வியாழன், 16 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி பதினொன்று


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எந்நிலையிலும் உங்களை விட்டுக்கொடுக்காத சிலரை சம்பாதியுங்கள், வாழ்க்கை அழகாக இருக்கும்.

 

******

 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து


 

சென்ற பகுதியில் அம்மாவுக்கு உதவியாக இருக்க ஊருக்குச் சென்றதைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் பிறகு அவ்வப்போது செல்லும் நிலையும் ஏற்பட்டது. முதல் முறை அவர் கோவைக்கே கொண்டு விட்டுவிட்டுச் சென்றார். அடுத்த முறை திருச்சி வரை வரும் வேலை இருந்தது. அங்கிருந்து அம்மாவின் உதவிக்காக புறப்பட்டுச் சென்றேன். அப்புறம் திடீரெனக் கிளம்ப வேண்டிய சூழலில் தனித்தும் கோவைக்குச் சென்றிருக்கிறேன். அம்மாவுக்கு உதவியாக இருக்க வாய்ப்பு கிடைத்தது. அம்மாவின் மறைவுக்குப் பிறகு 'அவர்' எனக்கு உற்ற துணையாக மட்டும் அல்லாமல் அம்மாவாகவும் மாறினார்.

 

பொதுவாக நான் மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவள். எல்லாவற்றுக்கும் பதறிப் போய்விடுவேன். 

 

நான்: 'என்னால இன்னிக்கு ஒரு பல்லியின் வால் துண்டாயிடுத்து தெரியுமா!' என்று கலங்குவேன்.

 

அவர்: அதுக்கு இன்னொரு வால் வந்த விஷயம் உனக்கு தெரியாதா! உன்கிட்ட சொல்லச் சொல்லித்து..🙂 என்று சிரித்துக் கொண்டே சொல்வார்...🙂

 

நான்: 'இன்னிக்கு இத எடுத்தேனா! எப்படியோ ஒடைஞ்சிடுத்து!'

 

அவர்: சூப்பர். அழகா உடைச்சிருக்கியே!

 

நான்: அய்யோ! என் காதுல படபடன்னு ஏதோ சத்தம் வரது! அது என்னன்னு பாருங்கோ! என்று எழுப்பிடுவேன்..🙂

 

அவர்: இரும்மா! எறும்பு தான் போயிருக்கும்! எடுத்து விடறேன்!

 

நான்: வாழைப்பழத்த ஃப்ரிட்ஜில வைக்கக்கூடாதா! 

 

அவர்: உருளைக்கிழங்கு, வெங்காயம் எல்லாம் வைக்கலையா??

 

நான்: இடம் இல்ல! அதான் வெளியவே வெச்சிட்டேன்.

 

அவர்: ஓஹோ! சரி! சரி!

 

நான்: 'சோப் தண்ணி வழுக்கி விட்டுடுத்து!

 

என்று ஒவ்வொரு நாளுமே ஏதோ ஒரு வில்லங்கமும் அதை நான் கையாண்ட விதமும் இப்போது நினைத்தாலும் புன்னகைக்க வைக்கிறது.

 

இதற்கெல்லாம் அவர் எதுவுமே சொன்னதில்லை..🙂 சரி! பரவாயில்லை! உனக்கு ஒண்ணும் ஆகலை இல்லையா! எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிடாது! அடுத்த தடவை கவனமா இருந்துக்கணும்! சரியா! என்று சிறு பிள்ளைக்கு அட்வைஸ் செய்வது போல தான் சொல்வார்..🙂 ஸோ ஸ்வீட்!அவ்வளவு கலாட்டா செய்திருக்கிறேன்..🙂

 

இப்படியாகச் சென்றன எங்கள் இனிமையான நாட்கள். எப்போதும் அன்னியோன்யமாக இருந்தால் சலிப்பு உண்டாகும் என  வாழ்வுக்கு சுவைக் கூட்ட எங்களுக்குள் ஏற்படும் ஊடல்! பொதுவாக எங்கள் சிந்தனைகள் ஒன்று போலவே தான் இருக்கும்!  கண் திருஷ்டியாக எப்போதாவது எங்களுக்குள் எட்டி பார்க்கும் கருத்து வேறுபாடுகள்! அழுதால் மட்டும் அந்த மனிதருக்கு பிடிக்காது..🙂 பர்ஸை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியே சென்று விடுவார்..🙂 அரைமணி நேரத்துக்கு பின்பு வீடு திரும்புவார். அதன் பிறகான இரண்டு, மூன்று நாட்களுக்கு எவ்வளவு பேசினாலும்  ஒற்றை வார்த்தையில் பதில் வரும்...🙂

 

திருமண வாழ்வில் வெற்றிகரமான  இரண்டே கால் ஆண்டுகளைக் கடந்த நிலையில் வழக்கமான ஒருநாள் அதிகாலையில் சந்தேகத்தோடு Pregnancy kitல் சோதித்து பார்க்க, அது 'இரண்டு கோடுகளை' காண்பித்த போது இருவருக்குமே வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கலாம் போல இருந்தது...🙂

இனிமே! நீ ஜாக்கிரதையா இருக்கணும்! உன் வாலுத்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வை! எதையாவது எடுக்கறேன்! க்ளீன் பண்றேன்னு எது மேலையாவது ஏறி குதிக்காத! என்று ஆயிரம் அட்வைஸ்கள் அவரிடமிருந்து..🙂 படியெல்லாம் இறங்காத! எது வேணுமோ நானே வாங்கிண்டு வரேன்! என்றார்.

 

டாக்டரிடம் கன்ஃபார்ம் செய்து கொண்ட நாளில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. எங்கள் பொறுப்பும் கூடியது என்பதை உணர்ந்தோம். 40 நாளில் துவங்கிய குமட்டல்! குடலே வெளியே வந்து விடுமளவு இருந்தது! குக்கரில் சாதமும், பருப்பும் வைக்க மட்டுமே என்னால் முடியும். வெந்த பிறகு வரும் வாடை என்னை வாஷ்பேசினுக்கு ஓடச் செய்யும்!

 

அதன் பிறகு சமையல் வேலை அவருடையதாயிற்று. அலுவலகத்துக்கு கிளம்புவதற்குள் சமைத்து விட்டுச் செல்வார். அதை சாப்பிட்டு விட்டு வயிற்றை காலி செய்து விட்டு தூங்கி விடுவேன்...🙂 இப்படியாக சென்ற போது விடுமுறை எடுத்துக் கொண்டு என்னுடன் இருந்து கவனித்துக் கொண்டார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு தான் நார்மலானேன்.

 

எட்டாம் மாதம் சீமந்தம்! அந்தக் கதைகள் எல்லாம் அடுத்த பதிவில்...

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

  1. வெங்கட் மிக நல்ல மனிதர் என்பது தெரியும்.  அவர் மிக மிக நல்லவர், அன்பானவர் என்பதை உணர்த்தும் உங்கள் அனுபவங்கள்.  மனைவிக்கும் தாயுமானவராய் அவர் இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப் பற்றிய சிறப்பான சிந்தனைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம். மனதில் மகிழ்ச்சி!

      நீக்கு
    2. வெகு காலம் கழித்து பதில் வருவதில் / அறிவதில் ஒரு கேள்விக்குறி!!!   நாம் என்ன சொன்னோம்?  எதற்கு இந்த ஆபத்தில் என்று தெரிந்துகொள்ள சிலசமயம் மீண்டும் இங்கு வந்து பார்க்கவேண்டி இருக்கிறது!!!

      நீக்கு
    3. ஹாஹா... காலம் கழித்து பதிவுகளுக்கு பதில் தருவது சரியில்லை தான். நேரப் பற்றாக்குறை காரணமாக சில மாதங்கள் சரியாக பதிலுரைக்கவோ, பதிவுகளை படிக்கவோ முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. வெங்கட்ஜி செம ஸ்வீட் ச்சோஓஓஓஓஓஓ ஸ்வீட்!! அது தெரிந்த விஷயம். என்ன அருமையான கணவர் என்பதும் உங்கள் வழி அறிகிறேன். உங்களுக்கும் ஒரு அம்மாவாய் பாதுகாப்பாய்!!!

    காட் ப்ளெஸ்! உங்கள் எல்லோரையும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவினை ரசித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. உங்கள் இனிய நினைவுகள், அனுபவங்கள் எல்லாம் ரசனையாக இருக்கின்றன. மிக அருமை இப்பகுதி. நல்ல நல்ல கணவர், தந்தை வெங்கட்ஜிக்குப் பாராட்டுகள். மனைவி அமைவதெல்லாம், கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. படிக்கப் படிக்க மிக இனிமை.
    கனவரின் குறைகளையே பெரிதாக வெளியிடும் இக்காலங்களில், தங்களின் கனவரைக் குறித்து இவ்வளவு சிறப்பாக எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. தங்கள் இல்லற வாழ்வில் கடைப்பிடித்த அன்பு அறநெறிகளை அழகாக சொல்லி வருகிறீர்கள். இப்படி அன்பான கணவர் கிடைக்க தாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சகோதரர் வெங்கட் அவர்களின் நல்ல குணங்கள் பாராட்டதக்கவை. நீங்கள் இருவரும் பல்லாண்டுகள் இதே அன்புடனும், ஒற்றுமையுடனும் வாழ என் மனப்பூர்வமான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மிகவும் அன்பானவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....