அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஆறாத காயத்திற்கும் தீராத கவலைக்கும் சில நேரத்தில் மருந்தாகப் பயன்படுவது சிலரின் அன்பான வார்த்தைகளே..
******
சென்ற பகுதியில் கோவையில் எங்கள் வீட்டில் நடந்த பெண் பார்க்கும் படலத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அவருக்கும், எனக்கும் இந்தப் படலம் முதல் அனுபவம்! எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறேனோ அவருடன் தான் கல்யாணம் என்ற கொள்கையுடன் அவர் இருந்திருக்கிறார். எனக்கும் அதுவரை திருமணம் பற்றியெல்லாம் எந்த சிந்தனையும் வந்ததில்லை...:) இப்படியாகத் தான் இருவரும் இருந்தோம்...:) இந்தப் பகுதியில் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற எங்கள் நிச்சயதார்த்தம் பற்றி பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை பெண் பார்க்கும் படலம் முடிந்தது. கோவையிலிருந்து ஞாயிறு காலை நிச்சயதார்த்த நிகழ்வுக்காக திருச்சிக்கு ஒரு வேனில் புறப்பட்டோம். அத்தை, சித்தப்பா, மாமா, மாமி, நட்புகள் என்று எல்லோருமாக சேர்ந்து சென்றோம். கையில் எடுத்துச் சென்ற மதிய உணவை திருச்சியின் பிரபலமான சுற்றுலாத்தலமான முக்கொம்பில் அமர்ந்து உண்டோம்.
நிச்சயதார்த்தத்துக்குத் தேவையான அனைத்துமே எடுத்துக் கொண்டு சென்றிருந்தோம். ஆனால் மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஸ்ரீரங்கத்து மாலை தான் அழகாக இருக்குமென்று அங்கேயே வாங்கிக்கலாம் என்று முடிவு செய்து தான் கோவையிலிருந்து புறப்பட்டோம்.
ஸ்ரீரங்கம் வந்ததும் வேனை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, மாலைகளை வாங்கிக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்கும் வந்து சேர்ந்து விட்டோம். வீட்டில் தான் நிகழ்வு. மாலை 6 மணிக்கு தான் நிச்சயதார்த்தம். அவர்கள் வீட்டின் கீழேயே ஒரு வீடு காலியாக இருக்கவே அங்கே எங்களுக்கு இடம் தரப்பட்டது. காலத்தில் ஓட்டத்தில் பத்து வருடங்களுக்குப் பின் அதே வீட்டில் குடியிருப்பேன் என்று அப்போது நினைத்தும் பார்க்கவில்லை..:)
மாலை நிச்சயத்திற்கு எல்லோருமாக தயாரானோம். அன்று முதலில் அடர் பச்சையில் ஒரு பட்டுப்புடவை உடுத்திக் கொண்டிருந்தேன். அவர் Dark pink நிறத்தில் கட்டங்கள் போட்ட அரைக்கை சட்டையும், வேஷ்டியும் உடுத்தியிருந்தார். அவரது உறவுகளை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார். அங்கேயும் சித்தப்பா, சித்தி, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, அக்கா, தங்கை என்று எல்லோரும் குழுமியிருந்தனர்.
மனையில் முதன்முதலாக இருவரையும் சேர்ந்து அமர வைத்தனர். அன்று முதல் அவரின் வலப்புறம் தான் நான் அமர வேண்டும் என்ற நியதி சொல்லப்பட்டது. என் நாத்தனார் எனக்கு நலுங்கு வைத்து மாலை அணிவிக்க, என் தம்பி அவருக்கு நலுங்கு வைத்து மாலை அணிவிக்க, இரு புறமும் அத்தைகள் சேர்ந்து ஆரத்தி எடுக்க, உறவினர்கள் முன்னிலையில் நிச்சயத் தாம்பூல பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. இரு தரப்பிலும் தாம்பூலம் மாற்றிக் கொண்டதும் எங்கள் நிச்சயதார்த்த உடைகளை உடுத்திக் கொண்டோம். மே மாத இறுதியில் முகூர்த்த நாள் முடிவு செய்யப்பட்டது.
நிச்சயதார்த்தம் முடிந்ததும் இரவு உணவு எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு தரப்பு உறவுகள் இத்தனை பேருக்கும் சேர்த்து வீட்டிலேயே தான் சமைத்திருந்தார்கள். பந்தியில் அமர்ந்திருந்த எங்களுக்கு அவரே தன் கையால் பரிமாறினார். என்னருகில் அமர்ந்திருந்த என் தோழி கூட , 'புவனா! நல்லா வேலை செய்வார் போல!' என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்...:)
நாங்கள் கிளம்புவதற்கு முன் மாடிப்படிகளில் நின்று கொண்டு தனியே என்னை அழைத்தார். இந்த மாசம் 25 தானே உன் பர்த்டே? என்று கேட்டார். ஆமாம் என்றேன்...:) அதுக்குள்ள நான் டெல்லிக்கு திரும்பிடுவேன். அன்னிக்கு முடிஞ்சா நான் உனக்கு ஃபோன் பண்றேன்! என்று சொல்லி எங்களுடைய எதிர் ப்ளாக்கில் குடியிருந்த மாமி ஒருவர் வீட்டு எண்ணை வாங்கிக் கொண்டார். அவரும் இந்த நிச்சயதார்த்ததுக்கு வந்திருந்தார். அப்போது எல்லோரிடமும் தொலைபேசி கிடையாதே!
அப்புறம் பேசிக் கொண்டிருக்கையில் கல்யாணத்துல இந்த ஜானவாசம், நலுங்கு இதெல்லாம் வேண்டாம்னு உங்காத்துல சொல்லிடு! என்றார். ஏன்! என்றேன். ஓ! அப்படின்னா உனக்கு அதெல்லாம் பிடிக்குமா!! ஜமாய்! என்றார்..:) பிறகு அபார்ட்மெண்ட் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். இப்படியாக நிச்சயதார்த்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சரி! கல்யாணத்துல நலுங்குல பாடச் சொல்வார்கள் என்று அப்போது நான் யோசிக்கவே இல்லை..:) அப்புறம் யார் தான் பாடியது??? பர்த்டேக்கு ஃபோன் பண்ணினாரா??
அந்தக் கதைகளையெல்லாம் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
ஜானுவாசம், நலுங்கு ஏன் வேண்டாம் என்று சொன்னார்?!
பதிலளிநீக்குகாட்சிப் பொருள் போல் காரில் போவதால், நானும் ஜானவாசம் வேண்டாம் என்று சொன்னேன். மனைவி விருப்பப்படி நலுங்கும் வேண்டாம் என்று இருந்துவிட்டேன். இல்லைனா, சின்னப் பசங்கள் மாதிரி தேங்காய் உருட்டி கேலி கிண்டலுடன்... எனக்குப் பிடிக்காது. வெங்கட்டுக்கும் இதே காரணமா?
நீக்குநெல்லை, மீக்கும் சுத்தமாகப் பிடிக்காது. கல்யாணத்தில் இப்படியானவை. சீர் டிஸ்ப்ளே, மாப்பிள்ளைக்கு விரத சாமான் டிஸ்ப்ளே பெண்ணிற்கு விளையாடல் சாமான் என்று டிஸ்ப்ளே உட்பட. ரொம்ப ரொம்ப சிம்பிளாக கல்யாணத்தில் எது முக்கியமோ அது மட்டுமே போதும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.
நீக்குகீதா
ஜானவாசம், நலுங்கு இவற்றின் உள்ளார்ந்த தாத்பரியமே புரியறதில்லை. இப்போ இருக்கும் இளைய தலைமுறைக்கு என நினைத்தால் நீங்கள்ளாம் கூட அப்படியே சொல்றீங்க! எங்க பெண் கல்யாணத்தில் ஜானவாசம் வைக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் எங்க பெண்ணே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். பையரும் அப்படியே! அவங்க வீட்டில் ஜானவாசம், கச்சேரி என ஆசைப்பட்டார்கள். கச்சேரி அந்த வித்வானுக்கு நாம் செய்யும் துரோகம் எனச் சொல்லி நாங்களே வேண்டாம் என்றோம். பெண், பிள்ளை இருவர் கல்யாணத்திலும் நலுங்கு இருந்தது.
நீக்குகல்யாணத்தில் பாரம்பரியமாக சில விஷயங்கள் இருந்தாலும் என் கல்யாணம் குறித்த சில எண்ணங்கள் எனக்கு இருந்தன. அதுகுறித்து விரிவாக எழுத வேண்டியிருக்கும் என்பதால் இங்கே சொல்லாமல் விடுகிறேன் ஸ்ரீராம். ஆனாலும் இது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் என்னுடைய எண்ணங்களை காற்றில் விட்டுவிட்டேன் :))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மேலே ஸ்ரீராம்-க்கு சொன்னது போல எனக்கு சில எண்ணங்கள் இருந்தன. ஆனாலும் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது - என்னவளுக்காகவும், வீட்டினருக்காகவும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
தனிப்பட்ட விருப்பம் எப்படி இருந்தாலும், குடும்பத்தினருக்காக பல விஷயங்களை பிடிக்கிறதோ இல்லையோ செய்ய வேண்டியது கட்டாயமாகி விடுகிறது கீதாஜி. என் கல்யாணத்திலும் அப்படியே! பார்க்கும் முதல் பெண் உடன் திருமணம் என்பது தவிர வேறு எதிலும் பிடிவாதமாக இருக்க முடியவில்லை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சில விஷயங்கள் பிடிப்பதில்லை என்றால் விட்டு விடலாம் - அந்த நிகழ்வுகளுக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் என்றே எனக்குத் தோன்றுகிறது கீதாம்மா. ஜானவாசம்/நலுங்கு போன்றவை இப்படியான பட்டியலில் - என்னைப் பொறுத்தவரை இருக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஜானுவாசத்துக்கான காரணம் என நான் நினைப்பது, "இவர்தான் மாப்பிள்ளை.. பார்த்துக்கோ" என ஊரறிய அறிவிப்பது! ஏற்கெனவே திருமணமானவராகவோ, வேறு பிரச்னைகளோ இருந்தால் ஊர் பார்த்துச் சொல்லிவிடும். எனவே அது இந்தக்காலத்துக்கு தேவையில்லை என்றே தோன்றுகிறது!
நீக்குஇந்த காரணமும் இருக்கலாம். இந்தக் காலத்திற்கு தேவையில்லை என்பதே எனது எண்ணமும் ஸ்ரீராம்.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அவர் ஆடம்பரத்தை விரும்பாதவர் என்பதும் மற்றோர் விரும்பினால் அதை தடையும் செய்யாதவர் என்படும் புரிகிறது.
பதிலளிநீக்குஅடுத்த பகுதிக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.
ஆடம்பரம் என்பது தேவையில்லாத ஒன்று என்பது எப்போதும் சொல்வது! அடுத்தவருக்காக அதுவும் வரப் போகும் துணைவிக்காக விட்டு கொடுப்பது நல்லது தானே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.
அப்புறம் பேசிக் கொண்டிருக்கையில் கல்யாணத்துல இந்த ஜானவாசம், நலுங்கு இதெல்லாம் வேண்டாம்னு உங்காத்துல சொல்லிடு! என்றார்.//
பதிலளிநீக்குவெங்கட்ஜியைப் பற்றி தெரிந்த விஷயம்!!!!!!! வெரி சிம்பிள்!
// ஏன்! என்றேன். ஓ! அப்படின்னா உனக்கு அதெல்லாம் பிடிக்குமா!! ஜமாய்! என்றார்..:) //
ஹாஹாஹா நீங்க முதல் பகுதியில் சொன்னது நினைவுக்கு வந்தது.
இதுவும் அதே அவர் மற்றவர்களுடைய விருப்பத்தை மதிப்பவர்!
இதெல்லாம் அவர் எழுத்திலிருந்தும் நேரில் சந்தித்த போதும் தெரிந்துகொண்டவை. டக்கென்று உதவுபவர் என்பது உட்பட. Broad outlook and respect for others. ரசனைமிக்கவரும் கூட.
கீதா
என்னைப் பறிய உங்களது மதிப்பீடு குறித்து மகிழ்ச்சி கீதாஜி. முடிந்தவரை அனைவருக்கும் நல்லவராகவே இருப்போம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நாங்கள் கிளம்புவதற்கு முன் மாடிப்படிகளில் நின்று கொண்டு தனியே என்னை அழைத்தார். இந்த மாசம் 25 தானே உன் பர்த்டே? என்று கேட்டார். ஆமாம் என்றேன்...:) அதுக்குள்ள நான் டெல்லிக்கு திரும்பிடுவேன். அன்னிக்கு முடிஞ்சா நான் உனக்கு ஃபோன் பண்றேன்! என்று சொல்லி எங்களுடைய எதிர் ப்ளாக்கில் குடியிருந்த மாமி ஒருவர் வீட்டு எண்ணை வாங்கிக் கொண்டார். //
பதிலளிநீக்குரசித்தேன். அப்போதைய வித்தியாசமான மாப்பிள்ளை!!!!!
கீதா
ஹாஹாஹா, எங்க பெண்ணிற்கும் மாப்பிள்ளை பக்கத்து வீட்டு எண்ணுக்குத் தொலைபேசுவார். அப்போ எங்களிடம் தொலைபேசி இல்லை. பிள்ளை/மாட்டுப் பெண் காலத்தில் அவங்க மெயில் மூலம், ஸ்கைப் மூலம் சாட்டிங் எனச் செய்ய ஆரம்பிச்சாச்சு. :))))
நீக்குஅப்போதைய வித்தியாசமான மாப்பிள்ளை - ஹாஹா... இருக்கலாம் கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இப்போதெல்லாம் பல விஷயங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவாரசியம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் மலரும் நினைவுகள் அருமை.
வெங்கட் பாடி இருப்பார் என்று நினைக்கிறேன்.
ஆமாம்,அவர் தான் பாடினதாக இருவருமே சொன்ன நினைவு.
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குவெங்கட் பாடி இருப்பார் - ஹாஹா! ஏதோ பாடினதாக பெயர் பண்ணி வைத்தேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உங்கள் நினைவுத் திறன் வியக்க வைக்கிறது கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவாசகம் அருமை. பதிவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். ஜானவாசம், நலுங்கு வேண்டாமென்று சொன்ன சகோதரர் பிறகு உங்களின் ஆசைக்காக சரி எனச் சொல்லி விட்டாரா? திருமணங்களில் உறவும்,நட்பும் சேர்ந்து கொண்டு கூடி நடத்தும் கலகலப்பான நிகழ்ச்சிகள்தானே இது.. இதை ஏன் தவிர்க்க வேண்டும்? இவையனைத்தும் எங்கள் திருமணத்தில் ஒரு குறைவுமில்லாது நன்றாக நடைப் பெற்றது என்ற தங்களின் அடுத்தப் பகிர்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. சில விஷயங்கள், நிகழ்வுகள் எல்லோருக்கும் பிடித்துவிடுவதில்லை என்றே தோன்றுகிறது. தவிர்க்க முடிந்தால் தவிர்க்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை. பொருத்தமும் கூட.
பதிலளிநீக்குசுவாரசியமாகச் செல்கிறது உங்களின் மணவாழ்க்கையின் தொடக்கம். வெங்கட்ஜி அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் உங்களுக்காக ஓகே சொல்லியிருப்பதிலிருந்து அவரது அழகான மனம் தெரிகிறது.
துளசிதரன்
வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
முகநூலிலும் தொடர்ந்து படித்து வருகிறேன்.
பதிலளிநீக்குதொடர்ந்து வாசித்தற்கு நன்றி கீதாம்மா.
நீக்குஇனிய நினைவுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு