திங்கள், 14 ஜூன், 2021

வாசிப்பனுபவம் - கடிமிளை கானப்பேரெயில்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே. உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.


******



சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் முகில் சிவராமன் அவர்கள் எழுதிய “கடிமிளை கானப்பேரெயில்” எனும் குறுநாவல்! அந்தக் குறுநாவல் குறித்த தகவல்களையும், வாசிப்பனுபவத்தினையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாசிப்பை நேசிப்போம்! வாருங்கள்!





நூல்:  கடிமிளை கானப்பேரெயில்

வகை:  குறுநாவல்/வரலாற்று நாவல்

ஆசிரியர்: முகில் சிவராமன்

பக்கங்கள்:  28

வெளியீடு:  அமேசான்

விலை:  ரூபாய் 49/- மட்டும்

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி: கடிமிளை கானப்பேரெயில்


பிரதான கதாபாத்திரங்கள்:  பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி, கானப்பேர் குறுநில மன்னன் வேங்கைமார்பன், மன்னனின் சகோதரி மகன் முத்துவேலன், மன்னனின் மகளான பொற்செல்வி.


புறநானூற்றுப் பாடல்களில் குறிப்பிடப்பட்ட ஒரு நிகழ்வினை வைத்து இந்த குறுநாவலை படைத்திருக்கிறார் ஆசிரியர்.  கானப்பேர் என்று புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்ட இடம் தற்போதைய காளையார் கோவில்.  கானப்பேர்-ஐ ஆண்ட குறுநில மன்னன் வேங்கைமார்பன்.  குறுநில மன்னனாக இருந்தாலும் அவனது எல்லைக்குட்பட்ட பகுதியை மிகவும் திறமையாகவும் பகைவர்களிடமிருந்து தங்கள் நாட்டை காப்பாற்றி வந்தவன் - தங்கள் நாட்டுக்கு, கானகமும், பெரிய அகழியும் அரணாக இருக்க, எல்லாம் நல்லபடியே இருந்தது.  இத்தகைய அரண்களைத் தாண்டி கோட்டையைப் பிடிக்கும் தைரியம் எப்பகை நாட்டு மன்னர்களுக்கும் இல்லை. 


ஆனால் கானப்பேர் மீது பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி உத்தேசித்து இருப்பதை ஒற்றறிந்து மன்னனிடம் தகவல் சொல்கிறான் முத்துவேலன்.  தகவல் அறிந்த வேங்கைமார்பன், “நாடுபிடிக்கும் ஆசை மூவேந்தர்களுக்கு என்று தான் அடங்கப் போகிறதோ?” என்று கேட்பது இன்றைய சூழ்நிலையிலும் பொருந்தும் - ஒவ்வொரு நாடும், நாட்டை ஆள்பவர்களும் அடுத்த நாட்டை, நாட்டின் பகுதிகளை எப்படியாவது அடைந்து விட துடிக்கிறார்களே!  பாண்டியப் பேரரசு வேங்கைமார்பனின் “முத்துக்கூற்றத்தை” கைப்பற்றத் திட்டமிட்டபோது, அந்தமுயற்சி முறியடிக்கப்பட்டதிலிருந்தே கானப்பேர் மீது பாண்டியர்களுக்கு, குறிப்பாக பேரரசர் உக்கிரப்பெருவழுதிக்கு ஒரு வேகம் - எப்படியாவது அந்த குறுநில மன்னனை தோற்கடிக்க வேண்டும் - அப்பகுதியை தனது ராஜாங்கத்தில் சேர்க்க வேண்டும் என்ற வேகம். 


வேங்கை மார்பன் கதையைச் சொல்லிச் செல்லும் நூலாசிரியர் நடுவே வேள்பாரி கதையையும், வேள்பாரியின் மகள்களை நல்லவிதமாக வளர்க்கப் பொறுப்பேற்ற புலவர் கபிலர் பற்றியும் சொல்லிச் செல்கிறார்.  பாரிவேளின் மகள்களுக்கு நல்ல விதமாக எதையும் செய்ய இயலாமல் அவர்களை ஔவையிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்நீத்தார் என்று சொல்லி இருக்கிறார்.  


போருக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்க, நடுநடுவே முத்துவேலன் - பொற்செல்வி காதல் பற்றியும் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். வழக்கமான வரலாற்று நாவல்கள் போல வர்ணனைகள் இந்த குறுநாவலிலும் உண்டு.  “ஆயிரக்கணக்கான வீரர்கள் உற்சாகத்துடன் சண்டையிட்டனர்.  இருபுறமும் பெருத்தநாசம் - பிணக்குவியல்கள் மலைபோல் ஆயின.  தெருவெல்லாம் செங்குருதி புனலென ஓடியது!” போன்ற வர்ணனைகள் ஆங்காங்கே உண்டு.  


ஒற்றறிந்து வந்தபடியே, பாண்டியர்கள் படையெடுத்து வருகிறார்கள்.  பாண்டிய மன்னன் தனது பெரும்படையை அனுப்பி கானகம் வரை வந்து விட்டாலும், முத்துவேலனும் அவனுடன் இருந்த வீரர்களும் தொடர்ந்து பாண்டியப் படைக்கு பெருஞ்சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்தார்கள் - அவர்களுக்கு கானகம் பெரும் அரணாக இருந்தது - கானகத்துக்குள் மறைந்து கொண்டு அவ்வப்போது வெளியே வந்து தாக்கி மீண்டும் உள்ளே சென்று மறைந்து விடுவதால் பாண்டியப் படைக்கு பெரிய சேதம்.  பாண்டிய மன்னரே பொறுப்பேற்றுக் கொண்டு கானகத்தினை தீ வைத்து அழித்து முன்னேற முயல, முத்துவேலன் போரில் மாண்டு போகிறான்.  அதன் பிறகு என்ன நடந்தது, கானப்பேரெயில் வீழ்ந்ததா, மன்னர் வேங்கைமார்பன் என்ன ஆனார் என்பது போன்ற தகவல்களை மின்னூல் படித்து அறிந்து கொள்ளலாமே!


மிகக்குறைவான பக்கங்கள் என்பதால் விரைவில் படித்து விடலாம்.  நல்லதொரு வரலாற்று குறுநாவலை படித்த திருப்தி உங்களுக்கும் உண்டாகும்!  வாசிக்கலாமே!  


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, வாசிப்பனுபவம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


18 கருத்துகள்:

  1. வித்தியாசமான பெயர்.  நல்லதொரு அறிமுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. வரலாற்று சரித்திர கதை நன்றாக உள்ளது. புத்தகத்தின் தலைப்புப் பெயரும் கேள்விப்படாத வித்தியாசமாக உள்ளது. இந்நூலைப் பற்றிய தங்கள் விமர்சனம் நூலை முழுமையாக படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. நல்லதொரு சரித்திர கதை தந்த ஆசிரியருக்கும், அதை அழகாக விமர்சித்த தங்களுக்கும், மனப்பூர்வமான வாழ்த்துகள். பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  4. வாசிப்பு அனுபவம் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பு அனுபவம் - பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  5. சுவையான நூலாகத் தோன்றுகிறது.
    விரைவில் வாசிக்கிறேன் சார்.
    நாடு பிடிக்கும் ஆசை ஓயப்போவதில்லை, அதுவே உலகை ஒரு நாடாக ஆக்கிவிடும் சில தலைமுறைகளில் என தோன்றுகிறது.
    565 சிற்றரசுகளே இப்போது இந்தியா, பாக், பங்கிளாதேஶ் என மூன்று நாடுகள் ஆன கதை நமக்கு தெரியும்.
    இன்னும் வியாபாரம், ஆக்கிரமிப்பை அதிகமாக்கி நாடுகள் ஒன்றினைவது நடக்கும் என்பதே வறலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  6. விமர்சனம் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  7. பெயரே வித்தியாசமாக இருக்கிறது! அறிமுகம் சிறப்பு வெங்கட்ஜி.

    இன்றைய வாசகம் எனக்கு மிகவும் பிடித்த வாசகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்குப் பிடித்த வாசகமகாக அமைந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  8. நல்ல அருமையான விமரிசனம். சுவையான வரலாற்றுக் கதை! வாய்ப்புக் கிடைத்தால் படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள் கீதாம்மா. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  9. பெயரே வியப்பினைத் தருகிறது ஐயா
    அவசியம் படிப்பேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படித்துப் பாருங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....