ஞாயிறு, 27 ஜூன், 2021

கடந்து வந்த பாதை - பகுதி ஐந்து - சுப்ரமணியன்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


MISTAKE IS A SINGLE PAGE OF LIFE; BUT RELATION IS A COMPLETE BOOK. SO DON’T CLOSE A FULL BOOK FOR A SINGLE PAGE.


******




தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முதல் நான்கு பகுதிகளை இதுவரை வெளியிட்டு இருக்கிறேன்.  அதனை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக அந்த முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று


கடந்து வந்த பாதை - பகுதி இரண்டு


கடந்து வந்த பாதை - பகுதி மூன்று


கடந்து வந்த பாதை - பகுதி நான்கு


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்





அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


சென்ற பகுதியினை முடிக்கும் போது அதற்கு முன்னர் கல்லூரி சுற்றுலா சமயத்தில் சினிமா பார்த்தது குறித்து எழுதியதில், ஒரு கிளைக்கதை என்று சொன்னேனே அதையும் பார்த்து விடலாம்! என்று சொல்லி இருந்தேன்.  அப்படி என்ன நடந்தது? தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்! 


சிறு வயது முதல், வானொலியில் திரைப்படப் பாடல்கள் கேட்பதற்கும், திரைப்படங்களுக்குச் செல்வதற்கும் தளர்வுகளற்ற முழுமையான தடை - போட்டது எங்கள் வீட்டின் முதலமைச்சரான அப்பா!  அப்பா அலுவலகம் செல்லும் நேரம் திரைப்பாடல்களை திருட்டுத்தனமாய் கேட்போம். சில நாட்களில் அவர் அலுவலகத்திலிருந்து திரும்பி, சைக்கிள் நிறுத்துவதைக் கூட அறியாமல் பாட்டுக் கொண்டிருக்க, அன்று அவர் மிருதங்கச் சக்ரவர்த்தியாக மாறி, என்னையும் என் அண்ணனையும் பதம் பார்த்து விடுவார்! பள்ளிப் பருவத்தில், ஆசிரியர்களே பார்க்கச் சொல்லி சொன்ன திரைப்படம் - ”வா ராஜா வா” - அதை வீட்டில் சொல்லி, திரைப்படத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொன்னது தான் தாமதம் - சரமாரியான அடி, உதை.  ஆத்திரத்தில் கிடைத்ததைக் கொண்டு அடிக்க, இரத்தம் கண்டது தான் மிச்சம்! 


வருடா வருடம் சென்னை வந்தால் ஒரு உறவினர் ஆங்கிலப் படங்களுக்கு அழைத்துச் செல்வார்.  சஃபையர் வளாகத்தில் தான் பார்ப்போம்! குளுகுளு திரையரங்கம், ஸ்கூட்டர் பயணம், தின்பண்டங்கள், என கிடைப்பதெல்லாம் சுகம்! அது ஒரு சில படங்கள் மட்டுமே - அதுவும் சென்னை செல்லும் சமயத்தில் மட்டுமே! இப்படியிருக்க கல்லூரி வந்ததும் தான் ஒரு மிகச் சில படங்களைக் கண்டேன்.   அதனால் சினிமா பார்த்தது வெகு குறைவு. நினைவுக்கு எட்டியவரை, நினைத்தாலே இனிக்கும், ஏணிப்படிகள், ப்ரியா, பசி, மௌன கீதங்கள், உல்லாசப் பறவைகள் இவையே!  அது இன்று வரை அப்படியே ஒட்டிக்கொண்டு விட்டது.  நான் இதுவரை பார்த்த படங்கள் மொத்தமே ஐம்பதை (50) தாண்டாது - ஹிஹி… நான் அறுபதைத் தாண்டிவிட்டாலும்! தொலைக்காட்சியிலும் லயிப்பு இல்லை. ஆகவே அதிலும் திரைப்படங்கள் காண்பதில்லை. நகைச்சுவை மற்றும் செய்தி சேனல்கள் மட்டுமே நமக்குத் துணை. சரி இத்துடன் கிளைக்கதையும் முடிந்தது!  மீண்டும் பிரதான கதைக்கு வருகிறேன்! 


ஒரு வழியாய், படிப்பு படலம் முடிந்து வேலை தேடும் படலம் துவங்கியது! 


நிறைய உறவினர்கள் சென்னையில் இருந்ததால் (இது சாதகமா அல்லது பாதகமா? என பட்டிமன்றமே நடத்தலாம்! ஹாஹா!) சென்னையை நோக்கி படையெடுத்தேன்! பல தனியார்/மாநில/மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்து வந்த காலத்தில், வந்தாரை வாழ வைக்கும் சென்னை சில காலம் என்னையும் தத்தெடுத்தது! 


  • மைலாப்பூரில் ஒரு மருந்துக் கம்பெனியில் எழுத்தர்/கணக்கர் என எல்லாமுமாய் எனது முதல் வேலை - 1982-இல் - 300 ரூபாய் சம்பளத்தில்!

  • தம்புச் செட்டித் தெருவில் இரும்புக் கடையில் (மொத்த விற்பனை) எழுத்தர் பணி.

  • சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சரக்கு வாகன அலுவலகத்தில் - அட நம்ம லாரி கம்பெனி தாங்க - All In All அழகு ராஜாவாக - கணக்கர்/எழுத்தர், முதலாளிக் கூட்டம் மற்றும் விருந்தினர்களுக்கு தேநீர் வாங்கி வருதல், மதியம் வாகனத்தில் அது தாங்க லாரி - மணலியில் உள்ள Kothari Chemicals குளோரின் உருளைகள் மற்றும் இராசயன அடிப்படை கலவை (Chemical Base Mixture) மேட்டூருக்கு ஏற்றும் பணி.  குளோரின் உருளைகளை தானியங்கி (Remote) மூலம் லாரிக்குள் நிரப்ப வேண்டும். அதை Company ஆட்கள் நம்மிடம் தந்து விட்டு சென்று விடுவர். Chemical Base நம்மால் முடியாது. இதற்கான சுங்க/கலால் தீர்வை ரசீதை (Customs cum Excise Clearance Receipt) நிரப்ப வேண்டும். ஒரு லாரியில் ஏற்றப்படும் Base-க்கு ரூபாய் மூன்றும், Chlorine Cylinder-க்கு ரூபாய் இருபதும் கையூட்டு - அது தாங்க Commission கிடைக்கும்! கம்பெனிக்கு தெரியாமல் கமிஷன் அடிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டேன்! உண்மையாய் இருப்பது உலகில் நடக்காத காரியமாதலால், கமிஷன் ஏஜண்ட் கம்பெனி முதலாளிக்கு ஏற்பட்ட தகறாரில் விரட்டியடிக்கப்பட்டேன்! 

  • ஒரு பம்பாய் (அந்த நாளில் இப்பெயர் தான் அம் மாநகருக்கு!) நிறுவனத்தின் சென்னைக் கிளையில் மும்முனைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் வந்தது வில்லங்கம். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு Appendicitis அறுவை சிகிச்சை செய்ததால் அவ்வேலை கை நழுவியது.  ஆனால் அதுவும் ஒரு நன்மைக்கே! 


அது என்ன நன்மை?  அடுத்த பகுதியில் தொடர்ந்து, கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


20 கருத்துகள்:

  1. மொத்தமே ஐம்பது திரைபபடங்களுக்குள்தான் பார்த்திருப்பீர்களா?  அட...  வேலை அனுபவங்கள் ஜோர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நிலையான வேலை கிடைத்து வாழ்க்கையில் செட்டிலாவதற்கு முன்பு உதைபந்து போல அங்கேயும் இங்கேயும் வாழ்க்கை அல்லாடியிருக்கிறது.

    அப்போ சின்ன வயதில் சினிமா பார்க்காவிட்டால் என்ன.. இப்போது அதே சினிமாக்களைப் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தால், அப்போது சோகத்தை வரவழைத்திருக்கக்கூடிய படம் இப்போது காமெடியாக இருக்கும்.

    பதிவுக்கான படங்கள் கவர்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதை பந்து போல அங்கேயும் இங்கேயும் - உண்மை தான் நெல்லைத் தமிழன். நம்மில் பலரின் வாழ்க்கை இப்படியே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சுவாரஸ்யம் "அந்த" நன்மையை அறிய ஆவலோடு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நன்மை - விரைவில் வெளி வரும் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வியப்பு - :) எனக்கும் கூட படங்கள் பார்ப்பதென்றால் ஏனோ அத்தனை ஈர்ப்பு இருந்ததில்லை தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சுவாரசியமாகவும் அடுத்த பதிவிற்கான எதிர்ப்பார்ப்பையும் தூண்டுகிறது சார்.
    என் அம்மாவும் சிறுவயதில் அப்பாவிற்கு தெரியாமல் இலங்கை வானொலியில் பாட்டு கேட்பது பற்றி சொல்வார்.
    வேளை அணுபவங்களும் அருமை.
    படங்களையே பார்ப்பது தவறு என்பது ஒரு தலைமுறை நம்பிக்கையாக இருந்தது.
    இன்று படங்கள் மூலமும் நிறைய நேர்மறை சிந்தனைகள் தூண்டப்படுவதாக நம்பிக்கையூட்டும் படங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அம்மாவின் அனுபவங்களையும் சொல்லி இருப்பது சிறப்பு அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நிறைந்த விஷயங்கள்... நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    தங்கள் நண்பரின் கடந்த பாதையில் நடந்ததை சுவாரஸ்யமான நகைச்சுவையுடன் கூறி வருகிறார். அந்த காலத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சினிமா, பாட்டு போன்றவை வீட்டில் தடைதான். பெற்றோர்களும் படிக்கும் குழந்தைகளுக்கு வேறு எதிலும் நாட்டம் திரும்பி விடக் கூடாது என்று அவர்களும் சினிமாவுக்குச் செல்லாமல் கட்டுப்பாடுடன் இருப்பார்கள்.

    நிலையான ஒரு வேலை கிடைக்கும் வரை பட்ட சிரமங்களை கூறியுள்ளார். நல்ல வேலை, நல்ல குடும்பம், நல்ல வாழ்க்கை என அப்போதைய திருப்பு முனைகள் என்பது கடவுளின் அன்பான ஆசிர்வாதங்கள்தான். உண்மை நிலையை எடுத்துரைக்கும் நல்ல பதிவு தொடர காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      நண்பரின் கடந்து வந்த பாதை பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நிலையான வேலை கிடைக்கும் வரை கடினம் தான். தொடர்ந்து வாசிக்க இருப்பதற்கு நண்பரின் சார்பில் நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. திரு.சுப்பு அவர்கள் அனுபவித்த பாட்கள்,வேலைகள் எல்லாவற்றையும் சுவைபடச் சொல்லி இருக்கிறார்.

    1982 இல் மைலாப்பூர் மருந்துக் கடை!!!!
    அனைவருக்கும் மருந்து வாங்கிக் கொடுப்பது என் வேலை.
    அனேகமாக எல்லாக் கடைகளுக்கும் போயிருப்பேன்.:)
    எந்தக் கடையிலாவது இவரைப் பார்த்திருக்கலாம்.

    லாரியில் ஏற்றும் வேலை.கஷ்டம் தான். மேற்பார்வை
    சுலபம் இல்லையே.

    திரைப்படங்கள், பாடல்கள் எங்கள் காலத்தில்
    உன்னும் தீவிரத் தடை:)
    ரேடியோவுடன் காதை ஒட்டிக் கேட்பேன்:)
    அடி வாங்கியது கிடையாது.
    பாவம் சுப்பு அவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருந்துக் கடைகளில் பார்த்திருக்கலாம் - லாம்!

      ரேடியோவுடன் காதை ஒட்டிக் கேட்பீர்களா வல்லிம்மா - ஹாஹா..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  9. வருடா வருடம் சென்னை வந்தால் ஒரு உறவினர் ஆங்கிலப் படங்களுக்கு அழைத்துச் செல்வார். சஃபையர் வளாகத்தில் தான் பார்ப்போம்! குளுகுளு திரையரங்கம், ஸ்கூட்டர் பயணம், தின்பண்டங்கள், என கிடைப்பதெல்லாம் சுகம்! அது ஒரு சில படங்கள் மட்டுமே - அதுவும் சென்னை செல்லும் சமயத்தில் மட்டுமே!








    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////எங்களுக்கும் சஃபையர் , எல்லா இடங்களும் சொர்க்கம்.
    மாமாக்கள் உபயம். கோடை இனியது.
    நல்ல பயணம். சுப்பு சாருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் சஃபையர் அனுபவங்கள் - மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கடந்து பாதையில்தான் எத்தனை எத்தனை அனுபவ்ங்கள்!
    //அவ்வேலை கை நழுவியது. ஆனால் அதுவும் ஒரு நன்மைக்கே! //

    அதைவிட நல்ல வேலை கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை விட நல்ல வேலை - என்ன எழுதப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....