ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கூட்டுக் குடும்பத்தை இழந்தோமா?



சில நாட்களுக்கு முன் தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் மேலே கேட்டகூட்டுக் குடும்பத்தை இழந்தோமா?” என்ற கேள்வியை என் மனதில் எழுப்பியது.  இன்றைய கால கட்டத்தில் பொருள் ஈட்டுவதற்காக சொந்த மண் விட்டு தேசத்தினுள் எந்த மூலைக்கும், ஏன் தேசத்தை விட்டு வெளி தேசத்திற்கும் சென்று விடுவது எல்லோருக்கும் தெரிந்தது தான்


அப்படிச் செல்லும் போது பொதுவாக நாம் மட்டுமோ அல்லது மனைவி-மக்கள் ஆகியோர் கூடவோதான் செல்கிறோம்.   அப்பா-அம்மா நம்முடன் வர இயல்வதில்லை.  ஆங்காங்கே தனித் தனிக் குடும்பங்களாக மாறி விட்டோம்

சரி என்னை யோசிக்க வைத்த அந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்.  அலுவலகத்தில் இருக்கும் ஒரு சக ஊழியர், தனது உத்திரப் பிரதேச கிராமத்தினை விட்டு, மனைவி மற்றும் ஒன்றரை வயது சிறு மகனுடன் தில்லி வந்து வசித்துக் கொண்டிருக்கிறார்.  அவரது தாய்-தந்தை கிராமத்தில் இருக்கிறார்கள்

சென்ற மாதத்தில் ஒரு ஞாயிறு அன்று மனைவி வழக்கம் போல் சில காலை வேலைகளை செய்து  விட்டு துவைத்த துணிகளை  காயப் போட்டு அதற்கு கிளிப் போடாமல் சமையல் வேலை செய்யப் போய் இருக்கிறார்.  ஹாலில் இப்போது தான் தவழ்ந்து போய்  எதையாவது பிடித்து எழுந்து நிற்கத் தொடங்கிய தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார் நண்பர்

அப்போது மனைவி சமையலறையிலிருந்துவெளியில் காற்று பலமாக அடிக்கிறது, கிளிப் வேறு போடவில்லை, நீங்கள் கொஞ்சம் போட்டு விடுங்கள்என்று கணவரிடம் சொல்ல, அவரோ குழந்தை விளையாடிக்கொண்டு தானே இருக்கிறான் என்று  வெளியே சென்று கிளிப் போட்டுக்கொண்டிருக்க, சில வினாடிகளில் வீட்டினுள் இருந்து பலமான சத்தம்.  உள்ளே விரைந்து வந்து பார்த்தால்

ஹாலில் இருந்த குழந்தை தவழ்ந்து போய் அங்கிருந்த தொலைக்காட்சி வைத்திருந்த சக்கரங்கள் வைத்த மேஜையினைப் பிடித்துக் கொண்டு எழ முயற்சிக்க என்ன நடந்ததோ தெரியவில்லை, குழந்தை அப்படியே கவிழ்ந்து விழ, தொலைக்காட்சிப் பெட்டி குழந்தையின் மேல் விழுந்து சுக்கு நூறாகியது.  குழந்தைக்கு வெளிப்புறம் ஒன்றும் அடிபடவில்லை எனிலும் உள்காயம் பட்டு காது வழியே ரத்தம் கசிந்து இருக்கிறது.  உடனே மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் செய்து பார்த்து சிகிச்சைகள் செய்தும் பலனில்லாது இறந்து விட, யாரை நோவது என்று தெரியாமல் ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள் அந்த நண்பரும் அவரது மனைவியும்

நடந்ததற்கு என்ன காரணம்?  இது தெரியாமல் நடந்து விட்ட விபத்தா, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தையுடன் எப்போதும் இருந்திருப்பார்களே என்று நினைப்பதா, குழந்தையைத் தனியே விட்டுச் சென்றது அத்தந்தையின் தவறோ, என்றெல்லாம் யோசித்தாலும் போன குழந்தையின் உயிர் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை நெஞ்சை அறைகிறது.

இப்போதெல்லாம் அப்பா-அம்மா, சித்தப்பா-சித்தி, அண்ணன்கள், தம்பிகள் அவர்களது குடும்பங்கள் என்று கூட்டுக் குடும்பமாக இருந்த காலமெல்லாம் மாறிப் போய் எல்லோரும் தனித் தனி தீவுகளாக மாறி விட்டோம்கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றே இல்லாது போய்விட்டதுஅப்படி மாறி விட்டதுதான்  தவறோ


குடும்பம் என்றால் என்ன என்று இப்போது கேட்டால் நிறைய பேர் இப்படி பதில் சொல்லக்கூடும் – “நான், என் மனைவி, மகன்/மகள்”.  தன்னைப் பெற்ற தாய்-தந்தை கூட இப்போது குடும்பத்தில் வருவதில்லை நிறைய வீடுகளில் என்பது வருத்தமான ஒரு விஷயம் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எது எப்படி இருந்தாலும், குழந்தையை இழந்த அந்த தாய்-தந்தையை என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறோம் நானும் சக ஊழியர்களும்

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்


50 கருத்துகள்:

  1. கூட்டுக்குடும்பங்கள் இப்போது கிராமங்களிலுமே குறைந்து வருகின்றன. இனி, அந்த வாழ்க்கைமுறை மீளும் என்ற நம்பிக்கையும் குறைந்தே வருகின்றது.

    பதிலளிநீக்கு
  2. நான், என் மனைவி, மகன்/மகள்”. தன்னைப் பெற்ற தாய்-தந்தை கூட இப்போது குடும்பத்தில் வருவதில்லை நிறைய வீடுகளில் என்பது வருத்தமான ஒரு விஷயம்/

    குடும்பம் ஆலமரமானால் ஆயிரம் பற்வைகள் இசைபாடும்.

    குறுகிப்போனால் தடுமாட்டம்தான்.

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான், கூட்டுக்குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதில் பாதுகாப்பே அதிகம்! மாறி வரும் கால சூழ்நிலையில் பலர் அதை விரும்புவதில்லை சிலருக்கு விரும்பியும் சாத்தியப்படுவதில்லை!

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. என் குழந்தை பிறந்த பொழுது கட்டிலை பிரித்து தரையோடு தரையாக போட்டு விட்டேன்... மேலே ஏறி கீழே விழுவதற்கு கீழேயே இருக்கலாமே என்ற எண்ணம்...

    பதிலளிநீக்கு
  5. இந்தத் துயரச் சம்பவத்துக்கு கூட்டு குடும்பம் இல்லாததே காரணம் என்று சொல்ல முடியாது. அனைவரும் சேர்ந்திருக்கும் இடங்களிலும் விபத்துகள் நடக்கத்தான் செய்கின்றன.

    அப்படியே நாம் வேலைநிமித்தம் இருக்குமிடத்தில் சேர்ந்திருக்க விரும்பினாலும், தம் மண்ணைவிட்டு வர பெரியவர்கள் விரும்புவதில்லை.

    என் தனிப்பட்ட கருத்து: தனிமை என்பதையே அறியாமல், காலம் முழுதும் குழந்தைகள், உறவுகள் என்று உழைத்து ஓய்ந்து போன முதியவர்களுக்கு - தம்பதியராய் இருக்கப் பெற்றவர்களுக்கு- முதுமையிலாவது தனிமை தரப்படவேண்டும். எனினும், நம் அருகில், அவசியமான உதவிகள் செய்யும் தூரத்தில், தங்க வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. காலத்தின் கோலம், கூட்டுக் குடும்பம் குறைந்து வருவது. மற்றபடி, எந்த சூழ்நிலையிலும், சிறு குழந்தையின் மீது சரியான கவனம் தேவை.. எனது மகன் இரண்டு வயதானபோது எனது கவனக் குறைவால் எலெக்ட்ரிக் ஷாக் பெற்றான்.. நல்ல வேலை.. எந்த ஆபத்தும் நேரவில்லை.

    பதிலளிநீக்கு
  7. “நான், என் மனைவி, மகன்/மகள்”
    என்ற நிலை பெரும்பாலும் எப்பவோ ஆகிவிட்டது.

    மிகுந்த கவலை தரும் நிகழ்வு :(

    பதிலளிநீக்கு
  8. கூட்டுக் குடும்பம் என்பது எட்டாக் கனவாகிவிட்டது...இப்பொழுது அர்த்தமே மாறிவிட்டது கணவன் மனைவி சேர்ந்து இருந்தாலே கூட்டுகுடும்பம் எனும் அளவில் போய்க் கொண்டிருக்கிறது....

    பதிலளிநீக்கு
  9. அநியாயமா ஒரு குழந்தையின் உயிர் போனதை நினைச்சு பரிதாபமாக இருக்குய்யா.

    பதிலளிநீக்கு
  10. கூட்டுக்குடும்பங்களின் அருமை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தான் நினைவுக்கே வரும். குழந்தை சின்னதாக இருக்கும் போது குழந்தையின்மேல்தாம் முழுகவனமும் இருக்கனும்.எப்ப அந்தக்குழந்தை என்ன செய்யும்னே தெரியாதே.

    பதிலளிநீக்கு
  11. தமிழ்மணம் 7 vgk

    மிகவும் வருத்தமான சம்பவம் தான்.

    கூட்டுக்குடும்பம் இனி திரும்பவாப்போகிறது?

    கண்ணுக்கு எட்டியவரை அது போன்ற அறிகுறிகளையே காண முடியாமல் மிகவும் வருத்தமாகவே உள்ளது. vgk

    பதிலளிநீக்கு
  12. நெஞ்சை உலுக்கிவிட்ட விபத்து.யாரை குற்றம் சொல்ல முடியும்? காலத்தின் கட்டாயம் இது மாதிரி கூட்டுக்குடும்பங்கள் இப்பொழுது வெகுவாக குறைந்துவிட்டது.
    குழந்தைகள் வளரும்வரை நாம் இன்னும் கொஞ்சம் விழிப்போடு இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. இது போன்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது. ஜூனியர் விகடனில் ஒரு முறை கட்டுரையாகவே போட்டிருக்கிறார்கள். பாதுகாப்பு பற்றிய குறிப்புகளை பகிர்ந்து கொள்ளாமையே காரணம். குடும்பத்தில் நிறைய பேர் இருந்தால் நிறைய விசயங்கள் தானாகவே தெரியும்.

    பதிலளிநீக்கு
  14. கூட்டுக் குடும்பமோ தனிக்குடும்பமோ குழந்தைகள் எக்காலமும் தனியே விடக் கூடாது. எங்கள் பேரன் சோஃபா பின்னால் போனால் கூட எனக்கு நடுக்கமாக இருக்கும். எதைப் பார்த்தானோ,எதை வாயில் போட்டுக் கொள்ளப் போகிறானோ என்று.

    பதிலளிநீக்கு
  15. @ சேட்டைக்காரன்: உண்மை.. கூட்டுக் குடும்பம் என்பதே இப்போது குறைந்து கொண்டே வருகிறது....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை...

    பதிலளிநீக்கு
  16. நல்ல பதிவு.
    கூட்டுக் குடும்ப சிறப்பை இழந்து வருகிறோம். இது ஒரு கசப்பான உண்மை தான்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  17. @ இராஜராஜேஸ்வரி: //குடும்பம் ஆலமரமானால் ஆயிரம் பற்வைகள் இசைபாடும்.// உண்மை.....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  18. @ சென்னை பித்தன்: //முதல்வருக்கு வாழ்த்துகள்//

    ???? வலைப்பூ மாறி வந்து விட்டதோ வாழ்த்துகள்... இருந்தும் நன்றி....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. @ நம்பிக்கைபாண்டியன்: // பலர் அதை விரும்புவதில்லை சிலருக்கு விரும்பியும் சாத்தியப்படுவதில்லை!// இரண்டுமே உண்மை.....

    தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அந்த விபத்து திடுக்கிட வைக்கிறது

    பதிலளிநீக்கு
  21. @ சூர்யஜீவா: //குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. // உண்மை தான்...

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @ ஹுசைனம்மா: நீங்கள் சொன்ன கருத்துகள் உண்மைதான்....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //கவனக் குறைவால் எலெக்ட்ரிக் ஷாக் பெற்றான்.. நல்ல வேளை.. எந்த ஆபத்தும் நேரவில்லை.// நல்ல வேளை....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. @ மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  25. வல்லிம்மாவின் கருத்தை வழி மொழிகிறென்.

    ஒரு வயசுக்கு மேல பெரியவங்களுக்கும் ஓய்வு தேவைப்படுது. சின்னக்குழந்தைகளுக்கு ஈடா விளையாட, கவனிச்சுக்க அவங்க உடல் ரீதியா ஃபிட்டா இருக்கற வரைக்கும்தான் பிரச்சினை இல்லை.

    பதிலளிநீக்கு
  26. @ பத்மநாபன்: //கூட்டுக் குடும்பம் என்பது எட்டாக் கனவாகிவிட்டது...இப்பொழுது அர்த்தமே மாறிவிட்டது கணவன் மனைவி சேர்ந்து இருந்தாலே கூட்டுகுடும்பம் எனும் அளவில் போய்க் கொண்டிருக்கிறது....// உண்மையான கருத்து.....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. @ MANO நாஞ்சில் மனோ: எங்களுக்கும் அந்த வருத்தம்தான் மனோ....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா..

    பதிலளிநீக்கு
  29. @ வை. கோபாலகிருஷ்ணன்: //கூட்டுக்குடும்பம் இனி திரும்பவாப்போகிறது?

    கண்ணுக்கு எட்டியவரை அது போன்ற அறிகுறிகளையே காண முடியாமல் மிகவும் வருத்தமாகவே உள்ளது.//

    ஆமாம்...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  30. @ ராம்வி: அந்த விபத்து நெஞ்சை உலுக்கியது உண்மை சகோ....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  31. @ சாகம்பரி: //குடும்பத்தில் நிறைய பேர் இருந்தால் நிறைய விசயங்கள் தானாகவே தெரியும்./// உண்மைதான்.


    தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. @ வல்லி சிம்ஹன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. @ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  34. @ மோகன் குமார்: உண்மை மோகன்... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  35. @ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.....

    பதிலளிநீக்கு
  36. குழந்தை இருக்கும் வீட்டில் எல்லா முன்னுரிமையும் குழந்தைக்கே. ஆக்கித் தின்னுவதுகூட அப்புறம்தான். அதுவும் தவழும் வயசில் இருக்கும்போது ரொம்பவே கவனமா இருக்கணும். துணியைக் காயப்போடும்போதே கையோடு க்ளிப் போட்டுருக்கலாம்.போட்டுருக்கணும்.

    இதே நியூஸியா இருந்துருந்தா....இப்போ அந்தப் பேரண்ட்ஸ் கம்பி எண்ணிக்கிட்டு இருப்பாங்க.

    கூட்டுக்குடும்பத்தில் மட்டும் விபத்து நடக்காதா என்ன?

    கூட்டுக்குடும்பம் காணாமப்போனதுக்குக் கல்விதான் காரணமுன்னு கொஞ்ச நாளா மனக்குடைச்சல். ஏன்னு குடைஞ்சுக்கிட்டே போனதில் கல்வி ஆப்டுச்சு. அந்தக் கச்சேரியை அப்புறம் வேறொரு நாளில் வச்சுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  37. குழந்தையின் இழப்பு என்னைக் கலங்க வைத்ததில் கொஞ்சம் அழுத்தமான
    வார்த்தைகளைப் பிரயோகித்துவிட்டேன்.
    மன்னிக்கணும் வெங்கட்:(

    பதிலளிநீக்கு
  38. மாறி வரவில்லை.இந்தவாரத் தமிழ்மண முதல்வர்!

    பதிலளிநீக்கு
  39. @ துளசி கோபால்: சரியான கருத்து. குழந்தை வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கே முன்னுரிமை....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. @ வல்லிசிம்ஹன்: //மன்னிக்கணும் வெங்கட்:(// எதற்கு பெரிய வார்த்தைகள்? ஒன்றும் அழுத்தமான வார்த்தைகள் இல்லையே...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  41. @ சென்னை பித்தன்: இந்த வாரத் தமிழ்மண முதல்வர்.... ஓ மிக்க மகிழ்ச்சி... படித்தவுடன் எனக்குப் புரியவில்லை. இன்று நீங்கள் சொன்ன பிறகு தான் தமிழ்மணம் பக்கத்தில் சென்று பார்த்தேன்... தகவலுக்கு நன்றி.

    தங்களது வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  42. கூட்டு குடும்பமா ? தனி குடும்பமா ? எப்படி இருந்தாலும்.....வீட்டில் உள்ள நமக்கு சிறு குழந்தையின் மேல் மிக கவனம் தேவை.......எதையும் எதிர்பார்த்து ...பொறுப்புடன் இருக்க வேண்டும்...இல்லையா ?

    பதிலளிநீக்கு
  43. @ அப்பாஜி: //வீட்டில் உள்ள நமக்கு சிறு குழந்தையின் மேல் மிக கவனம் தேவை.... // மிக உண்மையானதோர் கருத்து...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வீட்டுக்குள் இப்படியும் விபத்துகளா... அடக்கஷ்ட்டமே!!! சிறு குழந்தைகளை ரொம்ப ரொம்ப கவனமா தான் பாத்துக்கணும்.. ஆனா இதுக்கு கூட்டுக்குடும்பம் மட்டும் ஒரு காரணமில்லையே.. கூட்டுக்குடும்பமாகவே இருந்து, பெரியவர்கள் வேறு அறையிலோ, வெளியிலோ சென்றிருந்தால்...

    தம்பதிகள் இதிலிருந்து மீள இறைவனை வேண்டுவதை தவிர வேறென்ன சொல்ல...

    பதிலளிநீக்கு
  45. very shocking.It would be heartless to blame parents now,anyway,one should be extremely careful with toddlers. these days,many parents even do not want to settle with their sons/daughters,including mine.. it would be unfair to blame the younger generation alone for the nuclear family trend. i grew up in a nuclear family,ofcourse safe and happily.many of my friends were witnesses of their mothers being physically abused by their paternal grandmothers. what a childhood trauma. i am not sure if such things happen these days.

    பதிலளிநீக்கு
  46. @ ஸ்வர்ணரேக்கா: உண்மை. எது காரணம் என்று யோசிக்கத்தான் தோன்றுகிறதே தவிர யாரைக் குறை சொல்ல முடியும்...

    நண்பரும், அவரது மனைவியும் இதிலிருந்து மீளத்தான் கஷ்டப்படுகிறார்கள்..

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  47. @ dr.tj vadivukkarasi: Thanks for your first visit to my blog and the comments.

    Yes. I agree that it would be a fault to blame the parents for the loss of their child at this juncture. Also as you say, most of the elders, including mine [!] do not want to stay with their children. Their reasons may be correct according to them..

    What to do.... At this time, what we can do is say some soothing words to the parents...

    Thanks again..

    பதிலளிநீக்கு
  48. கூட்டுக்குடும்பம் என்றுமே நன்மையைத் தான் தரும் ஜி

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....