ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

இதுவும் தில்லி தான் - பழைய தில்லி – சில காட்சிகள்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.



இலக்கை நோக்கி தொடர்ந்து செல்வதே முக்கியம். இலக்கே இல்லாமல் இருப்பது சரியல்ல!  


தொட்டுத் தொடரும் வண்டிகள்... - பழைய தில்லி

தலைநகர் தில்லி என்றாலே ரொம்பவும் அகலமான சாலைகள், அழகான பூக்கள், மரங்கள் சாலை ஓரங்களில் இருக்கும், சுத்தம் சுகாதாரம் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். புது தில்லியின் அழகு பழைய தில்லியில் இல்லை! ஆனால் பழைய தில்லிக்கென்று சில அழகு உண்டு. அவ்வப்போது பழைய தில்லி பக்கம் சென்று படங்கள் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என நினைப்பதுண்டு. நேற்று அந்தப் பக்கம் இருக்கும் ஒரு மாளிகைக்குச் சென்று வரத் தோன்றியது. பாழடைந்த மாளிகை தான் என்றாலும் அதற்கென்று தனித்துவம் உண்டு. என்ன மாளிகை, யாருடைய மாளிகை, சிறப்புகள் என்ன என்பதை வேறு பதிவில் சொல்கிறேன். பழைய தில்லி என்றால் முகலாயர் காலத்திலேயே உருவான தில்லி – இன்னமும் பழமையின் சின்னங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் பகுதி என்றாலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால் அதே பழைய கடைகள், எங்கே பார்த்தாலும் மக்கள், வாகனங்கள், போக்குவரத்துச் சிக்கல்கள் என பலவும் உண்டு.

தனிமை பிடிக்கவில்லை என்று சொல்லும் ஒருவரை இந்த பழைய தில்லியின் தெருக்களில் கொண்டு விட்டால் போதும், தனிமை ரொம்ப நல்லது என்று ஓடி வந்து விடுவார்! அவ்வளவு கூட்டம் அங்கே – ஒருவர் மீது ஒருவர் பட்டுக் கொள்ளாமல் சென்று வருவது சாத்தியமே அல்ல! மனிதர்களை விட்டுவிடுங்கள், வாகன நெரிசலில் சிக்காமல் உங்களால் அங்கே சென்று வரவே முடியாது! பொதுவாக இவ்வளவு நேரம் ஆகும் என கூகிள் சொன்னாலும் கூட ஒரு மணி நேரத்தைச் சேர்த்துக் கொள்வது நலம்! போலவே அங்கே செல்வதென்றால் சொந்த வாகனத்திலோ அல்லது வாடகை வாகனத்திலோ செல்வதைத் தவிர்ப்பது நல்லது! நடந்து செல்வது சாலச் சிறந்தது! அதற்கும் உங்களுக்குத் தேவை – ஆங்கிலத்தில் சொல்வது போல – Maneuvering Skills.  சின்னச் சின்ன இடைவெளி கிடைக்கும்போது உள்ளே புகுந்து வெளியே வருவது எப்படி எனத் தெரிந்து கொள்வது நல்லது! நேற்றைக்கு பழைய தில்லியின் Bபல்லிமரான், நபி கரீம், சாந்த்னி சௌக், சதர் பஜார், நய் சடக் என பல இடங்களில் இப்படிதான் புகுந்து வெளியேறினேன்!

இந்தப் பகுதிகளில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம்! திருகாணி முதல் குத்தூசி வரை, பிளாஸ்டிக் முதல் இரும்பு வரை, கேக் மோல்ட் முதல் பெரிய பெரிய பாத்திரங்கள் வரை – ஒரு பாத்திரம் பார்த்தேன் – அவ்வளவு பெரிய பாத்திரம் – என்னைப் போல நான்கு பேர் அதன் உள்ளே அமர்ந்து கொள்ள முடியும்! அதற்குத் தகுந்த மூடியும் உண்டு – பொதுவாக பெரிய பாத்திரம் என்றால் இரண்டு கைப்பிடிகள் இருக்கும் – இந்தப் பெரிய பாத்திரத்திற்கு நான்கு கைப்பிடிகள் – பக்கத்திற்கு ஒன்றாக – எனக்கு ஒரு சந்தேகம் – நான்கு பேராகக் கூட அந்தப் பாத்திரம் நிரம்பியிருக்கும்போது தூக்கி, இறக்குவது கடினமாகவே இருக்கும் தான்! அதனால் அப்பாத்திரத்தினை யார் தூக்கி இறக்குவார்கள்?  அலங்காரப் பொருட்கள், கட்டிடம் கட்டத் தேவையான பொருட்கள், துணி, கல்யாணத்திற்கான அழைப்பிதழ்கள், வளையல்கள், கண்ணாடி என எல்லாமே அங்கே கிடைக்கும் – எங்கே என்ன கிடைக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு போவது நல்லது – இல்லை என்றால் குழப்பமே மிஞ்சும் – ஏனெனில் ஒவ்வொரு சந்திலும்/தெருவிலும் ஒவ்வொரு மார்க்கெட்! எதை வாங்குவது எதை விடுப்பது என விழி பிதுங்கி நிற்க வேண்டியது தான்.  

பழைய கால கட்டிடங்கள், தொங்கிக் கொண்டிருக்கும் எண்ணிலடங்கா ஒயர்கள் – தொலைபேசி, தொலைக்காட்சி, மின்சார ஒயர் என பலவும் பின்னிப் பிணைந்திருப்பது பார்க்கும்போது, ஏதாவது ஒரு சாதனம் பழுதானால் அதற்கான ஒயரை எப்படித் தேடிக் கண்டு பிடிப்பார்கள் என்பதே பெரும் ஆச்சர்யம் தான்! ஒரு படத்தில் இப்படியான ஒயர்கள் தெரியும். பாருங்களேன்.  இன்றைக்கும் மாட்டு வண்டிகள், பொருட்களை வைத்து தள்ளி/இழுத்துச் செல்லும் கைவண்டிகள், ரிக்‌ஷாக்கள், ஒரு மூங்கில் தட்டில் பொருட்களை வைத்து தலையில் தூக்கிச் செல்லும் கூலிகள் என அனைத்தும் இங்கே உண்டு – தலைநகர் தில்லியில் தான் இத்தனையும் இன்னும் பார்க்கக் கிடைக்கின்றன! என் இல்லத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவு தான் பயணித்திருப்பேன் என்றாலும் இங்கே எல்லாம் சுற்றி வீடு வந்து சேர ஆன நேரம் சுமார் ஆறு மணி நேரம்! அப்படிச் சென்ற போது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு – இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக!


நூடுல்ஸ் தயார் - சாலையோர உணவகம் - பழைய தில்லி




சட்பட்டா பேல், தின்பண்டங்கள் - பழைய தில்லி



இந்த ஒயர் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா? - பழைய தில்லி


நான் ரெடி... வாங்க நீங்க ரெடியா? - பழைய தில்லி


பழங்கள் விற்பனைக்கு - பழைய தில்லி


நறுக்கி வைத்த பப்பாளியில் தூசு சக்தி அதிகமாம்! - பழைய தில்லி


இன்னுமொரு சாலை - எத்தனை ஒயர்கள் - பழைய தில்லி


பெரிய பெரிய பாத்திரங்கள் - படத்தில் பார்க்கும்போது அதன் பிரம்மாண்டம் தெரியவில்லை - பழைய தில்லி


மாட்டு வண்டி - எத்தனை சுமை? பழைய தில்லி


இன்னுமோர் மாட்டு வண்டி - சுமை தாங்க முடியாமல் தள்ளாடியபடி சென்ற மாடு - பழைய தில்லி 



சில காட்சிகள் காணொலியாகவும்.... 

நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. ஹா.. ஹா.. ஒயர்களை காணும்போது ஜூராஸிக் பார்க் படத்தின் காடுகளை கண்டது போல் இருக்கிறது ஜி

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூராசிக் பார்க் படத்தின் காடுகள் - ஹாஹா... இங்கே குரங்குகள் இருந்தால் பிடித்துத் தொங்கி இருக்கும் இல்லையா கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. Meet too collected some old and rare thoughts of Old Delhi. Manithabimanathai Mozhi theriyatha edathil tharisiththa
    Marakka mudiyaatha anubavam ninaivukku vanthathu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியாத அனுபவம் - முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.

    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. புரிந்தது ஜீவி ஐயா.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. சிரமப் படுவதை பார்த்தால் சிறப்பேது? மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நானும் முன்பு டெல்லி வந்திருந்தபோது பழைய டெல்லிக்கும் புது டெல்லி சாணக்கியபுரிக்கும் உள்ள நேர்எதிரான நிலையைக்கண்டு வியந்திருக்கிறேன்.தங்கள் பதிவு அந்த நினைவுகளை மீண்டும் அசைபோட வைக்கிறது...வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய தில்லி நினைவுகளை இப்பதிவு மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நறுக்கி வைத்த பப்பாளியில் தூசு சக்தி!  ஹா...ஹா...  ஹா...

    சிக்கலான வொயர்கள் மிரட்டுகின்றன.

    அந்தப் பாத்திரங்களில் பாதி ஊருக்குசமைக்கலாம் போல...

    பாவம் அந்த பொதிசுமக்கும் மாடுகள்...

    காணொளியில் கடைசியில் வரும் அந்த ரோஸ் சட்டை  ட்ரை சைக்கிள்காரர் தமிழர் மாதிரிஇருக்கிறாரே...! ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூசு சக்தி - :) பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      மிரட்டும் ஒயர்கள் - எப்போது பார்த்தாலும் எனக்கு பயம் வரும்!

      பாதி ஊருக்குச் சமைக்கலாம் போல - ஹாஹா...

      பொதிசுமக்கும் மாடுகள் - மனதில் ரணம்.

      ரோஸ் சட்டை - தமிழ்காரரோ? - இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வயது 70க்கு மேல் இலக்கு  எது? இறைவனடி தான். தற்போது அதை நோக்கித்தான் நடை. படங்கள் பரவாயில்லை. ஆனாலும் சற்றே மாறுபட்ட கோணத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் பெரும்பாலும் நின்று நிதானித்து எடுத்தவை அல்ல ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா. அங்கே நடப்பதே பெரும்பாடு - அதில் நின்று நிதானித்து எங்கே படம் எடுப்பது. பேட்டரி ரிக்‌ஷாவில் பயணித்தபடியேயும் நடந்தபடியேயும் எடுத்த படங்கள் இவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நடந்து சென்று எடுத்த படங்கள் அருமை!
    வர்ணனைகளும் இனிமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முஹம்மது நிஜாமுத்தீன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பழைய தில்லியின் சாலைக் காட்சிகளை சிரமப்பட்டுப் படமாக்கித் தந்திருக்கிறீர்கள். நன்று. ஆம், தொங்கும் கனமான வயர்கள் அச்சுறுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சுறுத்தும் கனமான ஒயர்கள் - உண்மை தான் ராமலக்ஷ்மி. எது விழுந்து விடுமோ என்ற பயத்துடன் தான் மக்களும் இருக்கிறார்கள். பல வீடுகள் இடிபாடுகளுடன் இருப்பது பார்த்து நடுக்கம். என்றைக்கு எந்த வீடு விழுமோ என்ற நிலை தான் அங்கே.

      நெரிசல் மிகுந்த பகுதிகளில் படம் எடுப்பது கடினம் என்பதை நீங்களும் உணர்ந்திருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. முதல் வாசகம் மிக அருமை!

    பழைய தில்லி படங்கள் யாவும் மிகவும் பழமையாகவே இருக்கின்றன. 22 வருடங்களுக்கு முன் டெல்லி வந்திருக்கிறோம். ஆனால் தவறான நேரத்தில் [ ஜனவரி மாதம் ] வர நேர்ந்து விட்டதால் எங்கும் சுற்றிப்பார்க்க முடியவில்லை. உடம்பு நடுங்கியதில் கிளம்பி வந்தால் போதுமென்றிருந்தது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... ஜனவரி மாதத்தில் குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதுவும் 22 வருடங்களுக்கு முன்னர் என்றால் குளிர் அதிகமாகத் தான் இருந்தது. நானும் அந்த சமயத்தில் தில்லியில் தான் இருந்திருக்கிறேன் மனோ சாமிநாதன் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. படங்களில் காண்பிக்கும் காட்சிகள் பெரும்பாலும் நம்ப முடியாதவை - செட் போட்டு எடுக்கும் காட்சிகள் உண்மையானவை போலத் தோன்றிடும் புதிய மாதவி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. சுவையான...நம் ஊரின் நிஜ காட்சிகள் இவை...

    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. முக்கியமான பதிவு.மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பழைய டெல்லியின் காட்சிகள் எமது கொழும்பு கோட்டை பகுதியையும் நினைவூட்டின.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொழும்பு கோட்டை பகுதியை நினைவூட்டிய தில்லி காட்சிகள் - மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....