அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
TRAVEL IS THE ONLY THING YOU BUY THAT MAKES YOU RICHER.
******
பயணம் செய்ய ஆசை என்ற தலைப்பில் இது வரை வெளியிட்ட பதிவுகளை நீங்கள் படித்திருக்கலாம். இதுவரை இந்த வரிசையில் நான்கு பதிவுகள் எழுதி இருக்கிறேன். முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.
பயணம் செய்ய ஆசை - 1 (CH) சோப்டா - உத்திராகண்ட்
பயணம் செய்ய ஆசை - 2: Umngot River - Dawki, Meghalaya
பயணம் செய்ய ஆசை - 3 - GURUDONGMAR LAKE, SIKKIM
பயணம் செய்ய ஆசை - 4 - SPITI VALLEY, HIMACHAL PRADESH
இந்த வரிசையில் ஐந்தாம் பதிவாக இதோ இன்று ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துவிட்டேன். இந்த முறை நான் செல்லவும், உங்களை அழைத்துச் செல்லவும் விரும்பும் இடம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள சில இடங்கள். மிகவும் பழமையான சில இடங்களை இங்கே நீங்கள் பார்க்க முடியும். ஜலாவர் நகரத்தின் அருகே இருக்கும் சில இடங்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம் - பொதுவாக ராஜஸ்தான் என்றால் ஜெய்பூர், ஜெய்சல்மேர், உதய்பூர், ஜோத்பூர் போன்றவை தான் பலருக்கும் நினைவுக்கு வரும். படிப்பாளிகள் என்றால் கோடா நகரமும் நினைவுக்கு வரும் - அங்கே தான் நிறைய Coaching Centre-கள் இருக்கின்றன. ஜலாவர் குறித்து பெரும்பாலும் நம் ஊர் மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ஜலாவரில் சில இடங்கள் குறித்தும், எப்படிச் செல்வது போன்ற தகவல்கள் குறித்தும் நாம் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
எங்கே இருக்கிறது, எப்படிச் செல்வது?
தலைநகர் தில்லியிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் (சாலை வழி பயணம்) தொலைவில் இருக்கிறது ஜலாவர். அதன் அருகே சில பழமையான இடங்கள், கோவில்கள், கோட்டை என பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு. தலைநகரிலிருந்து ஜலாவர் வரை செல்ல கோடா வழி சில பேருந்துகள் உண்டு. போலவே இரயில் வசதிகளும் உண்டு. நேரடியாக ஜலாவர் செல்லும் பேருந்துகள்/இரயில்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒன்றிரண்டு பேருந்துகள் இருந்தாலும் வசதியானவை அல்ல! விமானம் மூலம் செல்ல அத்தனை வசதிகள் இல்லை - இண்டோர் வரை விமானத்தில் சென்று அங்கேயிருந்து 300 கிலோமீட்டர் சாலை வழி பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் அது சரியான வழி அல்ல! கோடா வழி சாலைப் பயணம் செய்யாமல் Bபூந்தி எனும் இடம் வழியாகவும் செல்ல முடியும்.
பார்க்க வேண்டிய இடங்கள்:
Ghar Palace: நகரின் மையத்தில் மகாராஜா மதன் சிங் மற்றும் அவரது வாரிசுகளால் கி.பி 1838-1854 க்கு இடையில் கட்டப்பட்ட ஒரு அழகிய அரண்மனை இது. மிகவும் அழகான ஓவியங்கள் உள்ள இடம் இது - குறிப்பாக ஜனான Khகானா என்று அழைக்கப்படும் அந்தப்புர சுவர்களில் ஓவியங்களும் கண்ணாடிகளால் ஆன வேலைப்பாடுகளும் மிகவும் சிறப்பாக இருக்கும். இதே அரண்மணை வளாகத்தில் பிற்காலத்தில் (1921) மகாராஜா Bபவானி சிங் அவர்களால் கட்டப்பட்ட, Bபவானி நாட்யா ஷாலா. நாடகம் மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகளுக்காக, ஓபரா அரங்க பாணியில் கட்டப்பட்ட ஒரு பிரபலமான பார்சி தியேட்டர்). அந்தக் காலத்து நாடகக் கலையைப் பற்றிய தகவல்களைத் தரும் விதமாக அமைந்திருக்கிறது.
ஜால்ராபாடன்: ஜலாவர் நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜால்ராபாடன் என்ற இடம் ”மணிகளின் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. ஜலா ஜாலிம் சிங் என்ற மன்னனால் கி.பி. 1796 ஆம் ஆண்டு, நான்கு சுவர்களுக்குள் நிர்மாணிக்கப்பட்ட ஒரு பழங்கால நகரம். இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்ட அதே இடத்தில் தான், அன்னிய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட பண்டைய நகரமான சந்திரவதி பர்மர் ராஜா சந்திரசேனால் நிறுவப்பட்டு இருந்தது. அந்தக் கால வணிகர்கள் தங்களது விலைமதிப்புள்ள பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லும் பாதையில் இருந்த, நான்கு சுவர்களுக்குள் அமைந்திருந்த இந்த ஜால்ராபாடன் நகரில் இரவு நேரங்களில் தங்கி தங்கள் பொருள்களை பாதுகாத்துக் கொண்டார்கள்.
10-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட பத்மநாப்(bh) கோவில் என்று அழைக்கப்படும் சூரியனார் கோவில் நகரின் பெருமை மிகு இடம். அழகிய சிற்பங்கள் கொண்ட கோவில் கட்டிடக்கலைக்கு இது ஒரு சிறந்த உதாரணம். கோவிலின் உள்ளே ஒரு விஷ்ணு சிலை உள்ளது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாந்திநாத் ஜெயின் கோவில் சிற்பங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுக்கு பெயர் பெற்றது. கி.பி 1796-இல் ராஜா ஜாலிம் சிங் கட்டிய ஸ்ரீ துவாரகாதீஷ் கோவில், இந்த நகரத்தின் மற்றொரு முக்கியமான கோவிலாகும். ஜலாவர்-ஜால்ராபாடன் சாலையில் அமைந்துள்ள நவ்லகா கோட்டையும் பார்வையிடத்தக்க இடமே.
இந்த இடங்களைத் தவிர, சந்திரபாகா கோவில், Gகக்ரோன் கோட்டை, Gகாவ்டி குடிசைகள், கோல்வி குகைகள் போன்ற இடங்களும் பார்க்கத் தக்கவை.
எங்கே தங்குவது? ஜலாவர் நகரில் சில தங்குமிடங்கள் உண்டு என்றாலும் கோட்டா நகரில் (சுமார் 90 கிலோமீட்டர்) தங்குபவர்களும் உண்டு. தங்குமிடங்கள் குறைந்த வசதிகள் கொண்டவை என்பது ஒரு குறையாகவே தெரிகிறது. ஜால்ராபாடனிலும் சில தங்குமிடங்கள் உண்டு. நாளொன்றுக்கு 750 முதல் 1500 ரூபாய் வரை தங்குமிடத்திற்கான செலவு ஆகலாம்.
செலவு எவ்வளவு ஆகும்? பேருந்து செலவு தில்லியிலிருந்து ஜலாவர் வரை செல்ல சுமார் ஆயிரம் ரூபாய் வரை ஆகும். தங்குமிட செலவுகள் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய். உணவுக்கான செலவும் சிறு நகரம் என்பதால் அத்தனை அதிகமாக ஆகாது! அதனால் தில்லியிலிருந்து புறப்பட்டு ஜலாவர் சென்று இரண்டு நாட்கள் தங்கி இடங்களைப் பார்த்து விட்டு திரும்புவதென்றால் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகலாம். இரண்டு பேர் செல்வதென்றால் தங்குமிட செலவு தவிர இன்னும் மூன்றாயிரம் வரை சேர்த்துக் கொள்ளலாம்! ஆக அதிக செலவில்லாமல் பழமையான கோட்டைகள், கோவில்கள் ஆகியவற்றை பார்த்து திரும்பலாம். அதிக அளவில் தெரியாத இடங்கள் என்பதால் நின்று நிதானித்து இடங்களைப் பார்த்து ரசிக்கலாம்.
எப்போதும் சொல்வது போல சென்று பார்க்க இந்தியாவில் இடங்களுக்குப் பஞ்சமே இல்லை. எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்க ஆசையிருந்தாலும் எல்லா இடங்களையும் பார்த்து விட முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். இங்கே பகிர்ந்து கொள்ளக் காரணம் நான் பார்க்காவிட்டாலும், பார்க்க வாய்ப்பிருந்தால் அடுத்தவர்கள் பார்க்க ஒரு யோசனை கிடைக்குமே என்பதால் தான். உங்களுக்கு இப்படி வாய்ப்பு அமைந்தால் இந்த இடத்தினைப் பார்த்து வாருங்கள்.
நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம்! தகவல்கள் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...
உங்கள் தெரிவு எல்லாமே அழகிய இடங்களாக இருக்கிறது. 'பின்னே, இல்லாமல் இருக்குமா' என்கிறீர்களா? எங்களுக்கும் ஆவலை உண்டாக்குகிறீர்கள்.
பதிலளிநீக்குதெரிவு செய்து பதிவு செய்யும் இடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பழைய கோட்டைகள் கம்பீரமாயும் அழகாயும் உள்ளன.
பதிலளிநீக்குஅவற்றில் நடந்த சந்தோஷங்களைவிட கடைசியாக நிகழ்ந்த கோர யுத்தங்களும் மரண ஓலங்களும் கோட்டைகளை நிரப்பியிருக்குமோ?
போய்விட்டு வந்து எழுதினால் படிக்கலாம்.
மரண ஓலங்களும், கோர யுத்தங்களும் - இருக்கலாம் - ஒரு ஒலி ஒளி காட்சியில் க்வாலியர் கோட்டை குறித்து பார்த்தபோது இப்படி காட்சிப்படுத்தி இருந்தார்கள் நெல்லைத் தமிழன். மிகவும் கோரமான சம்பவங்கள் இப்படியான கோட்டைகளில் நடந்ததுண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அரிய தகவல்கள்.
பதிலளிநீக்குநீங்கள் இவ்விடங்களுக்கு விரைவில் சென்று கண்டு களிக்க வாழ்த்துக்கள்.
தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வருவேன் அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அழகு.
பதிலளிநீக்குJayakumar
படங்கள் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஜி
பதிலளிநீக்குதகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
இடங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் அருமை...
பதிலளிநீக்குதகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆமாம் ஜி ஜலாவர் அழகான இடம் கோட்டை கோட்டையைச் சுற்றி நீர் நிலை...அழகு! அருமையான இஅடம். ஜலாவர் பற்றியும் மணிகள் நகரம் பற்றியும் நெட்டில் பார்த்திருக்கிறேன் உங்கள் பதிவிலிருந்து தங்கும் செலவு, இன்னும் சில கோயில்கள் பற்றியும் எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது ஜி.
பதிலளிநீக்குசென்று பார்க்க இந்தியாவில் இடங்களுக்குப் பஞ்சமே இல்லை. எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்க ஆசையிருந்தாலும் எல்லா இடங்களையும் பார்த்து விட முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். //
வெங்கட்ஜி ஹைஃபைவ். அதே அதே. நிறைய இடங்கள் நானும் இப்படி பல இடங்களைத் தேடி தேடிப் பார்ப்பதுண்டு. வெர்ச்சுவல் டூர். பல சமயம் நினைப்பதுண்டு இடங்களுக்குச் செல்ல முடியவில்லையே என்று. ஆனால் மனதைத் தேற்றிக் கொண்டுவிடுவேன்.
அதனால் வெர்ச்சுவல் டூர். முன்பு வாய்ப்பு கிடைத்த போது சென்று வந்த இடங்களை நினைத்து தேற்றிக் கொள்வதும் உண்டு.
உங்களுக்குக் கூடியவிரைவில் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகள் ஜி.
கீதா
உங்களுக்கும் பயணம் செல்வதில் இருக்கும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது கீதாஜி. பல இடங்களுக்கு செல்ல ஆசை தான் - ஆனாலும் அத்தனை ஆசைகளும் நிறைவேறி விடாதே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நாங்கள் பார்ப்பதற்கான ஓர் ஆவலை உங்கள் பதிவுகள் மூலமாக உண்டாக்கிவிடுகின்றீர்கள். இந்தியாவில் நான் பார்க்க ஆசைப்படும் இடங்களில் இதுவும் ஒன்று. காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களுக்கும் ஒரு புதிய இடத்தினைப் பார்க்க ஆர்வம் உண்டானதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. உங்களுக்கும் இப்படி ஒரு பயணம் வாய்க்கட்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅறியாத பல இடங்களைப் பற்றி விரிவான தகவல்கள். பயணம் செய்ய விரும்புவோருக்குப் பயனாகும். கோட்டைகளின் கட்டிடக்கலை ஈர்க்கின்றன.
பதிலளிநீக்குபதிவு பலனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே ராமலக்ஷ்மி. ராஜஸ்தான் மாநில கட்டிடக் கலை சிறப்பாகவே இருக்கும் - பார்த்த சில இடங்கள் அப்படி ஒரு எண்ணம் உண்டாகக் காரணமாக இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சில பார்த்தவை, சில பார்க்கவில்லை.
பதிலளிநீக்குஜலாவர் போக நினைத்து போக முடியவில்லை. மிக அருமையாக இருக்கிறது.
இந்தியாவில் இடங்களுக்குப் பஞ்சமே இல்லை. //
உண்மை . எல்லோரும் எல்லாவற்றையும் பார்ப்பது முடியாத காரணம் தான்.
கிடைத்தவரை(முடிந்ததை) பார்க்கிறோம். வாய்ப்பு இருக்கும் போது பார்க்க்கலாம்.
கிடைத்தவரை, முடிந்தவரை பல இடங்களைப் பார்த்து விடலாம் கோமதிம்மா. வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வது நல்லதே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பல இடங்களையும் அறியத் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபதிவு பயனுள்ளதாக இருந்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.