சில
முறையாகவே தமிழகம் வரும்போது விமானத்திலேயே வந்து போவது வழக்கமாகி இருந்தது.
ரயிலில் வருவதென்றால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் [போவதற்கும் வருவதற்கும்] ரயிலிலேயே
போய் விடுகிறது. வீட்டில் அதிக நாட்கள் இருக்க முடிவதில்லை என்பதால் இப்படி விமானத்திலேயே
பயணிப்பது வழக்கமாகிவிட்டது. விமானத்தில் சென்னை வரை வந்து பிறகு பேருந்திலோ,
ரயிலிலோ திருச்சி வரை வந்தால் காலையில் புறப்பட்டால் மாலையில் வீடு வந்து சேர
முடிகிறது. இந்த முறை விடுமுறையில் வருவது நிச்சயமில்லாத நிலையில் பயணச்சீட்டு
முன்பதிவு செய்ய இயலவில்லை. கடைசி நேரத்தில் விமானத்திற்கான கட்டணத்தினைப்
பார்த்தால் மலையளவு – 10000 ரூபாய்க்கு மேல் – ஒரு பக்கத்திற்கே! ரயிலில் பயணிக்க
முடிவு செய்தேன்.
முதலில்
Sleeper Class சீட்டு மட்டுமே இருக்க, இந்த வெய்யிலில் 40
மணிநேரத்திற்கு மேல் இப்படி பயணிப்பது ரொம்பவே கடினமாக இருக்குமே என்று தோன்றியது.
எதற்கும் இருக்கட்டும் என முன்பதிவு செய்து விட்டேன். இந்த முறை ஏப்ரலிலேயே கடும்
கோடை. தலைநகரில் 40 டிகிரி சர்வ சாதாரணமாகத் தொட்டுவிடுகிறது. வரும் வழியெங்கும்
அப்படித்தான். பயணிக்கும் முதல் நாள் வரை எப்படி பயணிக்கப் போகிறேன் என்ற நினைவு
தான். சரி எதற்கும் தத்கால் டிக்கெட் பார்க்கலாம் என புறப்படுவதற்கு முதல் நாள்
முயல, குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணிக்க இடம் கிடைத்தது. Sleeper Class
ticket cancel செய்து, குளிரூட்டப்பட்ட பெட்டியில் வந்தேன்.
குளிரூட்டப்பட்ட
பெட்டிகளில் பயணிப்பது கூட கொஞ்சம் கடினமான விஷயம். பெரும்பாலான சமயங்களில்
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட கிடையாது. ஏதோ வாழ்நாளில் இதுவரை தூங்கியதே
கிடையாது என்பது போல தூங்கிக் கொண்டே வருவார்கள், அல்லது அலைபேசியிலோ, கணினியிலோ
மூழ்கிவிடுவார்கள். இந்த முறை எனது இருக்கை இருந்த இடத்தில் இருந்த ஆறு இடங்களில்
அம்மா-மகள் இருவர், மூத்த கணவன் – மனைவி இருவர், நான் மற்றும் இன்னுமொரு இளைஞர் –
போபாலில் ஏறிக்கொண்டார். அம்மா-மகள் இருவரும் அவர்களுக்குள்ளே கூட பேசிக்கொண்டது
மிகக் குறைவே! இதில் அடுத்தவர்களோடு எங்கே பேசுவது!
மூத்த
தம்பதிகளில் கணவர் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசினார் – அதுவும் என்ன
ஸ்டேஷன் என்று கேட்க மட்டும்! அவரது மனைவி சில வார்த்தைகள் கூட – தலைநகர் தில்லியில்
இருக்கும் மகனுடன் ஒரு மாதம் இருந்து விட்டு தமிழகம் திரும்புகிறார்கள். போபாலில்
ஏறிய இளைஞர் தனது சோனி அலைபேசியில் எதையோ நோண்டிக்கொண்டே இருந்தார். நான் மட்டுமே
பாக்கி! அதுவும் எனக்குக் கிடைத்தது மேலே உள்ள படுக்கை! கீழே மூத்த தம்பதியர்கள்
படுத்துக் கொண்டே வர அவர்கள் கால் அடியில் எத்தனை நேரம் உட்கார்ந்து கொள்ள
முடியும்! அவர்களை எழுப்பி உட்கார வைக்கும் அளவுக்கு கல்நெஞ்சு இல்லையே!
எல்லா
முறையும் ஏதாவது படிக்க புத்தகங்கள் எடுத்து வருவேன். இம்முறை அவசரத்தில்
புத்தகமும் எடுத்துக் கொள்ளவில்லை. வேறு வழியில்லை தூங்கிக் கொண்டே வர வேண்டியது
தான்! தில்லியிலிருந்து திருச்சி வரை ஒரே இரயில் - மொத்தமாக 40 மணி நேரம் தூங்கி
இருப்பேன்! சாப்பிடுவது, தூங்குவது, கொஞ்ச நேரம் வெளியே கதவருகே வந்து நின்றால்,
வெய்யில் தாங்காது மீண்டும் வந்து தூங்குவது என பொழுது போக்க வேண்டியிருந்தது.
சாப்பிடுவது என்று சொன்னவுடன், இரயிலில் கிடைக்கும் உணவு பற்றி சொல்லாமல்
இருந்தால் எப்படி! இரயில் கிடைக்கும் உணவின் தரம் இப்போது கொஞ்சம் பரவாயில்லை
என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் புதிது
புதிதாய் காம்பினேஷன் அவர்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று புரியாத புதிர்!
காலை
நேரம் 2 இட்லி, 2 வடை, தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் கிடைக்க அதையே சாப்பிட்டேன்.
மதியம் ஃபுல் மீல்ஸ் – இரண்டு சப்பாத்தி [ப்ளையின் பராட்டா!], கொஞ்சம் சாதம்,
தால், இரண்டு சப்ஜி, ஒரு ஸ்வீட், தயிர் என்ற பெயரில் மோர், ஒரு பிளாஸ்டிக்
சாஷேயில் ஊறுகாய், கொஞ்சம் உப்பு போட்ட பேப்பர் கவர் மற்றும் ஒரு கப் தண்ணீர்! அது என்னமோ, இந்த இரயில்வே சமையல்
பணியாளர்களுக்கு உருளைக் கிழங்கு இல்லாமல் சமைக்கவே தெரியாது! அதுவும் தோல்
சீவாமல் அப்படியே போட்டுவிட, பல சமயங்களில் நரநரவென தோல் வாயில் அகப்படும்! பனீர்
சப்ஜி என்ற பெயரில் தண்ணீராக ஒரு சப்ஜி இருக்கும்! பனீர் சாம்பார் என்று பதிவு கூட
எழுதி இருக்கிறேன்!
பொதுவாக
மட்டர் பனீர் அல்லது ஷாஹி பனீர் சப்ஜி இருக்கும்! ஆனால் இம்முறை வித்தியாசமாக சோலே
பனீர்! பொதுவாகவே பச்சை பட்டாணி போட்டு தான் பனீர் சப்ஜி அதாவது மட்டர் பனீர் என்ற
பெயரில் செய்வார்கள். சோலே – அதாவது வெள்ளைக் கொண்டக்கடலையுடன் பனீர் சேர்த்து
சப்ஜி இதுவரை – 26 வருட தலைநகர வாழ்வில் கேள்விப்பட்டதில்லை! பனீர் சேர்க்காமலேயே
சோலே சப்ஜி நன்றாகவே இருக்கும். அதையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை! இது தான்
முதல் முறையாக இப்படி சாப்பிடுகிறேன். இது இப்படி என்றால் மற்ற சப்ஜி – கியா சன்னா
– அதாவது சுரைக்காயுடன் கடலைப்பருப்பு சேர்த்து செய்வது! தால் என்ற பெயரில்
பருப்பை வேகவைத்து மசித்து, உப்பு, காரம் சேர்த்து மேலே கொஞ்சம் ஜீரா தாளித்து
கொடுத்துவிடுகிறார்கள் – வெங்காயம் தக்காளி என எதுவும் இல்லை!
தயிர்
என்ற பெயரில் மோர், ஸ்வீட் என்று ஸ்பூனால் வெட்ட முடியாத குலாப்ஜாமூன், ஊறுகாய்
பாக்கெட்-பல்லால் கடித்து திறப்பதைத் தவிர வேறு வழியில்லை. எப்படியோ இரண்டு மூன்று
வேளை இப்படிச் சாப்பிட்டுதான் ஆகவேண்டும்! இரவும் இதே மாதிரி ஒரு உணவு. காலையில்
இட்லி அல்லது உப்புமா! சரி சென்னை வந்து சேர்ந்ததும் நம் ஊர் உணவு சாப்பிடலாம்
என்று பார்த்தால் இரயில் உணவே பரவாயில்லை என்று சொல்லும்படி இருந்தது எனக்குக்
கொடுத்த இட்லி-சாம்பார். ஃப்ளையிங் சாசர் மாதிரி இட்லி – மதுரை மல்லி இட்லி என்று
கூவிக்கூவி விற்ற அவரை அடுத்த முறை பார்த்தால், ஒரிஜினல் மதுரை இட்லி சாப்பிட்டு
பார்க்கச் சொல்ல வேண்டும்!
ஒரு
வழியாக தில்லியில் புறப்பட்ட திருக்குறள் விரைவு வண்டி திருச்சி வந்து சேரும்போது
ஞாயிறு இரவு – பொதுவாக திருவரங்கத்தில் நிற்காது இந்த இரயில்! அன்றைக்கு சிக்னல் காரணமாக
திருவரங்கத்தின் முதல் நடைமேடையில் நிற்க, அங்கேயே இறங்கிக் கொண்டேன். ஆட்டோவில்
வீடு வந்து சேர்ந்தாயிற்று! சனிக்கிழமை காலை 07.15 மணிக்குப் புறப்பட்டது, ஞாயிறு
இரவு 12.00 மணி வீட்டுக்கு வரும்போது! பயணத்தின் பெரும்பகுதி தூங்கிக் கொண்டே
வருவதும் நன்றாகத் தான் இருக்கிறது!
அது
சரி தலைப்பில் கோவில்பட்டி வீரலக்ஷ்மி என்று எழுதி இருக்கிறதே என்று
கேட்பவர்களுக்கு, அந்த முதியவர்கள் இரண்டு பேரும் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள்!
அந்த முதிய பெண்மணியும் வீரலக்ஷ்மி தான் – பெயர் ஜான்சி ராணி! கோவில்பட்டி ஜான்சி
ராணி!
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு ஒரு இரயில் பயணம்.... இன்றைய நாளில் இரயில் பயணங்கள் பதிவாக!
நாளை
ஹனிமூன் தேசம் பயணத்தொடர் பதிவொன்றில் சந்திக்கும் வரை...
நட்புடன்
வெங்கட்
நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து....
பயணங்கள் சுவாரஸ்யமானவை. நீண்ட .பயணங்கள் அலுப்பானதும் கூட. புத்தகங்கள் வைத்துக் கொண்டாலும் எவ்வளவு நேரம் படிக்க முடியும்?!!
பதிலளிநீக்குநீண்ட பயணங்கள் - கொஞ்சம் அலுப்பு தருபவை தான். அதுவும் இடையே கொஞ்சம் ப்ரேக் தேவை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஹாஹாஹா, பனீரோடு எதைச் சேர்ப்பது என்றே தெரியலை போல! ஆனாலும் முதல் முதல் ஷதாப்தியும், ராஜ்தானியும் அறிமுகம் செய்தப்போ கொடுத்த சாப்பாடு மாதிரி இனிமேல் வராது. தென்னக ரயில்வேயை விட இந்த விஷயத்தில் வடக்கு, வடமேற்கு ரயில்வே உணவு விஷயத்தில் நன்றாகக் கொடுக்கிறார்கள். நாங்க அமிர்தசரஸ் போனப்போ ஷதாப்தியில் நல்ல உணவு கிடைத்தது. சாப்பிடத் தான் வயிறு இல்லை.
பதிலளிநீக்குஉணவின் தரம் கொஞ்சம் பரவாயில்லை. சில மாற்றங்கள் இருக்கின்றன என்ற வகையில் மகிழ்ச்சி.
நீக்குஅட... நீங்களும் சோலே பனீர் கேள்விப்பட்டதில்லையா?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
பயண அனுபவம் படித்து முன் கால நினைவுகள் வந்தன (ரயில் சிநேகம் ) இப்போது அலைபேசிதான் உலகம்.
பதிலளிநீக்குரயில் சிநேகம் - இப்போது யோசிக்கவே முடியாது என்று தான் தோன்றுகிறது. அலைபேசியில் மூழ்கிவிடுகின்றனர் அனைவருமே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
ஆஆ.வெங்கட் ஜி...இப்போதெல்லாம்...ரயிலில் பெரும்பாலானோர்..மொபைலில் மூழ்கி விடுகிறார்கள்...பேச்சு.. இல்லை...
பதிலளிநீக்குஉணவு..பயமாக இருக்கிறது...அதுவும் நான் இம்முறை ரயிலில் உணவு செய்வதற்கான காய் கொத்தமல்லி..வெங்காயம்.....பிற.பொருட்கள் எல்லாம் ரயிலில் ஏற்ற வண்டியில் தள்ளிக் கொண்டு போவதை பார்த்ததும்..ஐயோ. இதையா...நாம் சாப்பிடுகிறோம் என்று தோன்றிவிட்டது.....அந்த முட்டையிலிருந்து எலி ஒன்று.. குதித்து ஓடுவதை வேறு பார்த்துத்தொலைத்து விட்டேன்....என்ன சொல்ல...
கீதா
ஆஹா முட்டை சரியா இருக்கா என்று பார்க்க வந்தாரோ எலியார்! ஒரு வேளை தரக்கட்டுப்பாடு அதிகாரி மாறு வேஷத்தில் வந்து இருப்பாரோ!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
கோவில்பட்டி வீரலட்சுமி முடிவில் தலைப்பை சொன்னதை இரசித்தேன் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குரயிலில் நீண்ட தூரம் பயணம் என்பது என்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது சென்னையில் இருந்து ம்துரைக்கு போவதற்குள் அப்பாடா என்று இருக்கும் எனக்கு, ரயில் ப்யணம் மட்டுமல்ல விமானபப்யணமும் அப்படிதான் இங்கே இருந்து இந்தியா வருவதற்குள் மலைப்பாகவே இருக்கும் அதற்கு பயந்தே இந்தியா பயணதை ஒத்தி போடுவது வழக்கம். பிடித்தது கார் பயணம் அதுவும் அமெரிக்காவில்தான் எவ்வளவு தூரம் என்றாலும் சலிக்காமல் ஒட்டி சென்று வருவேண்
பதிலளிநீக்குஇந்தியாவில் சாலைப்பயணங்கள் - அதுவும் நாமே ஓட்டிச் செல்வது கொஞ்சம் கடினமான விஷயம்! எவருமே சாலை விதிகளை மதிப்பதில்லை! போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு காசு கொடுத்தே ஒரு வழியாகிவிடுகிறார்கள் பலர்! எங்கும் லஞ்சம்! இருந்தாலும் ஏதோ சில மாநிலங்களில் நல்ல சாலைகள் இருக்கின்றன!
நீக்குரயிலில் நீண்ட தூரப் பயணம் - சில சமயங்களில் தவிர்க்க வழியில்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
பயண அனுபவங்களின் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குரயிலில் நீண்ட தூரப் பயணம் என்பது - நினைத்தாலே இனிக்கும் வகையறா. அதுவும் அந்தக்காலத்தில் பாசஞ்சர் பிரயாணத்தில், பெற்றோர் எடுத்துவந்த மிளகாய்ப்பொடி தடவிய இட்லியும், தேங்காய் தொகையலுடன் தயிர் சாதமும்... சமீபத்துல பெங்களூர் சதாப்தில உள்ள உணவு, 'ஆகா ஓஹோ.. கொண்டுவந்துட்டே இருப்பாங்க' பில்டப் எல்லாம், உணவின் தரத்தைப் பார்க்கும்போது தவிடுபொடியாகிவிட்டது. ரொம்ப சுமார். என்னைக்கேட்டால், இந்த கேடரிங்க் பிஸினஸ் இரயில்வே விட்டுவிடவேண்டும். அதற்குப்பதிலாக, ரயில்வேயே, ஸ்னாக்ஸ் (Packed), ஜூஸ் போன்றவற்றை விற்கலாம். இவங்க சாப்பாடு, எங்க பண்றாங்களோ... என்னவோ... அதிலும், 'பாவமா இருந்தாலும்', சதாப்தில உணவு கொண்டுவந்து தர்றவங்க, பயண முடிவில், எல்லோரிடமும் 10 ரூ பெற்றுக்கொள்கிறார்கள் (அவர்களுக்கு சம்பளம் கிடையாதா?). அப்புறம் மிஞ்சின பொருட்களை அவர்கள் சாப்பிடுவதைப்பார்க்க பாவமாக இருந்தது.
பதிலளிநீக்குஇட்லில சாப்பிட ஆரம்பிச்சு, பர்கர்ல முடிக்கிறமாதிரி, இது என்ன, 'சோலே பனீர்லேர்ந்து சம்பந்தமே இல்லாம கோவில்பட்டி வீரலட்சுமி'.
தலைப்பைப் பார்த்து சோலே பனீர் செய்முறையாக்கும்னு பார்த்தா...
ஸ்ரீரங்கத்துல, இரயில் நிலையத்துல பூரி மசால், பொங்கல்(?) ரொம்ப அட்டஹாசமா இருக்கும், தவறவிடக்கூடாது என்றெல்லாம் ஓரிரு பிளாக்குகளில் படித்துள்ளேன். நீங்கள் என்னடாவென்றால், இட்லியே பீங்கான் தட்டு ரேஞ்சுக்கு இருக்கு என்று சொன்றீங்களே?
நீங்க வேறே! ஶ்ரீரங்கம் ஸ்டேஷனில் நல்லா இருக்கும் என்பார்கள். திருவானைக்கா பார்த்தசாரதி ஓட்டல் நெய் தோசை நல்லா இருக்கும் என்பார்கள். திருச்சியிலேயும் ஒரு சில ஓட்டல்களைச் சொல்வதுண்டு. என்னைக் கேட்டால் எதுவுமே நல்லா இல்லை! :)))) ஒரு வேளை நான் அதிகம் எதிர்பார்க்கிறேனோ? தெரியலை! ஆனால் திருச்சி, ஶ்ரீரங்கத்துக்காரங்க புகழும் எல்லா ஓட்டல்களிலும் சாப்பிட்டுப் பார்த்தவரைக்கும் சொதப்பல்! எங்க வீட்டுப் பக்கம் ஜிகேசி என்னும் காடரிங் சர்வீஸ்காரர் நடத்தும் ஓர் ஓட்டலிலும் அதுக்கு எதிரே இப்போப் புதுசா கேவிஎம் கட்டி இருக்கும் லாட்ஜில் வைத்திருக்கும் ஓட்டலிலும் கொஞ்சம் பரவாயில்லை! அதுவும் இந்த ஆறு மாசத்தில் எப்படி மாறி இருக்கோ தெரியலை! :)))) சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரதாலே ஜிகேசியில் காரம் அதிகம் போடுவாங்க. அதான் பிரச்னை! அவங்க தான் எனக்கு முதல் முதல் மாங்காய் இஞ்சியில் தொக்கை அறிமுகம் செய்ததும்! :)
நீக்குமற்றபடி ரயில் பயணம் அதுவும் நீண்ட தூர ரயில் பயணம் ராஜஸ்தான், குஜராத்தில் வசித்தபோது கிடைத்திருக்கிறது. இப்போவெல்லாம் அதிவேக ரயில்கள் இருக்கின்றன. நாங்க பிரயாணம் செய்த காலத்தில் அஜ்மேரிலிருந்து சிகந்திராபாதுக்கு காச்சிகுடா ஃபாஸ்ட் பாசஞ்சர் ஒண்ணு விட்டிருந்தாங்க. இன்னிக்குக் காலம்பர அஜ்மேருக்கு அடுத்து நசிராபாத் கன்டோன்மென்டில் ஏறி உட்கார்ந்தோம்னா நாளை மறுநாள் மாலை சிகந்திராபாத் போய்ச் சேரலாம். ரயில் பயணத்தில் இரண்டாம் நாள் மத்தியப் பிரதேசம் காண்ட்வாவில் ரயிலைக் கழட்டிப் போட்டுடுவாங்க. நிதானமாச் சமைச்சுச் சாப்பிடலாம்! :)))) மூன்றாம் நாள் சிகந்திராபாத் போனதும் அங்கேருந்து நாம்பள்ளி போய் சார்மினாரையோ ஹைதராபாத் விரைவு வண்டியையோ பிடிச்சுச் சென்னை போகணும். அப்புறம் அங்கேருந்து கும்பகோணம்,, மதுரை! :)))))
நீக்குவாங்க நெல்லைத் தமிழன். சோலே பனீர் செய்முறை போட்டுவிட்டால் போச்சு!
நீக்குதிருவரங்கம் ஸ்டேஷன் இட்லி பற்றி நிறைய பேர் எழுதி இருக்கிறார்கள். அப்படி ஒன்றும் அதீத சுவை என்று சொல்ல முடியாது. விலை மலிவு என்பது தான் இத்தனை புகழுக்குக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.
IRCTC இரயில்வேயின் ஒரு Sister concern. லாலு யாதவ் இரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது பல பீஹாரிகளை இதில் வேலைக்கு எடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார். முன்பெல்லாம் எந்த Railways வண்டியோ, அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் தான் Pantry-ல் இருப்பார்கள். இப்போது இந்தியா முழுவதிலுமே பீஹாரிகள்! அதனால் எங்குமே ஒரிஜினல் சுவையில் உணவு கிடைப்பதில்லை.
பெரும்பாலானவர்கள் நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. Contractual employees என்பதால் அத்தனை அதிகம் சம்பளம் கிடைப்பதில்லை. ஷதாப்தி, ராஜ்தானி இரயில்களில் ரயில்வேயே முதலில் உணவுக்கான கட்டணத்தினை வாங்கி விடுவதால், இவர்களால் அதிகம் சம்பாதிக்க முடிவதில்லை [மற்ற இரயில்களில் உணவின் விலையை பெரும்பாலும் கேட்காமல் கேட்ட தொகையைக் கொடுத்து விடுகிறார்கள் - அதில் கொஞ்சம் சம்பாதிக்க முடியும்!] அதனால் தான் பயண முடிவில் கைநீட்டம். மீந்ததைச் சாப்பிடுபவர்கள் குறைவு. பெரும்பாலும் ஹாட் கேசில்/ஃப்ரீசரில் வைத்து அடுத்த வேளைக்கு நமக்கே வரும்!
இன்னுமொரு விஷயம். அந்த ஃபளையிங் சாசர் இட்லி வாங்கியது சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
திருச்சியில் இருக்கும் போது பெரும்பாலும் வீட்டு உணவு தான்! சில சமயங்கள் வெளியே சாப்பிட்டு இருக்கிறேன் என்றாலும் அத்தனை சுவை இல்லை. இயற்கை உணவகம் பற்றி சிலர் எழுதி இருக்கிறார்கள். அங்கே சென்று சாப்பிட வேண்டும் இந்த முறை என்று நினைத்திருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
உங்களது அந்தக் கால பயணங்களுக்கும் இப்போதைக்கும் எத்தனை வித்தியாசம். பெரும்பாலும் பாசஞ்சர் வண்டிகள் தான். இப்போது நிறைய வண்டிகள் - ராஜ்தானி, துரந்தோ என வந்து விட்டன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
கீதா மேடம்.... திருவானைக்கா பார்த்தசாரதி ஹோட்டலில் நெய் தோசை சாப்பிட்டேன். பதிவுகளில் எழுதுகிறமாதிரி, ஆஹா ஓஹோன்னெல்லாம் இல்லை. 50 வருடங்களுக்கு முன், ஹோட்டலே அபூர்வம் என்றிருந்த காலத்தில் வேண்டுமானால் அப்படி சுவை இருப்பதாக நினைத்திருக்கலாம். நான் பல இடங்களிலும் சாப்பிட்டுப்பார்ப்பவன். அதனால் சரியாகச் சொல்லமுடியும்.
நீக்குகோபு சார் எழுதியிருப்பதால், ஆண்டார் தெரு, ரமா கஃபேயும் மதுரா ஹோட்டலும், சாப்பிடவேண்டிய இடங்களின் பட்டியலில் உள்ளன. சாப்பிட்டுப்பார்த்து எழுதுகிறேன். அதேபோல், வெங்கட் சொல்லியிருந்த, வெளி ஆண்டாள் சன்னிதிக்கு வெளியே பஜ்ஜி,வடை கடையும் லிஸ்டில் இருக்கு.
நீங்க சொல்லி இருப்பது உண்மை திரு நெ.த. ஆண்டார் தெரு ரமா கஃபே? ராம விலாஸ்? அங்கேயும் இரண்டு முறை சாப்பிட நேர்ந்தது! மதுரா ஓட்டலுக்கு ஒரு முறை போனதே போதும் போதும்னு ஆயிடுத்து. அதே போல் தான் இன்னும் சில பிரபலமான ஓட்டல்களிலும். அடையார் ஆனந்த பவன் அனுபவம் இனிமே அங்கே போகக் கூடாது என்னும் முடிவை எடுக்க வைத்து விட்டது. :) ஶ்ரீரங்கத்தில் பஜ்ஜி, வடை போடும் தள்ளுவண்டிக்கடைகள் நிறைய இருக்கு! அவற்றிலும் நல்ல வியாபாரம் ஆகும். என்னதான் இருந்தாலும் வீட்டில் செய்யறமாதிரி வராது! :)
நீக்குதிருவானைக்கா நெய் தோசை பற்றி படித்தது உண்டு. ஆனால் சாப்பிட்டதில்லை. வெளி ஆண்டாள் சன்னதி அருகே இருக்கும் கடையில் கிடைக்கும் பெருமாள் வடையும் நன்றாக இருக்கும். சாப்பிட்டு பாருங்க நெல்லைத்தமிழன்.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குரயில் பயணம் என்பது எனக்கு எட்டாக்கனியே. ட்ரெயினை பார்த்தா சின்னப்புள்ள போல ஆஆஆன்னு பார்ப்பேன் இன்னமும்...
பதிலளிநீக்குரயிலில் எங்காவது சென்று வாருங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
ரயில் பயணங்களின் போது ஒருவருக்கொருவர் பேசிப் பழகி சினேகமாகிய
பதிலளிநீக்குகாலங்கள் எல்லாம் மலையேறிப் போய் விட்டது..
>>>நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இரயில் பயணம்..<<<
எப்படியோ நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேர்ந்ததே மகிழ்ச்சி...
நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேர்ந்ததே மகிழ்ச்சி. உண்மை தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
குடும்பத்தோடு வந்தாலும் பரவாயில்லை ,தனியாய் பயணம் என்றால் க்போர்தான் :)
பதிலளிநீக்குதனியே பயணம் - கொஞ்சம் போர் தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
இரயில் பயணங்களில் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அனுபவங்களை சுவைபட சொல்கிறீர்கள். பாராட்டுகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்கு