காஃபி வித் கிட்டு – பகுதி 56
அனைத்து பதிவுலக
நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:
அழகைப்
பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள்.
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் – அப்துல் கலாம்.
கடமை பற்றிய கனவு கூட இங்கே சிலருக்கு இல்லை! அதுவும் பொறுப்பில்
இருப்பவர்களுக்கு – என்பதும் ஒரு வித சோகம்.
இந்த வாரத்தின்
செய்தி – ப்ரமோத் மஹாஜன்:
ப்ரமோத் மஹாஜன் – இந்தப் பெயர் உங்களுக்கு நிச்சயம் நினைவிலிருக்கலாம்
– மஹாராஷ்ட்ராவிலிருந்து பாரதிய ஜனதா பார்ட்டியின் பிரபல உறுப்பினர் – சில வருடங்களுக்கு
முன்னர் இறந்து போனார். ஆனால் அவரைப் பற்றி நாம் இங்கே பார்க்கப் போவதில்லை. அதே மஹாராஷ்ட்ர மாநிலத்தின் பூனே நகரைச் சேர்ந்த
இன்னுமொரு ப்ரமோத் மஹாஜன் பற்றியே இன்றைக்கு பார்க்கப் போகிறோம்.
ப்ரமோத் மஹாஜன் – 68 வயது இளைஞர்! இந்த வயதில் இந்தியா
முழுவதும் தன்னந்தனியே தனது இருசக்கர வாகனத்தில் சுற்றி வர புறப்பட்டு இருக்கிறார்
– இதுவரை 4000 கிலோமீட்டர் தொலைவினை (தற்போது விசாகப்பட்டினம் வந்திருக்கிறார்!) –
எட்டு மாநிலங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். மொத்தம் 17500 கிலோமீட்டர்
– 25 மாநிலங்கள் பயணிக்க இருக்கிறார் இவர். ஜனவரி 18-ஆம் தேதி இந்தப் பயணத்தினை துவங்கி
இருக்கிறார். இந்தப் பயணம் எதற்காக – உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு
ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பயணத்தினை ஆரம்பித்து இருக்கிறார். வழியே எல்லா இடங்களிலும்
உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும் உண்டு. புனே அருகில் இருக்கும்
தவாலி கிராமத்தின் ஒரு விவசாயி இவர். ஏற்கனவே,
20 வருடங்களுக்கு முன்னர் தனது ஒரு சீறுநீரகத்தினை நம் நாட்டின் ராணுவ வீரர் ஒருவருக்கு தானமாகத் தந்திருக்கிறார்!
திருமணம் ஆன அந்த ராணுவ வீரர் அதன் பிறகு இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை!
Bharat Organ Yatra (BOY) என்று பெயரிட்ட இந்த பயணம் மூலம்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரிடம் அங்கதானம் பெறுவதற்கு ஒப்புதலை வாங்க வேண்டும் என
பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தில் போபால் நகரின் 250 காவல்துறை பணியாளர்கள்
அங்கதானம் தருவதற்கு ஒப்புக் கொண்டு கையெழுத்து இட்டிருக்கிறார்கள். இந்தோர் நகரத்தினைச்
சேர்ந்த 600 மாணவர்களும் சம்மதித்து இருக்கிறார்கள். தங்களுக்கு ஏதாவது ஏற்படும் பட்சத்தில்
அவர்களிடமிருந்து பயன்படக்கூடிய உடல் உறுப்புகளை எடுத்துக் கொள்ள சம்மதித்து இருக்கிறார்கள். நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு
இன்னும் அதிகம் பரவவில்லை என்று தான் சொல்ல வேண்டும். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வினை
ஏற்படுத்த அரசாங்கமும் நிறைய திட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன. விளம்பரங்களும் வந்த
வண்ணமே இருக்கின்றன. திரு ப்ரமோத் மஹாஜன் அவர்களுடைய இந்த விழிப்புணர்வு பிரயாணம் நல்ல
விஷயம். அவருக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து! அவரது பயணம் சிறக்க வாழ்த்துகள்.
இந்தத் தகவல் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணைய தளத்திலிருந்து…
இந்த வாரத்தின்
இசை – ராவண்ஹதா - ராஜஸ்தானிலிருந்து:
இந்த வாரத்தின் ரசித்த இசையாக ராஜஸ்தானிலிருந்து ராவண்ஹதா
எனும் இசைக்கருவியின் இசை. வாசிக்கும் இசைக் கலைஞர் அனுபவித்து வாசிக்கிறார் என்பதை
அவரது முகபாவத்திலிருந்தும் கருவியிலிருந்து வெளிவரும் இசையிலிருந்தும் தெரிந்து கொள்ள
முடியும். ராவணனின் கை, விரல்கள், தலை போன்றவற்றை
பயன்படுத்தி இந்த இசைக்கருவி முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது என்பதால் இந்த இசைக்கருவியின்
பெயர் ராவண்ஹதா என்பதாக அழைக்கப்பட்டது என்று ஒரு இசைக்கலைஞர் சொன்னதை மற்றொரு காணொளியில்
பார்த்தேன் (அக்காணொளியை பார்க்க விருப்பமிருந்தால் இங்கே
பார்க்கலாம்). இந்த ராவண்ஹதா இசையை ரசிக்கலாம் வாருங்கள்!
வங்கியில்
– முதிர்கன்னி…
சென்ற வாரத்தில் காஃபி வித் கிட்டு பதிவில்
“சில காட்சிகள் மனதை ஏதோ செய்துவிடுபவை அல்லவா? இந்தக் காட்சியும் அப்படியே” என்று
எழுதி இருந்தேன். அப்படி மனதை ஏதோ செய்த ஒரு காட்சி இந்த வாரமும்…
கடந்த தமிழகப் பயணத்தின் போது வங்கி ஒன்றிற்கு
செல்ல வேண்டியிருந்தது. அங்கே ஒரு குடும்பம் – தலைவருக்கு எப்படியும் 65 வயதுக்கு மேல்
இருக்கும் – பல்கள் விழுந்து, ஒடிசலான தேகத்துடன் வாய்களை மூடாது திறந்த படியே உட்கார்ந்து
இருந்தார். உடல்நிலை மோசமாக இருந்தது. அவரது அருகிலேயே அவருடைய மகள் – முதிர்கன்னி
– திருமணக் கனவுகளை எல்லாம் கடந்து – கனவுகள் கனவாகவே இருந்துவிட்ட சோகத்தில் அமர்ந்திருந்தார்
போலும். அடகுக்கு வைத்திருந்த நகையை மீட்க வந்த குடும்பத்தினரிடம் வங்கி ஊழியர் கேட்ட
கேள்வி அந்த முதிர்கன்னியின் மனதில் ஏற்கனவே புரையோடியிருந்த ரணத்தை கீறிவிட்டது போலும்
– கேட்ட கேள்வி அப்படி – “என்னம்மா பொண்ணுக்குக் கல்யாணமா? நகையை மீட்டுட்டீங்களே?”
முதிர்கன்னியின் அம்மா ஒன்றும் பதிலளிக்கவில்லை.
அருகே அமர்ந்திருந்த பெண் சொன்ன பதில் – “ஆமாம் எனக்கு கல்யாணம் தான் ஒரு கேடு!
வேலையை மட்டும் பார்க்காம கேள்வி வேற!” என்று சற்று சப்தமாகவே பேசினார்!
எத்தனை எத்தனை முதிர்கன்னிகள் இங்கே… முதிர்கன்னிகள்
பட்டியல் போலவே முதிர்கன்னன்கள் பட்டியலும் இப்போதெல்லாம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது
என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். காத்திருந்து காத்திருந்து ஒரு நிலையில், கல்யாணமே
வேண்டாம் போ, நான் இப்படியே இருந்துடறேன் என்று முயற்சிகளை விட்டுவிடுபவர்கள் தான்
இப்போது எண்ணிக்கையில் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்!
அது சரி – கல்யாணம் செய்து கொண்டே ஆகவேண்டும் என கட்டாயமா என்ன?
இந்த வாரத்தின்
ரசித்த விளம்பரம் – Why should u be different from others?
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக ஒரு Pantene Shampoo
விளம்பரம் – ஷாம்பூ விளம்பரத்தில் என்ன இருக்கப் போகிறது என நினைத்து விடவேண்டாம் –
கேட்கும் திறன் குறைபாடு உள்ள ஒரு பெண் வயலின் கற்றுக் கொண்டு அதில் வெற்றி பெற எதிர்படும்
பிரச்சனைகளைச் சொல்லும் ஒரு நல்ல விளம்பரம் இது. பார்த்து விடுங்களேன்!
படித்ததில் பிடித்தது – உண்மை போல தோன்றும்
பொய் எது?:
உண்மை போல் தோன்றும் பொய் எது?
பொய்-1: பள்ளியில் பயிலும் சமயத்தில் ஏற்படும் காதல்.
பொய்-2: பணக்காரனாக இருந்தால் கண்டிப்பாக நிம்மதியாகவும்
சந்தோஷமாகவும் இருப்பான்.
பொய்-3: திரைப்படத்தில் தோன்றும் கதாநாயகர்கள் திரையில்
தோன்றுவதைப் போல நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப நல்லவனாக இருப்பார்கள்.
பொய்-4: திரைப்படத்தில் நாம் பார்ப்பதை போலவே கதாநாயகிகள்
நிஜத்திலும் பளபளப்பாக கவர்ச்சிகரமாக அழகாக இருப்பார்கள்.
பொய்-5: அறிவுரை சொல்லும் நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக
நல்லவர்களாகவும் தங்கள் வாழ்கை பயணத்தை வெற்றிகரமாக நடத்துபவர்களாகவும் தான் இருப்பார்கள்.
இந்த ஐந்து பதில்கள் தவிர வேறு பதில்களையும் பின்னூட்டத்தில்
சொல்லலாமே!
பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:
இதே நாளில் எழுதிய பதிவு என்றால் சரியாக நான்கு வருடங்களுக்கு
முன்னரோ அல்லது அதற்கு நான்கு வருடத்திற்கு முன்னரோ தான் பார்க்க முடியும்! காரணம்
இந்த வருடம் லீப் இயர்! 29 ஃபிப்ரவரி! நல்ல வேளையாக 2016-ல் இதே நாளில் ஒரு பதிவு எழுதி
இருக்கிறேன்.
2016-ஆம் வருடம் இதே நாளில் ஏழு சகோதரிகள்
பயணத் தொடரினை இதே நாளில் ஆரம்பித்து இருக்கிறேன்! 15 பயணமாக ஏழு சகோதரிகள் மாநிலங்களுக்குச்
சென்று வந்த பயணத்தின் அனுபவங்கள் இந்த நாளில் துவங்கி இருக்கிறேன். அப்படி வெளியிட்ட
ஒரு பதிவின் சுட்டி கீழே!
2012-ஆம் ஆண்டும் இதே நாளில் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்
– எழுத்தாளர் திரு எஸ்.ரா. அவர்கள் சொன்ன ஒரு கதை பற்றிய பதிவு. அந்தப் பதிவினை வாசிக்காதவர்கள்
கீழே உள்ள சுட்டியைக் க்ளிக்கினால் வாசிக்கலாம்!
நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
ப்ரமோத் மஹாஜன் – 68 வயது இளைஞர் இவரது பயணம் சிறக்க வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குபயணம் சிறக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ப்ரமோத் மஹாஜன் அவர்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஉண்மை போல தோன்றும் பொய்களுக்கு, இன்றைய காலத்திற்கு பஞ்சமே இல்லை... பல கோ(கே)டி ம்ஹிம் அளவிட முடியாத எண்ணிக்கையில், அவை உள்ளன...
பல கோடி - இல்லை இல்லை அளவிட முடியாத எண்ணிக்கையில் - ஹாஹா... உண்மை தான் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மூன்றாவது கேள்விற்கு சட்டென ஞாபகம் வந்தது, ஆனால் அது கேள்வியை எதிர்மறையாக எடுத்துக்கொண்டால், அவர் : நம்பியார்...
பதிலளிநீக்குமற்றவைகளை சிந்திக்க வேண்டும்...!
எதிர்மறையாக - நம்பியார்! ஆமாம் தனபாலன் - பதிவினை தட்டச்சு செய்யும்போதே எனக்கும் அவர் நினைவு வந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என் நண்பரில் இவ்வாறான ஒரு முதிர்கன்னி இருக்கிறார். பெற்றோரைக் கவனித்தல், குடும்ப சூழல் என்ற நிலையிலேயே அவருடைய வாழ்க்கை அமைந்துவிட்டது. பார்க்கும்போதெல்லாம் இயற்கையாக இயல்பாக, நன்கு பேசுவார், பழகுவார். ஆனால் அவரைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதில் சிறிய நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது.
பதிலளிநீக்குநெருடல் - பலர் இப்படி சூழ்நிலைக் கைதிகள் தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ப்ரமோத் மஹாஜன் அவர்களின் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். அவருக்கும் அவரது இந்த புனித பயணத்தை பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துகள். எங்கும் கொலையும் கொள்ளையும் நடந்துகொண்டு இருக்கும்போது,சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் இருக்கிறது என்பது உண்மை போல் தோன்றும் பொய்
பதிலளிநீக்குப்ரமோத் மஹாஜன் அவர்களின் பயணம் சிறக்க வாழ்த்துரைத்த தங்களுக்கு நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஉண்மை போலத் தோன்றும் பொய் - வேதனையான விஷயம் தான் இது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விளம்பரத்தில் மற்றொரு பெண் கோபத்தில் அப்படியே தட்டுவிட்டுப் போகின்றார் அல்லவா? பதின்ம வயதில் வரும் கோபங்கள் திடீர் ஆக்ரோசம் மகள் செயல்பாடுகள் மூலம் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். மிகவும் சிற்பபான பதிவு.
பதிலளிநீக்குபதின்ம வயதின் கோபங்கள் - என் மகளிலும் காண்கிறேன் ஜோதிஜி.
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ப்ரமோத் மஹாஜன் அவர்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள். நல்ல மனிதரின் நல்லநோக்கத்திற்கு எடுத்த பயணம் வெற்றிபெறும்.
பதிலளிநீக்குகாணொளிகள் இரண்டும் அருமை. பெரியவரின் இசை, அந்த பெண்ணின் மன இயல்பு இரண்டும் அருமை.
"உண்மை எது பொய் எதுனு ஒன்னும் புரியலை நம்மை கண்ணை நம்பாலே நம்ப முடியலை" பாடல் தான் நினைவுக்கு வருது. நாட்டில் நடப்பதை பார்த்தால்.
காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குநாட்டில் நடப்பது பார்த்தால் நினைவுக்கு வந்த பாடல்... கேட்க வேண்டும் - மீண்டும் ஒரு முறை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உடைந்த சாவி படித்து பின்னூட்டம் கொடுத்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குமீண்டும் படித்தேன்.
உங்கள் பின்னூட்டம் அங்கேயும் - மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பிரமோத் மஹாஜனைப் பாராட்ட வேண்டும்.
பதிலளிநீக்குமுதிர்கன்னி - சோகம்.
பிரமோத் மஹாஜன் - பாராட்டுக்குரியவர் தான் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காலையிலேயே பதிவை வாசித்து விட்டேன்..
பதிலளிநீக்குஆனாலும் தாமதம்...
அந்த ஷாம்பு காணொளியில் மனம் நெகிழ்கின்றது...
பதிவினை வாசித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா. பதிவுலகம் பக்கம் உலவுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறதே - நம் வேலைகளுக்கு இடையே...
நீக்குஷாம்பு காணொளி - நெகிழ்ச்சியான ஒன்று. மனதைத் தொடும் படியான விளம்பரங்கள் எடுப்பவர்கள் இங்கே குறைவு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ப்ரமோத் மஹாஜன் கனவு பலிக்கட்டும்.
பதிலளிநீக்குராவண்ஹதா - பெயரே வித்தியாசமாய் இருக்கிறது.
முதிர் கன்னிகளின் நிலைக்கான காரணங்கள் அறிந்து தீர்க்கப்பட வேண்டும். கல்யாணம் செய்தே ஆகா வேண்டிய நிலை இல்லை. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்த ஏக்கம் அவர் மனதில் இருக்கிறது.
பள்ளியில் பயிலும் சமயத்தில் ஏற்படும் காதல் - கனவாகவே போனவர்களையும், நனவாக்கியவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது காஃபி வித் கிட்டு – ப்ரமோத் மஹாஜன் – ராவண்ஹதா – பொய் – முதிர்கன்னி – வயலின் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
கல்யாணம் செய்தே ஆக வேண்டிய நிலை இல்லை. உண்மை. ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கை சோகம் தான் சிகரம் பாரதி.
நீக்குராவண்ஹதா - நீங்கள் மட்டுமே இந்த கருவி பற்றி சொல்லி இருக்கிறீர்கள் - மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பு வெங்கட் , பதிவு முழுவதும் நல்ல செய்திகள். ப்ரமோத் மஹஜன் நலமுடன் இருந்து இன்னும் அரிய செயல்கள் செய்து நல் வாழ்வு பெற வேண்டும். முதிர்கன்னியின் சோகம் அளவிட முடியாத பாவம்.. ராவணஹதா மிக. இனிமை் அபூர்வ வாத்தியம் அதை இசைக்கும் மனிதரும் அருமை. அபூர்வங்களைக் கண்டறியும் உங்களுக்கும் வாழ்த்துகள். அந்த ட்யூன் மனதில் ஓடினாலும் சட்டென்னறு நினைவுக்கு வரவில்லை.
பதிலளிநீக்குபதிவில் சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...
நீக்குமுதிர்கன்னிகள் - பாவம் தான். அவர்களது சோகம் அளவிடமுடியாதது.
வாத்திய இசை - எனக்கும் ரொம்பவே பிடித்ததால் இங்கே பகிர்ந்து கொண்டேன் மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனி மற்ற இணைப்புகளையும் படிக்க வேண்டும் வருகிறேன்.
பதிலளிநீக்குமற்ற இணைப்புகளை முடிந்த போது படியுங்கள் வல்லிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ராவணஹதா புதுமை இனிமை.
பதிலளிநீக்குராவணஹதா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு