செவ்வாய், 14 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி ஒன்பது


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

WHEN YOU FOCUS ON PROBLEMS, YOU GET MORE PROBLEMS.  WHEN YOU FOCUS ON POSSIBILITIES, YOU HAVE MORE OPPORTUNITIES.

 

******

 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு



 

சென்ற பகுதியில் திருமணத்திற்குப் பிறகான எங்கள் வாழ்க்கையைப் பற்றி சற்று பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்போதைய நாட்களை நினைத்துப் பார்த்து எழுதும் போது என் வயது குறைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது....🙂 பசுமையான நினைவுகள் மனதிற்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும்  தருகிறது. உங்கள் மலரும் நினைவுகளையும் தூண்டுகிறது இந்தத் தொடர் என்பதை கருத்துகளில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய பதிவில் புது குடித்தனத்தில் செய்த சில விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

 

'கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போல' என்ற சொல் வழக்குப் போல தான் டெல்லியில் என் வாழ்க்கைப் பயணம் துவங்கியது. பள்ளிநாட்களில் இருந்தே கற்றிருந்தாலும் பரிச்சயம் இல்லாத மொழியும், அதிகப்படியான சீதோஷ்ண நிலையும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு வாழப் பழக்கியது. இங்கு அவர் மட்டுமே என் உலகமாக இருந்தார். ஒரு மனைவியாக என் கடமைகளை செய்து கொண்டும், மாலை அவர் வருகையை எதிர்பார்த்து வாசலை பார்த்துக் கொண்டும்  இப்படியாக நாட்கள் இனிமையாகச் சென்றன.

 

திருமணமான புதிதில் அவர் அலுவலகத்துக்கு சென்ற பின் ஆடியோ கேசட்டுகளில் பதிவு செய்து வைத்திருந்த இளையராஜா பாடல்கள் தான் எனக்குத் துணையாக இருந்தது. அன்றாடம் பத்து கேசட்டுகளாவது போட்டு கேட்டுக் கொண்டிருப்பேன். சுவர் அலங்காரங்களை மாற்றுவதும், வீட்டை சுத்தம் செய்து அழகுபடுத்துவதிலும் என் பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன.

 

திருமணமான சில நாளில் அவரைப் பற்றி புரிந்து கொண்டேன். நாங்கள் இருந்த பகுதியில் உள்ள தமிழ்க் குடும்பங்களுக்கு இவர் 'செல்லப் பிள்ளை' என்று சொல்லலாம். யாருக்கு என்ன உதவி என்றாலும் மறுப்பேதும் சொல்லாமல் செய்து கொடுப்பார். அவர்கள் வீட்டு நல்லது கெட்டதில் முதல் ஆளாக இருப்பார். முதல் ஃபோன் இவருக்கு வந்து விடும். அது இரவோ பகலோ ஓடி விடுவார்! இவரைப் போன்று உதவி செய்யும் ஒரு நண்பர்கள் குழுவே அங்கு உண்டு.

 

அலுவலகத்தில் இருந்து வந்த பின் இந்த சமூக சேவையில் அவருக்கு நேரம் சென்று விடும். அவருக்கும் வீட்டிலிருப்பதை விட நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது தான் பிடிக்கும். வார இறுதிகளில் வீட்டிலிருக்கும் நேரத்தில் இருவருக்கும் பிடித்த பாடல்களை தேர்வு செய்து சிடியில் பதிவு செய்வது, அவரிடம் இருந்த புத்தகங்களுக்கு அட்டை போட்டு பராமரிப்பது, Cards விளையாடுவது என்று நேரத்தை செலவிடுவோம்.

 

இந்த சமூக சேவை எந்தளவுக்கு இருந்தது என்றால், என் அப்பா ஒருசமயம் ஃபோன்  செய்யும் போது 'எப்படிம்மா இருக்க! மாப்பிள்ளை எப்படி இருக்கார்! என்ன பண்ணிண்டு இருக்கார்! அவர்ட்ட குடு பேசறேன்! என்றார். ஏதோ ஒரு ஃப்ரெண்டு வீட்டுல யாரோ தவறிட்டா! அதுக்கு ஹெல்ப் பண்ண போயிருக்கார்ப்பா! இரண்டு நாளாச்சு! என்றேன்..🙂 வாழ்வு, சாவு, பொதுக் காரியம், கோவிலில் லட்சார்ச்சனை, ஹோமம், அன்னதானம், பொங்கல் விழா  என்று ஏதோ ஒன்று..🙂 போக வேண்டாம் என்று நான் சொன்னதில்லை! அவருக்கு அதில் சந்தோஷம் கிடைக்கின்றது என்று விட்டுவிடுவேன்.

 

அவருக்கு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாததால் திருமணமான பின் வந்த முதல் சம்பளக் கவரை சில்லறையுடன்  என்னிடம் கொடுத்தார். கடவுளிடம் வைத்து பிரார்த்தித்துக் கொண்டேன். 'என் சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா உனக்கு! என்று கேட்டார்! தெரியாது! ஆனா எவ்வளவு வருதோ அதுக்கேத்த மாதிரி சிக்கனமா செலவு பண்ணனும்னு அம்மா சொல்லிக் குடுத்திருக்கா! என்றேன்.

 

அந்தப் பணத்தை பொதுவில் ஒரு பையில் வைத்துக் கொண்டு, இருவரும் எடுத்து செலவு செய்த பின் கணக்கு எழுதி விடுவோம். இது தான் நாங்கள் பின்பற்றும் முறை.   இப்போது வரையிலுமே அவராக தன் வருவாயைப் பற்றி 'நீ  கட்டாயமா இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்' என்று  கூறுவது தான்! நானாக கேட்டதே இல்லை..🙂 இதுவே எங்களுடைய புரிதல்..!

 

எதிர்பார்ப்பு ஏதும் வைத்துக் கொள்ளாத மனதில் தான் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட ரசிக்க முடியும். இப்படியாக சென்று கொண்டிருந்த இனிமையான நாட்களில் திருமணமான பின் மூன்று மாதம் கழித்து நான் ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது! எதற்காக! அந்தக் கதைகள் அடுத்த பகுதியில்..

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

34 கருத்துகள்:

  1. கணக்கு எழுதும் வழக்கமும், பட்ஜெட் போட்டு வைக்கும் பழக்கமும் எங்கள் வீட்டிலும் இருந்ததது.  சமீப காலமாகத்தான் மாறி இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பட்ஜெட் போட்டதே இல்லை. இவ்வளவுதான் செலவழிக்கலாம் என நானே ஒரு கணக்கு வைத்துக்கொள்வேன். பசங்க குழந்தைகளாக இருந்தபோதே மாதம் அவங்க செலவுக்கு இரண்டாயிரம் (அப்போது) கொடுக்கலாம் என இருந்தபோதும் ஒன்றும் கொடுக்க மாட்டேன். மனைவி அவங்களுக்கு அன்றன்னைக்கு செலவழிக்க (வாரம் இருமுறை ஸ்கூல் கேன்டீனில் வாங்கிச் சாப்பிட) 30 ரூ அளவு கொடுப்பதையும் எனக்குத் தெரியாத்துபோல இருந்துவிடுவேன்.

      நீக்கு
    2. நான் எப்போதாவது எழுதி வைத்திருக்கிறேன். சில வருடங்கள் தொடர்ந்து எழுதினேன்! பிறகு விட்டுப் போய்விட்ட பழக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாசகம் அருமை. உண்மை

    //அப்போதைய நாட்களை நினைத்துப் பார்த்து எழுதும் போது என் வயது குறைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது....�� பசுமையான நினைவுகள் மனதிற்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது.//

    நல்ல விஷயம் ஆதி!! உங்களை இப்படி உற்சாகப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சுவர் அலங்காரங்களை மாற்றுவதும், வீட்டை சுத்தம் செய்து அழகுபடுத்துவதிலும் என் பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன.//

    நானும் அப்போது அப்படித்தான். ஆனால் என் அனுபவங்கள் முற்றிலும் வேறானவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துகளைக் குறித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இந்த சமூக சேவை எந்தளவுக்கு இருந்தது என்றால், என் அப்பா ஒருசமயம் ஃபோன் செய்யும் போது 'எப்படிம்மா இருக்க! மாப்பிள்ளை எப்படி இருக்கார்! என்ன பண்ணிண்டு இருக்கார்! அவர்ட்ட குடு பேசறேன்! என்றார். ஏதோ ஒரு ஃப்ரெண்டு வீட்டுல யாரோ தவறிட்டா! அதுக்கு ஹெல்ப் பண்ண போயிருக்கார்ப்பா! இரண்டு நாளாச்சு! என்றேன்..��//

    செல்லப் பிள்ளையைப் பற்றி முன்பும் இந்த விஷயம் கொஞ்சமாக ஏதோ ஒரு பதிவில் சொன்னதாக நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லப் பிள்ளை! ஹாஹா... இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறோம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கணக்கு எழுதும் பழக்கம் பட்ஜெட் போடும் பழக்கம் உண்டு. இடையில் இல்லாமல் இப்போது மீண்டும் தொடர்கிறது.

    நானும் வீட்டின் வரவைக் குறித்து இதுவரை கேட்டதில்லை. சொல்லப்பட்டால் கேட்டுக் கொள்வதோடு சரி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே இந்தப் பழக்கம் கைவிட்டுப் போனது! இப்போதெல்லாம் பார்ப்பதே இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. எதிர்பார்ப்பு ஏதும் வைத்துக் கொள்ளாத மனதில் தான் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட ரசிக்க முடியும்.//

    உண்மை. என் சிறு வயது அனுபவங்கள் கற்றுக் கொடுத்த பாடம். இப்போது வரை உதவுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் சுகம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. கணக்கு எழுதுவது, எழுதவேண்டும் என நினைப்பது என் ரத,த்த்தில் ஊறியது. ஆனால் மனைவிட்ட அந்தப் பழக்கம் இல்லாத்து எனக்கு பெரிய குறை. இப்பவும் எனக்கு நான் வாங்கிக்கொள்ளும் பணத்திற்கு கணக்குக் கொடுப்பேன்.

    இந்தப் பழக்கத்தின் நல்லது அவங்களுக்குத் தெரியலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை...நான் நேற்று இதுக்கும் கருத்து போட்டிருந்தேன் அது போகவே இல்லை போலும்...

      நானும் கணக்கு எழுதுவதுண்டு.

      கீதா

      நீக்கு
    2. சில விஷயங்களை தொடர்ந்து செய்ய முடிவதில்லை நெல்லைத் தமிழன். நானும் ஆரம்ப காலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. உங்கள் கருத்துரை வந்திருக்கிறதே கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாசகம் அருமை மேடம்.
    பழைய நினைவுகளை சுவைபட எழுதுகிறீர்கள்.
    எங்களுக்கெல்லாம் இவை ஒரு பாடம்.
    கணக்கு எழுதுவது மிகவும் சிறந்த வழக்கம்.
    வெங்கட் சாரின் சேமிப்புகள், முதலீடுகள் குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது, அவர் கூறுவதும் சரி என்றே எனக்கு தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அமெரிக்கா வந்த புதிதில் செலவு செய்வதற்கு கணக்கு எழுதி வைத்து கொள்வோம் காரணம் வரவிற்கு மேல் செலவழித்தால் தெருவில்தான் நிற்கனும்... இங்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் யாரிடமும் கேட்க முடியாது...


    இன்றைய நிலையில் வரவிற்கும் மேல் செலவு ஆகிறது அதனால் இதுவரை சேர்த்து வைத்தவை தண்ணீரை போல செலவழிகிறது பெண்ணின் கல்லூரி செலவும் உடல் நலமில்லாமல் போன் நாய்க்குட்டிக்கான செலவும் மிக அதிகமாகவே இருக்கிறது,

    நம்பிக்கைதான் வாழ்வு என்ற அடிப்படையில் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது..

    உங்கள் வாழ்க்கையை பற்றிய பதிவு மிக சுவராஸ்யமாக இருக்கிறது நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பேஸ்புக்கிலோ அல்லது இங்கோ படித்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அழகாக எழுதிக் கொண்டு செல்கிறீர்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரிக்காலம் (பசங்களோட) அதிக செலவு இருக்கும். அவங்க வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டால் அப்புறம் செலவே இருக்காது (உடல் நலம் தவிர). கவலை வேண்டாம் மதுரைத்தமிழன் துரை.

      நீக்கு
    2. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அன்புள்ள ஆதி, தங்கள் தொடர் அருமை! எதிர்பார்ப்பில்லாத அன்பே இல்லற வாழ்வின் அஸ்திவாரம். நானும் என்னவரும் கூட இப்படித்தான். எதை செய்ய வேண்டும் என்றாலும் பரஸ்பரம் இருவரும் கேட்டுக்கொண்டே செய்வோம். இருவருடைய சுதந்திரத்தில் தலையிட மாட்டோம். எங்கள் இருவர் குடும்பத்திலும் நாங்கள் மட்டுமே மண்ணின் மைந்தர்களான இதே ஊரில் வசிக்கிறோம். மற்றவர்கள் அனைவரும் வெளிநாடுகளில். எனவே நல்லது கெட்டது எதுவென்றாலும், வீட்டிலும், நட்புகளிலும் இவரே முன் நிற்பார். திருமணமான புதிதில், எங்காவது செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், இவரை பிடிக்க இயலாது. பின் அவர் விருப்பப்படியே விட்டுவிட்டேன். இன்றும் அப்படியே தொடர்கிறது. நல்லதொரு தொடருக்கு எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த எண்ணங்களையும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி வானம்பாடி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. உங்கள் அனுபவங்கள் இனிமையானவை.

    சேமிப்பும் கணக்கு எழுதுவதும் நல்ல பழக்கம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  13. பசுமையான நினைவுகள் மனதிற்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. //

    உண்மை.
    இருவருக்கும் புரிதல் அதுதான் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  14. என் கணவரும் சாமி படத்தின் முன்பாக முதல் சம்பளப் பணத்தை தந்துவிட்டார்.

    இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் அதுவே வாழ்க்கைக்கு இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....