புதன், 16 ஆகஸ்ட், 2017

புவியிலோரிடம் – பா. ரா. – வாசிப்பனுபவம்



"வாழ்க்கை விடுக்கும் சவால்களிலேயே ஆகப் பெரியதும் தீவிரமானதும் எது?

பிரத்யட்சமாக நேரும் அவமானங்களைத் தீரமுடன் எதிர்கொள்வதும் அதனைக் கொன்று மீள்வதும்தான் என்று கருதுகிறேன். அப்படியொரு தருணத்தில் என் மீட்சிக்கு எழுத்தை மட்டுமே உபாயமாக நம்பிச் செயல்படத் தொடங்கியபோது உதித்தது இந்த நாவலின் கரு" என்று முன்னுரையில் சொல்கிறார் நாவல் ஆசிரியர் திரு பா. ராகவன்.




"தொண்ணூறுகளின் மிகத் தொடக்கத்தில் எழுத வந்த பா. ராகவன், பிறவி சென்னைவாசி. பொறியியல் படித்துவிட்டு, தலைதெறிக்க எழுத்துக்கு ஓடி வந்தவர். சுமார் இருபது ஆண்டு காலம் பத்திரிகை மற்றும் பதிப்புத் துறையில் பணியாற்றிய பா. ராகவன் தற்சமயம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதி வருகிறார்" என்று நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவரைப் பற்றி நான் அறிந்தது நண்பர் பாலஹனுமான் அவர்களின் தளம் மூலமாகத் தான். பிறகு நண்பர் பாலகணேஷ் மூலமும் அவர் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. அவரது ருசியியல் கட்டுரைகளில் சில படித்து ரசித்திருக்கிறேன்.  சமீபத்தில் தான் முகநூலில் அவரது நட்பு வட்டத்தில் இணைந்திருக்கிறேன்.

சமீபத்தில் WWW.FREETAMILEBOOKS.COM தளம் மூலம் அவரது "புவியிலோரிடம்" நாவல் படிக்கக் கிடைத்தது.  மொத்தம் 112 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. ஏற்கனவே புத்தகமாக வெளியிட்டு இருந்தாலும், இப்போது கிடைப்பதில்லை என்பதால் மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். 

கதையின் நாயகன் வாசு. பன்னிரெண்டு பேர் இருக்கும் குடும்பத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பாஸ் செய்தது வாசு மட்டுமே.  வீட்டில் உள்ள எவருக்கும படிப்பு வராத நிலையில் எப்படியாவது பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என விரும்பும் அப்பா மற்றும் சகோதரர்கள்.  அண்ணன்கள் இருவரும் சேர்ந்து ஒரு தகிடுதித்தம் செய்வதன் மூலம் கல்லூரியில் சேர்கிறார் வாசு. செய்த தவறு மனதை உறுத்தியபடி இருக்க, மூன்றாம் வருடம் பரீட்சைக்கு முன்னர் கல்லூரியிலிருந்து ஓடிப் போகிறார். திருட்டு ரயில் ஏறி தில்லிக்கு வரும் அவர் சந்திக்கும் விஷயங்கள், பணம் சம்பாதிக்க செய்யும் தொழில்கள் என பலவும் நாவலில் பேசப்படுகின்றது.

மண்டல் கமிஷன் அறிக்கை வரப் போகின்ற கால கட்டங்களில் தில்லியின் பிரபல பத்திரிக்கை அலுவலகம் அருகே இருக்கும் UNI Canteen-ல் வேலை செய்தபடியே தன வாழ்க்கையில் முன்னேற துடித்துக் கொண்டிருக்கும் வாசு -  இருக்கும் இடம் காரணமாக அதிகார வட்டங்களில் நடக்கும் பல விஷயங்கள் அவருக்குத் தெரிய வருகின்றன.  அவை நல்லதா, கெட்டதா, ரிசர்வேஷன் யாருக்குத் தேவை என பல விஷயங்களை நாவலின் வாயிலாகச் சொல்கிறார் நூல் ஆசிரியர்.  நாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள் கீழே.

நள்ளிரவு இரண்டு மணிக்கு வாசுவுக்கு விழிப்பு வந்து விட்டது. சுள்ளிகள் பரப்பிவைத்தாற்போலக் கூடம் முழுவதும் கால்கள் நீண்டிருந்ததைத்தான்  முதலில் கவனித்தேன்.

படிப்பு, ரொம்பப் பெரிய விஷயம்டா வாசு. வணங்கிக் கூப்பிட்டாத்தான் வரும். அதுவும் எல்லார்கிட்டேயும் வராது. மெனக்கெடணும். பிராணனை விடணும்.

தன் குடும்பத்தில் யாருக்குமே ஏன் கல்வியில் நாட்டமற்றுப் போய்விட்டது என்று இப்போதும் அவன் யோசிக்க ஆரம்பித்தான். பேய் மாதிரி துரத்தும் வறுமை தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்று தோன்றியது. ஒன்பது குழந்தைகள்! அப்பாவின் இருநூறு, முன்னூறு ரூபாய் சம்பளத்தில் என்ன செய்திருக்க முடியும் அம்மாவால்?

ஆயுள் தண்டனை ரொம்ப நல்லது வாசு. அது குற்றவாளிகளைக் குதறிக்குதறி யோசிக்கவைக்கும், பண்படுத்தும். நான் கூட உருப்படாத வக்கீலாகத்தான் இருந்து சீரழிந்திருப்பேன். உன் மேம்சாபைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தான் நீதிபதியானேன்.

"கடன் தரவனும் கடவுளும் ஒண்ணு. கடவுளை ஏமாத்தலாமோ?"

கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு நூலிழைகளால் யாரோ மணி கோத்துக் கொண்டிருக்கிறார்கள். நெருக்கமாகவும் பிசிறுகளற்றும். நகக்கணு இடைவெளி அளவே வெளியில் நீட்டிக்கொண்டிருக்கிறது நூலிழையின் முனைகள். இழுத்து ஒரு முடிச்சுப் போட்டுவிடமுடியுமா என்பது தான் சவால்.

தேர்தல் வரும்போதெல்லாம் எனக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு வந்துவிடுகிறது. எத்தனை செலவு?

ஆனால் எப்படி உன்னால் சாப்பிட்டு எச்சில் பிரட்டித் துடைப்பது போல உறவுகளைத் துடைத்து எறிந்துவிட்டுக் கண்காணாமல் இருக்க முடிகிறது என்பது தான் புரியாத சங்கதியாக உள்ளது.

மனித வாழ்வின் அர்த்தமே, புரிந்து கொள்வது என்கிற ஒற்றைச் சொல்லில் முடிந்துவிடுவதாகத் தான் நான் நினைக்கிறேன்.

வணக்கம் ஒரு பெரிய வரமல்லவா? எனக்குள், என்னையொரு வில்லாக நான் உருவகப்படுத்திக்கொண்டது அப்போது தான். வில் வளைகிற அளவுக்கு அம்பு சீறிப்பாயுமல்லவா. தவிர, யாருக்குத் தான் தன்னை வணங்குபவனைப் பிடிக்காது?

இப்படி நிறைய விஷயங்களை புத்தகத்தில் இருந்து எடுத்துச் சொல்லலாம். ஆனாலும் எல்லாவற்றையும் இங்கே சொல்லிவிட முடியாது, சொல்லவும் கூடாது.

இப்புத்தகத்தினை தரவிறக்கம் செய்து படிக்கலாமே... தரவிறக்கம் செய்ய கீழே கொடுத்துள்ள புத்தகத்தின் தலைப்பில் சுட்டலாம்....


நாளை வேறோர் பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


22 கருத்துகள்:

  1. நீங்கள் சொன்ன அறிமுகங்களிலேயே எனக்கும் திரு பாரா அவர்களைத் தெரியும். ஒருமுறை புத்தகக்கண்காட்சியில் நான்கு ஐந்துபேர் புடைசூழ நின்று பேசிக்கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்தேன். இவரது நிலமெல்லாம் ரத்தம் இறக்கி வைத்திருந்தேன். படிக்கமுடியாமல் போனது.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவருடைய புத்தகம் அமேசான் தளத்திலும் கிடைக்கிறது. பார்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அருமையான விமர்சனம்
    அவசியம் தரவிறக்கம் செய்து படிக்கின்றேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது தரவிறக்கம் செய்து படியுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. அருமையான விமர்சனம் வெங்கட் ஜி! நீங்கள் கோட் செய்திருக்கும் வரிகள் பல நம் மனதில் தோன்றுவது போலவே...தரவிறக்கம் செய்துவிடலாம்...

    கீதா: பா ரா பற்றி நீங்கள் சொல்லியிருப்பது போலவே தான் எனக்கும் தெரியும். அவரது கட்டுரைகளை தமிழ் இந்துவிலும் (இப்போதும் எழுதுகிறார்..ருசி பற்றி) முன்பு சில இதழ்கள் கிடைக்கப் பெற்றால் அதிலும் இவரது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.

    புத்தக விமர்சனம் நன்றாக இருக்கிறது..வாசிக்க லிஸ்டில் நிறைய இருக்கிறது...இதையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்க வேண்டிய புத்தகங்கள் என பெரிய பட்டியலே என்னிடமும் உண்டு. படிக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  5. புவியிலோரிடம்-பா ரா அவர்களின் புத்தக விமரிசனம் நல்லா இருந்தது. குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் வரிகளும் அவரது ஆழ்ந்த சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. நல்பகிர்வு....

    ஒரு புதிய நூலுக்கான அறிமுகம் எனக்கு...நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  7. படிச்சு பார்க்குறேன்ண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  8. அருமை!விளக்கம் நன்று த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  9. இத்தனை வேலைகளுக்கிடையிலும் புத்தகம் படித்து விமரிசனம் செய்யும் உங்களுக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரத்திற்கு ஒரு புத்தகமாவது படிக்க நேரம் ஒதுக்க எண்ணம்... அது தான் சில நாட்களாக பழக்கமாகி இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  10. அருமையான திறனாய்வு. உங்களுக்கு பிடித்ததாகத் தந்திருக்கும் வரிகள் எல்லோருக்கும் பிடிக்கும்.

    எனக்கு மிகவும் பிடித்த வரி
    "கடன் தரவனும் கடவுளும் ஒண்ணு. கடவுளை ஏமாத்தலாமோ?"

    (ஒருவேளை வங்கியில் பணியாற்றியதால் இந்த வரி பிடிக்கிறதொ எனத்தெரியவில்லை.)

    இந்த புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது தரவிறக்கம் செய்து படியுங்கள் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....