அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நம் முகம் கொஞ்சமாய் சோகத்தில் வாடிப்போனாலும் ஏதாவது பேசி எதையாவது செய்து, நம்மை சந்தோஷப்படுத்த ஒரு இதயம் நமக்காக இருந்தாலே போதும்… வாழும் வாழ்க்கை சொர்க்கமே.
******
இந்த வாரத்தின் தகவல் - மெசேஜ் டோன்:
உம்மா உம்ம்ம்ம் உம்மா என ஒரு மெசேஜ் டோன்…. ஊபர் காரில் வரும் போது…. தொடர்ந்து மெசேஜ் வந்து கொண்டே இருக்க, தொடர்ந்து உம்மா சப்தம்….. ஓட்டுனருக்கு பிடித்து இருந்தாலும் பயணிக்கும் நமக்கு கன்னம்/உதடு எச்சில் பட்டு ஈரமாகிவிட்ட உணர்வு ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. என்ன ஒரு ரசனையோ….. இதனை ஒப்பிடும் போது, எனது உத்திரப் பிரதேச நண்பர் ஒருவரை அழைக்கும்போது கேட்கும் ஹல்லோ ட்யூன் பரவாயில்லை என்று தோன்றிவிட்டது. அப்படி என்ன ஹலோ ட்யூன் என்று கேட்டால், கன்னட/தெலுங்கு பட வசனங்கள்… அதுவும் உரத்த குரலில்…. அவரை அழைக்கும் ஒரு வட இந்தியருக்கும் புரியாது….. அவ்வளவு ஏன், அதை வைத்திருக்கும் அவருக்கே புரியாது! :) அவ்வப்போது தேடித்தேடி இது போன்ற வசனங்களை தனது ஹல்லோ ட்யூனாக வைக்க, இப்போதெல்லாம் அவரது உயரதிகாரி அவரை அழைப்பதே இல்லை. மாறாக, வாட்ஸப் தகவல் அனுப்புகிறார் - தன்னை அழைக்கச் சொல்லி!
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் - கவலைகள்:
சில விஷயங்களை நாம் மறப்பதே இல்லை. மறக்க முயற்சிப்பதும் இல்லை. ஒரு நாள் பத்மநாபன் அண்ணாச்சியிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது - நமக்குண்டான கவலைகளை மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் தள்ளிவைக்கவோ, அல்லது மனதிலிருந்து/நினைவிலிருந்து மொத்தமாக அழித்துவிடவோ நமக்குத் தெரிவதே இல்லை என்பது தான் அந்த விஷயம். என்னதான் கண்ணை மூடிக் கொண்டு உறங்க முயற்சி செய்தாலும் ஏதேதோ நினைவுகள் மனதில் வந்து நம்மை உறங்காமல் விழித்து இருக்கச் செய்கிறது. அதிலும் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, தடையில்லாமல் எண்ண ஓட்டங்கள்..... எதை எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். விதம் விதமான கவலைகள் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது. என்னதான் நம் கவலைகளை மறக்க முயன்றாலும் முடிவதில்லை. கவலைப் படுவதால் எந்த வித பலனும் இல்லை என்பது தெரிந்து இருக்கிறது - இப்படி இருக்கக் கூடாது என பலருக்கும் சொல்லவும் செய்கிறேன், ஆனாலும் நமக்கு என்று வரும்போது கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை!
******
பழைய நினைப்புடா பேராண்டி: நகரம் – சுஜாதா
2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - நகரம் – சுஜாதா
பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!
”பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!”
சுவர்களில் ஓரடி உயர எழுத்துகளில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை – ஆ.கே. கட்பாடிகள் – எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள் – ஹாஜி மூசா ஜவுளிக்கடை [கடல்] – 30.9.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.
மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல ‘பைப்’ அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன்கள் ‘டெட்டானஸ்’ கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீஸல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விரைப்பான கால் சராய் சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் ‘இங்கிட்டும் அங்கிட்டும்’ செல்லும் வாகன – மானிட போக்குவரத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரௌனியன் இயக்கம் போல் இருந்த்து. [பௌதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்] கடர் சட்டை அணிந்த, மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம் ஒன்று, சாலையில் இடது புறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காகத் திட்டிக் கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள், மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகைப் பாலம்.... மதுரை!
******
இந்த வாரத்தின் தகவல் - காய்கறி விலை:
தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் திடீரென காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக தக்காளி விலை குறித்து அதிகம் மீம்ஸ் வந்து கொண்டிருக்கிறது! தக்காளியை “வைத்து” செய்கிறார்கள். தக்காளியின் விலை குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டாலும் மற்ற காய்கறி விலை குறித்து யாருமே பேசுவதில்லை. திருச்சியில் இரண்டு நாட்கள் முன்னர் காய்கறி வாங்கச் சென்ற போது கத்திரிக்காய் எவ்வளவு என்று கேட்ட போது அதிர்ச்சி! கிலோ 160 ரூபாய் என்று எப்போதும் வாங்கும் கிராமத்து வியாபாரி சொன்னபோது, “அட கத்திரிக்காய் கெட்ட கேட்டுக்கு இவ்வளவு விலையா?” என்று பக்கத்திலிருந்த மூதாட்டி சொன்னபோது வேதனையான சிரிப்பு ஒன்று தான் வந்தது அந்த கிராமத்து வியாபாரியிடமிருந்து. குடை மிளகாய் கிலோ 200 ரூபாய் விற்கிறார்கள். மழைக்காலம் என்பதால் பொதுவாக காய்கறி விலை அதிகமாகவே இருக்கும் என்பது தெரிந்து இருந்தாலும், இவ்வளவு அதிகமாக விற்கிறதே என்று யோசித்துக் கொண்டே கொஞ்சம் காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டியிருந்தது. விற்பவர் அதிகம் சொன்னாலும், அதை விளைவிக்கும் விவசாயிக்கு எவ்வளவு கிடைத்திருக்கும் என்பதையும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை! நேற்று தில்லி நண்பர் ஒருவர் இது குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார் - ஒவ்வொரு தொலைகாட்சி நிறுவனமும் காய்கறி விலையேற்றம் குறித்து செய்தி வெளியிடுவதைப் பார்த்தால் நிறைய வேறுபாடு - ZEE NEWS படி தக்காளி விலை கிலோ 70 ரூபாய்! NDTV NEWS படி கிலோ 120 ரூபாய்! பேசாமல் ZEE NEWS-இல் வாங்கி NDTV-இல் விற்று லாபம் சம்பாதிக்கலாம் என்று எழுதி இருக்கிறார் ஒரு நபர் என்பது தான் அந்தத் தகவல்.
******
இந்த வாரத்தின் தகவல் - ஓமிக்ரான் - தீநுண்மி:
தீநுண்மி குறித்த பயம் குறைந்து பலரும் அதன் தன்மை குறித்து கவலையில்லாமல் உலவிக் கொண்டிருக்க, மீண்டும் தீநுண்மி ஓமிக்ரான் என்ற பெயரோடு அதன் கோரப்பற்களைக் காட்டியபடி வெளியே வந்திருக்கிறது. வியாழன் அன்று மாலை நேரம் வந்திருந்த ஒரு செய்தியின் படி இந்தியாவிலும் இரண்டு ஓமிக்ரான் பாசிட்டிவ் நபர்கள் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதனால் இன்னமும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அத்தியாசவமான விஷயம். கவனமாக இருக்க வேண்டியது நம் கடமை. அதன் பிறகும் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒருபுறம் இருந்தாலும், கவனமாக இருந்து விடுவோமே….
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
எரிச்சலூட்டும் காலர் டோன்கள் - கடைசி வரி சிறப்பு. அதையும் அவர்கள் பெருமையாகக்கூட நினைக்கக் கூடும்!
பதிலளிநீக்குஇந்த கவலை பற்றி இரண்டாவது முறை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சமீபத்திய சிரங்கப் பயணம் கூட அது சம்பந்தமாகவா, தெரியாது. எதுவாயிருந்தாலும் சீக்கிரம் அந்தக் கவலை தீர பிரார்த்தனைகள்.
நகரம் - சுஜாதா! சூப்பர். வற்றிய வைகை இப்போது நீர் நிறைந்து..!
ஹா.. ஹா.. ஹா... இவர்களெல்லாம் விலை பற்றி எங்கு விசாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை!
//சமீபத்திய சிரங்கப் பயணம் கூட//
நீக்குமன்னிக்கவும். ஸ்ரீரங்கப் பயணம்!
எரிச்சலூட்டும் காலர் டோன்கள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.
நீக்குநிறைந்திருக்கும் வைகை - மகிழ்ச்சியான விஷயம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிரங்கப் பயணம் - :) தெரிந்தது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காய்கறி விலை மிகவும் அதிகம்தான். கிலோ 140ரூ தக்காளி நேற்று வளாகத்தில் 75ரூ. வெளியில் 60 ரூ. கத்தரி கிலோ 100 ரூ, பீன்ஸ் 140 ரூ. 10-15 ரூபாய் கீரை 30 ரூபாய்க்கும் மேல். பூசனி கிலோ 20 ரூ, உருளை 40ரூ. (நான் எழுதியிருப்பது சூப்பர் க்வாலிட்டி). பொதுவா பெங்களூர்ல சென்னையைவிட காய்கறி விலை குறைவு
பதிலளிநீக்குசீசன்ல தக்காளி, கோவைக்காய், முள்ளங்கி, வெண்டை, சௌசௌ எல்லாமே கிலோ 10ரூபாய்க்கு வாங்கியிருக்கேன்.
தீநுண்மி... நாலு நாளில் சென்னை பயணம். பிறகு பத்துநாள் யாத்திரை.... பார்க்கலாம்
காய்கறி விலை - அதிகம் தான்.
நீக்குதீநுண்மி - தற்போது இன்னும் அதிகமாகி வருகிறது! தில்லியில் அதீதமாக பரவி வருகிறது என்பது கவலைக்குரிய விஷயம் நெல்லைத் தமிழன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இறைவன் நினைத்தால் மட்டுமே கவலையின் நினைவுகளை அழிக்க முடியும் ஜி.
பதிலளிநீக்குமனிதர்கள் மாற்றி, மாற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம் ஆறுதலுக்காக...
இறைவன் நினைத்தால் மட்டுமே கவலையின் நினைவுகளை அழிக்க முடியும் - உண்மை கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//ஆனாலும் நமக்கு என்று வரும்போது கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை!// இதே பிரச்னை தான் என்னுள்ளும். மறக்க நினைப்பவை தினம் தினம் ராத்திரி ஆனால் தொடர்ந்து பனிரண்டு/ஒரு மணி வரை திரைப்படம் போல் ஓடுகின்றன. என்ன செய்ய? அதனால் காலை எழுந்திருப்பதும் தாமதம் ஆகிவிடுகிறது. :( தினமும் ரங்கா, ரங்கா, ரங்கா என்று சொல்லிவிட்டுத் தான் படுக்கிறேன். மனதிற்குள் ராமஜபமும் ஓடும். அதையும் மீறி மனக்குரங்கு செய்யும் சேட்டைகள்! :(
பதிலளிநீக்குமனக் குரங்கு செய்யும் சேட்டைகள் - தாவிக்கொண்டே தான் இருக்கிறது கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கறிகாய் விலை அதிகம் தான். வாரம் இரண்டு முறை கத்திரிக்காய் வாங்கிக் கொண்டிருந்த நம்ம ரங்க்ஸ் இப்போப் பதினைந்து நாட்களாக வாங்குவதில்லை. தக்காளி ஒரு தரம் 70 ரூக்கும் இன்னொரு தரம் 90 ரூக்கும் வாங்கினார். நான் எப்போவுமே ரசத்துக்குப் பாதித் தக்காளி தான் போடுவேன் என்பதால் பிரச்னை இல்லை. தக்காளிச் சட்னியோ/துவையலோ/தொக்கோ போடுவதே இல்லை. புதினா & கொத்துமல்லி இலவசமாகவே நிறையக் கிடைப்பதால் அதை வாங்கிச் சட்னி, துவையல் செய்து வைச்சுக்கறேன்.
பதிலளிநீக்குகத்திரிக்காய் - :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லவேளையாக எங்களுக்கு/முக்கியமாய் எனக்குத் தொலைபேசி அழைப்புகள் வருவது தான் நான் பேசுகிறேன் என்பதால் இந்தக் காலர் ட்யூன்களினால் படும் அவதி இல்லை. அப்படியே இருந்தாலும் அநேகமாக அனைவரும் சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், கந்த சஷ்டி கவசம் என வைத்திருப்பதால் பிரச்னை இல்லை.
பதிலளிநீக்குமெசேஜ் டோன் - கவலைகள் உங்களுக்கு இல்லை என்பதில் மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தங்கள் கவலைகள் விரைவில் அகலட்டும்
பதிலளிநீக்குகவலைகள் விரைவில் விலகட்டும் - நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மீண்டும் தீநுண்மி... என்று தீருமோ...?
பதிலளிநீக்குதீநுண்மி - மீண்டும் கோர முகத்தினை காண்பித்துக் கொண்டிருக்கிறது தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் மிக அருமை.
பதிலளிநீக்கு//கவலைப் படுவதால் எந்த வித பலனும் இல்லை என்பது தெரிந்து இருக்கிறது - இப்படி இருக்கக் கூடாது என பலருக்கும் சொல்லவும் செய்கிறேன், ஆனாலும் நமக்கு என்று வரும்போது கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை!//
உண்மை. கவலைகளை புறம் தள்ள முடிவதில்லை. ஊருக்கு திரும்ப வரும் நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது, ஆனால் கேட்கும் செய்திகள் எல்லாம் கவலை தருவதாக இருக்கிறது.ஊருக்கு நல்ல்லபடியாக வர வேண்டும், பிள்ளைகள் வந்தவர்கள் நல்லபடியாக ஊர் திரும்ப வேண்டும் என்ற கவலை .
தீநுண்மி மீண்டு தலை தூக்குவதால் நிறை சட்ட திட்டங்கள் வந்து இருக்கிறது.
உங்கள் கவலைகள், என் கவலைகளை எல்லாம் இறைவனின் பொறுப்பில் விட்டு விடுவோம். அவர் நல்லவழி காட்டுவார் என்று ஆறுதல் அடைவோம்.
உண்மை. கோமதி. கிட்டத்தட்ட 3, 4 வருடங்கள் கழிச்சு எங்க பையர் குடும்பத்துடன் இந்தியா வரப் பயணச் சீட்டு வாங்கி இருக்கார். இப்போப் பார்த்துக் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள், சோதனைகள். என்ன செய்யப் போகிறோம் என்பதே புரியலை. ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கறது கூட முடியாமல் போகிறது. பெண் வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. அவள் போன வருடம் கொரோனாவினால் வர முடியலை. இந்த வருஷம் வர நினைச்சால் ஒமிக்ரான்! :(
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குகவலைகள் - தீருவதே இல்லை தான். இறைவனிடம் விட்டு விடுவோம் - அதே தான் மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பயணங்கள் பலதும் தடைபட்டுக் கொண்டிருக்கிறது தான் கீதாம்மா. உடல் நலம் முக்கியம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஹாஹா இந்தக் காலர் மெசேஜ் ட்யூன்கள் ரொம்பப் படுத்தல். சமீபத்தில் பயணத்தின் போது நடந்ததை எழுதி வைத்திருக்கிறேன். பதிவில் சொல்ல. ஒரு பையனுக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது, மச்சி, மச்சான், லூசு என்றெல்லாம் ஒவ்வொரு அழைப்பிலும் சொல்லி பேசிக் கொண்டே இருந்தார். எல்லா அழைப்புகளுக்கும் ஒரே ரிங்க் டோன் தான். ஆனால் ஒரே ஒரு அழைப்பு மட்டும் 'முத்தம் கொடுத்த மாயக்காரி' என்று வந்தது. இப்படி எல்லாம் பாட்டா? என்று தோன்றியது. அது அவன் காதலி போலும்!!! மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது!
பதிலளிநீக்குகீதா
பதிவாக எழுதி வைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. வெளியிட்டு விட்டால் தகவல் சொல்லுங்கள். நடுவில் நானும் பல பதிவுகள் படிக்கவில்லை கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை
பதிலளிநீக்குஅதிலும் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, தடையில்லாமல் எண்ண ஓட்டங்கள்..... எதை எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். விதம் விதமான கவலைகள் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது. என்னதான் நம் கவலைகளை மறக்க முயன்றாலும் முடிவதில்லை.//
சேம் போட்!
கவலைப் படுவதால் எந்த வித பலனும் இல்லை என்பது தெரிந்து இருக்கிறது - இப்படி இருக்கக் கூடாது என பலருக்கும் சொல்லவும் செய்கிறேன், ஆனாலும் நமக்கு என்று வரும்போது கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை!//
அதே வெங்கட்ஜி. இந்தக் கவலை எல்லாம் சமீபகாலமாகத்தான் எனக்கும். அதற்கு முன் இப்படி இருந்ததில்லை. மகனை ரொம்ப மிஸ் செய்கிறேன் என்பதுதான் காரணம் என்பதும் தெரிகிறது. ஆனால் இப்போதைக்கு அதற்குத் தீர்வு இல்லை! ஓ மை காட் ஓமைக்ரான்!
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குகவலைப் படுவதால் பலனில்லை - தீர்வு இல்லா கவலைகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காலர் ட்யூன் பற்றிய பகுதியில் கடைசி வரி சிரித்துவிட்டேன்!!!
பதிலளிநீக்குபழைய பதிவை வாசித்தேன் சுஜாதா என்றதும் உடனே சென்றேன். அத்தொகுப்பில் ஒரே ஒரு வரம் வாசித்திருக்கிறேன். அருமையா எழுதியிருப்பார்..தலைவர்!!!
காய்கறி விலை மூன்று மடங்கு உயர்ந்திருப்பது போல் இருக்கிறது இந்த ஊரைப் பொருத்தவரை அதாவது நான் இதுவரை வாங்கியதைப் பொருத்தவரை. தக்காளி 70 லிருந்து 80. கத்தரிக்காய் 50-60. உருளை 40,
சில மாதங்கள் முன் வரை 10 ரூ க்கு 4 பேர் சாப்பிடும் அளவு காய்கள் கிடைத்தனவே என்று தோன்றத்தான் செய்கிறது.
கீதா
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மழைக்காலம் என்பதில் காய்கறி விலை எகிறித்தான் நிற்கிறது.
பதிலளிநீக்குஇறைவன் அருளால் கவலைகள் தீரட்டும்.
மழைக்காலத்தில் காய்கறி விலை அதிகமாகவே இருக்கின்றன மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.