திங்கள், 3 ஜூலை, 2017

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! – பதிவர் சந்திப்பு – அடுத்த பயணத்தொடர்…

வந்துட்டேன்னு சொல்லு….  திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!



சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிவுலகம் பக்கம் வருகிறேன். வருடத்தின் ஆரம்பத்திலும், மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் தினம் தினம் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். மே மாதம் ஏழே ஏழு பதிவுகள், ஜூன் மாதத்தில் மூன்று பதிவுகள் என கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை! நடுவில் ஒரு மாதம் குடும்பத்தினருடன் முழுக்க முழுக்க நேரம் செலவு செய்ய வேண்டும் என ஒதுங்கி இருக்க, தலைநகர் வந்த பிறகு அலுவலகப் பணி எழுத விடாது தடுத்தது! பிறகு இணையத்தொடர்பில் சில சிக்கல்கள் – அது பற்றி தனியாக பதிவே எழுதலாம்! பதிவுகள் எழுதுகிறேனோ இல்லையோ, மற்றவர்களின் பதிவுகளைக் கூட படிக்க இயலாத நிலை! இதோ இப்போது மீண்டும் வந்தாயிற்று!
 
என்னதான் ”ஜியோ மேரே லால்” என்று வடக்கத்தியர்கள் வாழ்த்துவது போல, ஜியோ மூலம் அலைபேசியில் மின்னஞ்சல்களைப் பார்க்க முடிந்தாலும், அலைபேசி மூலம் பதிவுகள் எழுதுவதோ, அல்லது மற்றவர்களின் பதிவுகளைப் படித்து கருத்துகள் எழுதுவதோ எனக்கு ஒத்து வரவில்லை! ஒரு லைன் அதில் தட்டச்சு செய்வதற்குள் விரல்கள் “ப்ளீஸ் என்னை ஏன் படுத்தற!” என்று கதறுகின்றன! இக்கால இளைஞர்கள் இரண்டு விரல்கள் கொண்டு அந்த அலைபேசிகளில் எப்படித் தான் நடனமாடுகிறார்களோ! பதிவுகள் எழுதாத இந்த நாட்களில் நிறைய படிக்க முடிந்தது – கூடவே நிறைய ஓய்வு எடுக்கவும் முடிந்தது!

நேற்று தான் மீண்டும் இணைய இணைப்பு கிடைத்தது! இனிமேல் பதிவுலகம் பக்கம் எனது வருகை தொடர்ந்து இருக்கலாம் – வேறு எந்தச் சிக்கல்களும் இல்லாது இருந்தால்! வந்துட்டோம்ல! கபாலி மாதிரி! இனி தொடர்ந்து சந்திப்போம்.

தலைநகரில் ஒரு பதிவர் சந்திப்பு….

தலைநகருக்கு வருகிறேன் என எந்தப் பதிவரிடமிருந்து தகவல் வந்தாலும், அவர்களைச் சந்திப்பது வழக்கமாக இருக்கிறது. பதிவுலகத்திலிருந்து விலகி இருந்த இந்த நாட்களிலும் தமிழகத் தலைநகரிலிருந்து, இந்தியத் தலைநகருக்கு, ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக வருவதாக ஒரு பதிவரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.  குடும்ப நிகழ்விற்காக வருவதால் உங்களைச் சந்திக்க நேரம் இருக்குமா என்று தெரியவில்லை, வரும்போது தகவல் சொல்கிறேன் என மின்னஞ்சல் அனுப்பி வைத்திருந்தார். கண்டிப்பாக சந்திக்கலாம், உங்களுக்கு நேரம் இல்லை என்றால் பரவாயில்லை, இரயில் நிலையத்திலாவது வந்து சந்திக்கிறேன் என்று பதில் அனுப்பி இருந்தேன். 

வந்த பிறகு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, குடும்ப விழாவில் பிசியாக இருப்பதைத் தெரிவிக்க, நானும் அலுவலகப் பணிகளில் பிசி என்பதைச் சொல்லி, தலைநகரிலிருந்து திரும்பும்போது இரயில் நிலையத்தில் சந்திக்கிறேன் என்று சொல்லி அவர்கள் புறப்படும் தினத்தன்று இரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். பெயர் தான் புது தில்லி இரயில் நிலையம்! ஆனால் மிகவும் பழைமையானது! எப்போதுமே மனிதர் கூட்டம் தான் – “கடல் அலை போல திரண்டு வாரீர்” என்று யாருமே அழைக்காவிடிலும், சுனாமி போல, பேரலையாக வந்து கொண்டே இருப்பார்கள்! அந்தக் கூட்டத்தில் நாங்களும் சந்தித்தோம்!

என்னைக் கண்டவுடன், பையிலிருந்து ஒரு பையை எடுத்துக் கொடுத்தார்! பயனுள்ள அன்பளிப்பு! வீட்டில் செய்த புளியோதரை மிக்ஸ், நொறுக்ஸ், மாங்காய் தொக்கு எனக் கொடுத்த அவரது அன்பிற்கு நன்றி. அலுவலகத்திலிருந்து எட்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சமைத்துக் கொண்டிருந்த சமயத்தில் கிடைத்த புளியோதரை மிக்ஸ் ரொம்பவே உதவியாக இருந்தது அந்த சில நாட்கள். சில மணித்துளிகள் நின்று பேசிக் கொண்டிருந்த பிறகு நடைமேடைக்கு அவர்கள் செல்ல வேண்டிய தமிழ்நாடு விரைவு வண்டி வந்தது. அவரையும், அவரது தந்தையையும் பார்த்து பேசிக் கொண்டிருந்து விட்டு இரயில் புறப்படும் முன்னர் விடைபெற்றுக் கொண்டேன். 

இந்தச் சந்திப்பு பற்றி அவரும் எழுதுவார் என நினைக்கிறேன்! அது சரி, ”யார் அந்த பதிவர் என்று சொல்லவே இல்லையே?” என்ற உங்கள் கேள்விக்கு பதில் -  ”தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ்” வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி “கீதா ரெங்கன்” அவர்கள்!

அராக்கு பள்ளத்தாக்கு – பயணத் தொடர்!

ஹனிமூன் தேசம் பயணத்தொடருக்குப் பிறகு பதிவுகளே எழுதாத நிலை இருந்ததால், அடுத்த பயணத்தொடரை ஆரம்பிக்கவே இல்லை! நாளை முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாளாக அராக்கு பள்ளத்தாக்கு பயணத் தொடர் ஆரம்பிக்க இருக்கிறேன். வழமை போலவே உங்கள் அனைவருடைய வருகையையும், கருத்துப் பகிர்வுகளையும் எதிர்பார்த்து….. 

நாளைய பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

50 கருத்துகள்:

  1. இனி கலக்கல்ஸ் தான்..
    புளியோதரை சாப்பிட்ட புத்துணர்ச்சியோடு ஜிவ்வென்று எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்துணர்வோடு! :) எழுதிடலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

      நீக்கு
  2. வெல்கம் ஜி
    அந்த பதிவர் யாரென்று யூகித்தேன் முடிவில் சரியே.. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான யூகம் உங்களுடையது என்று தெரிந்து மகிழ்ச்சி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. நல்வரவு!

    குடும்பத்துடன் க்வாலிட்டி டைம் செலவு செய்வது பதிவை விட முக்கியம். எனக்கு மகிழ்ச்ச்சி :-)

    தொடர்கள் முடிவதில்லை என்பதுதான் தொடர்கதை ஆச்சே!

    எழுத ஆரம்பிங்க. நாங்க ரெடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்பத்துடன் க்வாலிடி டைம்! அதானே முக்கியம்!

      உங்கள் பயணத் தொடரும் சில பதிவுகளுக்குப் பிறகு அப்படியே இருக்கிறது. படிக்க வேண்டும்! விரைவில் படித்து விடுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  4. வணக்கம் சகோ மீண்டும் வந்தமைக்கு மகிழ்ச்சி ......வரவேற்கிறோம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து சந்திப்போம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. பயனுள்ள அன்பளிப்பு!//
    தனியாக சமைத்து சாப்பிடும் உங்களுக்கு பயனுள்ள அன்பளிப்பு.
    பயணத்தொடரை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  6. எங்க ஆளைக் காணோமே என்று நேற்றுகூட நினைத்தேன். விரைவில் பயணத் தொடரை ஆரம்பியுங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா தன்யனானேன்... உங்கள் அன்பிற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் ஜி!

      நீக்கு
  7. அன்பின் வெங்கட்..

    சில தினங்களுக்கு முன் கூட, தங்களை நினைத்துக் கொண்டிருந்தேன் - வெளிநாடுகள் எதற்கும் சென்றிருப்பீர்களோ - என்று..

    தொடரும் பதிவுகளுக்காக ஆவலுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்நாட்டிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் உண்டு! வெளிநாடு செல்லும் வாய்ப்பு இல்லை! பாஸ்போர்ட் கூட இல்லை! வாங்க வேண்டும்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. வெங்கட் ஜி!!! வாங்க வாங்க! காத்திருக்கிறோம்....

    நான் இன்னும் எழுதவில்லை உங்களைச் சந்தித்தது பற்றி!! எழுதவேண்டும் என்று நினைத்து இன்னும் எழுதவில்லை...எழுதுகிறேன் விரைவில்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது எழுதுங்கள்..... உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. தங்களை சந்திக்க காத்திருந்த நிமிடங்களில் அவரை அழைத் தேன். தங்கள் சந்திப்பு குறித்து அறிந் தேன்.
      அகமிக மகிழ்ந் தேன்.

      நீக்கு
    3. ஓ.... நீங்கள் அழைத்திருந்தீர்களா? மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பே சிவம்.

      நீக்கு
  9. உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி! உங்களின் பிசியான நேரத்திலும் சிரமம் பார்க்காமல் தில்லி ரயில் நிலையம் வந்து சந்தித்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஜி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமம் இல்லை! அலுவலக நேரத்தில் எனக்கும் சிரமமாகத் தான் இருந்திருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  10. வலையுலகை கலக்க வரும் உங்களை வரவேற்கிறேன் !
    திரு,துளசிதரன் அன் கீதா மேடத்தை தாங்கள் சந்தித்தது அறிந்து மகிழ்ச்சி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சந்தித்தது கீதா ரெங்கன் அவர்களை மட்டுமே.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  11. நல்ல பரிசைக் கொடுத்திருக்கார் திருமதி கீதா ரங்கன்! மீண்டும் புத்துணர்ச்சியோடு வருகை தந்தமைக்கு வாழ்த்துகள். தொடர்ந்து வரப் பிரார்த்தனைகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பரிசு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. முன்பொரு முறை தில்லையகத்து கீதா டெல்லியில் உங்களை சந்தித்ததுபற்றி ஆறடியாரும் நாலடியாரும் என்று எழுதி இருக்கிறாரே நான் எனது மின்னூல்களைப் பரிசாக அனுப்பி இருந்தேனே வாசித்தீர்களா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நூல்கள் கிடைத்தன. படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் புத்தகம் பற்றி எழுதுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  14. வாங்க...வாங்க..

    வாசிக்க காத்திருக்கிறோம்...

    அட கீதாஅக்காவை சந்தித்திர்களா...மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இதற்கு முன்னரும் சந்தித்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி.

      நீக்கு
  15. அராக்கு பள்ளத்தாக்கில் பராக்குப் பார்த்தவையா! வெரி குட்! நாங்களும் படிக்க வந்துடடோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அராக்கு பராக்கு - ரசித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  17. தங்கள் வருகை நல்வரவாகுக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  18. நீங்கள் பதிவு எழுதாத குறையை
    உணர முடிந்தது
    மீண்டும் அதே வேகத்துடன்
    வந்தது மகிழ்வளிகிறது
    தொடர வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  19. பதிவர் சந்திப்பு என்றாலே இனிமைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். சந்திப்புகள் தொடரட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  20. பதிவுகளை காணவில்லை என நினைத்தேன். நீங்கள், மதுரைத்தமிழன் என பலர் பதிவுகள் மிஸ்ஸிங்க. கீதாவும் இடையிடையே காணாமல் போன இரகசியம் இதுவே தானோ? எல்லோரும் மீண்டு வந்து பதிவிடுங்கள். காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மதுரை தமிழன் அவர்களும், இன்னும் சிலரும் காணவில்லை. விரைவில் அவர்களும் எழுத வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  21. மிகவும் மகிழ்ச்சி ஜி...

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  22. ஜியோ இணைய இணைப்பில் நன்றாக இருக்கலாம்! ஆனால் பேசுவதற்கு லாயக்கில்லை!

    எனக்கு இணைய இணைப்பு பிரச்னை இல்லை. கணினிதான் படுத்தலோ படுத்தல். என்ன ராம் சரி செய்தாலும், என்ன எஸ் எம் பி எஸ் சரி செய்தாலும் ப்ளூ ஸ்க்ரீன் எரர் மிகவும் படுத்துகிறது.

    கலக்குவதற்கு நீங்கள் ரெடி. படிப்பதற்கு நாங்களும் ரெடி!

    வருக... வருக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜியோ... உண்மை. பேசும்போது கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல இருப்பதாக வீட்டில் complaints!

      உங்கள் கணினி விரைவில் சரியாகட்டும். எல்லா files back up செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  23. இடைவெளிக்குப் பின் கண்டதில் மகிழ்ச்சி. தொடர காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  24. வருக வருக என வரவேற்கிறேன். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....