திங்கள், 24 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – காலை நேரம் – மலைப்பாதையில்….


ஹனிமூன் தேசம் – பகுதி 20

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


காலை வேளை - மலையின் பின்னிருந்து எட்டிப்பார்ர்கும் சூரியன்...
 
மணாலியில் இரண்டாம் நாள் இரவும் நன்கு உறங்கிய நாங்கள் மூன்றாம் நாள் காலையில் அங்கிருந்து புறப்பட வேண்டும். அதிகாலையிலேயே புறப்பட்டால் நல்லது என்பதால் சீக்கிரம் எழுந்து புறப்பட்டோம். காலைக் குளிரில் அவரவர் வேலைகளை முடித்துக்கொண்டு, உடமைகளை எடுத்துக் கொண்டு நாங்கள் வெளியே வர, சில்லென்ற காற்றுடன் மழை – தூறல் போட்டுக் கொண்டிருக்கிறது. ஒரே ஒருவரிடம் குடை இருக்க, அதை வைத்து இரண்டு இரண்டு பேராக வாகனத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள் – ஆடு, புலி, புல்லுக்கட்டு கதை போல! முதல் நாளே தங்குமிடம் படம் எடுக்காததால், மழையிலும் விடாது சாலைப்பகுதியிலிருந்து தங்குமிடத்தின் படத்தினை எடுத்த பிறகு நானும் வாகனத்தில் ஏறிக்கொண்டேன்.


கீழே நதி - மேலே தொங்கு பாலம்... 

பயணம் செய்யும்போது பெரும்பாலானவர்கள் தூங்கி விடுகிறார்கள். அல்லது தனித் தனி குழுவாக பேச ஆரம்பித்து விடுவார்கள். என்னைப் போலச் சிலர் இயற்கையை ரசிப்பதும், சாலையில் பார்க்கும் காட்சிகளை புகைப்படம் எடுப்பதும் என்று மூழ்கிவிடுகிறோம். பள்ளியில் படிக்கும்போது சுற்றுலா செல்லும் குழந்தைகளைப் பார்த்து இருக்கிறீர்களா, ஒரே கத்தலும், கும்மாளுமுமாக இருக்கும் அவர்களது பயணங்கள். இந்த காலை நேரப் பயணம் கொஞ்சம் அப்படித்தான் இருந்தது. காலையிலேயே ஜோதி வாகனத்தில் இருந்த மியூசிக் சிஸ்டம் மூலம் பழைய பாடல்களை ஒலிக்கவைக்க, எந்தப் பாட்டு யாருக்குப் பொருந்தும் என குழுவில் இருந்த அனைவரையும் மாற்றி மாற்றிக் கிண்டல் செய்து கொண்டிருந்தோம். 


குறுகிய மலைப்பாதையில்...

பாதை குறுகிய பாதை. ஒரு பக்கத்தில் மலை என்றால் மறு பக்கம் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. பக்கவாட்டில் பெரிதாக தடுப்பு ஒன்றும் இல்லை! கொஞ்சம் அசந்தால் வாகனத்துடன் நதிக்குள் சென்று நனையலாம், குளிக்கலாம்! அப்படியே போகலாம்! கடைசி குளியலாக அமைந்து விடும்.  நானோ நதி இருந்த பக்கத்தில் அமர்ந்திருக்கிறேன். கேமரா கண்கள் வழியே zoom செய்து பார்க்கும்போது ரொம்பவே கிட்டத்தில் இருப்பது போலத் தெரிந்தாலும் எப்படியும் 50 அடியாவது பள்ளம் இருக்கும் – சில இடங்களில் அதை விட அதிகமாகவும்! பாட்டும் கிண்டலுமாக இப்படிப்பட்ட பாதைகளில் செல்வது ஒரு விதத்திற்கு நல்லது! பள்ளத்தினைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை!


 கரணம் தப்பினால் மரணம்!

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்/ஜோடிக்கும் ஒவ்வொரு பாட்டு என அனைவரையும் கலாய்த்துக் கொண்டே வந்தோம். ஒரு பாட்டு வரும்போது அது யாருக்குப் பொருத்தம் என ஒருவர் சொல்ல, மற்றவர்கள் அனைவரும் அந்த ஜோடியை, பாட்டு முடியும் வரை கிண்டல் செய்ய, அடுத்த பாட்டுக்கு அடுத்த ஜோடி! இதில் ஓட்டுனர் ஜோதியும் கலந்து கொண்டார். அவரையும் கொஞ்சம் கலாய்த்தோம்! இப்படியே பயணம் தொடர்ந்தது. [எனக்கு என்ன பாட்டு என்று சொல்ல மாட்டேனே! :)]  


சாலையோர ஆப்பிள் தோட்டம்...

வழியில் ஒரு இடத்தில் வாகனத்தினை நிறுத்தி தேநீர்/பிஸ்கட்ஸ் சாப்பிடலாம் என நிறுத்தினோம்.  அந்த உணவகத்தின் எதிர்புறம் ஒரு ஆப்பிள் தோட்டம்! சாலை ஓரத்தில், ஆப்பிள் தோட்டத்தின் அருகே நின்று குழுவினர் அனைவரும் ஒரு சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.


இதன் பெயர் என்ன? 
இதற்கு ஒரு குளியல் சோப்பின் பெயர்!

அந்த தேநீர் கடையின் வாசலில் தகரத்தில் பீப்பாய் போன்ற ஒரு பொருள் இருந்தது. அது நம்ம ஊர் பாய்லர் மாதிரி தண்ணீரை வென்னீராக மாற்ற உபயோகப்படுத்துவார்கள் – ஹிமாச்சலப் பிரதேசத்தில். இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இது ஒரு விதத்தில் Instant Heater! பீப்பாய் உள்ளே விறகுக்கட்டைகள் போட்டு கொளுத்தி விடுவார்கள். அது நன்கு தணலான மாறிய பிறகு, மேல்புற துவாரத்தில் தண்ணீர் விட, பக்கவாட்டு துவாரம் வழியே சுடுநீர் வந்து கொண்டிருக்கும் – அதுவும் இன்ஸ்டண்டாக! சரி இதற்கு என்ன பெயர் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆசையா? இது ஒரு சோப்பின் பெயரில் அழைக்கப்படுகிறது. என்ன சோப்பு என்பதை கடைசியில் சொல்கிறேன்!


மலைக்கு மேல் பொருட்களை எடுத்துச் செல்ல....

சாலையோரத்தில் பல இடங்களில் மெல்லிய கம்பிகள் இரண்டு இந்தப் பக்கத்தில் இருந்து நதியைத் தாண்டி, எதிர்ப்புறத்தில் இருக்கும் மலைப்பகுதிக்கு இணைத்திருப்பதைப் பார்க்க முடியும். எதற்காக இந்தக் கம்பிகள்?  சாலை வழியே வரும் பல பொருட்களை மலையின் மீது இருக்கும் வீடுகளுக்கு இந்தக் கம்பிகள் வழியே ஒரு சிறிய பெட்டி மாதிரி இருக்கும் அமைப்பில் வைத்து, கீழே இருக்கும் சக்கரத்தினைச் சுற்ற பெட்டி கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்லும்! Pulley system - What an idea sir ji! உணர்வு தான் பார்க்கும் நமக்குத் தோன்றும். பெரும்பாலான இடங்களில் இந்தச் சக்கரங்களைச் சுற்றுவது பெண்கள்!


 உழைப்பாளி...


தள்ளாத வயதிலும் உழைப்பு....


மலைகளுக்கு மத்தியில், கல் ஓடு பதித்த வீடுகள்!

பெரும்பாலான மலைப்பிரதேசத்து பெண்கள் உழைப்பாளிகள். முதுகில் நிறைய சுமையோடு மலைப்பாதைகளில் அனாயாசமாகச் செல்வதைப் பார்க்க முடியும். முதுகில் இருக்கும் பை போன்ற அமைப்பில் நிரப்பி இருக்கும் காஸ் சிலிண்டர்களை வைத்து மலைப்பகுதியில் ஏறிச் செல்லும் பல பெண்களை பார்க்க முடிந்தது. போலவே தண்ணீரையும் சுமந்து செல்வார்கள் – மலைப்பகுதிக்கு! மலைப்பகுதியில் ஆங்காங்கே இருக்கும் வீடுகளுக்குப் பொருட்களை எடுத்துச் செல்வது எவ்வளவு கடினம். வீடுகளுக்கு வித்தியாசமாக கருப்பு கலரில் ஓடுகள் – மலையையே இப்படி ஓடுகளாக வெட்டி மேலே வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது.  இப்படி ஒரு வீட்டின் அமைப்பை அருகே சென்று பார்க்க ஆவலிருந்தாலும் செல்லவில்லை!


துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே...

இப்படி நிறைய காட்சிகள், இயற்கை அழகு எல்லாம் ரசித்தபடியே நாங்கள் பயணித்துச் சென்ற இடம் எது என்பதை இப்போது சொல்ல மாட்டேன்!  அடுத்த பகுதியில் சொல்லி விடுகிறேன்.  ஆனால் இப்போது ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அது இப்பதிவில் சொன்ன அந்த Instant Heater-இன் பெயரில் ஒரு சோப்பு இருக்கிறது என்று சொன்னது!


நதியே நதியே காதல் நதியே.....

அந்தப் பொருளின் பெயர் ஹமாம்! ஆனால் இதன் பெயரை இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளவில்லை! மணாலி பயணம் முடிந்து வந்த சில நாட்களிலேயே மீண்டும் நண்பர்களோடு மீண்டும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் வேறு சில இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு அமைய, அப்போது தான் இந்த வித்தியாசமான பெயரைத் தெரிந்து கொண்டேன். அதுவும் விறுவிறுப்பான பயணம். அது பற்றி எழுத முடியுமா என்பது சந்தேகம்! பார்க்கலாம்!  இப்போதைக்கு, இந்தப் பயணம் பற்றிய கட்டுரைகளை முடிக்க வேண்டும். இந்தப் பயணத்தில் மலைப்பாதையில் பயணித்துச் சென்ற இடம் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

12 கருத்துகள்:

  1. இது மாதிரி இடங்களிலும் பயணத்தில் தூங்கி விட்டால் அந்த இடங்களின் அழகை எப்படி ரசிப்போன? இறங்கி நிற்கும் இடங்களை மட்டும் பார்வையிட்டால் போதுமா? அடப்பாவமே...

    அழகிய படங்கள்.. நதியை ஜூம் செய்து எடுத்த படம் காணோமே..

    தம சப்மிட் ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய படங்கள் இருக்கிறது. சில படங்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஒவ்வொருபதிவும் வித்தியாசமான செய்திகளைச் சுமந்து வருகிறது ஐயா
    அருமை
    படங்கள் அருமையோ அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. கரணம் தப்பினால்!..???..

    அதனூடாகவும் மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்..

    படங்களும் பதிவும் அருமை.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. இயற்கையின் அழகை இரசிக்கும் கொடுத்து வைத்தவர் நீங்கள். தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. ரசித்தேன்,அருமை.இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க என்ன ஆட்டோமேட்டட் மெயிலா? :)

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....