சனி, 5 ஆகஸ்ட், 2017

போரா குஹாலு – போரா குகைகள் – அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 15

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


Bபோரா குஹாலு....


நுழைவாயில்....
Bபோரா குஹாலு....

கலிகொண்டா வியூ பாயிண்ட்-ல் நின்று இயற்கைக் காட்சிகளை ரசித்து சில பல புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிறகு அங்கே இருந்து மனமே இல்லாமல் நகர்ந்தோம். இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு, அலுவலகம், பதிவுலகம், முகநூல், தொலைக்காட்சி என அனைத்தையும் விடுத்து, இது போன்ற ஏதாவது ஒரு மலைப்பிரதேச கிராமத்தில், குடிசை வீட்டில் தங்கிக் கொண்டு, நதியிலோ, மலையருவியிலோ குளித்து, கிடைக்கும் காய்கனிகளை உண்டு, காலாற நடக்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும் போன்ற ஆசைகள் உண்டு. ஆனால் அப்படி நடக்க வேண்டும் என்றால் இன்னும் உழைக்க வேண்டும். இன்னும் சேமிக்க வேண்டும்! வேறு வழியில்லை!  



வறண்டு கிடக்கும் கோஸ்தானி ஆறு...
Bபோரா குஹாலு....

அப்படியே அமர்ந்து கொண்டு இருக்கலாம் என்று மனம் சொன்னாலும், வேறு வழியில்லை, பேருந்து ஓட்டுனர் இரண்டு முறை ஒலிப்பானை எழுப்பி, வாங்க போகலாம் என்று சொல்கிறார்! நானும் அங்கிருந்து புறப்பட்டேன். தொடர்ந்து ஓட்டுனர் அருகில் நானும் பயணத்தில் கிடைத்த நண்பிகளும் உட்கார்ந்து கொண்டு விசில் அடிப்பது, பாட்டு பாடுவது என உற்சாகமாக இருக்க, பேருந்து அடுத்த நிறுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தது.  அடுத்த நிறுத்தம் இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான இடம். அந்த இடம் Bபோரா குஹாலு என்ற இடம் – இதில் முதல் வார்த்தை ஒடியா வார்த்தை, இரண்டாம் வார்த்தை தெலுகு வார்த்தை! Bபோரா என்ற ஒடிய வார்த்தைக்கு “துளை” என்ற அர்த்தம்! இரண்டாம் வார்த்தை உங்களுக்குப் புரிந்திருக்கும் – ”குகை”!  ஆங்கிலத்தில் எழுதும்போது Borra என எழுதுவதால் ”ரா”வில் கொஞ்சம் அழுத்தம் தேவை!

எங்கே இருக்கிறது?


 இயற்கை வடித்த வடிவங்கள்....
Bபோரா குஹாலு....

விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் வழியில் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த குகைகள். கிழக்கு மலைத்தொடர்ச்சியில் இருக்கும் அனந்தகிரி மலைகளில் அமைந்திருக்கிறது இந்த குகைகள்.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1450 அடி உயரத்தில் இருக்கும் இந்தக் குகைகளுக்கு மேலாகத் தான் இரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது! அதன் வழியாகத் தான் நாம் இரயிலில் பயணம் செய்தோம் என்று தெரிந்தபோது மனதிற்குள் ஒரு கிலி! கீழே இவ்வளவு பெரிய குகை இருக்கிறதா! இரயிலின் எடையைத் தாங்குமா என்றெல்லாம் யோசித்தேன். குகைக்கு மேல் பல அடிகளுக்கு பாறை இருக்கிறது என்று தெரிந்து கொஞ்சம் நிம்மதி கிடைத்தது!

இயற்கையா – செயற்கையா?




இயற்கையின் படைப்பில்....
Bபோரா குஹாலு....

இந்தக் குகைகள் மனிதனால் அமைக்கப்பட்டவையா, அல்லது இயற்கையாக அமைந்தனவா? என்று கேள்வி வந்தால், அந்தக் கேள்வியே கொஞ்சம் அபத்தமானது தான். இத்தனை பெரிய குகையை இயற்கையே அமைத்திருக்கிறது. கோஸ்தானி ஆறு என்ற இப்பகுதியில் ஓடும் ஆறு, சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த இம்மலைகளில் முட்டி மோதி குகைகளை உருவாக்கி இருக்கிறது. அதற்கு பல லட்சக் கணக்கான வருடங்கள் ஆகியிருக்கலாம்! தண்ணீர் படப்பட, சுண்ணாம்புக் கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, சொட்டுச் சொட்டாக கரைய, குகை முழுவதும் பலப் பல உருவங்களில் அமைந்திருக்கின்றன. இவற்றை கசித்துளிப் படிவு என்று தமிழில் சொல்வார்களாம்! கிட்டத்தட்ட ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த குகை.

குகைகளுக்கு உள்ளே:


உட்புற வடிவங்கள்....
Bபோரா குஹாலு....

குகைகளின் வாயிலுக்குள் நுழைந்து உள்ளே சென்றால், வாவ்…. எத்தனை பிரம்மாண்டமாய் இருக்கிறது இந்த குகை. சில இடங்களில் 100 மீட்டர் அகலமாகவும், 75 அடி உயரமாகவும் இருக்கிறது இந்த குகை! சாதாரணமாக குகை என்றால் குறுகியதாகத்தான் பார்த்திருக்கிறோம். இந்த குகைகள் பெரிய அளவில் இருக்கின்றன.  உள்ளே நுழைந்ததும், பல இடங்களில் வண்ண விளக்குகள் அமைத்திருக்க, சுண்ணாம்புப் பாறைகள் தண்ணீரில் கரைந்து உருவான பல வடிவங்களைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வடிவமும் நமது கற்பனைக்கு ஏற்ற உருவத்தில் பார்க்க முடிகிறது. சில வடிவங்கள் சிவலிங்கம் போலவும், சிலுவை போலவும், சிவனும் பார்வதியும் அமர்ந்திருப்பது போலவும், தாயும் சேயும் அமர்ந்திருப்பது போலவும், முதலை, முனிவரின் தாடி போலவும் இருப்பதாக எங்களுடன் வந்த வழிகாட்டி சொல்லிக் கொண்டே வந்தார்.


குகைக்குள் இரட்டை நந்தி...
Bபோரா குஹாலு....


எப்போ வருவாரோ.... எந்தன் கலி தீர்க்க!
Bபோரா குஹாலு....

நிலவில் ஆயா வடை சுடுவது போன்ற காட்சி தான்! ஆனாலும், இயற்கை வடித்த உருவங்கள் சில இடங்களில் ரொம்பவே அழகாக இருக்கின்றன.  இன்னமும், தண்ணீர் சொட்டச் சொட்ட, சுண்ணாம்புப் பாறைகள் உருகி, உருவங்களை உருவாக்கியபடியே இருக்கின்றன. விளக்குகள் இருப்பதால் உருவங்களைத் தெளிவாக பார்க்க முடிகிறது. உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டால், உருவங்களை நீங்கள் விரும்பியபடி சொல்லிக் கொள்ளலாம்! ஒரு இடத்தில் சிவலிங்கமும், காமதேனு உருவமும் கூடத் தெரிகிறது. குகைகளுக்குள் சில வழிபாட்டுத் தலங்களும் உண்டு. குகைகளுக்குள், குறுகிய இரும்புப் படிகள் அமைத்து, அதன் வழியே சென்று மேலே இருக்கும் ஒரு சிவன் கோவில் பார்த்து வந்தது ஒரு த்ரில் அனுபவம்! கொஞ்சம் தப்பினால் நேரே 100 அடி கீழே விழ வேண்டியது தான்! படிகளுக்கு இரு பக்கமும் பெரிதாய் தடுப்புகள் இல்லை! சிவராத்ரி சமயங்களில் இப்பகுதி மக்கள் அனைவரும் இங்கே திரளாக வருகிறார்கள்.

எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?


மேலிருந்து ஒளி வருகிறதே!
Bபோரா குஹாலு....

கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டிபிடிக்கப்பட்டிருக்கலாம். ஆங்கிலேய அகழ்வாராய்ச்சி நிபுணர் வில்லியம் ஜ்யார்ஜ் கிங் என்பவரால் 1807-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று சிலர் சொல்ல, இல்லை, இல்லை, இது கண்டுபிடிக்கப்பட்டது எங்கள் முன்னோர்களான சில பழங்குடி மக்கள் தான் என்று சொல்கிறார்கள் பழங்குடி மக்கள். அதற்கு ஒரு கதையும் சொல்கிறார்கள்.  அந்தக் கதை….


வண்ண விளக்குகளில் ஜாலம்.....
Bபோரா குஹாலு....

பல வருடங்களுக்கு முன்னர் தனது பசுக்களை இங்கே மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார் ஒரு பழங்குடி மனிதர். அப்படி அழைத்துச் செல்லும்போது ஒரு இடத்தில் வரும்போது மாடு தானாகவே காணாமல் போகிறது. இவருக்கு ஆச்சரியம், அந்த இடத்திற்குச் சென்று பார்த்தால், அப்பகுதியில் பெரிய துளை! துளைக்கு உள்ளே பார்த்தால் பல அடிகளுக்குக் கிழே திறந்தவெளியும், கொஞ்சம் தண்ணீரும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த அந்த பழங்குடி மனிதருக்கு தனது மாடு கீழே விழுந்துவிட்டது தெரிகிறது. கீழேவிழுந்து மாட்டிற்கு அடிபட்டிருக்கும் என்ற கவலையில் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, மாடு அங்கே புல் உண்டபடி நடக்கிறது! ஆஹா இங்கே ஏதோ குகை போன்ற இருக்கிறது எனக் கண்டுபிடித்த இடம் தான் இந்த Bபோரா குகைகள்! இது லோக்கல் கதை! கண்டுபிடித்தது யாராக இருந்தாலும், அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்! இத்தனை அற்புதமான இடத்தினை நாம் இப்போது பார்த்து ரசிக்க முடிகிறதே!

கட்டணங்கள், வழிகாட்டி வசதிகள்:


தலைக்கு மேலே ஒரு குடை!
Bபோரா குஹாலு....

இந்தக் குகைகளுக்குள் உள்ளே சென்று பார்க்க நுழைவுக்கட்டணம் உண்டு. பெரியவர்களுக்கு 60 ரூபாய், சிறுவர்களுக்கு 45 ரூபாய். புகைப்பட/காணொளிக் கருவிகளுக்கும் 100 ரூபாய் கட்டணம் உண்டு. அலைபேசி காமிராவுடன் இருந்தால் அதற்குக் கட்டணம் ரூபாய் 25! காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை இந்தக் குகைகள் திறந்திருக்கும் [நடுவில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை]. குகை வாயிலிலேயே சில வழிகாட்டிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் விரும்பிய தொகையைக் கொடுத்து அழைத்துச் சென்றால், குகைகளின் எல்லாப் பகுதிகளையும் காண்பித்து உருவங்களையும் காண்பித்து அழைத்து வருவார். குகைகளுக்கு வெளியே சில கடைகளும் உண்டு!


குகையினுள்ளே..... இன்னும் ஒரு காட்சி..
Bபோரா குஹாலு....


குகைகளுக்குள்ளே விவரம் தந்த வழிகாட்டி....
Bபோரா குஹாலு....

குகைகளுக்குள் சென்று பல காட்சிகளைப் பார்த்து, புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிறகு, நாங்கள் வெளியே வரவும், குகைக்கதவுகள் மூடப்பட்டன. எங்களுடன் வந்த, அங்கே நாங்கள் அமர்த்திக்கொண்ட வழிகாட்டிக்கு கொஞ்சம் ஊதியம் கொடுத்து, அவருடன் சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  மாலை நேரம் ஆகி இருந்தது. தேநீரோ, காப்பியோ அருந்தினால் நன்றாக இருக்கும் என மனது சொன்னது! அது பேருந்தில் இருந்த எங்கள் வழிகாட்டிக்கும் கேட்டது போலும்! அவர் சொன்னது, பேருந்து அடுத்ததாகச் செல்லப்போவது, ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையினரின் ஒரு தங்குமிடத்திற்கு என்று! அங்கே என்ன நடந்தது, என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்

32 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் அருமை இதில் முதல் படத்தின் கோணம் மிகவும் ஸூப்பர் ஜி
    விபரங்கள் நன்று தொடர்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குகைக்குள் நுழைந்தபோது எடுத்தது முதல் படம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
    2. போரா கேவ்ஸ் நான் மிகவும் வியந்து பிரமித்து பார்த்த இடம். இயற்கையாக அமைந்ததால் உலக அதிசயங்களில் வராதே!!! எனக்கு இன்னும் மீண்டும் நிதானமாகப் பார்க்க வேண்டும் என்றும் தோன்றியது.

      உங்கள் படங்கள் மிகவும் அழகு! ஜி!

      கீதா

      நீக்கு
    3. இந்த இடத்திற்கு மட்டுமே அரை நாளுக்கு மேல் நிச்சயம் தேவை தான். ஆனால் அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குகையின் படங்கள் பிரமிக்க வைக்கின்றன ஐயா
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. இயற்கை வடித்த உருவ அமைப்புகள், குகை அழகு. அதை பேரழகாக படம்பிடித்த உங்களுக்கு வாழ்த்துகள்ண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  5. போர்ரா குகை - இடத்தையும் படங்களையும் ரசித்தேன். இதைப்போன்ற படிமத்தை மெக்சிகோவில் பார்த்திருக்கிறேன். ஓமனில் உண்டு, இன்னும் சென்றதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. குகைப் படங்களை இரசித்தேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  7. நேரில் பார்த்த அனுபவத்தை தந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.....

      நீக்கு
  8. இவ்வளவு அற்புதங்களைப் படைத்த கொஷ்னி ஆறு வறண்டுக் கிடப்பது சோகம்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சென்றபோது வறண்டு இருந்தாலும் மழைக்காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  9. வழிகாட்டிக்குக் கொஞ்சம் ஊதியம் என்றால் எவ்வளவு! குகைகள் படங்கள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இஷ்டம் தான். நாங்கள் 200 ரூபாய் கொடுத்தோம் - எங்களுடன் வந்தவர்களுக்கும் சேர்த்து!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. இயற்கை அழகை எடுத்துக் காட்டும் இனிய படங்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  11. படங்களுடன் விளக்கத்துடன் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  12. குகைகள் அழகுதான் எனினும்
    இயற்கையாக அமைந்தவைகள் எனில்
    கூடுதல் அழகுதான்

    அழகு குறையாமல் இரசித்து மகிழ
    அருமையான புகைப்படங்களாய்
    பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  13. கேள்விப் படாத அதிசய இடங்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி .புகைப்படங்கள் வழக்கம் போல் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  14. அமெரிக்காவில் இப்படி இயற்கை குகைகளைப்பார்த்தோம்.
    அழகான குகை. படங்கல் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  15. இயற்கையின் விந்தைக் காட்சிகள்! அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....