அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
சகுனிகள் நிறைந்த உலகில், சத்தியம் மட்டுமே போதாது. சாணக்கியத் தனமும் வேண்டும்!
******
தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முதல் மூன்று பகுதிகளை இதுவரை வெளியிட்டு இருக்கிறேன். அதனை நீங்கள் படித்திருக்கலாம்! படிக்காதவர்கள் வசதிக்காக அந்த முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!
கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று
கடந்து வந்த பாதை - பகுதி இரண்டு
கடந்து வந்த பாதை - பகுதி மூன்று
வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.
******
கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்
அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம். வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம். MASK FIRST SHOE NEXT!
சென்ற பகுதியினை முடிக்கும் போது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பர். ஆனால் என் விஷயத்தில் அதுவும் புஸ்! என்று எழுதி இருந்தேன். அப்படி என்ன நடந்தது? தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்!
பின்னாளில் S & S Power Switchgears, போரூர், சென்னையில் சுருக்கெழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க, சுறுக்கெழுத்து, தட்டச்சு இரண்டிலும் முதலாவதாக வந்தாலும், நேர்முகத் தேர்வில், சைத்தான் சைடு வழியாக வந்தது.
நேர்முகத் தேர்விற்கு வந்த அந்த நிறுவனத்தின் மேலாளர், M.Sc. (Botony) முடித்து, அவ்வழியில் செல்லாமல் எனக்கு எமனாக வந்தார். அனைத்து வினாக்களையும் தாவிரவியலில் கேட்க, நான் பல்கலைக்கழக சுயசரிதையைச் சொல்லி, என்னை மன்னித்து விடுங்கள் (ஆளை வுடுப்பா என சென்னைத் தமிழில்) சொல்ல, அந்த மேலாளர் என் தாய் மாமனிடம் (என்னை இந்த நிறுவனத்திற்கு அனுப்பியவர்), “இவ்வளவு மக்கை என்னிடம் அனுப்பியுள்ளாயே” என்று சொல்லி விட்டார். அன்று மாலை, என் தாய் மாமன், தங்கையின் மகன் என்ற நினைவின்றி எவ்வளவு கடுஞ்சொல் முடியுமோ அவ்வளவும் பயன்படுத்தி திட்டி, அன்று முதல் இன்று வரை (40 ஆண்டுகளாய்!) நான் எனது தாய்வழி சொந்தங்களால் “USELESS FELLOW” என அன்புடன் பட்டம் சூட்டப்பட்டு அதே பெயரில் வலம் வருகிறேன்!
அட… கல்லூரி கதையை முடிக்காமல் முதல் வேலை குறித்து சொல்லி இருக்கிறேன்.
கல்லூரியின் பசுமையான நினைவுகளில் ஒன்று படிப்பு வழி சுற்றுலா (Study Tour)! சிதம்பரம் - திருச்சிராப்பள்ளி (இரவு 12 மணிக்கு மேல் இராமேஸ்வரத்திற்கு இரயில் என்பதால் கூட வந்த ஆசிரியருடன் மொத்த பட்டாளமும் அப்போது (1980) வெளிவந்து பிரபலமாக ஓடிய கமலஹாசனின் ”உல்லாசப் பறவைகள்” திரைப்படத்தின் இரவுக் காட்சியை தியாகராஜ பாகவதர் மன்றம் எனப்படும் கலையரங்கம் A/C - இல் பார்த்தோம். இங்கு ஒரு கிளைக்கதையும் உண்டு - அதனை பின்னர் எழுதுகிறேன்!) - இராமேஸ்வரம் சென்று அங்கேயிருந்து படகு மூலம் குருசடை தீவுக்குச் சென்றோம். ஆசிரியர் பாடவழி ஏதோ சொல்ல, விரிந்து பறந்த வங்காள விரிகுடாவைப் பார்த்து பிரமித்துக் கிடந்தேன்/கிடந்தோம். அங்கிருந்து இரயில் மூலம் கோவை மேட்டுப்பாளையம் வழி ஊட்டி சென்று பின் சிதம்பரம் வந்தோம்.
நாங்கள் கற்ற சமயம், அ.பா.அ.ப.க. (அது தாங்க, அறிவுப் பாசறையாம் அண்ணாமலை பல்கலைக் கழகம் 50-ஆம் ஆண்டு பொன்விழா. நாவலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலச்சந்தர், நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியம் போன்ற பலர் வந்து சிறப்பித்தனர். ஒரு வாரமல்ல, இரு வாரங்களுக்கு கல்லூரி கிடையாது!
வருடா வருடம் விடுதி மாணவர்களுக்கு, இன் விருந்து நடக்கும். அதில் விடுதி மாணவர்கள், வேறு மாணவர்கள், உறவினர், பெற்றோர், நண்பர்களை அழைக்கலாம். அப்படி மூன்று வருடமும் சென்றேன்.
எனது வகுப்பில் நான்கு மாணவியர்! ஹைதராபாத்திலிருந்து ஒரு மங்கை (பெயர் வேண்டாமே!) எங்கள் இருவரையும் (என்னையும், அரங்கநாதனையும்) பாசமாக, அட நிஜமா பாசம் மட்டுமே தாங்க! தெலுங்கு கற்றுத் தருகிறேன், பட்டம் முடிந்து ஹைதராபாத் வந்துவிடுங்கள், நல்ல எதிர்காலம் (???) கிடைக்கும் என்றார். விதி வலியது! நாங்கள் செவி மடுக்கவில்லை!
ஆக ஒரு வழியாய், இளங்கலை பட்டம் பெற்று (1978-81) வெளியே வந்தேன். ஆனந்தமாய், கும்மாளமாய், குதூகலமாய் கழிக்க வேண்டிய கல்லூரிக் காலத்தை முற்றிலும் தொலைத்த வருத்தமும் ஆதங்கமும் இன்றளவும் உண்டு. அதன் எதிரொலியாகவே என் மகளை சாஸ்த்ரா பொறியியல் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி சுதந்திரப் பறவையாய் படிக்க வைத்தேன். யாம் தொலைத்த இன்பத்தை மகள் பெற்றது மகிழ்ச்சியே. ஒரு சுபயோக சுபதினத்தில் மூட்டை முடிச்சுகளுடன் பேருந்து வழி மாயவரம் - அப்போது அந்த ஊரின் பெயர் அது தான் - இப்போது தான் மயிலாடுதுறை - வந்து சேர்ந்தேன். பணி நிமித்தம் அப்பா அங்கு தான் இருந்தார். தட்டச்சு, சுருக்கெழுத்து இள, மத்திய, உயர் நிலைகள் முடித்தேன். இனி பணியில் சேர்ந்ததும், தலை நகர் வந்ததும்! அதற்கு முன்னர் கல்லூரி சுற்றுலா சமயத்தில் சினிமா பார்த்தது குறித்து எழுதியதில், ஒரு கிளைக்கதை என்று சொன்னேனே அதையும் பார்த்து விடலாம்! அடுத்த பகுதியில்!
தொடர்ந்து கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…
நட்புடன்
சுப்ரமணியன்
புது தில்லி
******
நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து...
வேண்டாமே என்றால் அதுதானே ஞாபகத்தில் இருக்கும்? ஹைதராபாத் மங்கை நினைவில் நிற்கிறார்!
பதிலளிநீக்குஹைதராபாத் மங்கை நினைவில் நிற்கிறார் - வேண்டாமே என்றால் அது தான் நினைவில் நிற்கும்! ஒரு வேளை அதற்காகவே அப்படி எழுதி இருக்கலாம் நண்பர் சுப்பு! ஹாஹா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஹாஸ்டல் டே சமயத்தில் வெளியே உள்ள உறவினர் , நண்பர்களை டிக்கெட் வாங்கி அழைக்கலாம் என்ற வரிகள் என் ஹாஸ்டல் வாழ்க்கையை நினைவுபடுத்தியது.
பதிலளிநீக்குமுன்னேறுவதற்கு முன்பு பலர் வாயிலும் விழுந்து எழுந்து பிறகுதான் முன்னேற முடியும் என்பது சகஜம்தான். தொடர்கிறேன்
பதிவு உங்கள் ஹாஸ்டல் நினைவுகளை மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குமுன்னேறுவதற்கு முன்... உங்கள் கருத்துரைக்கு நன்றி.
காலை வணக்கம் வெங்கட்ஜி
பதிலளிநீக்குஎன் கருத்துகள் சில வருவதே இல்லை...ப்ளாகர் படுத்துகிறது.
அட்டகாசமான வாசகம் மிக மிக சரியே.
ஆனால் யாருக்கும் புண்படுத்தாத சாணக்கியத்துவம் என்றால் சரி. வின் வின் சிச்சுவேஷன் போல என்றால் சரி..
கீதா
வணக்கம் கீதா ஜி. உங்கள் கருத்துகள் - இதுவரை வந்த அனைத்தும் வெளியிட்டு விட்டேன். பிளாக்கர் சில சமயங்களில் இப்படி படுத்துகிறது என்பது வேதனையான விஷயம். நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
நீக்குவாசகம் குறித்த தங்கள் கருத்துரை சிறப்பு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என் தாய் மாமன், தங்கையின் மகன் என்ற நினைவின்றி எவ்வளவு கடுஞ்சொல் முடியுமோ அவ்வளவும் பயன்படுத்தி திட்டி, அன்று முதல் இன்று வரை (40 ஆண்டுகளாய்!) நான் எனது தாய்வழி சொந்தங்களால் “USELESS FELLOW” என அன்புடன் பட்டம் சூட்டப்பட்டு அதே பெயரில் வலம் வருகிறேன்! //
பதிலளிநீக்குடிட்டோ....இங்கும்...
கீதா
பல உறவினர்கள் இப்படி புண்படுத்துகிறோம் என்பது புரியாமல் இப்படி படக்கென்று பேசி விடுகிறார்கள். நானும் சிலரிடம் பேச்சு வாங்கி இருக்கிறேன் கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கிளைக்கதை மண்டையைக் குடையுது! ஹாஹாஹா
பதிலளிநீக்குதட்தெழுத்து சுருக்கெழுத்து எல்லாம் அந்தக் காலத்தில் எல்லார் வீட்டிலும் மாண்டேட்டரி போலும்!! நானும் எல்லாம் கற்று 3 வருடமா ஸ்டாஃப் செலக்ஷன் எழுதி எழுதி கடைசில ஒருவழியாக கிடைத்த மத்திய அரசு வேலையும் சேர முடியாமல் (கிடைத்த வருடம் 87) வடக்குப் பகுதிதான் ஆப்ஷன் சேருவதற்கு...தில்லி ஆப்ஷன் இருந்தது....சேரவில்லை
கீதா
கிளைக்கதை - விரைவில்! வரும் ஞாயிறில் வெளிவரும் கீதாஜி.
நீக்குதட்டச்சு, சுருக்கெழுத்து - அனைவரும் பயின்ற நாட்கள். இன்றைக்கு பல இளைஞர்கள் பயில்வதில்லை - எல்லாம் ஒரு விரல் தட்டச்சு தான் - கணினியில்! ஹாஹா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிவு சுவாரஸ்யம் கிளைக்கதையை அறிய ஆவல்.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குகிளைக்கதை - வரும் ஞாயிறில்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எதையும் எளிதாக எடுத்துக் கொண்டால், கடந்து வந்த பாதையையும் ரசனையாக எழுத முடியும்... அருமை...
பதிலளிநீக்குஎதையும் எளிதாக எடுத்துக் கொண்டால் - உண்மை தான் தனபாலன். நாம் எடுத்துக் கொள்வதில் இருக்கிறது சூட்சுமம் - ஆனால் அனைவராலும் எளிதாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் நண்பர் மிகவும் சுவாரஸ்யமாக தான் கடந்து வந்த பாதையினை சொல்லி வருகிறார். எது நடக்க இருக்கிறதோ அதுதானே நடக்கும். ஆனால், நடந்து முடிந்த பின், வரும் நம் எண்ணங்களில் அதை இப்படி நடத்தியிருக்கலாமோ என்ற சிந்தனைகளும் எழுவது இயல்புதான். அடுத்தப் பதிவையும், ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஎது நடக்க இருக்கிறதோ அது தானே நடக்கும். உண்மை. எல்லாமே முன்கூட்டிய முடிவானது என்பதை நாம் உணர்ந்து விட்டால் அதனைக் கடப்பது எளிது. ஆனால் அதனை உணர்வது கடினம் - நம்மால் முடிவதில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தொடர்கிறேன் எத்தனை அனுபவங்கள்.
பதிலளிநீக்குதொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனுபவங்களே நம்மை உருவாக்குகின்றன. மனிதர்களின் நாக்கு எப்படி எல்லாமோ காயப் படுத்துகிறது. அதைக் கடந்து வந்த உங்கள் நண்பர்உக்கு வாழ்த்துகள். இந்த வயதிலும் சிலரிடம் பேச எனக்குப் பயம் தான். நா காத்தல் எளிதில் எல்லோருக்கும் வருவதில்லைமா. ராமேஸ்வரம் பயணம் அருமை. அடுத்த சஸ்பெனசுக்குக் காத்திருக்குறேன். நன்றி மா.
பதிலளிநீக்குஅனுபவங்களே நம்மை உருவாக்குகின்றன என்பது சரியான எண்ணம் வல்லிம்மா.
நீக்குநா காத்தல் - மிக முக்கியமான பண்பு - ஆனால் அனைவரும் அதைச் செய்வதில்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.