தங்க
மகன், தங்கத் தாரகை என்றெல்லாம் தங்கத்தினை அடைமொழியாக வைத்து சிலரை அழைப்பது நம் ஊரில்
வழக்கம் தானே… முன்னாள் முதல்வர், மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களுக்குக் கூட, தங்கத்
தாரகை விருது வழங்கப்பட்டதாக நினைவு [உக்ரைன் நாட்டில்
உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு, பெண்கள் முன்னேற்றத்திற்காக
தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்து வரும் பணிகளைப் பாராட்டி அவருக்கு இந்தத் தங்கத்தாரகை
விருது வழங்கியது – கொடுத்தது 2004-ஆம் ஆண்டு!]. நடிகைகள் சிலரையும் தங்கத்
தாரகை என்று அடைமொழி கொடுத்து அழைப்பது நமது பத்திரிக்கைகளின் வழக்கம்! நான் இன்று
சொல்லப் போவது தங்கத் தாரகை பற்றி அல்ல! தங்கத் தாரகன் என்று வேண்டுமானால் சொல்லலாம்!
“போல் பம், பம் போல்”என்ற தலைப்பிட்ட எனது
பழைய பதிவில் (11 ஆகஸ்ட், 2010) ஆடி மாதத்தில் ஹரித்வாரிலிருந்து கங்கை நீரை காவடிகள்
மூலம் எடுத்து வந்து தங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவிலில், சிவலிங்கத்திற்கு அபிஷேகம்
செய்வது பற்றி எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் தலைப்பினைச் சுட்டினால் படிக்கலாம்!
இப்போதும் ஆடி மாதம் – ஹரித்வாரிலிருந்து காவடி எடுத்து வருபவர்கள் விதம் விதமாக காவடிகள்
எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி காவடி எடுத்து வருபவர்களில் ஒருவரைப் பற்றி
தான் இன்றைய பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்! அவருக்கு தான் இந்த “தங்க” அடைமொழி! அவரது பெயர் Golden Baba! பாபாவாக இருந்தாலும் தங்க
பாபா! ஏன் இப்படிப் பெயர் என்பதைச் சொல்வதற்கு முன்னர் சில தகவல்கள்!
அவர்
உடலில் அணிந்துள்ள தங்கத்தின் மொத்த எடை – 14.5 கிலோ [கிராம் அல்ல! கிலோ தான்!] பிரமிக்க
வைக்கும் தகவல் தானே!
இந்த
வருடத்தின் புதிய நகை – சுமார் இரண்டு கிலோவில் ஒரு தங்கச் சங்கிலி!
கழுத்தில்
அணிந்திருப்பது மொத்தம் 21 தங்கச் சங்கிலிகள், 21 விதமான தெய்வ உருவங்கள் பதித்த டாலர்கள்…..
கடவுள்
சிலைக்கு “தங்கக் காப்பு” அணிவிப்பது போல இவர் ஒரு தங்கச் சட்டை கூட அணிந்து கொள்கிறார்!
கைகளில்
தங்கத்தால் ஆன அஸ்தகடகம் – அதாவது Armlet – அதாவது Bracelet ka Baap!
சமீபத்திய
சேகரிப்பு - 27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கை கடிகாரம்!
இவர்
தங்கி இருப்பது தலைநகர் தில்லியில் – ஒவ்வொரு வருடமும் ஹரித்வாரிலிருந்து வாகனங்கள்
தொடர ஊர்வலமாக வரும் இந்த Golden Baba-விடம் ஒரு BMW, இரண்டு Audi, மூன்று Fortuners,
இரண்டு Innova என மொத்தம் 18 வாகனங்கள் இவரிடம் இருக்கிறது! இதில் ஊர்வலமாக ஹரித்வாரிலிருந்து
தில்லி வரை காவடி எடுத்துக் கொண்டு வருகிறார்! அடுத்த வருடம் 25-ஆவது வருடமாம்! இந்த
வாகனங்களைத் தவிர, Hummer, Land Rover, Jaguar ஆகிய விலையுயர்ந்த வாகனங்களை வாடகைக்கு
எடுத்துக் கொண்டு ஹரித்வாரிலிருந்து திரும்புவதும் உண்டு!
இவருடைய
தற்போதைய சொத்து மதிப்பு – 150 அட இருங்க, கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்…. ரூபாய் 150
கோடி! தங்கம், வாகனங்கள் தவிர வீடுகளும் உண்டு!
இத்தனை
சொத்துக்கள் இருந்தால், அதுவும், 14.5 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு வலம் வந்தால்
சாதாரணமாக வர முடியுமா? இவருடைய பாதுகாப்பிற்காக 18 Bouncers, 8 காவல்காரர்கள் என பெரிய
பட்டாளமே இவருடன் வருகிறார்கள்!
வருடா
வருடம் இப்படி தங்கத் தாரகனாக ஊர்வலம் வரும் இவருக்கு தங்கத்தின் மீதான மோகம்
1972-73-களில் ஆரம்பித்திருக்கிறது! நான்கு தோலாவில் ஆரம்பித்து இத்தனை சேகரித்திருக்கிறார்.
குருகுலத்தில் படித்த இவரின் பால்யகாலம் அத்தனை சுகமானதாக இருக்க வில்லை. சன்யாசம்
வாங்கிக் கொள்வதற்கு முன்னர் ஹரித்வாரில் சின்னச் சின்ன வியாபாரங்களில் ஈடுபட்டு வந்த
இவர் பிறகு ஜீன்ஸ், துணி வியாபாரம் ஆகியவற்றைச் செய்ததோடு Property Dealer-ஆகவும் தில்லியின்
காந்தி நகர் பகுதியில் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்திருக்கிறார். இன்றைக்கு பாபா! அதுவும் Golden Baba என்றே அழைக்கப்படுகிறார்!
ஹரித்வாரிலிருந்து
புறப்பட்டு இப்படி தங்க மகனாக வரும் இவருடைய ஆசியைப் பெறவும், இவருடன் புகைப்படம்
[செல்ஃபி!] எடுத்துக் கொள்ளவும் வழியெங்கும் இருக்கும் மனிதர்கள் விரும்புகிறார்கள்.
இவரும் சந்தோஷமாக அவர்களுக்கு ஆசி வழங்குவதோடு புகைப்படங்களும் எடுத்துக் கொள்கிறார்கள்!
கூட வரும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், Bouncer-களுக்கும் கூடுதல் பொறுப்பு!
ஃபோட்டோ எடுக்க வரும் எவராவது பாபாவின் நகையை ஆட்டையைப் போட்டு விட்டால் என்னாவது!
எனக்கு
இருக்கும் ஒரு சந்தேகம் – இத்தனை நகைகளை – அதுவும் 14.5 கிலோ நகையைப் போட்டுக் கொண்டு
உலா வருவது கஷ்டமாக இருக்காதோ என்பது தான்! அதற்கு பதிலும் கிடைத்தது! இப்படி அதிக
எடை கொண்ட சங்கிலிகளை போட்டுக் கொள்வதால் கழுத்துப் பகுதியிலுள்ள நரம்புகள் ரொம்பவே
பலவீனமாக இருக்கிறது என்பதாலும், கழுத்து வலிக்கிறது என்பதாலும் குறைத்து விடலாமா என்று
யோசித்துக் கொண்டிருக்கிறாராம்! என்றாலும், தங்கம், வாகனங்கள் மீதான தனது மோகம் குறையவே
இல்லை என்கிறார் இந்த பாபா! – மோகத்தினை விட்டால் தானே சாமியார் என்ற கேள்விகளுக்கு
கண்டிப்பாக பதில் கிடையாது! – பதிலுக்கு பதில் Bouncer-ஐ விட்டு, கேள்வி கேட்பவரை வெளியே
தூக்கிப் போடச் சொன்னாலும் சொல்லலாம்!
கடைசியாக
ஒரு செய்தி – இவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா என்று தெரியாது – ஆனால் குழந்தைகள் இல்லை!
தனது மறைவிற்குப் பிறகு தன்னுடைய நகைகள், சொத்து ஆகிய அனைத்தும் அவருக்குப் பிடித்த
சீடருக்குத் தான் என்று சொல்கிறார் 55 வயதாகும் இந்த Golden Baba! இவரின் சீடராக விருப்பம்
உள்ளவர்கள், கண்டிப்பாக என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்! எனக்குத் தங்கத்தைக் கண்டால்
கொஞ்சம் அலர்ஜி! இல்லை என்றால் நானே சீடராக போய்விடலாமே! தங்கத் தாரகன் வேண்டாம்… தங்கத் தாரகை வேண்டவே வேண்டாம்!
நாளை
மீண்டும் சந்திப்போம்…..
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
தங்கம் இல்லாமல் திருமணம் ஆகாத தாரகைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவலாம் இந்த தங்க பாபா. பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலாம் என்பார்கள் அது போல் பொன்மாலைகளை கழற்றி ஏழைகளுக்கு உதவி பூமாலைகளை சூட்டிக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குபாபா மேலும் மக்கள் மத்தியில் உயர்வார். அப்போது உயர்ந்த உன்னத மனிதரிடம் [செல்ஃபி!] எடுத்துக் கொள்வது நியாயம்.
//பொன்மாலைகளை கழற்றி ஏழைகளுக்கு உதவி பூமாலைகளை சூட்டிக் கொள்ளலாம்!// நல்ல அறிவுரை. ஆனால் அவர் காதில் ஏறாது....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
காலக் கொடுமை.. வேறொன்றும் சொல்வதற்கில்லை..
பதிலளிநீக்குகாலக் கொடுமை - அதே தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
புதுமையா இருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயகுமார் ஜி!
நீக்குஎன்ன வெங்கட்ஜி! தங்கம், விலை உயர்ந்த கார்கள், சொத்துகள், சுகபோக வாழ்க்கை இருந்தல்தானே சுவாமிஜி தற்போது!! பிரமிக்க வைக்கிறார் இந்த சாமியார். ..யாரேனும்
பதிலளிநீக்குநல்லவர் ஒருவர் சீடராகப் போய்விட்டு எல்லாவற்றையும் பணமாக மாற்றி எடுத்து ஏழை மக்களுக்குக் கொடுத்துவிடலாம்!! அரசிடம் கொடுத்தால் அங்கும் ஆட்டையைப் போட ஆட்கள் உண்டு!!!
கீதா
நல்லவர் ஒருவர் சீடராகப் போய்விட்டு - நல்லவர் கிடைப்பது அரிதாக இருக்கிறதே இப்போது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
அவர் உடலில் அணிந்துள்ள தங்கத்தின் மொத்த எடை – 14.5 கிலோ..
பதிலளிநீக்குஅட கொடுமையே..
கொடுமையிலும் கொடுமை தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
அவனவன் தக்காளி கிலோ 150 ரூபாய் ஆகிவிட்டதே, என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டிருக்கும்போது, அளவுக்கதிகமான ஆடம்பரத்தில், அதுவும் 15 கிலோ தங்க நகை அணிந்து வாழ்பவரை, "சாமியார்" என்ற அடைமொழியோடு வெள்ளிக்கிழமை பதிவாப் போட்டிருக்கீங்களே நியாயமாரே?
பதிலளிநீக்குபுதிய செய்திதான். கடை வழிக்கு ஒரு குண்டூசி தங்கமாவது வருமான்னு இந்தச் சாமியார் நினைக்கலையே.
தக்காளி விலை 150 ரூபாய் ஆகிவிட்டதே என்ற கவலையில் இருக்கும் போது....
நீக்குநியாயமாரே! :) ஹாஹா.... இப்படி மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான்!
கடை வழிக்கு.... அது புரிந்தால் ஏன் இப்படி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
தங்கமான பதிவு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅன்பு நண்பரே
பதிலளிநீக்குதங்க மகன் – ரஜினிகாந்த் அல்ல – பாபா…. பகிர்வு படித்து மகிழ்ந்தேன். இந்த பாபாவை எங்கப்பா புடிச்ச! பேசாம சிஷ்யனாக போய்விடலாம் என நினைக்கிறேன். ஏற்பாடு செய்யவும். உமக்கு தேவையான கமிஷனை கொடுத்து விடுகிறேன்.
விஜயராகவன்
டில்லி
ஹாஹா நீங்க சிஷ்யனா போகப்போறீங்களா! சரி தான்.
நீக்குகமிஷன்! எனக்கு வேண்டாம்! தில்லியை அடுத்த காஜியாபாத் பகுதியில் தான் இருக்கிறார் இவர்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
அருமை நண்பரே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப்.
நீக்கு‘இப்படியும் சில மனிதர்கள்’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது. .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஇப்போதெல்லாம் பாபாக்கள் பெருகி வருகிறார்களோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
நீக்குஎன்னவோ போங்கள். எதுவும் நன்றாக இல்லை.
பதிலளிநீக்குஅடடா... உங்களைக் கஷ்டப்படுத்தி விட்டதே இப்பகிர்வு.
நீக்குஇப்படியும் சில மனிதர்கள்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
இப்படி ஒரு விளம்பரப் பிரியருக்கு அல்லக்கை சிஷ்யர்களுமா :)
பதிலளிநீக்குவிளம்பரப் பிரியர்! அல்லக்கைகள்! இருக்கத்தானே செய்வார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
இப்படியும் ஆசை.
பதிலளிநீக்குகஷ்டப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு உதவலாமே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு