள்) என பயணிப்பதும், அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால் அதற்காக தனியாக உடைகள், ஒப்பனை என நேரம் செலவழிப்பதும் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது குறைந்திருக்கிறது.  பெரிதாக எதுவும் தயாராக அவசியமிருப்பதில்லை என்பதால் இது ஒரு பெரிய வசதி என்று சொல்கிறார்கள். திருமணம் ஆன ஆண்களும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வதும் அதிகரித்திருக்கிறது என்றாலும் அவர்களுக்கும் இந்த வசதி பிடித்ததாகவே இருக்கிறது.  இதையெல்லாம் விட ஒரு சாராருக்கு இந்த வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு அதிக அளவில் பயன்படுகிறது - அவர்கள் திருமணம் ஆகா இளைஞர்கள்/இளைஞிகள் - குறிப்பாக இளைஞர்கள்!


நிறைய இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஏதேனும் ஒரு ஊருக்குச் சென்று அங்கே தங்கி தங்களது அலுவலக வேலைகளைப் பார்ப்பதோடு ஊரும் சுற்றி விடுகிறார்கள்.  எனது நட்பு வட்டத்தில் இருக்கும் இது போன்ற இளைஞர்களைப் பார்க்கும்போதும், அவர்களது பயணங்களைக் குறித்து கேட்கும்போதும், பயண விரும்பியான எனக்கு சற்றே பொறாமை எட்டிப் பார்க்கவே செய்கிறது - என்னதான் நானும் பல பயணங்கள் செய்திருக்கிறேன் என்றாலும்! சமீபத்தில் ஒரு நண்பர் கடந்த இரண்டு வருடங்களாக இது போன்ற WFH வசதி காரணமாக அவர் செய்த பயணங்கள் குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்! இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று கொண்டே இருக்கிறார். நினைத்த போது வீட்டிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராகச் செல்வது - பிடித்த இடத்தில் எவ்வளவு நாட்கள் தங்கமுடியுமோ அவ்வளவு நாட்கள் தங்குவது, அடுத்து எங்கே செல்லலாம் என அப்போதைக்கு அப்போது முடிவு செய்து அதனை நடத்துவது என்றெல்லாம் இருக்கிறார்கள்.  இது போன்ற இளைஞர்களை பார்க்கும்போதும், அவர்களது பயணங்களை, அனுபவங்களைக் குறித்துக் கேட்கும்போதும் நமக்கும் மகிழ்ச்சி பிறக்கிறது. 


சமீபத்தில் இப்படி ஒரு பயணத்தில் மோகன் என்றொரு நண்பர் எனது வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்தார்.  கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து புறப்பட்டவர் இவர்! இந்த இரண்டு மாதத்தில் இவர் பயணித்த இடங்களின் பட்டியல் நீண்ட ஒன்று - தமிழகத்திலிருந்து கேரளா. கேரளத்திலிருந்து கர்நாடகா. அங்கிருந்து கோவா. கோவாவிலிருந்து மும்பை. மும்பையிலிருந்து குஜராத் (Rann of Kutch!) - குஜராத்திலிருந்து ராஜஸ்தான் வழியே ஆக்ரா. ஆக்ராவிலிருந்து தில்லி வழி ஸ்ரீநகர், காஷ்மீர்! காஷ்மீரில் 25 நாட்கள் தங்கியிருந்த பிறகு தில்லி வந்து எனது வீட்டில் நான்கு - ஐந்து நாட்கள் தங்கியிருந்த பிறகு தமிழகம் திரும்பியிருக்கிறார்.  இத்தனை பயணங்களுக்கு ஆன நாட்கள் சற்றேறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல்! ஒவ்வொரு பயணத்திலும் எத்தனை எத்தனை அனுபவங்கள் அவருக்குக் கிடைத்திருக்கும், எத்தனை வித உணவுகளை ருசித்திருப்பார் (தில்லி வந்ததும் நல்ல தோசை சாப்பிடணும் என்றார்! அவரை நைவேத்யம் எனும் உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன்!)  என்றெல்லாம் யோசனை எனக்கு! இப்படி என்னால் பயணிக்க முடியுமா என்ற கேள்வியும் மனதுக்குள்! சில ஆசைகள் இருந்தாலும் நிறைவேறுவது சாத்தியமல்ல என்பது தெரிந்தே இருக்கிறது. 








அவர் தில்லியில் இருந்த போது, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் உலா வந்தோம்.  நான் ஏற்கனவே உலவிய இடங்கள் என்றாலும், அவருடன் உலா வந்து கொண்டிருந்தேன்.  சில படங்களை அவரது Samsung S-22 Ultra அலைபேசியில் எடுத்து என்னுடன் பகிர்ந்து கொண்டார்.  அப்படி எடுத்த சில படங்களை முடிந்த போது ஞாயிறு நிழற்பட உலாவாக பகிர்ந்து கொள்கிறேன்.  அவர் இன்றைய இளைஞர்களைப் போலவே Instagram மற்றும் Facebook போன்ற தளங்களில் இயங்குகிறார்.  முடிந்தால் அவரது அனுபவங்களை கேட்டு இங்கே வெளியிட நினைத்திருக்கிறேன். இல்லையெனில், படங்களையேனும் வெளியிட வேண்டும் எனக் கேட்டிருக்கிறேன்.  முடிந்த வரை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இன்றைய இளைஞர்கள் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.  வாழ்க்கையில் பல விஷயங்கள் இளமையாக இருக்கும் வரையே சாத்தியம் என்பதால் அவற்றையெல்லாம் முடிந்தபோதே அனுபவித்து விட வேண்டும் - குறிப்பாக பயணங்கள். 60 வயதுக்கு மேல், பணி ஓய்வு பெற்ற பின்னர் பயணிக்கத் தொடங்குவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அந்த வயதில் எல்லா இடங்களுக்கும் செல்வது சாத்தியமல்ல! வசதிகள் பல தேவையாக இருக்கும், இயலாமை வந்து சேர்ந்துவிடும், உடல் ஒத்துழைக்காது - இப்படி பல காரணங்கள் பயணிக்க முடியாமல் செய்து விடும்.  அதனால் முடிந்த வரை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்! முடிந்த போதே ஒரு Bucket List வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வரவேண்டும்! 


தில்லியில் அவர் இருந்த போது அவரது பல பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நானும் எனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.  பயணம் குறித்த சிந்தனைகள், மனிதர்களின் இயல்பு, உணவு, இயற்கை என பல விஷயங்களை எங்களால் பகிர்ந்து கொள்ள முடிந்தது - பயணத்தின் மீது இருக்கும் ஆர்வம் இருவருக்கும் பொது என்பதால் நிறைய விஷயங்களை எங்களால் பேசிக்கொள்ள முடிந்தது.  அதிலும் சில இரவுகள் பன்னிரெண்டு ஒரு மணி வரை பேசிக் கொண்டிருந்தோம் என்றால் பாருங்கள் - எத்தனை பேசியிருப்போம் என!  எனக்கும் WFH வசதி இருந்தால் எங்கெல்லாம் பயணம் செய்திருப்பேன் என்றும் சொல்லிக்கொண்டிருந்தேன்.  ஆசைகளுக்கு அளவேது! எல்லா ஆசைகளும் நிறைவேறாவிட்டாலும், சில ஆசைகளேனும், சில பயணங்களேனும் நிறைவேறியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே! பயணங்கள் நல்ல பல அனுபவங்களை நமக்குத் தருகின்றது! ஆதலினால் பயணம் செய்வோம்! 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. ஆம் நாஉம் இது போன்ற அதிர்ஷ்டசாலிகளை இடையிடையே சந்தித்திருக்கிறேன். இவர்களைப் போல்...நிறுவனத்திற்கும் சில நன்மைகள் இருக்க வேண்டும். அதனால்தான் அவர்களும் இப்படி ஒரு சலுகை கொடுக்கிறார்கள். என் நண்பர் ஒருவரும் சில மாதங்களுக்கு முன் (பணி ஓய்வு பெற்றவர்) ஒரு மாதம் வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் என்று தனியாக (அவர் ஒரு bachelor) போய் வந்தாராம். காஷ்மீர் என்றதும் எனக்கு ஆச்சரியம். பயமின்றி போகும் நிலை இல்லையா?

    உண்மையிலேயே இந்த work from home வேலையில் இருப்பவர்கள்அதிர்ஷ்டசாலிகள்தான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஷ்மீர் - நிறைய மாற்றங்கள் அங்கே வந்திருக்கிறது துளசிதரன் ஜி. இப்போது முன்பு போல பிரச்சனைகள் இல்லை. சுற்றுலாத் துறையில் நல்ல வளர்ச்சி வந்திருக்கிறது. இன்னமும் முன்னேற்றம் உண்டாகும் என்றே தோன்றுகிறது.

      அதிர்ஷ்டசாலிகள் தான் இது போன்ற இளைஞர்கள் - அதில் சந்தேகமில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  2. வீட்டிலிருந்து வேலை செய்வது பலருக்கும் வசதிகான் வெங்கட்ஜி. இங்கு இப்ப தண்ணிப் பிரச்சனை எனவே பல நிறுவனங்களும் இதை யோசிக்கிறார்கள். சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லி இருக்கிறார்கள். பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் செயலபடுத்தி இருக்காங்க. பருவ மழை தொடங்கும் வரை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூருவின் தண்ணீர் பிரச்சனை - வேதனை - கொஞ்சம் அரசியலும் கலந்திருப்பதாகத் தோன்றுகிறது கீதா ஜி.

      வீட்டிலிருந்து வேலை - நல்லதே என்று எனக்கும் தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. அவர்களது பயணங்களைக் குறித்து கேட்கும்போதும், பயண விரும்பியான எனக்கு சற்றே பொறாமை எட்டிப் பார்க்கவே செய்கிறது -//

    ஹைஃபைவ் ஜி!....எனக்கு ரொம்பவே பொறாமை.....!!!!!!

    என்னால் பல முடிவதில்லைன்னு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறாமை - நல்லதல்ல என்பது தெரிந்தே இருந்தாலும் பொறாமை எட்டிப்பார்ப்பதை தவிர்க்கமுடிவதில்லை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. ஒவ்வொரு பயணத்திலும் எத்தனை எத்தனை அனுபவங்கள் அவருக்குக் கிடைத்திருக்கும், எத்தனை வித உணவுகளை ருசித்திருப்பார் //

    ஆமாம் ஜி!! ஆஹா என்றிருந்தது

    (தில்லி வந்ததும் நல்ல தோசை சாப்பிடணும் என்றார்! அவரை நைவேத்யம் எனும் உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன்!) //

    நெட்டில் பார்த்துக் கொண்டேன்.

    // இப்படி என்னால் பயணிக்க முடியுமா என்ற கேள்வியும் மனதுக்குள்! சில ஆசைகள் இருந்தாலும் நிறைவேறுவது சாத்தியமல்ல என்பது தெரிந்தே இருக்கிறது. //

    எனக்கும் தோன்றும்...இதேதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்கள் எல்லோருக்கும் சாத்தியமில்லை தான். முடிந்தவர்கள் அனுபவிக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. அந்த நண்பர் அதிர்ஷ்டசாலிதான். கேட்கும் போது மகிழ்ச்சி ஒரு புறம் இன்னொருபுறம் ஏக்கம்....!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிர்ஷ்டசாலி நண்பர் தான். நல்லதே நினைப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. என்ன ஒரு ஐடியா...   இப்படி யோசித்து வாழ்க்கையை அனுபவிப்பார்கள் இருக்கிறார்களே....  சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையை நன்கு அனுபவிக்கிறார்கள் ஸ்ரீராம். மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. WFH பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள். இப்படி வீட்டில் இருந்தபடி வேலை செய்வது சிலருக்கு வேண்டுமானால் இந்தளவிற்கு இப்படியான அனுபவங்களைப் தரலாம். எல்லோருக்கும் எப்படியோ தெரியாது.! இந்தளவிற்கு தங்கள் நண்பர் ஊர்களை சுற்றி வருவது எனக்கே வியப்பாக உள்ளது. எங்கள் குழந்தைகளும் வீட்டில்தான் வேலை. ஆனால், ஒரு நாளில் அலுவலகம் சென்று வேலைப்பார்ப்பதை விட அதிமாக இங்கு செலவழிக்கிறார்கள். எப்போதும் மடிக்கணினியுடன்தான் உள்ளார்கள். (சமயங்களில் இரவு பத்துக்கும் மேல்) அவர்களிடம் சொன்னால் அவர்களுக்கும் சற்று பொறாமை வரும். ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி. WFH வசதி இருப்பவர்கள் அனைவராலும் இப்படி பயணிக்க முடிவதில்லை என்பதும் உண்மையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. //60 வயதுக்கு மேல், பணி ஓய்வு பெற்ற பின்னர் பயணிக்கத் தொடங்குவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அந்த வயதில் எல்லா இடங்களுக்கும் செல்வது சாத்தியமல்ல! வசதிகள் பல தேவையாக இருக்கும், இயலாமை வந்து சேர்ந்துவிடும், உடல் ஒத்துழைக்காது - இப்படி பல காரணங்கள் பயணிக்க முடியாமல் செய்து விடும். //

    நீங்கள் சொல்வது உண்மை. உடல் நலம் நன்றாக இருக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் பயணம் செய்து விட வேண்டும்.

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. சுற்றுப் பயணங்கள் இனிதானவைதான் இளம்வயது எதற்கும் ஏற்றது. அவர் கொடுத்து வைத்துள்ளார் தொடர்க அவர் பயணங்கள்.

    வயதானால் பல பயணங்கள் செல்லமுடியாத நிலையாகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....