செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கதம்பம் – அவல் கொழுக்கட்டை - தையல் – சிவராத்ரி –தேவதை


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தவறு நம்மிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய வழக்கறிஞர் யாருமில்லை
தவறு அடுத்தவரிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய நீதிபதி யாருமில்லை


ஆதியின் அடுக்களையிலிருந்து… -  20 ஃபிப்ரவரி 2020:



இன்று காலை உணவாக அவலில் செய்த பிடி கொழுக்கட்டை. செய்வது எளிது. சுவை பிரமாதம். சட்னி அல்லது சாம்பாருடன் சுவைக்கலாம்.  செய்முறை கீழே…



ஊறவைக்க வேண்டாம். அப்படியே பொடி பண்ணிக்கனும். தண்ணீர் சரிக்கு சரி இல்லன்னா கூட கொஞ்சம் வெச்சுக்கலாம். நான் 1 1/2 கப் அவலுக்கு 2 கப் தண்ணீர் சேர்த்தேன். இன்னும் கொஞ்சம் விட்டுக்கலாம் என்று தோன்றியது. 1 கப் 1 1/2 தண்ணீர் சேர்க்கலாம். ஆனா கிளறியதும் கொஞ்சம் சூடா இருக்கும் போதே தண்ணீர் தொட்டுக் கொண்டு பிடிக்கணும். ஆறினா உதிர் உதிராக ஆயிடும். பிடிக்க முடியாது.

முகநூலில் வெளியிட்ட பிறகு உஷா மாதவன் அவர்கள் இதைச் செய்து அவரது யூட்யூப் சேனலில் வெளியிட்டார். அவர் அவலை வறுத்துப் பயன்படுத்தி இருக்கிறார் ஆனால் நான் வறுக்கவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.  அந்த காணொளி கீழே…



வாங்க!! சூடாக சாப்பிடலாம்..

தற்போதைய வாசிப்பில் - 17 ஃபிப்ரவரி 2020:



சற்று இடைவெளிக்குப் பின் இன்றிலிருந்து – “அத்திமலைத் தேவன்” பகுதி 2 வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். 632 பக்கங்கள்... இந்த வார இறுதிக்குள் முடிக்க முடியுமா?

மஹாசிவராத்ரி – வில்வ பத்ரம் - 21 ஃபிப்ரவரி 2020



ஓம் நமச்சிவாய!
ஹர ஹர மஹாதேவ்!

வில்வ பத்ரம்!!



டெல்லியில் அருகில் இருக்கிற பார்க்கில் கூட வில்வ மரம் இருக்கும். அங்கே வில்வ பழத்தில் ஜூஸ் செய்து குடிப்பார்கள். உஷ்ணத்தை தணிப்பதற்கு. வில்வ மரத்தின் இலை, வேர், காய், பழம் என்று எல்லாவற்றிலும் மருத்துவ பயன்கள் உண்டு. ஈசனுக்கு உகந்தது வில்வ பத்ரம்!! நேற்று வழக்கமாக பூ கொண்டு வருபவர் வில்வம் கொண்டு வந்து தர, இன்று நம்ம வீட்டு சிவனுக்கு "நமசிவாய" நாமம் சொல்லி வில்வ அர்ச்சனை செய்ய முடிந்தது.

குட்டி தேவதை – 22 ஃபிப்ரவரி 2020:



கீழ் வீட்டு குட்டி தேவதை முன்பெல்லாம் என்னவரை பார்த்தால் ஒளிந்து கொள்வாள். ஆனால் சில மாதங்களுக்கு முன் என்னவர் வந்த போது அவரிடம் ஒட்டிக் கொண்டாள். அவரிடம் படம் வரைந்து காண்பித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தாள். தன்னுடைய பர்த்டேக்கு கட்டாயமாக வரணும் என்று வேறு சொன்னாளாம் :)

அந்த குட்டி தேவதைக்கு இன்று பிறந்தநாள். மகளும், நானும் எங்கள் வாழ்த்துக்களைச் சொன்னதும் சாக்லேட் தந்தாள். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து 'பை பை' சொல்லி விட்டு நாங்கள் வெளியே செல்லும் போது ஓடி வந்து மகளிடம் ஒரு சாக்லேட்டைக் கொடுத்தாள்.

யாருக்கு இது????

உங்க வீட்டு அங்கிளுக்கு....:) அங்கிள் இங்க இல்லையே. ஊர்ல இல்ல இருக்காரு என்று மகள் சொன்னதும், குடுத்துடுங்க என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள் :)

குழந்தைகளின் உலகத்தில் அன்பு மட்டுமே அள்ள அள்ளக் குறையாத அளவில் சூழப்பட்டிருக்கிறது

பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஸ்ரீ குட்டி

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க – 19 ஃபிப்ரவரி 2019

இதே நாளில் சென்ற வருடம் முகநூலில் எழுதிய ஒரு பகிர்வு. படிக்காதவர்கள் படிக்கலாமே! - புதிது புதிதாக சமைத்துப் பார்ப்பதிலும், புத்தக வாசிப்பிலும் உள்ள ஆர்வம் தையலில் இல்லையென்று தான் சொல்லணும்..:)) நீண்ட நாட்களாக வெட்டி வைத்த ப்ளவுஸை இன்னும் தைக்கவில்லை :(

தையற்கலை!!!



நம்முடைய உடையை நாமே தைத்துக் கொள்வது என்பது பெரிய விஷயம்..நல்ல டெய்லர் அமைவது என்பது வரம்!!! திருமணத்திற்கு முன் கோவையில் பக்கத்து வீட்டு தனலட்சுமி என்கிற தனா அக்காவிடம் கொடுத்து வந்தேன்..அக்கா வேறு வீடு மாறிப் போன பின்பும் அப்பா ஆஃபீஸுக்கு போகும் வழியில் கொடுத்து விட்டுச் செல்வார்..

திருமணத்திற்கு பின் என் மாமியாரே எனக்கு ப்ளவுஸ் தைத்து தர ஆரம்பித்தார்...ஏறக்குறைய 40 வருடங்களாக தைத்து வருகிறார். எனக்கே நிறைய ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்திருக்கிறார்.. ஒவ்வொன்றும் அவ்வளவு கச்சிதமாக இருக்கும்..

ப்ளவுஸுக்கு வெட்டும் போது எனக்கு காண்பிப்பார்..ஹூக்கு தைக்க, ஹெம்மிங் பண்ண சொல்லிக் கொடுத்தார்..ஆனால் அவருடைய தையல் மிஷினை இதுவரை என்னை தொட அனுமதித்ததே இல்லை..:)) அவர் தைக்கும் போது கண்ணால் பார்த்ததோடு சரி..:))

மகள் சிறு குழந்தையாக இருந்த போது டெல்லியில் எங்கள் வீட்டருகில் இருந்த தையற்பயிற்சி நிலையத்துக்குச் சென்றேன்.. மகளுக்கு வேண்டிய பால், பிஸ்கட், துணி என்று எல்லாவற்றையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு, மகளையும் இடுப்பில் இடுக்கிக் கொண்டு செல்வேன்..

வடக்கே பெடல் பண்ணும் மிஷின்களை யாரும் வைத்திருப்பதில்லை..அங்கு கைகளால் சுத்தும் மிஷின்கள் தான் இருந்தன.. பாயில் அமரவைத்து சொல்லிக் கொடுத்தார் அந்தப் பயிற்சியாளர்..இரண்டு, மூன்று நாட்கள் தான் சென்றிருப்பேன்.. என் கவனம் முழுவதும் மகள் கீழே கிடக்கும் கொக்கி, ஊசி என்று எதையாவது எடுத்து வாய்க்குள்ளோ, மூக்கு உள்ளேயோ, காது உள்ளேயோ போட்டுக் கொண்டு விடுவாளோ என்று தோன்றியது..

பெரியவர்கள் துணையில்லாமல் வளர்த்த குழந்தையல்லவா!!! கணவரும் காலையில் சென்றால் மாலை தானே வீடு திரும்புவார்... தையலில் புத்தி செல்லவில்லை..

இப்படியிருக்க என்னவர் ஒரு தீபாவளி சமயம் USHA கம்பெனியின் "கையால் சுத்தும் மிஷின்" ஒன்று வாங்கி வந்தார்..அம்மாவைப் பார்த்தே வளர்ந்ததால் என்னவருக்கு தையல் தெரிந்திருந்தது..

அவரே எனக்கு சொல்லித் தந்தார்..தினமும் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து "இதை தைத்து வை" என்று சொல்லி அலுவலகம் செல்வார்.. மாலை வந்து பார்த்து தவறுகளை சுட்டிக் காட்டுவார்..

இப்படித் தான் புடவைகளுக்கு ஓரம் அடிக்கவும், உடைகளை சரி பண்ணிக் கொள்ளவும், தலையணை உறைகள் தைக்கவும் கற்றுக் கொண்டேன்..டெல்லியை விட்டு இடம்பெயர்ந்ததும் மிஷினை அங்கேயே விட்டு வந்தாச்சு..எடுத்து வரவும் முடியலை..

இனி மாமியாரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென வெளியே டெய்லரிடம் கொடுத்துப் பார்த்தேன்.. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. என்னவென்று சொல்ல!!

வெறுத்துப் போய் புதிதாக ஒன்று வாங்க வேண்டும் என முடிவெடுத்து சிறுகச் சிறுக சேமிக்கத் துவங்கி, இதோ வாங்கியும் விட்டேன்..எல்லா வித வசதிகளும் இதில் இருக்கு..YouTube ல் பார்த்து கற்று வருகிறேன்..

விரைவில் என்னுடைய உடைகளை நானே தைத்துக் கொண்டால் போதும்..
மகளுக்கும் இதில் ஆர்வமிருக்கு. அவளும் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்...

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

44 கருத்துகள்:

  1. பொன்மொழி அருமை சகோ
    தனுஸ்ரீக்கு எமது வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரி

    கதம்பம் அருமை. அவல் பிடிகொழுக்கட்டை பார்க்கவே நன்கு வந்துள்ளது. சிவராத்திரியின் படங்கள் மிகவும் அழகாக உள்ளது. கீழ்வீட்டு குட்டிக் குழந்தைக்கு என்னுடைய வாழ்த்துக்களும். தையல் கலையில் ஆர்வம் உள்ள உங்களுக்கு புதிதாக தையல் மிஷின் கிடைத்திருப்பதற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். விரைவில் சிறப்பான தையல்நாயகியாக வரவேண்டுமென பிரார்த்திக்கிறேன். அனைத்தும் அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தையல் மெஷின் போன வருடம் வாங்கியது - இங்கே பகிர்ந்தது பின்னோக்கிப் பார்வையாக!

      பிடிகொழுக்கட்டை - பார்க்க மட்டுமல்ல, சுவைக்கவும் நன்றாகவே இருந்ததாகக் கேள்வி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தையல் மிஷின் பற்றி இங்கு ஏற்கனவே பகிர்ந்ததையும். படித்திருக்கிறேன். இப்போதும் அதை குறித்து சகோதரி புதிதாகவே சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

      அவல் பிடி கொழுக்கட்டை இந்த மாதிரி பொடித்து நான் இதுவரை செய்ததில்லை. வெறும் உப்புமாவாக (இனிப்பு, புளிப்பு, காரம், பொங்கல் மாதிரி, தேங்காய் சேர்த்து என விதவிதமாக) செய்துள்ளேன். இனி தங்கள் பாணிப்படியும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      இன்று என் பதிவாக பூரியும், கூட்டும். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து படித்து கருத்திட்டால் மகிழ்வடைவேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. உங்களுடைய புதிய பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி. இதோ வருகிறேன் கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சுவையான  கதம்பம்.  தனுஸ்ரீக்கு எங்கள் வாழ்த்துகளையும் சொல்லி, ஒரு சாக்லேட் வையுங்கள்!!
    ரவா பிடிகொழுக்கட்டைக் குறிப்புகள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      சாக்லேட் உங்களுக்கும் ஒன்று வாங்கி வைத்து விடலாம்!

      பிடிகொழுக்கட்டை குறிப்புகள் - ஸ்வாரஸ்யமாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. //ஒரு சாக்லேட் வையுங்கள்!!//

    ஒரு சாக்லேட் வாங்கி வையுங்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கி வைத்துவிடலாம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அன்பு ஒன்று தான் அள்ள அள்ளக் குறையாதது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  6. அவல் கொழுக்கட்டை இனிப்பும் பண்ணலாம். நான் அவலை வறுத்துப்பேன். அவலில் புட்டும் செய்யலாம். நன்றாக இருக்கும். முகநூலில் ஏற்கெனவே பார்த்தேன். ஆதியின் மாமியாரின் தையல் திறமை பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். நானும் 1968 ஆம் ஆண்டில் இருந்து 2003 ஆம் ஆண்டு வரை தையல் மிஷின் மெரிட் வைத்திருந்தேன். தையல், எம்ப்ராய்டரி தெரிந்ததால் மத்தவங்க தைப்பது சரியாகவே வராது தான். ஆனால் 2003 ஆம் ஆண்டில் கால் பிரச்னை கொடுக்கவே நம்மவர் அதை விற்றுவிட்டார். அன்னிக்குப் பூரா ஒரே அழுகை தான்! :(((( ஆதிக்கும் ரோஷ்ணிக்கும் நல்லதொரு தையல் ஆசிரியை அமைந்து தையலில் சிறந்து விளங்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவலில் இனிப்பு - சுவைத்ததுண்டு.

      அம்மா நிறையவே தைத்துக் கொண்டிருந்தார்கள் - இப்போதெல்லாம் தைப்பது அரிதாகி விட்டது.

      நல்லதொரு தையல் ஆசிரியை - அப்படிக் கிடைத்தால் நல்லதே கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நான் கடையிலிருந்து எப்பொழுது அவல் வாங்கி வந்தாலும், என்னுடைய திருமதி, " இந்த அவல் பிரயோஜனமில்லை - இது வேலைக்கு ஆகாது" என்று சொல்லி, அவலை ரிஜக்ட் செய்துவிடுவாள். அப்புறம் நாந்தான் அந்த லூஸு (! ஆமாம் - கெட்டி இல்லாட்டி லூஸு தானே! ) அவலை ஏதேனும் பக்குவம் செய்து தின்று முடிப்பேன். இங்கே சமையல் கலை சாம்ராட்டுகள் இருக்கும் சபையில் கேட்கிறேன், கெட்டி அவலுக்கும் கெட்டி அல்லாத அவலுக்கும் என்ன வித்தியாசம்? எப்படிக் கண்டுபிடிப்பது? சொல்லி உதவுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெட்டி அவல் கோவை பக்கத்தில் பிரபலம். சோற்றை காயவைத்தது போன்று இருக்கும். காற்றில் பறக்காது. சும்மா சாப்பிட முடியாது. கொஞ்சம் கடினமாக இருக்கும். உப்புமாவுக்கு, மற்றும் போஹா செய்ய உகந்தது. தண்ணீரில் கரையாது. சாதா அவல்  flake அவல் பேன் காற்றில் பறக்கும். சும்மா அப்படியே சாப்பிடலாம். அவிர்பாகம், மற்றும் நெய்வேத்யம் இவற்றிற்கு வெல்லம், மற்றும் கொப்பரை சில்லுகள் சேர்த்து பயன்படுத்துவார்கள். Jayakumar

      நீக்கு
    2. கெட்டி அவல் கொஞ்சம் நிறம் பழுப்பாகவும் கையில் தொட்டாலே அழுத்தமாகவும் இருக்கும். போஹா அவல் எனப்படும் மெல்லிதான அவல் காற்றில் பறக்கிறாப்போல் இருக்கும். நிறம் வெள்ளையாக இருக்கும். போஹா அவலில்தான் அதிகமாக உப்புமா செய்வார்கள். அடுப்பில் எல்லாம் தாளித்துத் தயாராக்கிக் கொண்டு இந்தப் போஹா அவலை நன்கு களைந்து உப்புமாவில் சேர்த்துப் பண்ண வேண்டும். ஊற வைத்தால் உருத்தெரியாமல் போவதற்கான வாய்ப்பு உண்டு. வெங்கட்டுக்கும், ஆதிக்கும் கட்டாயமாய் வித்தியாசம் தெரிந்திருக்கும். கெட்டி அவலை ஊறவைத்து வெல்ல அவல், தேங்காய் அவல், மிளகு அவல், புளி அவல், எலுமிச்சை அவல்னு பண்ணலாம். இதில் தான் உப்புமாக் கொழுக்கட்டை செய்தால் நன்றாக வரும். போஹா அவலைப் பொடியாக்கிக் கிளறும்போது சேர்ந்து கொண்டுவிடும். கெட்டி அவல் தான் மிக்சர் போன்ற பதார்த்தங்களில் பொரித்துச் சேர்ப்பதற்கும் நன்றாக இருக்கும். வடமாநிலங்களில் பெரும்பாலும் போஹா அவல் தான் கிடைக்கும் என்றாலும் கெட்டி அவல் தேடிப் பிடித்து வாங்கணும்.

      நீக்கு
    3. உங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார்கள் - இரண்டு மூத்த பதிவர்கள். அதனால் நான் இங்கே சொல்வதற்கு ஒன்றுமில்லை கௌதமன் ஜி!

      //நான் கடையிலிருந்து எப்பொழுது அவல் வாங்கி வந்தாலும், என்னுடைய திருமதி, " இந்த அவல் பிரயோஜனமில்லை - இது வேலைக்கு ஆகாது" என்று சொல்லி, அவலை ரிஜக்ட் செய்துவிடுவாள். // ஹாஹா... இது நல்லா இருக்கு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.


      நீக்கு
    4. கெட்டி அவல் பெரும்பாலும் வடக்கே கிடைப்பது கடினம். தேடிப் பிடித்து தான் வாங்க வேண்டியிருக்கும் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி. மெல்லியதான அவல் தான் அதிகம் கிடைக்கும் - அதை வைத்து பெரும்பாலும் உப்புமா, அவல் தோசை போன்றவை செய்வதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. ஆமாம் கீதாம்மா.. இங்கே கெட்டி அவல் தேடித் தான் வாங்க வேண்டும். சில மலையாளக் கடைகளில் கிடைக்கிறது. வட இந்திய கடைகளில் என்றால் மெலிதான அவல் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. கார் அரிசி எனப்படும் சிவப்பு அரிசியிலும் அவல் கிடைக்கும். அவல் சிவப்பாகவே காணப்படும்.

      நீக்கு
    7. அவல் பற்றிய விளக்கங்களை, ஆவலோடு படித்தேன். விவரங்கள் அளித்த எல்லோருக்கும் நன்றி.

      நீக்கு
    8. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    9. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி.

      நீக்கு
  8. நல்ல கதம்பம். அவல் கொழுக்கட்டை செய்துபார்க்க சொல்ல வேண்டும். சாப்பிட ஆசையாக இருக்கிறது. சரித்திரப் புதினங்கள் மீதான காதல் எப்போதுமே தீர்வதில்லை. வாசித்து விட்டு கருத்துகளைப் பகிருங்கள்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது கதம்பம் – அவல் கொழுக்கட்டை – தையல் – சிவராத்ரி –தேவதை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      அவல் கொழுக்கட்டை - நீங்களும் சுவைத்துப் பாருங்கள் சிகரம் பாரதி.

      வலை ஓலை - உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தவறு நம்மிடம் இருந்தால்
    நம்மை விட
    பெரிய வழக்கறிஞர் யாருமில்லை
    தவறு அடுத்தவரிடம் இருந்தால்
    நம்மை விட
    பெரிய நீதிபதி யாருமில்லை

    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அருமையான வாசகம்...

    குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. நீங்கள் குறிப்பிட்டது வில்வ பழமா? அல்லது விளாம் பழமா? விளாம் பழம் சாப்பிட்டிருக்கிறேன். வில்வ பழம் விஷம் என்று கூற கேட்டிருக்கிறேன். காளஹஸ்தியில் வில்வ இல்லை பிரசாதம் கொடுப்பார்கள். ஒன்று இரண்டு சாப்பிடலாம். 
    நீங்கள் வாங்கிய தையல் மெஷினில் பாபின் நூல் சுற்றும் வசதி உள்ளதா? காரணம் இந்த மாதிரி ஒரு சீனா மேக் வாங்கிவிட்டு பாபின் சுத்த வசதி இல்லாமல் இருந்தது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்வப்பழ சர்பத் பாட்டில் பாட்டிலாகச் செய்து சாப்பிட்டிருக்கோம். வடமாநிலத்தில் இருந்தவரை இது இல்லாமலே இருந்ததில்லை. வில்வப்பழ சர்பத் அல்லது ரூஹ் அப்சா! சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும் வில்வம் பயன்படுத்தப்படுகிறது.

      நீக்கு
    2. வில்வ பழமே தான் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி. இங்கே கோடை காலத்தில் நிறையவே கிடைக்கும் - பழச்சாறாகவும், பழமாகவும் சாப்பிடுவது உண்டு.

      தையல் மெஷினில் பாபின் நூல் சுற்றும் வசதி இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஆமாம் கீதாம்மா... கோடை காலத்தில் நிறையவே உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. கெட்டி அவல் 

    https://www.indiamart.com/proddetail/aval-poha-rice-flakes-14104360112.html


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் தந்தமைக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அனைத்தும் அருமை.தையல் கலையை நன்றாக கற்று கொள்வீர்கள்.
    நானும் கற்றுக் கொண்டு தைத்தேன். இப்போது மெஷினை கொடுத்து விட்டோம்.
    வெளியே தைக்க கொடுத்து விட்டு காத்து கிடக்க வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தையல் மெஷின் இருப்பதும் ஒரு வசதி தான். வெளியே கொடுக்கும் துணிகளுக்கான காத்திருப்பு கடினமானது தான் கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  15. அத்திமலை தேவன் புதியதாக இருக்கிறதே? சோழர்கள் பற்றிய நாவலா?அவல் கொழுக்கட்டை குறிப்பு அருமை!சிவனின் முத்தில் அருளும் மந்தஹாசமும் நிரம்பி வழிகிறது! இந்த சிலை எங்குள்ளது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்திமலைத் தேவன் - காலச்சக்ரம் நரசிம்மா அவர்கள் எழுதிய கதை - மொத்தம் ஐந்து பகுதிகள். அத்தி வரதர் பற்றிய தகவல்களைச் சொல்லும் சிறப்பான கதை - பல வரலாற்றுக் குறிப்புகள் இதில் உண்டு மனோ சாமிநாதன் மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....