அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
உங்களின் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும், 20 சதவிகிதம் திட்டமிட்டபடி செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் நிச்சயம் வெற்றியாளர்தான் - ஆப்ரஹாம் லிங்கன்.
******
தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முதல் ஐந்து பகுதிகளை இதுவரை வெளியிட்டு இருக்கிறேன். அதனை நீங்கள் படித்திருக்கலாம்! படிக்காதவர்கள் வசதிக்காக அந்த முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!
கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று
கடந்து வந்த பாதை - பகுதி இரண்டு
கடந்து வந்த பாதை - பகுதி மூன்று
கடந்து வந்த பாதை - பகுதி நான்கு
கடந்து வந்த பாதை - பகுதி ஐந்து
வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.
******
கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்
அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம். வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம். MASK FIRST SHOE NEXT!
சென்ற பகுதியினை முடிக்கும் போது ஒரு வேலை கிடைக்காததும் நன்மைக்கே என்று சொல்லி இருந்தேன். அது என்ன நன்மை? தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்!
பணியாளர் தேர்வு வாரியம் அட நம்ம SSC எனப்படும் Staff Selection Commission நடத்தும் Lower Division Clerk (இளநிலை உதவியாளர்) தேர்வு எழுதியது - அதன் முடிவு வந்தது! அந்த முடிவின் படி தலைநகர் தில்லியில் பணியில் சேர்வதற்கு தேர்வானேன். 80-களில் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான, இருபால் இளையோரை கவர்ந்திழுத்தது SSC எனும் இந்த மஹான் தான்! அந்தக் குவியலில் ஒன்றாக சேர்வதற்கு நானும் ஆயத்தமானேன்.
சேர்க்கைக்கு முன் நன் நடத்தைச் சான்றிதழ், மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ் போன்ற பல தடைகளைக் (Hurdles) கடந்து, ஒரு சுபயோக சுபதினத்தில் (1985 ஏப்ரல் 16, செவ்வாய்) காலை 06.50-க்கு 121 தமிழ்நாடு அதிவிரைவு இரயிலில், அப்பா, அண்ணன் உறவுகள் புடைசூழ என்ன ஆகப்போகிறோம், எங்கே செல்லப் போகிறோம் என்று தெரியாமல், “பெக்க பெக்க” என முழித்தபடி, D27 மேலடுக்கில் பயணம் துவங்கியது. அந்நாளில் 18 பெட்டிகளுடன் வாரம் மும்முறை சென்றது TN Express. முதல் நாள் காலை 06.50-க்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 03.50-க்கு புது தில்லி அடையும்.
உறவினர் ஒருவர் (அட இங்குமாடா?) வந்து அழைத்துச் செல்வார் என்ற ஒற்றைத் தகவலுடன் ஒரு நீண்ட பயணம்! இதற்கு முன்னரும் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதுவும் வேலை தேடித்தான்! 1984 டிசம்பர் மாதம் - நல்ல குளிர்காலம். தமிழகத்தின் குளிர் தவிர வேறெந்த குளிரும் அறியாததால் குளிருக்கான ஆயத்த ஆடைகள் ஏதுமின்றி, சென்னையிலிருந்து நாக்பூர் வரை GT Express-இலும் நாக்பூரிலிருந்து Bபிலாஸ்பூர் வழியாக NTPC Korba-வுக்கு. நாக்பூரில் இரயில் கிளம்பியவரை ஜாலி. ஏனெனில் பகல் பொழுது! இரவில் தான் இறங்க வேண்டுமென்பதால், அங்கே இங்கே கேட்டு ஒரு வழியாக Bபிலாஸ்பூர்-இல் இறங்கினால் மிகவும் கடுமையான குளிர். அப்படி ஒரு பல் கிட்டும் குளிரை பார்த்ததே இல்லை! ஒரு வழியாக Korba-வில் இறங்கி ஒரு தங்குமிடத்தில் நடுங்கியபடியே தங்கினேன்!
மறுநாள் சுருக்கெழுத்து/தட்டச்சு தேர்வுக்கு சென்றால், அங்கே வில்லங்கம் துவங்கியது! ஒரு வழியாக குளிரைச் சமாளித்து சுருக்கெழுத்து போதனையை - அட அதுதாங்க - Dictation-ஐ எடுத்து விட்டேன். தட்டச்சு இயந்திரத்தின் முன் அமர்ந்ததும் விரல்கள் தன்னிச்சையாக பரதம், கதகளி, குச்சிப்புடி, கதக் மற்றும் மைக்கேல் ஜாக்சனின் அசைவுகளும் தான் வந்தது! விளைவு, “நீ ஆங்கிலத்திலேயே தட்டச்சு செய்யவில்லை! ஏதோ அன்னிய மொழியில் செய்தாய்” என்று என்னையும் என் உடன் இருந்த மற்ற ஆறு தமிழர்களையும் வெளியேற்றி விட்டனர். வேறு வழி தெரியாத நிலையில் ஏதோ ஒரு இரயில் பிடித்து, நாக்பூர் வரை வந்து, அங்கிருந்து GT Express மூலம் சென்னை வரை பொதுப்பெட்டியில் பயணப் பட்டேன்.
அன்று இரவு தான் உலகையே உலுக்கி எடுத்த Bபோபால் விஷ வாயுக் கசிவு! பல்லாயிரக்கணக்கானவர்களை உயிர் பலி வாங்கி, இன்றைக்கும் அந்தப் பகுதிகளில் குறைபாட்டுடன் பிரசவம் நடக்கும் அவலநிலை! அதை விட மகாக் கொடுமை இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை! கிட்டத்தட்ட இரண்டு சந்ததிகள் காலியாகி விட்டன. என்று தான் திருந்துவோமோ? இதைப் பற்றி எள்ளளவும் அறியாமல் சென்னையில் இறங்கியபோது தான் செய்தி வரத் தொடங்கியிருந்தது. மிகவும் வருத்தப்பட்ட ஒரு சம்பவம் அது!
ஆஹா… TN Express-இல் பயணித்துக் கொண்டிருந்தவன் வேறு எங்கெங்கோ சென்றுவிட்டேன். நான் ”தில்லி பாபு” ஆன கதையைப் பார்க்கலாம்! என்னுடன் பயணித்த சக பயணியர் அனைவரும் வட இந்தியர்கள் - அதிலும் என் துரதிருஷ்டம் - சென்னையிலிருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் அந்தக் குடும்பம் என்னை காரே மூரே என ஏதோ கேட்க, நான் “ஏங், யே, ஞே, ஙே” என ஏதேதோ சொல்ல, ஒரு நவரச நாடகம் துவங்கியது! ஒரு வழியாக அவர்கள் ஆங்கிலத்தைக் கொல்ல, நான் ஹிந்தியை மெல்ல, கிட்டத்தட்ட நான் வேலை ஆணை பெற்று தில்லி செல்கிறேன் என்பதை புரிய வைக்க, இரயில் இரைந்து சிரித்தபடியே நெல்லூர் நிலையத்தை வழுக்கிக் கடந்தது! அடுத்து மதிய உணவு நேரம்!
அந்த நேரத்தில் கிடைத்தது பேரிடி! அது என்ன பேரிடி?
அடுத்த பகுதியில் தொடர்ந்து, கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…
நட்புடன்
சுப்ரமணியன்
புது தில்லி
******
நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து...
சுவையான அனுபவங்கள்.. இல்லை இல்லை சுவாரஸ்யமான அனுபவங்கள். 'சுவை'யான அனுபவம் அடுத்த பகுதியில் காத்திருக்கிறது போலவே!
பதிலளிநீக்குநண்பரின் பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தில்லி பயணம் அப்போது ஆரம்பித்துவிட்டதா? அப்போதே அரைகுறை இந்தி பரிச்சயமா?
பதிலளிநீக்குஹிந்தி பரிச்சயமில்லை நண்பருக்கு! அவருக்கு மட்டுமல்ல, நானும் முதல் முறை தில்லி வந்தபோது ஹிந்தியில் ஒரு எழுத்து கூட தெரியாமல் தான் வந்தேன் நெல்லைத் தமிழன். தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எப்படி ஹிந்தியை சமாளித்தீர்கள்? தவறாகப் பேசிடுவோமே என்ற தயக்கங்கள் இல்லையா? அப்படிப் பேசி மாட்டிக்கொண்டிருக்கீங்களா? எது ஹிந்தி வார்த்தை எது பஞ்சாபி மற்ற மொழி வார்த்தை கலப்பு என்றெல்லாம் எப்படி அறிந்துகொண்டீர்கள்? தொடர்கிறேன்.
நீக்குஹிந்தி - பஞ்சாபி சில வேறுபாடுகள் உண்டு. வரும் பகுதிகளில் ஹிந்தி, பஞ்சாபி அனுபவங்கள் குறித்தும் எழுதி இருக்கலாம். காத்திருங்கள் நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இப்போது நகைச்சுவையாக தன் கடந்து வந்த பாதையை சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போது குளிரில் நடுங்கி கொண்டு தேற்வு எழுதியது வேதனையான விஷயம்.
பதிலளிநீக்கு//இரண்டு சந்ததிகள் காலியாகி விட்டன. //
போபால் விஷவாயு நிகழவு வேதனை தரும் நிகழவு , இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை என்பதும் கொடுமைதான்.
அடுத்து என்ன பேரிடி! அறிய தொடர்கிறேன்.
நிறைய சோதனைகளை கடந்து டெல்லி பாபுவாகி இருக்கிறார் .
குளிரில் நடுங்கிக் கொண்டு தேர்வு எழுதுவது வேதனையான விஷயம் தான் கோமதிம்மா. அதுவும் முதன் முதலாக குளிரைச் சந்திப்பது, அதுவும், அத்தியாவசியமான குளிர்கால உடைகள் இல்லாமல்! ரொம்பவே கடினம்.
நீக்குபோபால் விஷவாயு - வேதனையான சம்பவம். மறக்க முடியாத கொடூரம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வேறு மாநில வேலைக்குச் செல்லும்போது நாம் இது போல ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் .பல நாட்கள் கழித்துத் திரும்பிப் பார்த்தால் சுவாரசியமாக இருக்கும்
பதிலளிநீக்குவேறு இடத்திற்கு, அதுவும் மொழி தெரியாத இடத்திற்குச் செல்லும் போது சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம் தான் அபயா அருணா ஜி. அந்தச் சமயத்தில் பிரச்சனை என்றாலும் பிரிதொரு சமயத்தில் யோசிக்கும்போது நகைச்சுவை தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவாரசியமான அனுபவம்... அதிரடியை வாசிக்க ஆவலுடன்...
பதிலளிநீக்குஅதிரடி - காத்திருங்கள் தனபாலன். வரும் ஞாயிறில் அடுத்த பகுதி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. இன்றும் தங்கள் நண்பரின் நகைச்சுவையான கடந்து வந்த பாதை பதிவு விறுவிறுப்பாகச் செல்கிறது.
வட இந்தியாவில் அவர் குளிரில் பெற்ற அனுபவம் கடுமையானதுதான்...அதுவும் குளிருக்கு தகுந்த ஆடைகளை கொண்டு செல்லாமல் பாவம்... மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். சென்னை குளிருக்கும் அதற்கும் வேறுபாடுகள் அதிகம். போபால் விஷ வாயு கொடுமை மறக்க முடியாதது.
தில்லி வரைச் சென்ற ரயிலில் அவர் பெற்றிருந்த அனுபவங்களை நகைச்சுவையாக சொல்லியுள்ளார். அதில் சோதனையாக என்ன பேரிடியோ..? தெய்வாதீனமாக அதில் அவருக்கு நன்மை நடந்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்தப் பதிவையும் காண காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
வட இந்தியாவின் குளிர் - அதிலும் முதன் முறையாக அனுபவிக்கும் போது மிகவும் கடினம் தான். நான் முதன் முதலாக 1991-ஆம் ஆண்டு தான் குளிர் அனுபவம் பெற்றேன். சென்னையில் இருப்பது குளிரே அல்ல! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவையான அனுபவங்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅன்பின் வெங்கட் வாசகம் இனிமை. நண்பர் சுப்புவின் பயணம் வேதனை. இளமையில் தான் எத்தனை துயரம்!!!
பதிலளிநீக்குதில்லி பாபு என்று அவருக்கு இன்னோரு பெயரா.
அடுத்து வேறு அதிர்ச்சி வருகிறது என்றால் எத்தனை தான் தாங்குவார் மனிதர்.
குளிரில் வருந்தியவர்கள் பற்றி அறிந்திருக்கிறேன்.
மாமா தில்லியில் தான் வேலை பார்த்தார்.
அரசு வேலை.40 வருட அனுபவம். நடுத்தரக் குடும்பம்.
சிரமங்களைச் சந்தித்தும் சிரிக்க மறக்கவில்லை.
இவருக்கும் நன்மை நடக்கட்டும்.
வணக்கம் வல்லிம்மா.
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
குளிரில் வருந்தியவர்கள் நிறையவே இருக்கிறார்கள். உங்கள் உறவினர் தில்லியில் இருந்ததை முன்னரே நீங்கள் சொல்லியது நினைவில் இருக்கிறது.
சிரமங்களைச் சந்தித்தும் சிரிக்க மறக்கவில்லை - உண்மை தான். அப்போது கடினமாகவே இருந்தாலும், அவற்றை கடந்து வந்த பிறகு அத்தனை வேதனை இல்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.