செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மதிய உணவு - திம்சா நடனம் – அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 13

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!




பழங்குடி மக்களின் அருங்காட்சியகத்தினைப் பார்த்த பிறகு பேருந்து எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது! அது அடுத்ததாய் நின்ற இடம் ஆந்திரப் பிரதேசம் சுற்றுலாத் துறை நடத்தும் ஒரு தங்குமிடம்/உணவகம் – புன்னாமி ரிசார்ட்/மயூரி ஹோட்டல்.  அங்கே எங்களுக்காக மதிய உணவு தயாராக இருந்தது.  ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையின் மூலமாக இப்பயணத்தினை ஏற்பாடு செய்யும்போது இரயில்/சாலை பயணங்கள், உணவு, என பலவும் அந்த செலவிலேயே முடிந்து விடுகிறது. காலையில் புறப்படும்போதே காலை உணவு இரயிலில் கொடுத்தது பற்றி எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம்.  மதிய உணவு – சைவ உணவு – ஆந்திரா காரத்துடன் தென்னிந்திய உணவு! Buffet தான் – யாருக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிச் சாப்பிடலாம்.




நானும் நண்பர் குடும்பமும், கூடவே இப்பயணத்தில் எங்களுடன் நட்பான பெண்கள் குடும்பமும் எங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த கூடத்தில் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். காரம் கொஞ்சம் அதிகம் என்று சொன்னாலும் நன்றாகவே இருந்தது. சாம்பார், ரசம், மோர், ஆவக்காய் ஊறுகாய், இரண்டு வித பொரியல், கூட்டு, அப்பளம் என நிறையவே உண்டு. பயணத்தில் வந்திருந்த வட இந்தியர்கள் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டார்கள்! சப்பாத்தி இல்லையா, அரிசி சாதத்துடன் இப்படி ஓடும் ரசத்தை எப்படி பிசைவது, ஸ்பூன் இல்லையா என்றெல்லாம் கொஞ்சம் ஓவராகவே பிலுக்கு ஷோ காண்பித்தார் ஒரு பெண்மணி! பேசாம ஃபோர்க் கொடுக்கச் சொல்லி இருக்கலாம்! :) ரொட்டியைக் கையால் – அதுவும் இரண்டு கைகளால் பிய்த்து, இடது கையால் வாயில் போட்டுக்கொள்ளும் பழக்கம் கொண்ட இவர்கள், தென்னிந்தியர்களைக் கிண்டல் செய்வது ஏனோ! போங்கடா/டீ நீங்களும் உங்க கொள்கைகளும் என்று சொல்லியே எனக்கு வாய் வலித்து விட்டது!





குழுவினர் நின்று நிதானித்து சாப்பிடும்போதே, எங்கள் வழிகாட்டி, சீக்கிரம் சாப்பிட்டு வெளியே வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அடுத்த நிகழ்வு ஒரு ஸ்வாரஸ்யமான நிகழ்வு என்று சொல்லி சீக்கிரம் வந்தால் நல்லது என்பதையும் வேண்டுகோளாக வைத்தார். பெரும்பாலும் இப்படி Guided Tours போகும்போது நம் இஷ்டப்படி நின்று நிதானித்து செல்ல முடிவதில்லை. வழிகாட்டியாக வருபவரின் இஷ்டத்துக்கும், சௌகரியத்திற்கும் தகுந்த மாதிரி தான் பயணம் அமையும். ஆனால் சில இடங்களில் வேறு வழியில்லை. இப்படியும் பயணம் செய்துதான் ஆகவேண்டும். நாங்களும் ருசித்து, சுவைத்து மதிய உணவினை உட்கொண்ட பிறகு உணவகத்திலிருந்து வெளியே வந்தால் – ஆஹா என்ன ஒரு காட்சி! கிட்டத்தட்ட 30 பழங்குடிப் பெண்கள் – அவர்களது பாரம்பரிய உடையில் – சுற்றுலாப் பயணிகளுக்காகக் காத்திருந்தார்கள்.




தலையில் பெரிய பூ – சிலர் இட்லிபூ கூட வைத்திருந்தார்கள்! பாரம்பரிய உடை, பெரும்பாலானவர்கள் ஒரே வண்ணத்தில் உடை அணிந்திருக்க, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வந்த பிறகு அவர்கள் நடனம் துவங்கியது. இப்பகுதி பழங்குடி மக்கள் ஆடும் இந்த நடனத்திற்கு திம்சா நடனம் என்ற பெயர்! ஆண்கள் இசைக்கருவிகளில் இசைக்க, பெண்கள் குலுவையிட்டபடியே ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு நடனமாடுகிறார்கள். அரக்கு பள்ளத்தாக்கு வருவதற்கு ஏறிய பாசஞ்சர் இரயில் போலவே இப்பெண்களின் கூட்டமும் வளைந்து நெளிந்து, ஆடியபடியே செல்வது காண மகிழ்ச்சியாக இருந்தது. சில சமயங்களில் கீழே உட்கார்ந்தபடியும் இந்த ரயில் பெட்டி ஊர்வலம் செல்கிறது. பார்ப்பதற்குச் சுலபமாகத் தெரிந்தாலும் உட்கார்ந்தபடியே, முன்னிருக்கும் பெண்ணின் தோளில் கைவைத்து, நகர்ந்து கொண்டே இருப்பது கடினமான விஷயம். கொஞ்சம் உட்கார்ந்து கொண்டே நகர்ந்து பாருங்களேன்!



அரை மணி நேரம் அவர்கள் நடனமாடியபிறகு சுற்றுலாப் பயணிகளில் இருந்த பெண்களை மட்டும் அழைத்து தங்களது நடனத்தில் பங்கேற்க வைத்தார்கள்! ஆண்களையும் அழைத்திருந்தால் நாங்களும் சென்று நடனமாடியிருக்க்கலாம்! ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு ஆடும் ஆட்டம் என்பதால் ஆண்களை அழைக்கவில்லை! ஒரு சில ஆண்கள் நின்ற இடத்திலேயே ஆடிக்கொண்டிருந்தார்கள் – தனியாகத் தான்! இந்த நடனத்தில் பல வகைகள் உண்டு என்பதையும், விழாக்காலங்களில் இந்த நடனம் முக்கிய இடம் பெறுகிறது என்பதையும் எங்களது வழிகாட்டி சொல்லிக் கொண்டிருந்தார். காணொளியாக எடுக்கவில்லை என்றாலும், நிறைய புகைப்படங்கள் எடுத்திருந்தேன். உங்கள் வசதிக்காக, இணையத்திலிருந்து ஒரு திம்சா நடனம் இங்கே இணைத்திருக்கிறேன்.





நடனம் ஆடுபவர்களுக்கு சுற்றுலாத்துறையினர் ஏதோ கொஞ்சம் பணம் கொடுப்பார்கள் போலும். இருந்தாலும் நடனம் முடிந்தபிறகு சுற்றுலாப் பயணிகளிடம் நடனம் பார்த்து ரசித்த நீங்களும் உங்களால் முடிந்த அளவு அன்பளிப்பை இவர்களுக்கு வழங்கினால் மகிழ்ச்சியடைவார்கள் என்று சொல்ல, ஒரு சிலர் மட்டும் நடனமாடிய குழுவின் தலைவியிடம் அன்பளிப்பாக பணம் வழங்க, அவற்றை எல்லாம் சேர்த்து, தங்களுக்குள் பிரித்துக் கொண்டார்கள். பெரும்பாலான இடங்களில் இம்மாதிரி இருக்கும் கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்லை என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது. என்ன தான் அவர்களது பாரம்பரிய நடனம் என்றாலும், சுற்றுலாப் பயணிகளுக்காக நடனம் ஆடும்போது, ஏற்பாடு செய்த சுற்றுலாத்துறையும், பார்க்கின்ற சுற்றுலா பயணிகளும் இவர்களையும் கவனித்துக் கொள்வது மிகவும் தேவையான விஷயம். ஏற்கனவே பல பாரம்பரிய கலைகள் ஆதரிப்பவர்கள் இல்லாத காரணத்தினால் நலிந்து போய்விட்டதே…







பழங்குடி மக்களின் நடனம் கண்டுகளித்த பிறகு எங்கள் பயணம் மீண்டும் துவங்கியது. நாங்கள் அடுத்ததாகச் சென்ற இடம் எது? அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை வரும் பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. திம்சா நடனமும் நல்லா இருந்தது. அதைவிட, எது தேவையோ அதை மட்டும் புகைப்படம் எடுத்த (கடைசி படத்துக்கு முந்தைய படத்தில் பயணிகளை ஃபோகஸ் செய்யாமல்) விதத்தை ரசித்தேன். த ம முதல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. நடனம் பற்றிய விளக்கத்துடன் புகைப்படங்கள் அருமை காணொளி கண்டேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. படத்துல ஒரு பொண்ணு கனகாம்பரம் வச்சிருக்கு போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனகாம்பரம் மட்டுமல்ல, பல வித பூக்கள் வைத்திருந்தார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  4. அசைவுகளில் ஒரு ஒழுங்கு தெரிகிறது அதுவே நடனத்தை ரசிக்கச் செய்கிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  5. ரசித்தவர்கள் பலரும் கண்ணாடி அணிந்திருக்க ,பழங்குடியினர் யாரும் அணிந்திருப்பதாக தெரியவில்லை ,பார்வைக் குறைபாடு அவர்களுக்கு வராதோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வைக் குறைபாடு அவர்களுக்கு வராதோ? நல்ல கேள்வி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  6. அரக்குப் பள்ளத்தாக்கு பயணம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறதே. நடனமும் அழகுதான். தொடர்கிறோம்.

    கீதா: அரக்குப் பள்ளத்தாக்கு பயணத்தில் நாங்கள் மிஸ் செய்தது இந்த நடனம். அதையும் உங்கள் படங்கள் தகவல்கள் மூலம் அறிய முடிந்தது. நன்றி வெங்கட்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடனம் - மிஸ் செய்ததில் வருத்தம் இருப்பது தெரிகிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  7. அருமை! இப்படி நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப்பின் நம்ம குழுவிலேயே கலெக்‌ஷன் செஞ்சு கொடுப்பது இருக்கே!

    பிலுக்கு :-) பிடிச்சுருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலெக்‌ஷன் செய்து கொடுப்பது நல்ல விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் அழகு.. புதிதாக தெரிந்து கொண்டேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. //காரம் கொஞ்சம் அதிகம் என்று சொன்னாலும்...//

    ஆஹா...

    சாப்பாட்டு விஷயத்தில் வடஇந்தியர்களுக்கு தென் இந்தியர்களைப் பார்த்து இப்படி வேறு அபிப்ராயமா!

    நடனம் சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியர்களுக்கு தென் இந்தியர்களைப் பார்த்து நிறைய அபிப்ராயங்கள் உண்டு! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. அருமையான திம்சா நடனம்.
    பயண அனுபவம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. புகைப்படங்கள் அனைத்தும் அருமை. (நடன மணிகளை மஞ்சள் நிறத்தில் பார்த்ததும் கலைஞரின் நினைவு வந்து விட்டது. அவர் பார்த்தால் 'மானாட மயிலாட' வில் வாய்ப்பு கொடுத்திருப்பார்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சள் நிறம் என்றாலே கலைஞர் தானா! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  13. அருமை.. அருமை.. தங்கள் மின்னஞ்சல் pl.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் சுப்ரமணியன் ஜி!

      எனது மின்னஞ்சல் முகவரி venkatnagaraj@gmail.com.

      நீக்கு
  14. காணொளியையும் படங்களையும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....