திங்கள், 7 ஜூன், 2021

என் தூரிகையின் ஓவியங்கள் - பா. சுதாகர் - வாசிப்பனுபவம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்கள் பார்வையில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THE MORE YOUR MONEY WORKS FOR YOU, THE LESS YOU HAVE TO WORK FOR MONEY


******






இந்த வாரத்தின் முதல் நாளாம் திங்கள் கிழமையன்று இந்த வருடத்தில் வாசித்த ஒரு மின்னூல் - கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். சஹானா இணைய இதழ் நடத்திய வாசிப்புப் போட்டி ஒன்றிற்காக, முகநூலில் எழுதிய இந்த வாசிப்பனுபவம் எனது சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் இதோ இன்றைக்கு இந்த வலைப்பூவிலும்!


நூல்:  என் தூரிகையின் ஓவியங்கள்

வகை:  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர்: பா. சுதாகர்

பக்கங்கள்:  91

வெளியீடு:  அமேசான்

விலை:  ரூபாய் 50/- மட்டும். 

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி: என் தூரிகையின் ஓவியங்கள்


வாசிப்பு என்பது அனைவருக்கும் பிடித்து விடுவதில்லை.  வாசிக்க ஆரம்பித்தாலே தூங்கிவிடும் சில நண்பர்கள் எனக்குண்டு.  தில்லி வந்த புதிதில் நூல்கள் மட்டுமே எனது உற்ற தோழர்கள்.  புதிய இடம், புதிய மனிதர்கள் என கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தபோது புத்தகங்கள் மட்டுமே துணை.  தினம் தினம் வாசிப்பு - இரவு வெகு நேரம் வரை படித்துக் கொண்டிருப்பேன்.  தற்போது அச்சுப் புத்தகங்களை விட கிண்டில் வழி மின்னூல்களை படிப்பதே பிடித்திருக்கிறது.  சமீப நாட்களில் மின்னூல்களுக்கான குழுக்களில் சேர்ந்த பிறகு, இடைப்பட்ட வருடங்களில் குறைந்திருந்த வாசிப்பு மீண்டும் அதிகரித்திருக்கிறது. அப்படி இந்த வருடத்தில் படித்த மின்னூல்களில் ஐந்தாவது மின்னூல் பா. சுதாகர் அவர்களின் எண்ணத்தில் உருவான கவிதைத் தொகுப்பு - “என் தூரிகையின் ஓவியங்கள்”.  


வார்த்தைகளை மடக்கிப் போட்டு எழுதினால் கவிதை என்று பலர் சொல்வதுண்டு.  கவிஞர், மேடைப் பேச்சாளர், பட்டிமன்றப் பேச்சாளர்  முத்துநிலவன் அவர்களின் ஒரு பதிவு நினைவுக்கு வருகிறது.  அதில் அவர் இப்படிச் சொல்லி இருப்பார் - ”வரிகளை மடக்குவதற்கும் அர்த்தம் உண்டு. கூடுதல் அர்த்தம் கொடுக்கவே வரிகளை மடக்கிப் போடவேண்டுமே அன்றி பெரியவரி சின்னவரி என்பதால் அல்ல.” நண்பர் பா. சுதாகர் அவர்களின் கவிதைகளில் பெரும்பாலானவை ஒரு வரிக்கு இரண்டு வார்த்தைகள் என்ற வகையிலேயே இருக்கிறது.  அவரின் “இரவுப் பயணம்” என்ற கவிதைப் பார்க்கலாம் வாருங்கள்…


இரவுப் பயணம்


இரவுப்

பயணத்தில்

இருவரும்


தனித்தனியே 

கனவு கண்டோம்


கனவினிலே 

காதல்

கொண்டோம்


அதைத்

தாண்டி

இயலாது

என்றாலும்


இரு ஜோடிக்

கண்களிலே

பல கோடி

காதல் மொழி


இருந்தாலும்

இவையெல்லாம்

உணர்ந்தும் 

உணராமல்


பல ஜோடிக்

கண்களுடன்

பயணிகள்

உறக்கம்


உடற்பசி 

கொண்டு

உறக்கம் 

தொலைத்து

ஏங்கித் தவிக்கும்

நாங்களோ

உங்களின் பார்வையில்

புதுமணத் தம்பதி


நல்லதொரு கவிதை தான்.  ஆனால் ஒவ்வொரு வரிக்கும் ஒரு வார்த்தை என்று படிக்கும்போது, கவிதையின் நீளம் அதிகரிக்க, படிக்கும்போது சிலருக்கு வெறுப்பு வரலாம்.  இப்படி வரிக்கு ஒரு வார்த்தை எழுதுவது சரியல்ல என்று சொல்ல நான் கவிஞன் அல்ல!  ஒரு வாசகனாக எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்து கொள்ள நினைத்தேன் - அவ்வளவே.


நிறைய கவிதைகள் மனதைத் தொடும் வண்ணம் இருக்கின்றன.  சொல்ல வரும் விஷயத்தினை அவரது கவிதைகள் சொல்லி விடுகின்றன என்பது சிறப்பு. ”கைவளையல் சத்தமிட” என்ற தலைப்பிட்ட கவிதையில் ஒரு மனைவியின் ஏக்கங்களை, எண்ணங்களைச் சொல்லும் கவிதை ஒரு உதாரணம்.  ஒன்றிரண்டு வரிகள் அக்கவிதையிலிருந்து...


”ஊருக்கெல்லாம் உத்தமனா இருக்குறது தப்பில்ல… 

எனக்குங்கூட மனசிருக்கு ஏன் உனக்கு தெரியல்ல”  


“படுக்கத்தான் நான் வேணும், பசிச்சாலும் நான் வேணும்

ஒறவுக்கெல்லாம் வக்கணையா வடிச்சுப்போட நான் வேணும்

எடுத்த எடுப்புக்கெல்லாம் எரிஞ்சு விழ நான் வேணும்

வயக்காட்டு வேலைக்கெல்லாம் ராப்பகலா நான் வேணும்

எனக்கென்ன வேணுமின்னு என்னைக்காச்சும் கேட்டதுண்டா?

ஒடம்புக்கு முடியலன்னா ஒரு நாளும் ஓய்வுண்டா?”


எளிதான வார்த்தைகளைக் கொண்டு திரு பா. சுதாகர் அவர்கள் எழுதியிருக்கும் பல கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன.  உங்களுக்கும் இந்த மின்னூலில் இருக்கும் கவிதைகள் பிடிக்கலாம்.  முடிந்தால் தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே!  மின்னூலைத் தரவிறக்கம் செய்ய சுட்டி மேலே இணைத்திருக்கிறேன்.  மேலும் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட சுதாகர் அவர்களுக்கு வாழ்த்துகள்.  


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறு ஒரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


24 கருத்துகள்:

  1. பதிவின் இறுதியில் சொல்லி இருக்கும் இரண்டு கவிதைகளும் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இரண்டு கவிதைகளும் அருமையாக உள்ளது முக்கியமாக படித்தால் புரியும்படியாக எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது, பலர் கவிதை எழுதுவார்கள் ஆனால் அதில் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளவே முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. பலரின் கவிதைகள் புரியாத விதத்தில் - :) உண்மை தான் மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கைவளைகள் சத்தமிட கவிதை அருமை அருமை...

    முதல் கவிதை மடக்கியிருக்க வேண்டாமோ அப்படி இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது...என்றாலும் அக்கவிதை சொல்லவருவது நன்றாக இருக்கிறது. எளிய கவிதைகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. கவிதை மடக்கியிருக்க வேண்டோமோ? :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவில் தாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் பா.சுதாகர் அவர்கள் எழுதிய இரு கவிதைகளும் சிறப்பாக உள்ளது. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இரண்டாவது கவிதை எளிமையாகவும் இயல்பான வார்த்தைகளாலும் இருப்பதால் கருத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. எனக்கும் ஒற்றைவரி கவிதைகளில் ஈர்ப்பு கிடையாது ஜி.

    இதில் இரண்டாவது கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  8. இரண்டாம் கவிதை
    வாழ்வியல் யதார்த்தம்
    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வியல் யதார்த்தம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இரண்டாவது கவிதையில் தொனித்த யதார்தமும்,சோகமும் மனதை பாதிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதார்த்தமும் சோகமும் - உண்மை தான் பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கவிதைகளில் மனதில் உள்ளதை சொல்லும் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு கவிதை என்று தான் பெயர் கொடுக்க வேண்டுமா என்ன.?
      பகிர முடிந்தாலே போதும். அது நம்மை வந்தடையும் போது
      நமக்கு உணர முடிய வேண்டும். அது இந்தக் கவிதைகளால் முடிகிறது. சிறப்பு மா.
      வாழ்த்துகள்.

      நீக்கு
    3. பதிவு வழி பகிர்ந்த கவிதைகள், பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டிய கவிதைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....